என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • மது குடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்தீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பக தோப்பு ரோடு பகுதியில் உள்ள மருதுநகரை சேர்ந்தவர் ராயப்பன் (வயது 52), கட்டிட தொழிலாளி. இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    ராயப்பனும், அதே பகுதியில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த கார்தீஸ்வரன் (40) என்பவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். கார்த்தீஸ்வரன் அடிக்கடி ராயப்பனிடம் மது குடிக்க பணம் வாங்கி செல்வார்.

    அதன்படி சம்பவத்தன்று காலை குறிஞ்சி நகர் விலக்கு டீக்கடை முன்பு ராயப்பன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்தீஸ்வரன் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுக்கவே 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தீஸ்வரன் அருகில் இருந்த பழைய இரும்பு பொருட்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த டி.வி.யை எடுத்து ராயப்பன் தலையில் போட்டார். இதில் டி.வி. கண்ணாடி உடைந்து அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராயப்பன் சம்பவ இடத்திலேய பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து உறவினர் சித்திரை முத்து ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான கார்த்தீஸ்வரனை தேடி வருகின்றனர்.

    மது குடிக்க பணம் கேட்ட பிரச்சினையில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ராஜபாளையம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம்:

    நாட்டின் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் குற்றங்களில் ஈடுபடு பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் சமூக வலைதள வீடியோக்கள் உதவியாக உள்ளன. இதற்கு உதாரணமாக அண்மையில் மணிப்பூரில் பெண்கள் மீதான தாக்குதல் வீடியோ சாட்சி. இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    தமிழகத்தில் கண்மாயில் மீன்பிடித்த வாலிபர்களை அரை நிர்வாணமாக்கி கொலைவெறி தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது. இதன் விவரம் வருமாறு:-

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் பல்வேறு கண்மாயின் மீன்பிடிக்கும் உரிமையை பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டு குத்தகைதாரர்கள் மீன்களை வளர்த்து அதனை விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஏலம் எடுத்தவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளி நபர்கள் யாரேனும் மீன்களை பிடித்து விற்கக்கூடாது என்பதற்காக கண்மாய்க்கு காவலுக்கு ஆட்களை போட்டு கண்காணித்து வருகின்றனர்.

    குறிப்பாக ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மருங்கூர் கண்மாயில் அதிக அளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கண்மாயில் அடிக்கடி மீன்கள் திருட்டு போய் வந்தது. இதன் காரணமாக கண்மாயை குத்தகை எடுத்த ராஜ்குமார் என்பவர் காவலுக்கு ஆட்களை போட்டிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மருங்கூர் கண்மாயில் சோமையாபுரம் பகுதியை சேர்ந்த சூர்யா, அன்பழகன், மனோகர், மனோஜ் ஆகிய 4 வாலிபர்கள் திருட்டுத்தனமாக மீன்பிடித்துள்ளனர். அப்போது அங்கு வந்த காவலாளிகள் 4 பேரையும் கையும், களவுமாக பிடித்து குத்தகைதாரர் ராஜ்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர்.

    அவர் 4 பேரையும் போலீசில் ஒப்படைக்காமல் அரை நிர்வாணமாக்கி உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி உள்ளார். அவருடன் சேர்ந்து சதீஷ், சத்தியராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகியோரும் அவர்களை தாக்கி உள்ளனர்.

    அப்போது 4 பேரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சினர். ஆனாலும் தொடர்ந்து ராஜ்குமார் தரப்பினர் அவர்களை தாக்கினர். மேலும் மீன்பிடித்தற்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என மிரட்டினர். இந்த தாக்குதலை ராஜ்குமார் தரப்பை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வேகமாக பரவி வைரலானது. 4 இளைஞர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடக்கும் பதிவு பார்ப்போர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    ராஜபாளையம் வடக்கு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது 4 வாலிபர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகைதாரர் ராஜ்குமார், சதீஷ், சத்யராஜ், காளிராஜ், பால்பாண்டி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தாக்குதலில் காயம் அடைந்த இருவர் எலும்பு முறிவு காரணமாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    • டாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி செய்த தலைமறைவான குற்றவாளியை கைது செய்தனர்.
    • நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, நரிக்குடி அருகே வீரசோ ழன்-மானாசாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த மே மாதம் 27-ந்தேதி நள்ளிரவு கடையில் புகுந்த மர்ம நபர்கள் பணம், மதுபாட்டில்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து வந்ததால் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடை பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்து டாஸ்மாக் கடையில் திருட முயன்ற சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே உள்ள மறவமங்கலத்தை சேர்ந்த குணசேகரன்(வயது22), ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்த முகமது யூசுப்(19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்ற வாளியான சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சிவபாலன் என்ப வரை போலீசார் தேடி வரு கின்றனர். இந்த நிலையில் நேற்று அவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • விருதுநகர் இளம்பெண் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
    • ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியை சேர்ந்தவர் நாராயணன்-மூர்த்தி அம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி(வயது33). இவர் சென்னையில் ஜப்பானிய மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறார். மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்செல்வி அதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை கடந்த மே 23-ந்தேதி முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதற்காக ஏற்கனவே தமிழக அரசு அவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்தது. இந்த நிலையில் முத்தமிழ்செல்வி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தனது 2-வது முயற்சியாக தற்போது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ரஷ்ய நாட்டின் எல்பரஸ் சிகரத்தில் ஏறும் முயற்சியில் முத்தமிழ் செல்வி ஈடுபட்டுள்ளார்.

    • விருதுநகரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
    • வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் உயிர் உரங்களின் பயன் பாடு மற்றும் பயிர் பாது காப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலை மையில் கலெக்டர் அலுவ லக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் விவ சாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர். கலெக்டர் ஜெயசீலன் விவசாயிகளின் கோரிக்கை களைக் கேட் டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவ டிக்கை எடுக்க அறிவுறுத்தி னார்.

    கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத் தில் விவசாயிகளால் வழங் கப்பட்ட மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறி த்து வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (விவ) எடுத்துரைத்தனர்.

    கூட்டத்தில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு தமிழ் மண் வள பாதுகாப்பு வலைதள பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பவர் பாயிண்ட் மூலம் விளக்கமளிக்கப் பட்டது. வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் உயிர் உரங்களின் பயன் பாடு மற்றும் பயிர் பாது காப்பு பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேளாண் பட்டதாரிகளை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் கார்த்திக் ராஜா என்பவருக்கு ரூ.1 லட்சத்திற்க்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்கும் நோக்கில் வனத் துறை மூலம் வட்டார அளவிலான விவசாயி களு க்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடத்த இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரி வித்தார்.

    விருதுநகர் மாவட்டத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட் டில் உள்ள அனைத்து கண் மாய்களிலும் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றுவதற்கும், சீமைக்கருவேல மரங்களை, வனத்துறையிடமிருந்து மர மதிப்பீடு பெற்ற பின்னர் அவற்றை அகற்றுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவி குமார், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பத்மாவதி, மாவட்ட கலெக் டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் மை இயக்குநர் ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

    • ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர்.
    • 25-ந்தேதி புஷ்ப யாகம் நடைபெற உள்ளது.

    108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல்வேறு உற்சவங்கள், வைபவங்கள் நடைபெற்ற போதிலும் ஆடிப்பூர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூரத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆண்டாள்-ரெங்கமன்னார் சேர்த்தியில் 16 வண்டி சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவையொட்டி தினமும் ஆண்டாள், ரெங்கமன்னார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 5-ம் திருநாளான 18-ந்தேதி 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஆண்டாள் பெரிய அன்னவாகனம், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள், திருத் தங்கல் அப்பன் ஆகியோர் கருட வாகனங்களிலும், பெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளி காட்சி அளித்தனர். 7-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு சயனசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான இன்று (சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக ஆண்டாள், ரெங்கமன்னார் மேளதாளங்களுடன் தேரில் எழுந்தருளினர். காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா..., கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தேர் சக்கரங்கள் பதியாத வகையில் இரும்பு பிளேட்டுகள் போடப்பட்டு இருந்தன. மேலும் வேளாண்மைத்துறை சார்பில் பொக்லைன் எந்திரங்கள் தேரை பின்னால் இருந்து தள்ளும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அதேபோல் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டிருந்தது.

    வருகிற 24-ந்தேதி காலை இரட்டை தோளுக்கினியானில் வாழைக்குளத்தெரு தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளல் மற்றும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    பன்னிரெண்டாம் திருநாளான 25-ந்தேதி காலை விடாயத்து மண்டபத்தில் உற்சவ சாந்தியும், மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரெங்க மன்னார் திவ்ய தம்பதியினருக்கு புஷ்ப யாகமும் நடைபெற உள்ளது. அத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், செயல் அலுவலர் மு.கரு.முத்துராஜா மற்றும் கோவில் பட்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.

    • இன்று காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.
    • ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கிய தலங்களில் ஒன்றான ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த தலம் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

    இங்கு ஆண்டுதோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தையொட்டி நடக்கும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா சிறப்பு பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 18-ந்தேதி 5 கருட சேவை நடைபெற்றது. மேலும் திருவிழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் தினமும் ஆன்மிக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி, நாட்டிய நிகழ்ச்சி, பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி ஆண்டாள்- ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து மேள தாளங்களுடன் கீழ ரத வீதிக்கு வந்து, தேரில் எழுந்தருள்கின்றனர். காலை 8.05 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது.

