என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் அருகே செவல்பட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே செவல்பட்டியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மாசிலாமணி (வயது 46). இவரது கடையில் தடை செய்யப்பட்ட 20 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த சூலக்கரை போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குப்பையை எரிப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    மதுரையிலிருந்து ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் செல்கின்றனர். அதேபோல அய்யப்பன் கோவிலுக்கு செல்பவர்களும் இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.

    ஆதலால் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த நிலையில் இந்த சாலையில் பல்வேறு பகுதிகளில் குப்பைகளை தேக்கிவைத்து எரிக்கின்றனர்.

    இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் புகை மண்டலத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளதால் அடிக்கடி சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

    எனவே சாலை ஓரங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அவ்வாறு கொட்டுபவர்கள் மீதும், எரிப்பவர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த தாய்-மகனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் குருவுத்தாய் (வயது 48). இவரது மகன் செல்வகணேஷ் (25). இவர்கள் இருவரும் வீட்டின் முன்பு அனுமதி இல்லாமல் 3 கிலோ அணுகுண்டு பட்டாசினை உதிரியாக வைத்திருந்தனர். 

    அப்பகுதியில் ரோந்து சென்ற ஆமத்தூர் போலீசார் பட்டாசை பறிமுதல் செய்ததுடன் குருவுத்தாய், செல்வகணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
    காரியாபட்டி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரியாபட்டி:

    காரியாபட்டி மந்திரி ஓடை அருகே ஓட்டல் நடத்தி வருபவர் ஆறுமுகச்சாமி (வயது 72). இவர் தனது ஓட்டலில் இருந்து நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது, அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (25) மோதிக் கொண்டதில் ஆறுமுகச்சாமியும், முத்துக்குமாரும் பலத்த காயமடைந்தனர்.

    இதில் காயமடைந்த இருவருக்கும் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முத்துக்குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே முத்துக்குமார் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் 44 கல்லூரிகளை சேர்ந்த 26 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு டேட்டா கார்டுகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
    சிவகாசி:

    சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் உயர்கல்வித்துறையின் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகளை மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகளை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் இணைய வழி வகுப்புகள் மூலமாக மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் கல்வி கற்றிட அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிப்ரவரி- 2021 முதல் மே-2021 வரை 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு விலையில்லா 2 ஜிபி டேட்டா பெற்றிட திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் 44 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை, மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 25,822 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவ, மாணவிகள் இதனை நல்லமுறையில் பயன்படுத்தி கல்வியறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார், எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி முதல்வர் பழனீஸ்வரி, சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் காந்திமதி, பேராசிரியர் விஜயகுமாரி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சுபாஷினி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பொன் சக்திவேல், அசன் பதுருதீன், ஜி.டி.பி.ஆர். கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம் பண்ணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வெம்பக்கோட்டை ஒன்றிய குழு செயலாளர் சரோஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் கிராமத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி உள்ளனர்.

    சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்தவுடன் திருட வந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் பந்தல்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கோவில் உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே ராம நாயக்கன்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சேதுராஜபுரம் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது.

    அதன்பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த செல்வம் (வயது 35), அலெக்ஸ்பாண்டியன் (29), முத்துக்குமார் (25) ஆகிய 3 பேைரயும் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது.
    விருதுநகர்:

    மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 4 லட்சத்து 15 ஆயிரத்து 379 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,636 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 16, 382 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    19 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 2,054 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்பட வில்லை. நேற்று மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.
    8 மாநில அரசுகளை பா.ஜனதா விதிகளை மீறி கவிழ்த்துள்ளது என்று மாணிக்கம்தாகூர் எம்பி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-

    ராகுல்காந்தி ஏழை- எளிய மக்களுக்காக உழைக்கக் கூடியவர். அவருடன் பிரசாரத்துக்கு செல்லும்போது மக்களுடன் எளிமையாக பழகுகிறார். இதை நம்மால் உணர முடிந்தது.

    ராகுல்காந்தி மாத இறுதியில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 27 மற்றும் 28-ந்தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    விருதுநகர் மாவட்டத்தில் பிரசாரம் செய்வதற்கான சுற்றுப்பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பா.ஜனதா அரசு விதிகளை மீறி காங்கிரஸ் ஆண்ட மாநில அரசுகளை கவிழ்த்துள்ளது. தற்போது புதுச்சேரி காங்கிரஸ் அரசையும் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை முன்னாள் மத்திய மந்திரி பொன்ராதாகிருஷ்ணன் ஒப்புக்கொண்டுள்ளார்.

    மோடி ஆட்சி தொழில் அதிபர்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் நடந்து வருகிறது. அ.தி.மு.க. தோல்வி பயத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேகமாக பிரசாரத்தை தொடங்கி விட்டார். சாத்தியம் இல்லையா? என்பது பற்றி உறுதி செய்யாமல் அறிவிப்புகளை அறித்து வருகிறார்.

