என் மலர்
புதுச்சேரி
- தொடர்பு கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
- போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொலைபேசி வேலை செய்யாத அவல நிலை உள்ளது. பொதுமக்கள் திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு போன் செய்தால் முழுமையாக ரிங் போகிறது. ஆனால் போலீசார் போனை எடுப்பதில்லை.
அவசர செய்தி கூட போலீசாருக்கு தெரிவிக்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடி வருகிறார்கள்.
ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் முக்கிய தகவல் என்றாலோ நேரடியாக போலீஸ் நிலையத்திற்கு தான் வந்து சொல்ல வேண்டிய நிலை உள்ளது.
சுமார் 11 கிலோமீட்டர் பயணம் செய்து திருக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து பொதுமக்கள் பிரச்சினைகளை கூறும் அவல நிலை உள்ளது.
ஏதேனும் ஒரு அவசரம் என்றால் திருக்கனூர் போலீஸ் நிலையத்தை எப்படித் தான் தொடர்பு கொள்வது எனக்கூறி மக்கள் புலம்புகிறார்கள்.
அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ஹீமோகுளோபின் பரிசோதனை நடத்தப்பட்டு பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டது.
- டாக்டர் மின்மினி பொதுமக்களுக்கு மகளிர் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கம் அருகே கோர்க்காடு துணை சுகாதார நிலையத்தில், மகளிர்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஹீமோகுளோபின் பரிசோதனை நடத்தப்பட்டு பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், டாக்டர் இந்திரா, டாக்டர் மின்மினி பொதுமக்களுக்கு மகளிர் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஊர் முக்கியஸ்தர் தேவிந்திரன், கிராம சேவகர்கள் நாராயண், சாவித்திரி, குமாரசெல்வி கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியை சூர்யோதை அறக்கட்டளை யின் மண்டல மேலாளர் ஜெயராஜன், மதுபாலன் மற்றும் பிரியங்கா ஏற்பாடு செய்தார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 -ந் தேதி நடைபெற்று வருகிறது.
- தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
புதுச்சேரி:
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதந்தோறும் 20 -ந் தேதி நடைபெற்று வருகிறது.
இம்மாத நிகழ்ச்சியில் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முத்து திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார்.
நிகழ்ச்சியில் செயலாளர் சீனு.மோகன்தாசு, துணைத்தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணைச் செயலாளர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் உசேன், சிவேந்திரன், வாழ்நாள் உறுப்பினர் பொற்செழியன், சண்முகம்,ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது.
- இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
புதுச்சேரி:
பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.
இந்த நிலையில் அறங்காவலர் குழு பலர் பதவி விலகினர். இதனால் இந்த ஆண்டிற்கான பிரமோற்சவ விழா நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது அதில் பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டு, தற்போது அந்த கோவில் பிரம்மோற்சவ விழாவை பாகூர் தாசில்தார் சிறப்பாக நடத்த வேண்டும் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாகூர் தாசில்தார் பிரித்விவ் ராஜ் கோவிலுக்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினரிடம் ஆலோசனை நடத்தினார்.
மேலும் பிரமோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒப்பந்ததாரர்கள் அழைத்து விழாக்கள் குறித்து ஆலோ சனை மேற்கொண்டார்.
இதில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது.
தேரோட்டம் வருகிற ஜூலை 1-ந் தேதி காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது.
- சின்னா சுப்பராயப்பிள்ளையின் 148-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
- அவரின் நினைவிடத்தில நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி:
புதுவை நகராட்சி அறப்பணி அவை சார்பில் சின்னா சுப்பராயப்பிள்ளையின் 148-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.
மறைமலை அடிகள் சாலை கென்னடி நகர் சுப்புராயப்பிள்ளை சத்திரத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில நேரு எம்.எல்.ஏ. மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஏழைகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் , புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் நமச்சிவாயம், சுகாதார அதிகாரி துளசிராமன், பொறுப்பாளர் விஜயலட்சுமி மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலம் சுமார் 482 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும்.
