என் மலர்
விருதுநகர்
- மாநிலங்களால் உருவானது இந்தியா என்று கூறுவது பிரிவினைவாதம் என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
- 1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சி 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி ஸ்ரீவில்லிபுத்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
1997-ம் ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி தொடங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சி 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. வருகிற டிசம்பர் 15-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளி விழா மாநாடு நடைபெறுகிறது. 25 ஆண்டுகளாக சமூகத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக செயல்பட்டு வந்தோம்.
அடுத்த கட்டமாக இந்து சமுதாய மக்களை ஒன்றி ணைத்து, அவர்களின் உரிமைகளுக்காக போராட உள்ளோம். இந்து சமுதாயம் சாதி பிரிவினைகளால் ஆனது என்று அடையா ளப்படுத்தும் போக்கு நிலவி வருகிறது. இந்து என்றால் சனாதனம் என்றும், வருணாசிரம கொள்கையை அடிப்படையாக கொண்டது என்றும் பொய்யான தகவல் மக்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் உள்ள இந்து மக்கள் மீது தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா மாநாட்டில் பல்வேறு சமுதாய தலைவர்கள், ஆன்மிக பெரியோர்கள் கலந்து கொள்கின்றனர்.
மதிப்பெண் வழங்க கூடிய அளவிற்கு தமிழக அரசின் செயல்பாடு இல்லை. ஆங்கிலேயர் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் தான் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்தது. தற்போது தமிழகத்திலும் எங்களை குறி வைத்து அதுபோன்ற அடக்குமுறை நடக்கிறது.
அமெரிக்கா, ஐரோப்பா போல இந்தியா என்பது ஒன்றியம் அல்ல. இந்தியா ஒரே தேசம். மாநிலம், மாவட்டம் என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா என கூறுவது அப்பட்டமான பிரிவினைவாதம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயரை டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்து பேசினார். பின்னர் ஆண்டாள் கோவிலில் வழிபாடு நடத்தினார்.
இந்து மதத்தில் உள்ள அனைத்து சாதி பிரிவுகளையும் இணைத்து 'இந்து சமத்துவ சமூகநீதி கூட்டமைப்பு' உருவாக்கப்பட்டது. இந்து மதத்தை காக்கவும், உரிமை களுக்காக போராடவும் இந்த அமைப்பு செயல்படும். இதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக டாக்டர். கிருஷ்ணசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
- அருப்புக்ேகாட்டை அருகே உள்ள சமத்துவபுரத்தில் 21 வீடுகளுக்கு பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அருணாச்சலபுரம் கிராம ஊராட்சி, சின்ன செட்டிகுறிச்சி உட்கடை கிராமத்தில் அமைந்துள்ள சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. இவற்றில் 79 வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருந்து வருகின்றனர்.
மீதமுள்ள 21 வீடுகளுக்கு பயனாளிகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருப்பதால் தற்போது 21 வீடுகளுக்கு தகுதியுள்ள பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
அதன்படி எஸ்.சி./எஸ்.டி. பிரிவில் 2 பயனாளிகளும், எம்.பி.சி. பிரிவில் 6 பயனாளிகளும், பி.சி. பிரிவில் 3 பயனாளிகளும் மற்றும் ஓ.சி. பிரிவில் 10 பயனாளிகளும் தேர்ந்தெ டுக்கப்பட உள்ளனர்.
சின்னசெட்டிகுறிச்சி உட்கடை கிராமத்திற்கு 3 கி.மீ. சுற்றளவில் வசித்து வரும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீடற்ற தகுதியான பயனாளிகள் அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விருப்ப மனுவினை தேவையான ஆவணங்களுடன் வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விருதுநகர் மாவட்ட விவசாயிகள் வட்டியில்லா பயிர்க்கடன் பெற ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 972 விவசாய உறுப்பினர்கள் ரூ.58.06 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர்.
விவசாமிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு 20 ஆயிரத்து 353 உறுப்பினர்களுக்கு ரூ.135.51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 3 ஆயிரத்து 420 புதிய உறுப்பினர்கள் ரூ.23.07 கோடிக்கு பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் மாநில தொழில்நுட்ப குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்ட 2022-23 ஆண்டு பயிர்க்கடனளவு திட்டத்தின்படி அருகில் உள்ள சங்கங்களில் அனைத்து விவசாயிகளும் கடன் பெறலாம்.
