என் மலர்
புதுச்சேரி
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அதிகாரிகளுடன் ஆலோசனை
- வேளாண் அறிவியல் நிலையத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை குருமாம்பேட் பகுதியில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட உள்ளது.
பொன் விழாவை விமர்ச்சியாக கொண்டாடுவதற்கு அரசு சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் வேளாண் அறிவியல் நிலையத்தை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இது சம்பந்தமாக வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை செய்தார். கூட்டத்தில் வேளாண் துறை கூடுதல் இயக்குனர் வசந்தகுமார், வேளாண் அறிவியல் நிலையத்தில் முதல்வர் சிவசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சந்திரகுமார், மாணிக்கவாசகம், வல்லவன், உதவி பொறியாளர்கள் கோபி தனசேகரன் பாவாடை மதிவாணன் விக்டோரியா, இளநிலை பொறியாளர் கருணாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட இந்த வேளாண் அறிவியல் நிலையத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
மேலும் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள மார்க்கெட் கமிட்டி இடத்தில் புதிதாக சட்டசபை கட்டப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள வேளாண் துறை சம்பந்தமான அனைத்து அலுவலங்களும் வில்லியனூர் பகுதியில் புதிதாக கட்டப்படும் 4 அடுக்கு மாடி வேளாண் துறை கட்டிடத்திற்கு மாற்றுது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தையும் விவசாயிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வில்லியனூருக்கு கொண்டு செல்வது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.
- போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
- தற்போதைய வில்லியனூர் சார்பதிவாளருமான சிவசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான புதுவை ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் 64 ஆயிரத்து 35 சதுரடி பரப்பளவில் சுமார் ரூ.12 கோடியே 45 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான விவசாய நிலம் உள்ளது.
போலி ஆவணங்கள் மூலம் கோவில் நிலத்தை அபகரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதுவை சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையில் புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன் புதுவையை சேர்ந்த சின்னராசு (எ) பழனி மற்றம் சிலர் போலி ஆவணங்களை தயாரித்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 12 பேரை போலீசார் இதுவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் போலி பத்திர பதிவு செய்த அப்போதைய உழவர்கரை சார்பதிவாளரும், தற்போதைய வில்லியனூர் சார்பதிவாளருமான சிவசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் சிவசாமி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு ஊழியர் நன்னடத்தை விதிப்படி சார்பதிவாளர் சிவசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு வெளியாகிறது.
- டி.ஜி.பி. அதிரடி நடவடிக்கை
- குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சிவக்குமார்.
இவர் மீது போஸ்கோ வழக்கை தவறாக கையாண்டது, போலீஸ் நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்து இட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என பல புகார்கள் எழுந்தது.
இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில் இவர் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிவக்குமார் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையை டி.ஜி.பி. மனோஜ் குமார் லால் அதிரடியாக எடுத்துள்ளார்.
- அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது.
- பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் தவளகுப்பம் அடுத்த பூரணாங்குப்பத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகின்ற ஜூலை மாதம் 7-ம் தேதி வெள்ளிக்கிழமை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு 10 மணி அளவில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக நேற்று பிற்பகல் அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து திரவுபதி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. வருகின்ற ஜூலை 3-ம் தேதி கரகத் திருவிழாவும், 4-ம் தேதி பக்காசூரனுக்கு சோறு போடுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஜூலை 5-ம் தேதி நண்பகல் 12 மணியளவில் திரவுபதி-அர்ச்சுனன் சாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
6-ம் தேதி அர்சுனன் தபசு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி உற்சவம் ஜூலை
7-ம் தேதி மாலை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் எழில்ராஜா, துணைத் தலைவர் ராஜசேகரன், செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் அமுர்தலிங்கம், உறுப்பினர் சத்தியவேணி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்
- தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஆரோவில் சர்வதேச நகரத்தில் தொடங்கிய நிரந்தர புகைப்பட கண்காட்சி மையத்தினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பார்வையிட்டார். "தி கலர்ஸ் ஆப் லைப்" என்னும் தலைப்பில் ஓவியர் சத்திய அருணாச்சலம் உருவாக்கிய ஆயில் மற்றும் ஆக்கிரலிக் மூலம் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் இதில் இடம் பெற்று இருந்தது.
