என் மலர்
விருதுநகர்
- கார்-பஸ் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலியானார்கள்,2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
- விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சென்னை அருகே உள்ள பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள பிரபல மோட்டார் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிதாஷா (32). இவர்களுக்கு ஜெனிதாஸ்ரீ (9) என்ற மகளும் பிரணவ் ஆதித்யா (4) என்ற மகளும் உள்ளனர்.மனோஜின் சொந்த ஊர் நெல்லை ஆகும்.
இன்று அதிகாலை மனோஜ் தனது மனைவி, குழந்தைகளுடன் காரில் நெல்லைக்கு புறப்பட்டார். காரை மனோஜ் ஓட்டினார்.
இன்று மதியம் விருதுநகர் 4 வழிச்சாலையில் கார் வந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். சாலை சந்திப்பில் வந்தபோது சாத்தூரில் இருந்து விருதுநகருக்கு பயணிகளை ஏற்றி வந்த பஸ் 4 வழிச்சாலையில் திடீரென திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மனோஜ் ஓட்டி வந்த கார் பஸ் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மனோஜ், நிதாஷா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஜெனிதாஸ்ரீ, பிரணவ் ஆதித்யா படுகாயம் அடைந்தனர். காருக்குள் சிக்கியிருந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 11-ந் தேதி நடைபெறும் தேரோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ந்தேதி தேரோட்டம், நடைபெற உள்ளது.
அருப்புக்கோட்டை
தமிழகத்தில் சில மாதங்களாக தேர் திருவிழாவின் போது உயிர் பலிகள் மற்றும் விபத்துக்கள் நடந்தன. குறிப்பாக தஞ்சாவூர் அருகே களிமேட்டில் அப்பர் தேரோட்ட திருவிழாவில் சிறுவன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் கோவில் திருவிழாக்கள் மற்றும் தேரோட்ட விழாக்களில் விபத்துகள் நடந்தன.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த மீனாட்சி- சொக்கநாதர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம், அடுத்த நாள் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கொரோனா தொற்று காரணமாக 2 வருடங்களாக திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி கொடியேற்றதுடன் திருவிழா ஆரம்பமானது.
10-ந்தேதி மீனாட்சி திருக்கல்யாணமும், 11-ந்தேதி தேரோட்டம், நடைபெற உள்ளது. தேரோட்டமானது சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை, 4 ரத வீதிகளில் மீனாட்சி- சொக்கநாதர் பவனி வருவார்கள்.
சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தேரோட்ட விழாவில் அசம்பாவிதமும், விபத்துகளும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்தி திருவிழாவை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி மையங்கள் திறக்கப்பட்டது.
- பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் கூடுதலாக 296 இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் மாணவர்களின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளது.
கூடுதல் மையங்கள் திறப்பு விழா ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தில் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமை தாங்கினார். தன்னார்வலர் சித்ரா வரவேற்றார்.
கூடுதல் மையங்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பு மற்றும் கற்றல் இடைவெளியை ஈடுசெய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்னரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் நலன் கருதி தேவையின் அடிப்படையில் கூடுதல் இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி முயற்சி எடுத்தார்.
இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கூ்டுதலாக 296 மையங்கள் அமைக்க அனுமதி பெறப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியப் பயிற்றுநர் செல்வம் நன்றி கூறினார்.
- கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டிநாளை (10-ந் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அன்று சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- புதிய தொழில் முனைவோருக்கு மானியத்துடன் ரூ.75 லட்சம் கடன் உதவி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
- இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட தொழில் மையபொது மேலாளரை 8925534036 என்ற செல்போன் எண்ணில் அணுகலாம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க "புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் (பிளஸ்-2 தேர்ச்சி) மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு பொது பிரிவினருக்கு 21-க்கு மேல் 35-க்குள் இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். இந்த திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை.
அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இந்த திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25 சதவீத அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதலாக 10 சதவீத மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, லேத் எந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் எந்திரங்கள், பேப்பர் போர்ட், பேண்டேஜ் கிளாத், நடமாடும் உணவகம், கடலைமிட்டாய் தயாரித்தல், கால்நடை தீவனம் தயாரித்தல், பவர் லாண்டரி, ஸ்கேன் சென்டர், பிஸியோதெரபி கிளினிக், ஹாலோபிளாக் மற்றும் பிளை ஆஷ் பிரிக்ஸ், ஜிம் சென்டர் (ஆண்-பெண்), ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, ஸ்டீல் கட்டில் பீரோ மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.
ஆன்லையனில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட தொழில் மையபொது மேலாளரை 8925534036 என்ற செல்போன் எண்ணில் அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
விருதுநகர்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டிநாளை (10-ந் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அன்று சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
- சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது.
- சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நகர, கிராம உள்ளாட்சி அமைப்புகளில் 25 பதவிகள் காலியாக இருந்தன. இதற்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி வேட்பு மனு பெறப்பட்டது.
