search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குழந்தைகளுக்கு 5 வயது முதல் யோகா கற்றுத்தர வேண்டும்- கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
    X

    புதுச்சேரியில் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் தமிழிசை யோகா செய்த காட்சி.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    குழந்தைகளுக்கு 5 வயது முதல் யோகா கற்றுத்தர வேண்டும்- கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்

    • மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும்.
    • இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    புதுச்சேரி:

    மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, சென்னை லைட்ஹவுஸ் இயக்குனரகத்தின் இயக்குனர் ஜெனரல் வெங்கட்ராமன், யோகா பயிற்சியாளர் ருத்ரகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். லைட்ஹவுஸ் இயக்குனரக அதிகாரி கார்த்திக் நன்றி கூறினார்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    லைட்ஹவுஸ் என்பது கடலில் தத்தளிப்போர், கப்பல்களுக்கு வழிகாட்ட உதவுவது.

    அதேபோல தத்தளிக்கும் நம் உடல் ஆரோக்கியமாக வாழ லைட்ஹவுஸ்போல வழிகாட்டுவது யோகா நிகழ்ச்சி. வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோக கலையை கற்றுக்கொள்ளலாம்.

    உடல் நலம், மன நலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப்படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ ரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத்தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம்.

    2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது.

    எனவே மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும். ஜூன் 21-ந் தேதி தான் ஒரு ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோக கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது.

    மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இந்தியா கூறுவதை உலக நாடுகள் கேட்டு வருகிறது. பிரதமர் யோகா கலையை ஆரம்பித்து வைக்க வெளிநாடு சென்றுள்ளது பெருமை தரக்கூடியது. பல இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை கடை பிடிக்கின்றனர்.

    குடும்ப தலைவிகள் யோகா நமக்கானது அல்ல என நினைக்கின்றனர். சமையல் கூடத்தில்கூட யோகா செய்யலாம். அவர்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்கும். குழந்தை வளர்ப்பிலும் யோகாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் யோகா செய்ய வேண்டும் என சட்டமாக்காவிட்டாலும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யோகா, தற்காப்புக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய காலத்துக்கு ஏற்ப கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×