என் மலர்
புதுச்சேரி
- பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்ய 21-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
- மையத்தில் அறிவிக்கப்படும் நாட்களில் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2023-24-ம் கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள நேரடி தனி தேர்வர்கள், ஏற்கனவே அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், அறிவியல் பாட செயற்முறை பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்ய 21-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
இதற்காக சேவை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது. ஆண் தனி தேர்வர்கள் வில்லியனூர் ஐ.டி.எல் பள்ளியிலும், பெண்கள் புதுவை இமாகுலேட் பள்ளியிலும் பதிவு செய்யலாம். மையத்தில் அறிவிக்கப்படும் நாட்களில் சென்று செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். 80 சதவீத வருகை உள்ள தனி தேர்வர்கள் மட்டுமே பொது தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இவ்வாறு அவர் குறிப் பிட்டுள்ளார்.
- முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்றது.
- நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
புதுச்சேரி:
கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் இந்தியா வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று பிரதமர் மோடியின் என் மனம் என் நாடு திட்டத்தின் மூலம் 50-நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் சின்ன வீராம்பட்டினம் ஓட வெளி கிராம பஞ்சாயத்தாரும் இணைந்து அப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்தனன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி யூனியன் பிரதேச சமூக நல சங்கம் தலைவர் காத்தவராயன் செயலாளர் மதிஒளி , சுதந்திர போராட்ட தியாகி அசோக்ராஜ் , உதவி பொறியாளர் ராஜ்குமார் , இளநிலை செயற்பொறியாளர் சிவஞானம், 100 நாள் வேலை திட்டப்பணி யாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். மேலும் நாட்டு நல பணி திட்டத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் பள்ளி துணை முதல்வர் வினோலியா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயந்தி செய்திருந்தார்.
- உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
- அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதற்கேற்ப ஓட்டல்கள், சிறுநிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள், சிற்றுண்டி கடைகள் என எங்கு பார்த்தாலும் புற்றீசல்கள் போல பெருகிவிட்டது. நடைபாதைகள் முழுக்க கடைகளாகவே காட்சியளிக்கிறது.
இதுபோன்ற சூழலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கலப்பட உணவுகள் குறித்து பொது மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உணவு விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இப்படி குறிப்பிட்ட நாளுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட சிக்கன், மீன், இறைச்சி போன்ற உணவகங்களில் பயன்படுத்தப்படுவதால் பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து அரசின் கவனத்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கொண்டு சென்றனர். இதற்கிடையே உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தரநிலை சட்டத்தை மீறி கலப்படம் செய்வோருக்கு பல அடுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறு உற்பத்தியாளர்கள் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், முதல்முறை ரூ.3 ஆயிரமும், 2-ம் முறை ரூ.6 ஆயிரமும், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் தற்காலிக சிறு கடை வைத்திருப்போர் (சிறிய சில்லரை விற்பனையாளர்கள்) கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், முதல்முறை என்றால் ரூ.1000, 2-வது முறை ரூ.2 ஆயிரம், மூன்றாவது முறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
ஒரு நாளைக்கு 500 லிட்டர் பால் வரை கையாளும் நிறுவனங்கள் கலப்படம் செய்தால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.4 ஆயிரம், 3-வது முறை ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இறைச்சி கடைகளில் ஒரு நாளைக்கு 10 சிறு விலங்குகள்(ஆடு,மாடு), 50 கோழிகள் வரை விற்கும் நிறுவனங்கள் முதல்முறை ரூ.2 ஆயிரம் அபராதம், 2-வது முறை ரூ.4 ஆயிரம் அபராதம், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.
பதிவு பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்களுக்கு முதல்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
உணவுக்கு பயன்படுத்தப்படாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
உணவுகளில் தடை செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தினால் ரூ.20 ஆயிரம், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.
இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை சுகாதாரத்துறை சார்பு செயலர் கந்தன் வெளியிட்டுள்ளார்.