- புதுவையில் 10 ஆண்டை காட்டிலும் வாகனங்கள் அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலம் சுமார் 482 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியாகும். புதுவையில் 10 ஆண்டை காட்டிலும் வாகனங்கள் அதிகரித்துள்ளது. 2 சக்கர வாகனங்களில் செல்வோர் சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் தாறுமாறாக செல்வதால் ஓட்டுபவரும், எதிரே வருபவரும் அடிபட்டு விபத்தில் சிக்குகின்றனர்.
சிறார்கள் வாகனங்கள் ஓட்டினர் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை என உத்தரவு உள்ளது. தமிழக தலைநகரான சென்னையில் 40 கி.மீக்கு மேல் வேகமாக வாகனம் செலுத்தும் நபர்கள் கட்டாயம் அபராதம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசும் போலீசும் நகர பகுதியில் 40 கி.மீக்கு மேல் வேகமாக வாகனம் செலுத்துவோர் மீது அபராதத்துடன் வழக்கும் பதிவு செய்ய வேண்டும். சிறார்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்கள் செலுத்து வதை கண்காணித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.
- பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.
புதுச்சேரி:
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வர் ஏ.ஐ.சி.டி.இ, யு.ஜி.சி. விதிகளுக்கு மாறாக அப்பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பு முதல்வரான நாள் முதல் ஊழல், முறைகேடு என தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறார்.
முதுகலைப் பட்டப் படிப்பு தொடங்குவதாகக் கூறி பல்கலைக்கூட பேராசி ரியர்கள், ஊழியர்கள் சம்பளப் பணம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரத்தை விதிகளை மீறி எடுத்துச் செலவழித்துள்ளார். இவருக்கு ரூ.9 ஆயிரத்து 999 மட்டுமே நிதியைக் கையாள வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி செயல்பட்டுள்ளார்.
இது விதிமீறல் மட்டுமல்ல கிரிமினல் குற்றமாகும். இதனால், இவருக்கு வழங்கப்பட்ட நிதி அதிகாரம் பறிக்கப்பட்டது. இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்ட மைப்பு சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது தலைமைச் செயலர் தலைமையில் இயங்கும் ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இப்புகார் மீது கடந்த மே 18-ந் தேதி சென்னையில் உள்ள சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு ஒரு மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை அளிக்க ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுநாள் வரையில் தலைமைச் செயலர் தலைமையிலான ஊழல் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகளும், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
பொறுப்பு முதல்வர் விதிகளை மீறி தகுதி இல்லாத 8 தற்காலிக உதவிப் பேராசிரியர்களைப் பணியமர்த்தி உள்ளார். எனவே, பாரதியார் பல்கலைக்கூட பொறுப்பு முதல்வரை பதவி நீக்கவும், 8 உதவி பேராசிரியர்களைப் பணி நீக்கவும் நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலர், கலைப் பண்பாட்டுத் துறை அதிகாரிகளைக் கண்டித்து, வருகிற 4-ந் தேதி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீர்நிலைகளை புணரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
- உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உபகரணங்கள், நடைபாதை புல்வெளிகள் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் உள்ள அரசு குடியிருப்புகள், குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளை புணரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
கூட்டத்திற்கு கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நிதித்துறைச் செயலர் ஜவகர், நகர மற்றும் கிராமத் திட்டமிடல்துறைச் செயலர் கேசவன், கவர்ன ரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, துணை வனப் பாதுகாப்பு அதிகாரி வஞ்சுளவல்லி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர்சத்தியமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, மின்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் தமிழிசை அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய நடவடிக்கைகள் வருமாறு:-
புதுவையில் உள்ள அரசு குடியிருப்புகளை பயன்பாட்டுக்கு உகந்த வகையில் புனரமைத்து சீரமைக்க வேண்டும். மிஷன் பார்க் தொடங்கப்பட்டு குடியிருப்புப் பகுதிகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும்.
