என் மலர்
புதுச்சேரி
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
- அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை நிதி, சுகாதாரம், தேர்தல் துறைகளை வைத்திருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவகரிடம் இருந்து தேர்தல் தவிர பிற துறைகள் பறிக்கப்பட்டு புதிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மோரே வசம் ஒப்படைக்கப்பட்டது.
முதல்-அமைச்சரிடம் ஆலோசிக்காமல் தலைமை செயலர் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆவேசமடைந்தனர்.
இதையடுத்து சபாநாயகர் செல்வம், தலைமை செயலரை அழைத்து பேசினார். அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தலைமை செயலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்த நிலையில் தலைமை செயலர் திடீரென டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதுகுறித்து சபாநாயகர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசின் ஒப்புதலின்றி ஜவகர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பொறுப்புகள் மாற்றப்பட்டது. தலைமை செயலரிடம் கேட்டபோது, முதல்-அமைச்சருக்கு தகவல் தெரிவித்ததாக பொய்யான தகவலை கொடுத்தார்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு சட்டசபை செயலகம் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அவர் இதுவரை விளக்கம் தரவில்லை. அவர் இதுவரை சட்டசபை செயலக புகாருக்கு விளக்கம் தராதது குறித்து மத்திய அரசிடம் புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர்.
- மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மாதா கோவில் வீதியில் அனுமதி இல்லாமல் போக்குவரத்துக்கு இடையூறாகவும் அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சாலை ஓரத்தில் மீன் கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
அரியாங்குப்பம் மார்க்கெட்டில் மீன் அங்காடி என தனியாக இருந்து வரும் நிலையில் மாதா கோவில் தெருவில் ஆக்கிரமித்து மீன்கடை வைத்துள்ளதால், அங்காடியில் மீன் வியாபாரம் பாதிக்கப்படுகிறது எனவும் தொடர்ந்து கொம்யூன் பஞ்சாயத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், புனிதவதி, பில் கலெக்டர் செழியன் மற்றும் கள ஊழியர்கள் மாதா கோவில் வீதிக்கு சென்று போலீசார் உதவியுடன் அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மீன் கடைகளை அதிரடியாக அகற்றினர்.
மேலும் மார்க்கெட்டில் நடைபாதையில் இருந்த கடைகளையும் அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- பாஸ்கர் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதியதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் தேரோடும் வீதியில் சுமார் ரூ.25 லட்சம் செலவில் புதியதாக தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடந்தது.
பாஸ்கர் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை செயற்பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் திருஞானம், உதவி பொறியாளர் பார்த்தசாரதி, இளநிலை பொறியாளர் முருகன், ஒப்பந்ததாரர் அழகர், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
- போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதகடிப்பட்டு பகுதியில் இருந்து திருவண்டார் கோவில் பகுதி வரை பிரெஞ்சுகாரன் மழைநீர் வடிகால் வாய்க்கால் உள்ளது. மழைக்காலங்களில் வாய்க்காலில் மழைநீர் செல்வது வழக்கம்.
இப்போது இந்த வாய்க்கால் கழிவு நீர் ஓடையாக மாறி உள்ளது. மேலும் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழி சாலைக்காக இருபுறமும் மழை நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப் பட்டுள்ளது.
அதிலிருந்த வரும் கழிவு நீரும் இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் விடப்படுகிறது. இந்த வாய்க்காலில் ஏற்கனவே பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலை ஊழியர்கள் திறந்த வெளியாக உள்ள கழிவுநீர் வாய்க்காலை உடனடியாக சரி செய்து அங்கு கழிவுநீர் தேங்கி நிற்காமல் வாய்க்காலில் தடை இன்றி செல்வதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது.
- மடுகரை (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி, அக்.26-
புதுவை ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து திருபுவனை இன்டர்லிங் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்படுகிறது.
இதையொட்டி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏரிப்பாக்கம், நத்தமேடு, சூரமங்கலம், மொளப்பாக்கம், மடுகரை (ஒரு பகுதி) ஆகிய இடங்களில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
- முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் பொதுமக்கள் மனு
- பாகூர் மூலநாதர் கோவிலுக்கு தென்பெண்ணையாற்றங் கரையில் ஏற்கனவே இருந்தபடி தீர்த்தவாரி மண்டபம் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் பாகூரில் 1,400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத ஸ்ரீ மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தீர்த்தவாரி மண்டபம் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆற்று திருவிழாவின் போது, மூலநாதர் இந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் விழுப்புரம்- –நாகப்பட்டினம் புறவழிச்சாலை பணிக்காக தீர்த்தவாரி மண்டபத்தை, நெடுஞ்சாலை துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.
தீர்த்தவாரி மண்டபம் இருந்த இடம் சோரியாங்குப்பம் கிராமத்தில் உள்ள செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், இழப்பீடு தொகை தங்களுக்கு தான் சேர வேண்டும் என அந்த கிராம மக்கள் உரிமைக்கோரி வருகின்றனர். மேலும், அந்த இடத்தில் புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மற்றொருபுறம், ''பாகூர் மூலநாதர் கோவிலின் பயன்பாட்டில் இருந்து வந்த தீர்த்தவாரி மண்டபம் சட்ட விரோதமாக, சோரியாங்குப்பம் கோவிலுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டதாக பாகூர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், தென்பெண்ணை ஆற்றில் ஏற்கனவே இருந்தபடி பழமை மாறாமல், புதியதாக தீர்த்தவாரி மண்டபம் கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பாகூரை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். அதில் பாகூர் மூலநாதர் கோவிலுக்கு தென்பெண்ணையாற்றங் கரையில் ஏற்கனவே இருந்தபடி தீர்த்தவாரி மண்டபம் அமைக்க வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட தீர்த்தவாரி மண்டப இடத்தை மூலநாதர் கோவிலின் பெயரில் மாற்றம் செய்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- கால்நடை துறையில் விண்ணப்பித்து பெறலாம்
- ரூ.50 ஆயிரத்தில் பால் கறவை எந்திரம் வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு 100 சதவீத மானியத்தில் ரூ.50 ஆயிரத்தில் பால் கறவை எந்திரம் வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுவையை சேர்ந்த 3 கறவை மாடுகளுக்கு மேல் வைத்துள்ளோர் இந்த திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
புதுவை கால்நடைத்துறை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதற்காக துறை சார்பில் 2 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வர்.