    தேரோட்டத்தை முன்னிட்டு சீதனமாக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு பட்டுப்புடவை, வஸ்திரம், மங்களப்பொருட்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டன. யானை முன்னே செல்ல ஸ்ரீரங்கம் பட்டு, மேல தாளங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் கொண்டுவரப்பட்டு தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டன.

    மதுரை கள்ளழகர் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் அழகர்கோவிலில் இருந்து வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இதில் கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், அருள் செல்வம், பிரதீபா, உதவி பொறியாளர் கிருஷ்ணன், பேஷ்கார் முருகன், உதவி பேஷ்கார் ஜெயராமன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேர் திருவிழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் அதிகாரிகள் செய்துள்ளளனர்.

    • ராஜபாளையம் ஒன்றிய கிழக்கு பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் சாலைகளை சாத்தூர் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய ஊராட்சி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நல்லம நாயக்கன்பட்டி ஊராட்சி பானாங்குளம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெரு மற்றும் ஜமீன் நத்தம்பட்டி ஊராட்சியில் உள்ள வரகுண ராமபுரம் பெருமாள் கோவில் தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சாத்தூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. நிதியிலிருந்து புதிதாக போடப்பட்ட வாறுகாலுடன் கூடிய சிமெண்ட் சாலையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    மேலும் வரகுண ராம புரம் சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அங்குள்ள பணி செய்யும் செவிலியரிடம் கிராம மக்களின் எண்ணிக்கை குறித்தும், அவர்களுக்கு இல்லம் தேடி மருத்துவம் எவ்வாறு சென்று சேர்கிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் ராஜபாளை யம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டாள் கோவில் தேரோட்டத்தையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக்கொள்ளலாம்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை நடைபெறும் ஆண் டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டத்திற்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏதுவாக குற்றத்த–டுப்பு நடவடிக்கையாக தேர் பவனி வரும் பாதையான 4 ரதவீதிகள், கோவில் உட்பு–றம், வெளிப்பிரகாரம் மற் றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள்,

    உயர் கட்டிடங்களில் பைனாக்குலர், நவீன கேம–ராக்கள் பொருத்தியும், உயர் கண்காணிப்பு கோபு–ரங்கள் அமைத்தும், காவல் துறையி–னர் டிரோன் கேமராக்களை பறக்கவிட்டும் அதன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு குற்ற நடவடிக்கைகளை தடுக்க ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

    போக்குவரத்து மாற்றம்

    தேரோட்டத்தை முன் னிட்டு மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் வாகனங்கள் நாளை (22-ந்தேதி) காலை 5 மணி முதல் கிருஷ்ணன்கோவில், பாட் டக்குளம் விலக்கில் இருந்து மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க் கமாக வந்து திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையம் செல்வதற்கும்,

    ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் வாகனங்கள் எம்.பி.கே.–புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சாபுரம், கம்மாப் பட்டி, ஆத்துக்கடை ஜங் ஷன், ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழியாக மதுரை செல்லவும், சிவகாசியில் இருந்து ராஜ–பாளையம் செல்லும் வாக–னங்கள் மல்லி, ஸ்ரீவில்லி–புத்தூர் ரெயில்வே பீடர் ரோடு, தாலுகா அலுவலகம் மார்க்கமாக வந்து திருப் பாற்கடல் வழியாக ராஜபா–ளையம் செல்லவேண்டும்.

    மேலும் மதுரையில் இருந்து வரும் அரசு பயணியர் பேருந்துகள் ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பு, பஸ் நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழியாக ராமகிருஷ் ணாபுரம், சர்ச் சந்திப்பு, செங்குளம் விலக்கு, என்.ஜி.ஜி.ஓ. காலனி, திருப்பாற் கடல் வழியாக ராஜபாளைம் செல்லவேண்டும்.

    ராஜபாளைத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்து–கள் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கில் இருந்து மம்சா–புரம், கம்மாப்பட்டி, ஆத் துக்கடை ஜங்ஷன், பேருந்து நிலையம் வந்து பின்னர் சின்னக்கடை பஜார் வழி–யாக ராமகிருஷ்ணா–புரம், கிருஷ்ணன்கோவில் வழி–யாக மதுரை செல்லவேண் டும்.