தற்போது உள்ள பூங்காக்களை சீரமைக்க வேண்டும். மக்கள் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய ஏதுவாக உபகரணங்கள், நடைபாதை புல்வெளிகள் அமைக்க வேண்டும். குழந்தைகள் பூங்காக்கள் அமைத்து விளையாட்டு உபகர ணங்களை நிறுவ வேண்டும். நீர் நிலைகளை முறையாக புனரமைத்து பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.வீணாக கடலில் கலக்கும் நீரினை சிறு சிறு குளங்கள் அமைத்து தேக்கி பயன்ப டுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இயற்கை சூழலை ஏற்படுத்த வேண்டும். பூங்காக்கள் மற்றும் நீர்நிலைகளை புனரமைக்க தனியார் பங்களிப்புடன் இணைந்து பணியாற்றலாம். இவ்வாறு தமிழிசை கூறினார்.
- மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
- பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையையொட்டி ஓய்ட் டவுன் பகுதியில் தனியார் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த குழந்தைகள் ஆட்டோக்கள் மூலம் சென்று வருகின்றனர். 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மூலக்குளம் மற்றும் அரும்பார்த்தபுரம் பகுதியை சேர்ந்த மாணவிகள் வழக்கம்போல் இன்று ஆட்டோவில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர்.
புஸ்ஸி வீதியில் வந்த ஆட்டோவும் அரசு மருத்துவ மனையிலிருந்து எதிரே வந்த தனியார் பஸ்சும் எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் விக்னேஷ்(22), பள்ளி குழந்தைகள் கோபாலன் கடையை சேர்ந்த தக்கிதா(9), மூலக்குளத்தை சேர்ந்த ஹர்ஷீதா(7), அரும்பார்த்த புரத்தை சேர்ந்த தீக்க்ஷா(6), ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த கிரண்யா(10), மூலக்குளத்தை சேர்ந்த பூர்ணிகா (7), நிக்கிஷா (10), அவந்திகா (10), திஷா (10) ஆகிய 8 சிறுமிகளுக்கு தலை, கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கியதால் அலறி கூச்சலிட்டனர்.
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் விபத்துக்குள்ளான சிறுமிகளை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் நிக்கிஷா(10), அவந்திகா (10) ஆகியோர் தலையில் படுகாயமடைந்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற சிறுமிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்து அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டு கண்ணீர் விட்டு கதறியழுதனர்.
இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவலறிந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்- அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு உடனடியாக வந்தனர். குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
- திருபுவனை திருவாண்டர்கோவிலில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.
- இந்த பெட்ரோல் பங்கை கடலூர் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீராமுலு நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
திருபுவனை திருவாண்டர்கோவிலில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கை கடலூர் அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீராமுலு நடத்தி வருகிறார்.
இந்த பெட்ரோல் பங்கில் ஊழியர் சரவணன் வாடிக்கையாளர்களின் மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் நிரப்பி க்கொண்டிருந்தார்.
அப்போது திருவாண்டார் கோவில் சின்னபேட்டை சேர்ந்த ராஜா என்பவர் குடிபோதையில் அவரது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்புமாறு சரவணனிடம் கூறினார்.
ஆனால் பணம் கொடுக்க வில்லை. இதையடுத்து சரவணன் கூகுல் பே மூலம் பணம் செலுத்துமாறு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா தகாத வார்த்தைகளால் திட்டி சரவணனை தாக்கினார்.
மேலும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த கத்தியை எடுத்து சரவணனை குத்திவிட்டு தப்பியோடி விட்டார்.
இதில் படுகாயமடைந்த சரவணனை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ஸ்ரீராமுலு திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட ராஜா மீது ஏற்கனவே அடிதடி வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- செல்போன் தொழில்நுட்பத்தால் அதிநவீன வசதிகள் வந்துவிட்டது.