இதற்கான விண்ணப்பத்தை கால்நடைத் துறையில் பெறலாம் என துறை இயக்குனர் தெரி வித்துள்ளார்.
- அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கடிதம்
- போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை வழக்கறிஞர் தினேஷ், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்ப தாவது:-
புதுவையை சேர்ந்த போலீசார் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. சில போலீசார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மன அழுத்தத்தால் அவர்களது குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகின்றது.
எனவே புதுவையை சேர்ந்த போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், போலீசார் அவர்களது குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கு வசதியாக அவர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும் காவல்துறை சார்பில் போலீசாரின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்திகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்மந்த ப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்படி வார ஓய்வு தேவைபடவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.
போலீசாரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களின் குடும்பத்தா ருடன் கொண்டாடி மகிழ அந்த 2 நாட்களிலும் முழு ஊதியத்துடன் கூடிய விடு முறை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லறை புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
- ஆய்வின்போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, நோயல், செழியன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ கல்லறை பல ஆண்டுகளாக சரியாக பராமரிக்கப்படாமல் புதர் மண்டிகிடந்தது.
இதனை புனரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. நேதாஜி நகர் கல்லறைக்கு சென்று ஆய்வு செய்து, சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கல்லறை புனரமைக்கப்படும் என உறுதி அளித்தார்.
இது சம்பந்தமாக செயற் பொறியாளர் சிவபாலன், வருவாய் துறை அதிகாரி பிரபாகரனுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று தற்போது கிறிஸ்தவ கல்லறை சுவரில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
அங்கு புதிதாக 27 மின்விளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கல்லறை திருநாள் நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் பணிகளை எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். ஆய்வின்போது தொகுதி நிர்வாகிகள் சக்திவேல், ராஜி, நோயல், செழியன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
- சாமானிய மக்கள்கூட டாக்டராகும் வாய்ப்பை நீட் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
- நீட் தேவை என்பதே என் கருத்து.
புதுச்சேரி:
புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் ஒரு கருத்து கூறினால் ஆளும் கட்சியினர் எந்தளவு மோசமாக எதிர்கொள்கிறார்கள். இப்படி வன்முறையில் ஈடுபட்டால் ஆள்பவர்களின் ஆதரவு கிடைக்கும் என நினைக்கும் அளவு தமிழகத்தில் பேச்சு நிலவுகிறது. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம்.
கருத்தை வார்த்தை கலவரத்தாலும், வன்முறை கலவரத்தாலும் எதிர்கொள்ளும் சூழ்நிலை எந்த மாநிலத்திலும் இருக்கக் கூடாது, தமிழகத்திலும் இருக்கக்கூடாது.
கவர்னர் கருத்துக்கு எதிர்கருத்து கூறும்போது ஏன் வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்? சாமானிய மக்கள்கூட டாக்டராகும் வாய்ப்பை நீட் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு. நீட் தேவை என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அருகில் இருந்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், மருத்துவ கலந்தாய்வில் குழப்பம், புதிய அமைச்சர் நியமனம் குறித்து கேட்டபோது உங்களை அழைத்து பேசுகிறேன் என கூறி சென்றார்.
- அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார்.
- குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மதுரையை சேர்ந்த குமார் (வயது50) என்பவர், பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை குப்பைகளிலிருந்து எடுத்து விற்று, அந்தப்பணத்தில் சாராயம் குடித்துவிட்டு, சாராயக்கடை ஓரம் படுத்து தூங்குவது வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த 23-ந் தேதி, குமார், திரு.பட்டினம் கீழவாஞ்சூர் சாலையில் குப்பைகளிலிருந்து பாட்டில்களை எடுத்துவிட்டு, சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, காரைக்கால், நாகை சாலையில், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அதிவேகமாகக சென்ற மோட்டார் சைக்கிள், குமார் மீது மோதியது. இதில், குமார் பலத்த காயமுற்றார். தொடர்ந்து, காரைக்கால் தனியார் துறைமுகம் ஆம்புலன்ஸ் மூலம் குமார் காரைக்கால் அரசு ஆஸ்பதிரிக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு குமார் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, சாராயக்கடையில் வேலை செய்யும் தங்கபாண்டியன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
- இனியாவது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், கிராம பஞ்சாயத்து ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும், புதுச்சேரி அரசை கண்டித்து, காரைக் காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழி யர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலா வுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலை வர் அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் எனும் முதல மைச்சரின் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்க ளை பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் செய்யும் உள்ளாட்சித்துறை, இனியா வது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க செய லாளர் சகாயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், சம்மேளனன நிர்வாகிகள் கலைச் செல்வன், திவ்விய நாதன், சந்தன சாமி, புக ழேந்தி, கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.