    தேவேந்திரகுல வேளாளருக்கு காங்கிரஸ் கட்சி தொடக்கம் முதல் அங்கீகாரம் அளித்து வருகிறது. அந்த பிரிவை சேர்ந்த அருணாச்சலம் 20 வருடங்களாக மத்திய மந்திரி சபையில் அங்கம் வகித்தார். தற்போது பா.ஜனதா தேர்தலுக்காக தேவேந்திரகுல வேளாளருக்கு ஆதரவு அளிப்பதாக நாடகம் ஆடுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    26,275 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.193.95 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக விருதுநகர் கலெக்டர் கண்ணன் கூறினார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையி்ல் நடைபெற்றது.

    இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் கண்ணன் வலியுறுத்தினார்.

    பின்னர் கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

    காரியாபட்டி வட்டாரத்தில் வேப்பங்குளம் மற்றும் முடுக்கன்குளம் கிராமங்களில் செயல்திட்ட விளக்கத்திடல்களில் பிரியாணி அரிசியாக பயன்படும் வைகை-1 நெல் ரகம் பயிரிடப்பட்டு நல்ல மகசூல் தருவதால் மாநில விதைப்பண்ணையில் அதிகமாக விதை நெல்லை உற்பத்தி செய்து மாவட்ட விவசாயிகளுக்கு அடுத்த பருவத்தில் வைகை-1 ரக விதை நெல் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்து பயிர்களுக்குமான பயிர் காப்பீடு அந்தந்த வருடத்தில் உடனுக்குடன் கிடைத்திட வழிவகை செய்யப்படும் எனவும் கூறினார்.

    விருதுநகர் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளான நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் வடகிழக்கு பருவதொடர்மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று வழங்கிடும் பொருட்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு ரூ.17.66 கோடி நிவாரணத்தொகை பெற கருத்துரு அனுப்பப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் தள்ளுபடியாக 26,275 விவசாயிகள் பயன்பெறும் வண்ணம் ரூ.193.95 கோடி அரசு தள்ளுபடி செய்துள்ளது. நடப்பு வருடத்தில் 19 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது.

    வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை தடுக்கும் வகையில் வட்ட அளவிலான துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதால் சேத விவரத்தினை அலுவலர்களுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் வேளாண்மை தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் கூட்டாய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வழிவகை செயல்படுத்தப்படும்.

    வேளாண் பொறியியல் துறை மூலம் சோலார் மின்வேலி அமைத்தல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் மற்றும் வேளாண் கருவிகள் வாங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பித்து முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.

    மேலும், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டு உலர்களம் சேமிப்பு கிடங்கள் அமைப்பதற்கு அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்யப்படும் விவசாயிகளிடமிருந்து செஸ் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. வியாபாரிகளிடமிருந்து மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) திலிப்குமார், இணை இயக்குனர் (கால்நடை பராமரிப்பு) அருணாச்சலக்கனி மற்றும் அதிகாரிகள் கலந்து ெகாண்டனர்.
    சாத்தூர் வடக்கு ரத வீதியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய தொழிற்சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    சாத்தூர்:

    சாத்தூர் வடக்கு ரத வீதியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய தொழிற்சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சாலை வியாபாரிகள் சங்கத்தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    இந்திய வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் விஜயகுமார் கண்டன உரை ஆற்றினார்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் சாலை வியாபாரிகள் சங்கம், ஆட்டோ, வேன், கார் ஓட்டுனர் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த உறுப்பினர் பிச்சைக்கனி தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
    திருச்சுழியில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா ஆய்வு செய்தார்.
    காரியாபட்டி:

    திருச்சுழியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வக்கீல்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சுழியில் நீதிமன்றம் திறக்கப்பட்டது.

    இந்தநிலையில் புதிதாக திருச்சுழியில் திறக்கப்பட்ட நீதிமன்றத்தை விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்பு வழக்கறிஞர்களிடையே விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா பேசியதாவது:-

    திருச்சுழியில் திருமேனி நாதர் கோவிலின் பின்பு நீதிமன்றம் அமையப்பட்டுள்ளது. இதுவே மிகப்பெரிய சிறப்பாகும். வழக்கறிஞர்கள் சிறப்பாக பணியாற்றி வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் செல்லையா கோரிக்கை வைத்தார். காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி முத்துசாரதா கூறினார்.

    இதில் மாவட்ட கூடுதல் நீதிபதி பரிமளம், சரண், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி கதிரவன், அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி பசும்பொன் சண்முகையா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி வேங்கட லட்சுமி, கூடுதல் மாவட்ட நீதிபதி சுபாஷினி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை, திருச்சுழி நீதிமன்ற நீதிபதி அபர்னா உள்பட 21 நீதிபதிகள், அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன், பொருளாளர் சீனிவாசன், அரசு வழக்கறிஞர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×