இதில் 14 கிராம ஊராட்சி வார்டு பதவிகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள 11 பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்வு செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. மேற்கண்ட 11 இடங்களுக்கு 38 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
இன்று மேற்கண்ட பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 28 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். சில இடங்களில் மந்த நிலை காணப்பட்டது.
28 வாக்குச்சாவடிகளில் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்ட 9 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சி.சி.டி.வி. கேமிரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் 7 ஆயிரத்து 202 ஆண்களும், 7 ஆயிரத்து 664 பெண்களும், இதரர் 1 என மொத்தம் 14 ஆயிரத்து 867 பேர் வாக்களிக்கின்றனர்.
சிவகாசி யூனியனில் காலியாக இருந்த 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு பள்ளப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கும் இன்று தேர்தல் நடந்தது. சிவகாசி யூனியனில் தி.மு.க., அ.ம.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
2795 ஆண்களும், 2990 பெண்கள் என மொத்தம் 5785 வாக்காளர்கள் ஓட்டுபோடுகின்றனர். இன்று அதிகாலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் 9 வாக்குசசாவடிகளில் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
- காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் 14-ந் தேதி (வியாழக்கிழமை) வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனி பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதோஷம் மற்றும் பவுர்ணமி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்குக்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
- அகழாய்வில் கண்ணாடி வளையல்கள், பாசிமணிகள் உள்ளிட்ட 1,700-க்கும் மேற்பட்ட அரிய வகையான பொருட்கள் கிடைத்துள்ளன.
- மண்பாண்டகளாக பயன்படுத்தப்பட்ட ஓடுகள் குவியல் குவியலாக கிடைத்தது.
விருதுநகர்:
சிவகாசி அருகே அகழாய்வில் 11-வது குழி தோண்டும் பணி தொடங்கியது. இங்கு குவியல் குவியலாக மண்பாண்ட பொருட்கள் கிடைத்தன.
சிவகாசி அருகே உள்ள விஜய கரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 10 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஏராளமான கண்ணாடி வளையல்கள், பாசிமணிகள், புகைபிடிக்கும் கருவிகள், யானை தந்தம், சுண்ணாம்பு நிரப்பப்பட்ட பெரிய அளவிலான பானைகள், சிறிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட மண்குடங்கள் உள்ளிட்ட 1,700-க்கும் மேற்பட்ட அரிய வகையான பொருட்கள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் நேற்று புதிதாக 11-வது அகழாய்வு குழி தோண்டப்பட்டது. அதில் ஏராளமான மண்பாண்டகளாக பயன்படுத்தப்பட்ட ஓடுகள் குவியல் குவியலாக கிடைத்தது.
வேலைபாடுகளுடன் கூடிய மண்பாண்ட பொருட்கள், மண்குடங்கள், அதிக அளவில் கிடைத்ததை பார்க்கும்பொழுது பண்டைய காலத்தில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலை பிரதானமாக செய்து இருக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் வீட்டின் சுவர் பகுதி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் சமையலறையும், சமையலறை பாத்திரமும் சேதமடையாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இங்கு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
- பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராத கடை- நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை தொழிலாளர் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சரின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்டத்தின் படி கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களது பணி நேரம் முழுவதும் நின்றுகொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து பணியாளர்களுக்கும் தகுந்த இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும் என சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மேற்கண்ட சட்டத்தின்படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவளங்களிலும் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுத்து சட்ட திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.
இந்த சட்ட திருத்தத்தை கடைப்பிடிக்காத நிறுவன உரிமையாளர்கள் மீது கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள சென்னை தொழிலாளர் ஆணையரால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே வரும் காலங்களில் சிறப்பாய்வின் போது கடைகள், நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி மேற்கொள்ளாத உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சுழியில் தொழிற்பயிற்சி நிலையம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம்தென்னரசு தெரிவித்தார்.
- புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் மேகநாதரெட்டி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கல்லூரி வகுப்பறைகளை பார்வையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, எம்.எல்.ஏ.க்கள் ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி அசோகன், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பொன்னுத்தம்பி, மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
திருச்சுழி சட்டமன்ற தொகுதி மக்களின் 11 ஆண்டுகால கனவு தற்போது நிறைவேறி உள்ளது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் முதல்வராக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். உயர்கல்வியில் இந்த பகுதி முன்னேறுவதற்கு இந்த கல்லூரி உறுதுணையாக இருக்கும்.
தற்போது 230 இளங்கலை படிப்பிற்கு கிட்டத்தட்ட 1139 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதை வைத்தே இந்த பகுதியில் உயர்கல்விக்கு தேவை அதிகம் என்பதை உணர முடிகிறது. அடுத்தாண்டு இந்த பகுதியில் புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வரவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், கல்லூரி முதல்வர் மணிமாறன், முன்னாள் அருப்புக்கோட்டை ஊராட்சி யூனியன் தலைவர் சுப்பாராஜ்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கதிரவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