- வங்கியில் இருந்து பேசுவதாக ஓ.டி.பி. எண்ணை கேட்டு பணத்தை திருடுகின்றனர்.
புதுச்சேரி:
இந்திய ரிசர்வ் வங்கி சென்னை மண்டலம் சார்பில் அங்கீகரிக்கப்படாத வைப்பு நிதி சேகரிப்பு, இணைவழி நிதி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கம்பன் கலையரங்கில் நடந்தது.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் எஸ்.பி. மனீஷ் பேசியதாவது:-
செல்போன் தொழில்நுட்பத்தால் அதிநவீன வசதிகள் வந்துவிட்டது. இதனால் நன்மைகள் உள்ள அளவுக்கு தீமைகளும் உள்ளது. அதிக குற்றங்கள் நடக்கிறது. வங்கியில் இருந்து பேசுவதாக ஓ.டி.பி. எண்ணை கேட்டு பணத்தை திருடுகின்றனர். பகுதிநேர வேலை, வெளிநாட்டில் வேலை என மோசடி செய்கின்றனர். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பெயர்களை மாற்றி போலி இணையதள பக்கம் உருவாக்கி பணம் திருடுகின்றனர்.
நாம் பயன்படுத்தும் இணை யதளம் உண்மையானதா? என உறுதி செய்ய வேண்டும்.
சமூகவலைதளம் மூலம் நண்பர்கள் பணம் கேட்டால் அனுப்பக்கூடாது. லாட்டரி, வெளிநாட்டில் பரிசு போன்ற மோசடிகளை நம்பக்கூடாது. கிரிப்டோகரன்சி, பிட் காயின்களில் முதலீடு செய்யக் கூடாது. பேஸ்புக் மூலம் திடீரென வீடியோ காலில் வரும் நபர் உங்கள் படத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ தயாரித்து பணம் கேட்டு மிரட்டுவர்.
எனவே தெரியாத செல் நெம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்காதீர்கள். சைபர் கிரைம்களில் பணம் இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்கள். உங்கள் பணத்தை மீட்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
- விளையாட்டு சங்கங்களின் எதிர்ப்புகளை மீறி பதிவு செய்து அதன் முதலாவது கூட்டத்தை கடந்த 14-ந் தேதி கூட்டியது.
புதுச்சேரி:
புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
புதிதாக ஸ்போர்ட்ஸ் டெவலப்மென்ட் அத்தாரிட்டி ஆப் புதுச்சேரி என்ற ஒரு அமைப்பை சட்ட விதிகளுக்கு புறம்பாக பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களின் எதிர்ப்புகளை மீறி பதிவு செய்து அதன் முதலாவது கூட்டத்தை கடந்த 14-ந் தேதி கூட்டியது.
அதில் விளையாட்டு சங்கங்களுக்கும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான உருப்படியான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, அனைத்து விளையாட்டு சங்கங்களின் முதுகெலும்பான புதுவை மாநில விளையாட்டு கவுன்சிலை மூடுவதற்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக விளையாட்டு கவுன்சிலில் பல்வேறு முறைகேடுகள் நடை பெற்றுள்ளன. முறையான கணக்கு வழக்குகள் பல ஆண்டுகளாக தாக்கல் செய்யப்பட வில்லை. இவற்றை யெல்லாம் மூடி மறைப்பதற்கா கவே இந்த புதிய அமைப்பு கூட்டம் நடைபெற்று ள்ளது.
எனவே புதுவை அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மாநில விளையாட்டு வளர்ச்சி அடைய முயற்சி செய்ய வேண்டும். மேலும் புதுவை மாநில விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி, அமுதசுரபி, பாப்ஸ்கோ, பாசிக், பஞ்சாலைகள், சர்க்கரை ஆலைகள், மின்சார துறை, அரசு மருத்துவ கல்லூரி ஆகியவற்றை தொடர்ந்து அரசு நடத்த ஆக்கபூர்வமான நடவடிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






