என் மலர்tooltip icon

    விருதுநகர்

    சிவகாசியில் உள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    சிவகாசி:

    சிவகாசியில் உள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு அதிகாரிகள் மற்றும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் கடந்த வாரம் வெடி விபத்து ஏற்பட்டு 21 பேர் பரிதாபமாக கருகி பலியானார்கள்.

    இந்த விபத்தில் 25-க்கும் அதிகமானவர்கள் தீக்காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் காக்கிவாடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு தொழிலாளிக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த இரண்டு விபத்துக்களும் பட்டாசு ஆலை அதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து நடந்த பட்டாசு ஆலைகளை வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.

    இந்தநிலையில் ஆனையூரில் உள்ள வெடிப்பொருள் கட்டுபாட் டுத்துறை அலுவலகத்தில் நேற்று காலை பட்டாசு ஆலை அதி பர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இதில் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன், டான்பாமா தலைவர் கணேசன் மற்றும் பட்டாசு ஆலை அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை தயாரிப்பது எப்படி என்றும், விதிமுறைகளை மீறாமல் பட்டாசுகளை தயாரிக்க தொழிலாளர்களை வலியுறுத்த வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு அதிகாரி சுந்தரேசன் பேசினார். பின்னர் மத்திய அரசு சார்பில் பாதுகாப்பாக பட்டாசு தயாரிப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு கையேடு ஒன்றினை மத்திய அரசு அதிகாரி பாண்டே வெளியிட, டான்பாமா கணேசன் பெற்றுக்கொண்டார்.

    போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    விருதுநகர்:

    தமிழக பள்ளிக்கல்வித்துறை பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 3-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.

    பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகியும் மாணவர்கள் முழுமையாக கற்றல் மன நிலைக்கு வராத நிலையே தொடர்கிறது. தொடக்க நிலை மதிப்பீட்டுத்தேர்வில் பெரும்பாலான மாணவர்கள் குறைவான மதிப்பெண்களே பெறும்நிலை இருக்கிறது.

    பாடத்திட்டகுறைப்பை பொறுத்தவரை ஒரு சில பாடங்களுக்கு மட்டும் 40 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

    கணிதம், வணிகவியல் உள்பட முக்கிய பாடங்களில் 80 சதவீதம் வரை பாடங்கள் படிக்க வேண்டிய நிலையுள்ளது. தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் அவகாசம் உள்ள நிலையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் இடையில் மாணவர்களுக்கான கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் செய்முறை தேர்வு காரணமாக 10 முதல் 15 நாட்கள் வரை கற்பித்தல் பணி தடைபடும். மீதமுள்ள நாட்களில் அனைத்து பாடத்திட்டத்தின்படி பாடங்களை நடத்தி முடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம்.

    பாடங்களை நடத்தும் போது மாணவர்களுக்கு முழுமையாக புரிய முடியாத நிலை ஏற்படும். மேலும் இதுவரை மாதிரிவினாத்தாள் வினா வங்கி குறித்த எந்த தகவலும் வழங்கப்படவில்லை. காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வு எதுவும் நடத்தப்படாமல் நேரடியாக பொதுத்தேர்வு நடத்தப்படும் நிலை உள்ளதால் மாணவர்கள் மன ரீதியாக பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும் ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும் என்பதற்காக மாணவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது.

    சி.பி.எஸ்.இ. நிர்வாகம் கூட பொதுத்தேர்வினை ஜூன் மாதத்தில் தான் நடத்துவதாக அறிவித்து உள்ளது. மேலும் குறைந்த கால அவகாசத்தில் மாணவர்களை பொதுத்தேர்வு எழுத நிர்பந்திப்பது அவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக குறைந்தபட்சம் 5 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே தற்போது தேர்வினை மே மாத இறுதிக்கு அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

    சிவகாசி அருகே டிராக்டரில் இருந்து விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 44). இவர் தனக்கு சொந்தமான டிராக்டரில் வைக்கோல் ஏற்றி உள்ளார். பின்னர் கயிறு போட்டு கட்டி விட்டு கயிற்றை சரி பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து டிராக்டரில் இருந்து ராஜேந்திரன் கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரையில் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தை அடுத்த ஜமீன் நத்தம்பட்டி மீனாட்சிபுரம் காலனியை சேர்ந்தவர் சங்கிலியாண்டி மகன் கருப்பையா (வயது36). மலையடிப்பட்டி ரோட்டில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் புதிய பஸ் நிலையம் எதிரே இருசக்கர வாகனத்தில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோ மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு போலீசார் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கணேசனை (42) கைது செய்தனர்.
    சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல பஞ்சாயத்து பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கும் சம்பவம் தொடரும் நிலையில் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் சிவகாசி ஒன்றியம் தான் பெரியது. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

    சிவகாசி ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் ஆனையூர், தேவர்குளம், எஸ்.என்.புரம், பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், நாரணாபுரம், சித்துராஜபுரம், சாமிநத்தம், அனுப்பன்குளம் ஆகிய பெரிய பஞ்சாயத்துக்களில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் கொட்டவும், உரமாக தயாரிக்கவும் போதிய இடவசதி இல்லை.

    இதனால் பெரும்பாலான இடங்களில் சேகரிக்கப்பட்ட குப்பை களை தூய்மை பணியாளர்களே தீயிட்டு எரிக்கும் நிலை தொடர்கிறது.