- வையாபுரி மணிகண்டன் கண்டனம்
- வரவேற்பு பேனர்களும் தமிழில் இல்லாமல், முழுமையாக ஆங்கிலத்திலேயே இருந்தது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க.துணைசெயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு அதிகாரிகளுக்கு மின் ஆளுமை குறித்த புத்தாக்க பயிற்சி விழா அழைப்பிதழில் தமிழில் இல்லாமல் முழுமையாக ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. விழா வரவேற்பு பேனர்களும் தமிழில் இல்லாமல், முழுமையாக ஆங்கிலத்திலேயே இருந்தது.
இதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
எதற்கெடுத்தாலும்தமிழ், தமிழர்கள்எனக்கூறும் கவர்னர் பங்கேற்ற விழாவிலேயே தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இனியாவது அரசு விழாக்கள் அனைத்திற்கும் தமிழில் அழைப்பிதழ் அச்சடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தமிழ்மொழியை புறக்கணிக்கும் அரசை கண்டித்து, தமிழ் அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் முடிவு
- மழை நீரை நிரந்தரமாக தங்கு தடை இன்றி வெளியேற்று வதற்கான எந்த ஒரு புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை.
புதுச்சேரி:
புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்து விட்ட நிலையில் புதுவை மாநில மக்களின் வளர்ச்சிக்கு மக்களுக்கு என்று எந்த ஒரு உருப்படி யான திட்டங்களையும் அரசு நடை முறைப்ப டுத்தவில்லை.
புதுவை மாநிலத்தில் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை அமோகமாக நடை பெறுவதாகவும் , பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் இடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது புகார் பல கொடுத்தாலும் போதுமான நடவடிக்கைகளை அரசு எடுப்பதில்லை.
மேலும் பெயரளவில் ஒரு வழக்கு பதிந்து விட்டு அந்த இடங்களை மீட்கவும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இது தொடர்பாக விரைவில் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரடியாக புகார் தெரிவிக்க உள்ளோம். பல்வேறு இடங்களில் தரமான சாலை வசதிகள் பல வருடங்களாக இல்லாமல் உள்ளது. சில இடங்களில் மட்டும் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அவசர கோலத்தில் அரைகுறையாக புதுவை நகரத்தை அழகுபடுத்தி உள்ளனர்.
அதேபோல் வரும் மழைக்கா லங்களை கருத்தில் கொண்டு மழை நீரை நிரந்தரமாக தங்கு தடை இன்றி வெளியேற்று வதற்கான எந்த ஒரு புதிய திட்டங்களையும் அரசு செயல்படுத்தவில்லை.
எனவே கவர்னர் அனைத்து பகுதிகளிலும் தரமான சாலைவசதி மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு இட வேண்டும்.
அதேபோல் மாநிலத்தில் பேனர் கலாச்சாரம் முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளது. அரசு இந்த பேனர் கலாச்சாரத்தை முழுவது மாக தடை செய்ய வேண்டும் லாபத்தில் இயங்கி வரும் மின் துறையை தனியார் மின்மயமாக்கல் திட்டத்தை அரசு முழுவதுமாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நரிக்குறவர்களுக்கு கதர் ஆடை வழங்கப்பட்டது.
- காங்கிரஸ் கட்சி மாநில வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
உலக பழங்குடியினர் மக்கள் தின நாளை முன்னிட்டு புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கட்சியின் சார்பாக காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட கருவடிக்குப்பம், நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் நரிக்குறவர்களுக்கு கதர் ஆடை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் நரிக்குறவர் காலனியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு கதர் ஆடை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி மாநில வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விஜயசுந்தரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்ற கவுதமன். இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி விஜயசுந்தரி (28). திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பல் டாக்டரான விஜயசுந்தரி புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், பல் மருத்துவ துறையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் விஜய சுந்தரிக்கு கோவையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவ மேற்படிப்பு படிக்க சீட் கிடைத்தது. இதனை படிக்க விஜயசுந்தரி விரும்பினார். இது குறித்து கணவர் கவுதமனிடம் தெரிவித்தார்.