பின்னர் ஒடிசா மாநில கலைஞர்களின் கண் கவரும் கலை நிகழ்ச்சியை பார்வையிட்டார். பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த கலாச்சார மையங்கள் இயங்கி வரும் பாரத் நிவாஷில் பல கோடி செலவில் உருவாக்கப்பட்டு வரும் தமிழ் மரபு மைய வளாகத்தில் முழு உருவ திருவள்ளுவர் சிலையை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனைவர்கள் மத்தியில் திருக்குறளையும் வாசித்தார். தமிழ் மரபு மைய வளாகத்தில் திறக்கப்பட்ட இந்த திருவள்ளுவர் சிலை சென்னை மகாபலிபுரத்தில் ஒரே கல்லால் தயாரிக்கப்பட்டது. மேலும் இந்த சிலையை வி.ஜி.பி நிறுவனம் சார்பில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகளில் ஆரோவில் செயலர் ஜெயந்தி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து நூறு முதலீடு செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருகிறோம் என்று இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பிய வில்லியனூரை சேர்ந்த சங்கர் என்பவர் ரூ.90 ஆயிரம் முதலீடு செய்தார். அவர்கள் லாபத்தை திருப்பித் தரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புகார் அளித்துள்ளார்.
ஆன்லைனில் நல்ல வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறோம் என்று தானாகவே முன்வந்து அறிமுகமான ஒரு இணைய வழி மோசடிக்காரரின் பேச்சை நம்பிய புதுவை குருசுக்குப்பத்தை சேர்ந்த முகுந்தன் என்பவர் ரூ.2 லட்சத்து 61 ஆயிரத்து நூறு முதலீடு செய்தார். பின்னர் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை என்பதை உணர்ந்தவர் புகார் அளித்துள்ளார்.
அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை இணைய வழியில் தொடர்பு கொண்ட நபர், நான் சொல்லும் வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவோம் என்று கூறியதை நம்பி ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 834 முதலீடு செய்தார். 30 நாட்கள் ஆகியும் எந்த தகவலும் வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவரும் என்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் இணைய வழியில் எந்த முதலீடும் செய்து ஏமாற வேண்டாம். இணைய வழியில் வரும் முதலீடுகள், வருமானங்கள், வேலை வாய்ப்புகள் போன்றவை பெரும்பாலான இணைய வழி மோசடிக்காரர்களின் வேலைகள்தான்.
எனவே பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். மிக முக்கியமாக இன்ஸ்டாகிராம் டெலிகிராமில் வருகின்ற முதலீட்டு வாய்ப்புகளையும், அழைப்புகளையும் ஏற்க வேண்டாம். புதுவையில் மட்டும் நாள் ஒன்றுக்கு குறைந்தது பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் இதுபோன்ற ஆன்லைன் பணத்தை முதலீடு செய்தும், வேலை வாய்ப்புகளையும் நம்பி பணத்தை இழக்கின்றனர். எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
- பணியிட மாறுதலுக்கு வழிகாட்டுதல் வெளியீடு
- 57 வயது நிரம்பியவர்களுக்கு கிராமப்புற பணியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் 2019-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கடந்த டிசம்பரில் இடமாற்றம் வழங்கப்பட்டது. இதற்கு பல ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து தடை ஆணை பெற்றன. புதிய ஆசிரியர் பணியிட கொள்கை உருவாக்க கோர்ட்டு உத்தரவிட்டது. புள்ளிகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட பணி மாறுதல் கொள்கைக்கும் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
பணியிட மாறுதல் கிடைக்கும் என எதிர்பார்த்த காரைக்கால் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து புதுவை பள்ளி கல்வித்துறை 2023-24ம் ஆண்டுக்கான ஆசிரியர் பணியிட மாற்றத்துக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை துணை இயக்குனர் வெர்பினா ஜெயராஜ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை கல்வித்துறை புதிய இடமாறுதல் கொள்கையை மாற்றியமைக்கும் வரை இடைநிறுத்த ஏற்பாடாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது. பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து பணியாற்றக்கூடாது. வெளிபிராந்தியத்தில் 2 ஆண்டுகள் பணி முடித்த பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் சொந்த பிராந்தியத்துக்கு அழைத்து வரப்பட்டு, கிராமப்புற பள்ளிகளில் பணியமர்த்தப்படுவர்.