    அதிலும் குறிப்பாக சிவகாசி நகராட்சியையொட்டி ஆனையூர், பள்ளப்பட்டி, எஸ்.என்.புரம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் பஞ்சாயத்துகள் உள்ளன. நகராட்சி பகுதியில் தேவையான தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன வசதி இருப்பதால் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது. அத்துடன் அப்புறப்படுத்தப்படும் குப்கைள் உரமாக மாற்றப்படுகிறது.

    ஆனால் பஞ்சாயத்து பகுதியில் குப்பைகளை அகற்ற போதிய துப்புரவு தொழிலாளர்களும், வாகனங்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைப்போல் தேங்கி நோய்களை பரப்பி வருகிறது. சில இடங்களில் குப்பைகளை துப்புரவு பணியாளர்களே தீயிட்டு எரிக்கும் நிலை இருக்கிறது. இவ்வாறு தீயிட்டு எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் புகையால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குப்பைகள் எரிப்பது சிவகாசி ஒன்றியத்தில் தொடர்கிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
    ரேஷன் அரிசியை பதுக்கிய 2 பேருக்கு 1 வருடம் ஜெயில் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்பபு வழங்கியது.
    விருதுநகர்:

    விருதுநகர் முத்துராமன் பட்டியை சேர்ந்தவர்கள் ராஜமாணிக்கம் மற்றும் மாரியப்பன் ஆகியோர் கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ரேஷன் அரிசி பதுக்கியதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 21 மூடை ரேஷன்அரிசியை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கிைன விசாரித்த இந்நகர் முதல் மாஜிஸ்திரேட்டு மருதுபாண்டி, குற்றம் சாட்டப்பட்ட மாரியப்பன் மற்றும் ராஜ மாணிக்கத்துக்கு தலா ஒரு வருடம் ஜெயில் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    ராஜபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் கேரள மாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து கீழ ராஜகுலராமன் போலீசார் ரோந்து பணிமேற்கொண்டனர். 

    இதில் சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் லாட்டரி சீட்டு விற்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கரபாண்டியபுரம் வடக்கு தெருவை சேர்ந்த மருத்துவாமலை (வயது52) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    வத்திராயிருப்பு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் மலைப்பகுதியில் குடியேறினர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு அருகே உள்ள ராம்நகர் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குச் செல்வதற்கு தார் சாலை வேண்டும்.

    பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சதுரகிரி மலை பாதையில் கடைகள் அமைக்கவும், வனப்பகுதியில் தங்களது ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி கோரியும் நேற்று பார்ப்பனத் அம்மன் கோவில் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு தாசில்தார் அன்னம்மாள், இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வனச்சரகர் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    இதையடுத்து கோரிக்கைகள் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி வாங்கி தரப்படும் என அவர்கள் கூறினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மலைவாழ் மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
    பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
    சாத்தூர்:

    சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 12-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் 20 போ் உயிரிழந்தனர். காயமடைந்தோர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பெண் தொழிலாளி வைஜெயந்தி மாலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதையடுத்து பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் 16 பேர் சாத்தூர், மதுரை, தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 8 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் கடந்த 12-ம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழ்ந்தனர். இதுதொடர்பாக பட்டாசு ஆலை குத்தகைக்காரர்கள் 2 பேர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

    இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சந்தனமாரியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த பட்டாசு பட்டாசு ஆலை விபத்து குறித்து விசாரணை நடத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 8 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.
    பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகர் வியாபார தொழிற்சங்கம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது.
    விருதுநகர்:

    இதுகுறித்து விருதுநகர் வியாபாரிகள் சங்க தலைவர் வி.வி.எஸ். யோகன், மத்திய நிதி மந்திரிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயருவதால் தடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

    தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கிவிட்டது. ஒரு லிட்டர் டீசல் விலையும் ரூ.90-க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு வாகனங்களை பயன்படுத்துவதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை கலால் வரி ரூ.32 விதிக்கப்பட்டுள்ளது. கலால் வரியை குறைத்து பெட்ரோல் விலையை அதிகபட்சமாக ரூ.70 ஆகவும், டீசல் விலையை அதிகபட்சமாக ரூ.60 ஆகவும் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும்போது பெட்ரோல், டீசல் விலை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பது ஏற்புடையது அல்ல. எனவே பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் அதனை தவிர்க்க பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிறந்த போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    விருதுநகர்:

    விருதுநகர் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் 32-வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா விருதுநகர் ்பஸ் நிலையத்தில் நடைபெற்றது. மண்டல பொது மேலாளர் சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ, மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா, போக்குவரத்து கழக அதிகாரிகள் மாரிமுத்து, சுப்பிரமணியன், ரோட்டரி சங்க தலைவர் வடிவேல், சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் அழகுசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணகலா ஆகியோர் சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசியதுடன் வாகன ஓட்டிகளுக்கு அதுபற்றி விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய சிறந்த ஓட்டுனர்களாக தேர்வு செய்யப்பட்ட செந்தில்குமார், சுப்பையன், ரகுபதி மற்றும் பயணிகளுடன் கனிவாக நடந்து கொண்ட சிறந்த நடத்துனர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட நெல்ராஜ், மாரிமுத்து, வேல் முருகன் ஆகியோருக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரம் வினிேயாகிக்கப்பட்டது.

    இதில் பயிற்சி மைய பொறியாளர் பாலாஜி, பயிற்சி ஆசிரியர்கள் பீமராஜ், சர்க்கரை மற்றும் போக்குவரத்து கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×