    வாகன நிறுத்துமிடங்கள்

    மேலும் தேரோட்டத்திற்கு மதுரையில் இருந்து வரும் பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூ–ரில் உள்ள மங்காபுரம் பள்ளி மைதானம், கான் வென்ட் பள்ளி மைதானம், ஜி.கே.பர்னிச்சர் வடக்கே உள் மைதானம், ராஜபாளை–யத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெரியகு–ளம் கண்மாள் சுற்றியுள்ள காலி–யிடங்களிலும், சிவகாசியில் இருந்து வரும் வாகனங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி மைதானத்திலும் நிறுத்திக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை விருதுநகர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

    • ராஜபாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாரிமுத்து டிப்ளமோ படித்துள்ளார்.

    இந்த நிலையில் திருமணம் செய்வதாக கூறி அந்த மாணவியிடம் மாரிமுத்து நெருங்கி பழகி உள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனிடையே இந்த விவ காரம் குறித்து ராஜபாளை யம் விரிவாக்க அலுவலர் மேத்தா மேரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சம்பவ இடம் சென்று விசாரித்தபோது மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதை யடுத்து அவர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி மாணவியை கர்ப்பிணி யாக்கிய மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

    • காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
    • திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது மகன் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வந்தார்.

    இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்றபோது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை, சரவணனை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று அருப்புக்கோட்டை ஜூடிசியல் கோர்ட்டில் ஆசிப் முகமது, முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், முகமது இர்ஃபான், சக்தி மகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக் அப்துல்லா ஆகிய 8 பேர் சரணடைந்தனர்.

    • முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள கட்டாலங்குளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பழனி (வயது 27). இவர் டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் பனைக்குடி பகுதியை சேர்ந்த பாண்டி மகள் முத்துவள்ளி (24) என்பவருக்கும் கடந்த 2018-ல் திருமணம் நடந்தது.

    திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தையில்லை. பழனி லாரி டிரைவராக பணிபுரிந்து வருவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று தங்கிக்கொள்வது வழக்கம். இருந்தபோதிலும் தினமும் மனைவியுடன் செல்போனில் பேசி நலம் விசாரித்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    காலப்போக்கில் மனைவியுடனான நெருக்கம் குறைந்ததாக பழனி எண்ணினார். மேலும் சாவரியை முடித்துவிட்டு ஊருக்கு திரும்பும் சமயங்களில் மனைவி தன்னுடன் அதிகம் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் எண்ணி கவலைப்பட்டார். இதுவே நாளுக்கு நாள் அவரது மனதில் புரையோடி வளர்ந்தது. அது மனைவி முத்துவள்ளியின் நடத்தையில் சந்தேகப்படும் அளவுக்கு வந்தது.

    இதையடுத்து பழனி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை காலி செய்து விட்டு, மதுரை அவனியாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். அங்கு கணவன், மனைவி இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். ஒருபுறம் குழந்தை இல்லாத ஏக்கம், மறுபுறம் மனைவியின் நடத்தை மீதான சந்தேகம் இரண்டும் சேர்ந்து பழனியை பாடாய்படுத்தியது.

    அதுவே தம்பதிக்கிடையே பகையாக வளர்ந்து தகராறை ஏற்படுத்தியது. அப்போதெல்லாம் பழனி, தனது மனைவி முத்துவள்ளியை அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முத்துவள்ளி கணவரை பிரிந்து, தனது சொந்த ஊரான பனைக்குடி கிராமத்திற்கு சென்றுவிட்டார். அங்கு தாய் முத்துமாரியுடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இருவீட்டாரின் உறவினர்கள் பழனி, முத்துவள்ளி இருவரையும் அழைத்து பேசி சமாதானப்படுத்தி மீண்டும் கணவருடன் சென்று குடும்பம் நடத்த அனுப்பி வைத்தனர். ஆனால் இருவருக்கிடையேயான பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

    இதற்கிடைய முத்துவள்ளி கடந்த மாதம் 30-ந்தேதி நாலூர் விலக்கு பகுதியிலுள்ள தனது கணவரான பழனியின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது அக்காள் கார்த்தீஸ்வரி தங்கையான முத்துவள்ளியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அ.முக்குளம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

    அதன்பேரில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் முத்துவள்ளி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் அ.முக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட முத்துவள்ளியின் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அவரது நாடியின் கீழ்பகுதி, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காணப்பட்ட காயங்களால் சந்தேகமடைந்த போலீசார் அவரது கணவர் பழனியிடம் அதிரடியாக விசாரணையை தொடங்கினர். இதில் பழனி தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் போலீசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், சம்பவத்தன்று முத்துவள்ளியின் நடத்தையின் மீது ஏற்கனவே ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பழனி, முத்துவள்ளியை அடித்துக்கொன்றதும் தெரிவித்துள்ளார். கொலையை மறைக்கவே முத்துவள்ளி தனக்குத்தானே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறி தான் நாடகமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து தற்கொலை வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் மனைவியை அடித்துக்கொலை செய்த கணவர் பழனியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அருப்புக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பழனி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×