மாற்றுத்திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், புற்றுநோய், நரம்பியல் அறுவை சிசிச்சை உட்பட நோய்களால் அவதிப்படுவர்களுக்கு பணியிட மாற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும். 55 வயதுக்கு மேற்பட்ட தலைமை ஆசிரியருக்கு பணியிட மாறுதலில் இருந்தும், 57 வயது நிரம்பியவர்களுக்கு கிராமப்புற பணியிலிருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர் நிலை 1, 2 போன்ற உயர் பதவிகளுக்கு வயது தளர்வு பொருந்தாது. பள்ளிக்கல்வி இயக்குனருக்கு கோரிக்கைகளை நிராகரிக்க உரிமை உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- புதுவை ஒன்றுபட்ட அமைச்சக ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
- கடந்த 32 ஆண்டு காலமாக போட்டித் தேர்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வந்தது.
புதுச்சேரி:
புதுவை ஒன்றுபட்ட அமைச்சக ஊழியர்கள் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பில் அதன் பொது செயலாளர் கூறுகையில்:-
புதுவை அரசாங்கத்தில் பணியாளர் சீர்திருத்த துறையின் மூலம் உதவியாளர் பணிகளுக்கு துறை சார்ந்த போட்டித் தேர்வினை நடத்த தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் 8 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் மேல்நிலை எழுத்தர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 32 ஆண்டு காலமாக போட்டித் தேர்வு நடத்தப்படாமல் பதவி உயர்வு அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வந்தது.
தற்பொழுது இம்முறையை மாற்றி போட்டித் தேர்வு மூலம் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அரசு கைவிட வேண்டும் என்றும், தற்போது காலியாக உள்ள 600 உதவியாளர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதால் வெளியில் படித்துக் கொண்டிருக்கும் வேலையில்லாத இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தற்போது அறிவிக்கப்பட்ட போட்டித் தேர்வை கண்டித்தும் எதிர்த்தும் மாகி, ஏனாம், புதுவை ஆகிய பிராந்தியங்களில் சேர்ந்த ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். எனவே அரசு உடனடியாக தேர்வு மூலம் நிரப்புவதை கைவிட்டு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். இல்லை என்றால் அனைத்து அமைச்சக ஊழியர்களும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய சூழல் வரும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- முன்னாள் எம்.பி ராமதாஸ் வலியுறுத்தல்
- 910 இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்கள்தான் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவுகள் புதுவை கல்வித்துறையை மதிப்பீடு செய்ய வாய்ப்பளித்துள்ளது. இந்த ஆண்டு புதுவையில் நீட் தேர்வு எழுதிய 5,714 மாணவர்களில் 3,140 பேர் தகுதி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 54.9 இது கடந்த ஆண்டைவிட 2.11 சதவீதம் அதிகம்.