ஆனால் விஜயசுந்தரி மேற்படிப்பு படிக்க கவுதமன் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து நேற்று கவுதம் தனது மாமனார் ராமமூர்த்தியிடம் தெரிவித்துவிட்டு, வீட்டு ஹாலில் படுத்து தூங்கினார்.
இந்த நிலையில் படுக்கை அறையில் இருந்த விஜயசுந்தரி தனது பெற்றோரிடம் கணவர் தன்னைப்பற்றி தவறாக கூறி கெட்டப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டார்.
இதனால் மனமுடைந்து விஜய சுந்தரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயசுந்தரிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடக்கிறது. பெண் பல் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.
- பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் மணமேடு எம்.பி அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). பிள்ளையார் குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 17 ஆண்டுகளாக அட்டெண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ராஜேஷ் (15) மகனும், விமாஷினி (13) என மகளும் உள்ளனர்.
ராதாகிருஷ்ணன் கடந்த 2 மாதங்களாக பாகூர் கன்னியகோவில் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராதாகிருஷ்ணன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவி சரஸ்வதியிடம் தகராறு ஈடுபடுவார். சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன் மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சரஸ்வதி பணம் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் சரஸ்வதி வெளியே தள்ளி கதவை பூட்டிக் கொண்டார். வெகு நேரமாகியும் கணவர் கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்த சரஸ்வதி ஜன்னல் வழியாக பார்த்த போது வேட்டியால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாகூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.
- பிம்ஸ் மருத்துவ கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார்
- மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதுகலை, இளங்கலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லுாரி யில் கேன்சர் சிகிச்சை முறையில் தற்போதைய மற்றும் எதிர்கால நவீன சிகிச்சை முறைகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
பிம்ஸ் விஞ்ஞான சங்கம் மற்றும் குளோபல் ஹெல்த் சிட்டி சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு, பிம்ஸ் மருத்துவ கல்லுாரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். பிம்ஸ் மருத்துவ கல்லூரி விஞ்ஞான சங்க அமைப்பு செயலர் சஜீவ் முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கில் கேன்சர் நோய் குறித்த நவீன சிகிச்சை முறை மற்றும் 'ரோபோட்டிக் சர்ஜரி' என்ற அதி நவீன இயந்திரங்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் 'மருத்துவர்களின் பங்கு' குறித்து கருத்தாய்வு செய்யப் பட்டது. கருத்தரங்கில் சென்னை குளோபல் சிட்டி கேன்சர் மருத்துவ நிபுணர் ராஜசுந்தரம், ராம் பிரபு ஆகியோர் கேன்சர் நோய் சிகிச்சை முறை குறித்து பல்வேறு தலைப்புகளில் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மருத்துவ மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், சென்னை குளோபல் ஹெல்த் சிட்டி சிறப்பு மருத்துவர்கள் தீபா, அரவிந்த் மாதுரி உள்ளிட்ட பல்வேறு மருத் துவ கல்லூரிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முதுகலை, இளங்கலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அன்பழகன் வலியுறுத்தல்
- பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் 2 மணி நேரம் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு புதுவை மாநில அதிமுக செயலாளர் ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுகாதாரத் துறையில் நீண்ட காலமாக காலியாக உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்களை நிரப்பவில்லை. பணியில் உள்ள செவிலியர்கள் பணி சுமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டம் அரசின் தொடர் அலட்சியத்தால் செவிலியர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. மருத்துவ விதிப்படி 5 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் பணி செய்ய வேண்டும். ஆனால் 40 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் தற்போது பணி செய்கின்றனர். 10 ஆண்டாக செவிலியர் எண்ணிக்கை அதிகப்படுத்தவில்லை.
கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் துச்சம் என மதித்து ஒப்பந்த செவிலியர் பணி செய்தனர். காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த செவிலியர்கள், தேசிய சுகாதார இயக்க செவிலியர்கள் மூலம் நிரப்ப வேண்டும்.