புதுவையின் தேர்ச்சி சதவீதம் தேசிய சதவீதமான 56.2 சதவீதத்தைவிட 1.3 சதவீதம் குறைவாக உள்ளது. தேசியளவில் புதுவை குறைந்த தேர்ச்சி சதவீதத்தையே பெற்றுள்ளது. புதுவை கல்வித்துறையின் செயல்பாடு சரியில்லாமல் குறைவாக உள்ளதையே இது காட்டுகிறது கடந்த 3 ஆண்டில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள மருத்துவ இடங்களான 910 இடங்களில் 18 அரசு பள்ளி மாணவர்கள்தான் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் இருந்து 818 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டு ஒரு தனியார் பள்ளியில் இருந்து மட்டும் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 177 பேர் 450-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தனியார் பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படிக்கும்போதே நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த சாதகமான சூழ்நிலை புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு இல்லாததால் சாதிக்க முடியவில்லை.
தனியார் பள்ளிகள் மேற்கொள்ளும் சிறந்த நடைமுறைகளை புதுவை அரசு பள்ளிகளிலும் அறிமுகப்படுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களுக்கு மட்டும் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும்.
- இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.
புதுச்சேரி:
மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.
இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, சென்னை லைட்ஹவுஸ் இயக்குனரகத்தின் இயக்குனர் ஜெனரல் வெங்கட்ராமன், யோகா பயிற்சியாளர் ருத்ரகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். லைட்ஹவுஸ் இயக்குனரக அதிகாரி கார்த்திக் நன்றி கூறினார்.
விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
லைட்ஹவுஸ் என்பது கடலில் தத்தளிப்போர், கப்பல்களுக்கு வழிகாட்ட உதவுவது.
அதேபோல தத்தளிக்கும் நம் உடல் ஆரோக்கியமாக வாழ லைட்ஹவுஸ்போல வழிகாட்டுவது யோகா நிகழ்ச்சி. வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோக கலையை கற்றுக்கொள்ளலாம்.
உடல் நலம், மன நலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப்படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவ ரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத்தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம்.
2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது.
எனவே மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும். ஜூன் 21-ந் தேதி தான் ஒரு ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோக கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது.
மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இந்தியா கூறுவதை உலக நாடுகள் கேட்டு வருகிறது. பிரதமர் யோகா கலையை ஆரம்பித்து வைக்க வெளிநாடு சென்றுள்ளது பெருமை தரக்கூடியது. பல இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை கடை பிடிக்கின்றனர்.
குடும்ப தலைவிகள் யோகா நமக்கானது அல்ல என நினைக்கின்றனர். சமையல் கூடத்தில்கூட யோகா செய்யலாம். அவர்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்கும். குழந்தை வளர்ப்பிலும் யோகாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பள்ளிகளில் யோகா செய்ய வேண்டும் என சட்டமாக்காவிட்டாலும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யோகா, தற்காப்புக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய காலத்துக்கு ஏற்ப கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ் சங்கம் வலியுறுத்தல்
- புதுவையில் 12-ம் வகுப்பு வர தமிழை கட்டாய பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை தமிழ் சங்கம் சார்பில் தமிழ்வழி கல்வி கருத்தரங்கம் தமிழ் சங்கத்தில் நடந்தது.
சங்க தலைவர் முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, தினகரன் முன்னிலை வகித்தனர். உலக தமிழ் பேரமைப்பு பொதுச்செயலாளர் தமிழ்மணி, புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன ஓய்வுபெற்ற இயக்குனர் சம்பத் கருத்துரை வழங்கினார்.
சங்க பொருளாளர் அருள்செல்வம் நன்றி கூறினார். கருத்தரங்கில், புதுவையில் 12-ம் வகுப்பு வர தமிழை கட்டாய பாடமாக அரசு அறிவிக்க வேண்டும்.
தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புதுவை சோழிய செட்டியார் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.
- இருசக்கர வாகனங்களின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
இருசக்கர மோட்டார் வாகனம் பழுது நீக்குவோர் மற்றும் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் புதுவை சோழிய செட்டியார் சமுதாய நலக்கூடத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி கலாம் பசுமை பாதுகாப்பு இயக்கம் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
மேலும் இருசக்கர வாகனங்களின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.