அரசு உயர் அதிகாரிகள் தங்களது வீண் பிடிவாதத்தால் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பாமல் வேடிக்கை பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
7-வது சம்பவளக் குழுவில் உயர்த்தப்பட்ட அலவன்ஸ் நிலுவை தொகையைக்கூட இன்றுவரை வழங்கவில்லை. இதற்கு நிதித்துறை செயலர் மற்றும் தலைமைச் செயலரின் பொருப்பற்ற செயல்பாடே காரணம். முதல்-அமைச்சர் செவிலியர்களை அழைத்து பேசி நியாயமான அவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- போக்குவரத்து துறை எச்சரிக்கை
- புதுப்புது டிசைன்களில் நம்பர்களை ஒட்டிச்செல்கின்றனர். பல வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப் படுகிறது.
புதுச்சேரி:
இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் பயன்படுத்த போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பின் உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் பொருத்தப் பட்டு வந்தது. இது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நம்பர் அளவு மோட்டார் வாகன சட்டப்படி இருக்கும். 20 மி.மீ. அகலம், 20 மி.மீ. உயரத்தில் அசோக சக்கிரத்தின் குரோமியம் ஹாலோகிராம் முத்திரையும் பதிக்கப்படும். மின்னணு முறையில் இணைக்கப்பட்ட இது வாகன திருட்டை தடுக்கவும் உதவும்.
இந்நிலையில் உயர்பாது காப்பு நம்பர் பிளேட் புதுவையில் கட்டாய மாக்கப்பட வில்லை. இதனால் பலரும் புதுப்புது டிசைன்களில் நம்பர்களை ஒட்டிச்செல்கின்றனர். பல வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப் படுகிறது.
இதுகுறித்து போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பின் புதுவையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் வாகன நம்பர் பிளேட் சேதமடைந்தால் புதிய உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் வாங்காமல், தனியார் ஸ்டிக்கர் கடைகளில் பதி வெண்ணை ஒட்டுகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பா னது. வாகனம் வாங்கிய இடத்தில் புதிய நெம்பர் பிளேட் கோரினால் அவை தயாரித்து வழங்கப் படும்.
வாகனத்தில் உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் இல்லா விட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- ஏ.ஐ.யூ.டி.யூ.சி. வலியுறுத்தல்
- மின்துறையை 51 சதவீத பங்குகளை மட்டும் மத்திய மின்துறை அமைச்சகம் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சித்த போது அனைத்து அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை அரசு போராடிய தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி மின்துறை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது, அரசின் கட்டுப்பாட்டி லேயே இயங்கும். அனைவரின் கருத்தை அறிந்துதான் புதுவை அரசு செயல்படும் என உறுதியளித்தது. இப்போது மின்துறையை 51 சதவீத பங்குகளை மட்டும் மத்திய மின்துறை அமைச்சகம் விற்பதற்கு அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.
தொழிற்சங்க நிர்வாகிகளிடம் அளித்த உறுதி மொழிக்கு எதிராக செயல்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தொழிற் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
மின்துறையை புதுவை மின் பகிர்மான கம்பெனி என்ற பெயரில் உள்ளதாக மின்துறை செயலாளர் கூறியுள்ளார். புதுவை அரசு மின் துறையை போலியாக மின் பகிர்மான கம்பெனி என்ற பெயரில் டெண்டர் கோரப் பட்டுள்ளதாக சொல்வது அப்பட்டமான, பொய்யான மோசடி. மின்துறை குறித்து பாராளுமன்றம், சட்ட மன்றத்தில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களையும், உயரதிகாரிகள் வேறு விதமான கருத்துக்களையும், பொய்யான விவரங்க ளையும் அளித்து வருகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு களில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. புதுவை மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு துணை போகக்கூடாது. மின்துறையின் இன்றைய நிலை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.