6 முதல் 15 மாதங்களுக்கு உட்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கே.சி.சி. குறுகிய கால பயிர் கடன்களை உரிய ஆவணங்களுடன் நபர் ஜாமீன் அல்லது தங்க நகை அடமானத்தின் பேரில், அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலும், தங்க நகை அடமானத்தின் பேரில் அல்லது சாகுபடி நில அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும் அனைத்து சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம். உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி செலுத்த தேவையில்லை.
இதன்படி ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் அளவானது நெல் (பாசனம்/மானாவாரி) ரூ.26100, மக்காச்சோளம் (பாசனம்) ரூ.28750, (மானாவாரி) ரூ.19200, பருத்தி (பாசனம்) ரூ.26350, (மானாவாரி) ரூ.17550, மிளகாய் (பாசனம்) ரூ.26950, (மானாவாரி) -ரூ.20250, தென்னை (பராமரிப்பு) ரூ.25450, நிலக்கடலை (பாசனம்) ரூ.24900, நிலக்கடலை (மானாவாரி) ரூ.20200 ஆகும்.
விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கீழ்க்காணும் ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயன் அடையலாம்.
கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல், 10(1) சிட்டா, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு உள்ள 2 புகைப்படம் ஆகியவற்றுடன் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்கடன் பெறலாம்.
இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம். விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு ரொக்கமாகவும், கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது.கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்-94899 27003, பொது மேலாளர்-94899 27001, உதவி பொது மேலாளர்-94899 27006, மேலாளர் (விவசாயம்) 94899 27177, களமேலாளர் (விருதுநகர்)-94899 27044, களமேலாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) 94899 27021, களமேலாளர் (அருப்புக்கோட்டை)-94899 27023 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வீட்டுக்கு வந்த மகன் தாய் கிரைண்டரில் கையை விட்டபடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் ஐ.என்.டி.யூ.சி. நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர பாண்டியன் (வயது 52). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராமலட்சுமி (45). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
நேற்று பாஸ்கர பாண்டியன் பணிக்கு சென்று விடவே மகன், மகள் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமி மாவு அரைப்பதற்காக கிரைண்டரை இயக்கினார். அப்போது கிரைண்டருக்குள் கையை விடும்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவரது கை கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகன் தாய் கிரைண்டரில் கையை விட்டபடி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் மின்சாரத்தை நிறுத்தியபின் ராமலட்சுமியின் உடலை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திர மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி.
- போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சூளக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவரது சகோதரர் சூரியநாராயணன். சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் அனுப்பும் சம்பள பணத்தை சேர்த்து வைத்து அந்த பகுதியில் நிலம் வாங்க ரங்கநாயகி முடிவு செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் சிவகிரிபட்டியை சேர்ந்த பத்மநாதபன் என்பவர் ரங்கநாகிக்கு அறிமுகமானார். அப்போது தான் ஓய்வு பெற்ற நீதிபதி என்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளார்.
மதுரை வண்டியூரில் 12 ஏக்கர் 70 செண்டு நிலம் ரூ.34 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனைக்கு உள்ளது என்று கூறியுள்ளார். இதனை நம்பி ரங்கநாயகி ரூ.70லட்சம் வரை பத்மநாபனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட அவர் நிலத்தை பதிவு செய்து தரவில்லை. இதுகுறித்து விசாரித்த போது பத்மநாபன் குறிப்பிட்ட நிலம் மதுரை கள்ளழகர் கோவிலுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கநாயகி பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தாக கூறப்படுகிறது.
இந்த மோசடிக்கு பத்மநாபனுடன் அவரது மகன் சதீஷ் மற்றும் சுமதி, அங்குராஜ், சந்திரன், குழந்தை செல்வம் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து ரங்கநாயகி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 1991 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 841 மெட்ரிக் டன், பொட்டாஷ் 574 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,028 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உரங்கள் அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் எந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.
மேலும் இருப்பு விபரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். உரங்களுடன் நேனோ யூரியா போன்ற இணை பொருட்களை விவசாயி களுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக்கூடாது.
உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த கோவில் அமைந்துள்ளது.
- 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.
- சங்கரன்கோவில் -தென்காசி சாலை இணைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
- விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதியாதிகுளம் வழியாக தென்காசி சாலையுடன் இணைப்பு சாலை அமைப்பது குறித்து 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துதல் சம்பந்தமாக விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ஜானகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.
தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, முன்னோடி விவசாயி தர்மலிங்க ராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.
ஏற்கனவே ஆய்வு செய்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்திய நிலம் தவிர இதர பாசன விவசாயிகளுக்கு பாசனம் மற்றும் இதர வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விளக்கி கூறினர்.
இதில் திருநெல்வேலி நிலம் கையகப்படுத்துதல் குறித்த உதவி பொறியாளர் பொன் முரளி, விருதுநகர் சிறப்பு தாசில்தார் நிலம் கையகப்படுத்துதல் மாரீஸ்வரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
- ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
- பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
- கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை த்திட்டம், ெரயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரையிலான இணைப்பு சாலை திட்டம் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கையில் வரைபடத்துடன் கலந்தா லோசித்து ஆய்வு செய்த அமைச்சர், ராஜபாளையம் நகரின் வளர்ச்சி திட்டப்ப ணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்வகுத்துக் கொடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகளும் மார்ச் மாதத்திற்குள் பணி களை முடித்துவிடலாம் என உறுதி அளித்தனர்.
இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேருசிலை முதல் சொக்கர்கோவில் வரை செல்லும் தென்காசி ரோட்டில் பேட்ச் ஓர்க் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய தார்ச்சாலை அமைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார். இதில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா, யூனியன் சேர்மன் சிங்கராஜ், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகரசபை துணை தலைவர் கல்பனாகுழந்தைவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கோவில் உள்விவகாரங்களில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பேட்டியளித்தார்.
- விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சடகோபராமானுஜ ஜீயர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஸ்ரீரங்கம் ரங்க நாதர்கோவிலில் ராமானுஜர் ஏற்படுத்திய வழிபாட்டு முறைகளை, அறநிலையத்துறை அதிகாரிகள் மாற்றி அமைத்துள்ளனர். தென் ஆச்சாரிய சம்பிரதாயம் உள்ள கோவில்களில் மரபு மீறப்பட்டு வருகிறது.
கோவில் நிர்வாகம் சிறப்பாக நடைபெற அறநிலையத்துறை ஒத்துழைப்பு அளித்தாலும், சில அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படு கின்றனர். கோவில் உள் விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு அதிகாரம் இல்லை.
ஆனால் ஸ்ரீரங்கம்கோவிலில் உற்சவ நாட்களில் விஸ்வரூப தரிசனம் தடை, பெருமாளுக்கு நைவேத்யம் செய்வதில் மாற்றம் செய்து முன்பு செயல் அலுவலராக இருந்த ஜெயராம், விதிமு றைகளை திருத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுபோன்று சில அதிகாரிகள் செய்யும் தவறால் தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது.
கோவில் நிலங்கள் மீட்பு நடவடிக்கைகளை வரவேற்கிறோம். விதிமீறலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலை யத்துறை தவறுகளை அரசுக்கு சுட்டிக்காட்டும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வருகிற 5-ந் தேதி நடைபெறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, முத்தரையர் சங்க தலைவர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பணத்தை தர மறுத்த அசோக்குமார்-மைதிலி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
- அசோக்குமார், மைதிலி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் முருகதாஸ் (எ) முருகன் (வயது52). இவர் சர்வேராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து, சாமிநத்தத்தை சேர்ந்த முருகன் ஆகியோர் மூலம் விருதுநகர் பெத்தநாச்சி நகரை சேர்ந்த தம்பதி அசோக்குமார்-மைதிலி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
அப்போது அவர்கள் அரசு துறையில் தங்களுக்கு அதிகாரிகளுடன் பழக்கம் உள்ளது. அதன்மூலம் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துளோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய முருகதாஸ் இந்த தகவலை தனக்கு தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தெரிவித்தார். அப்போது அரசு வேலைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து முருகதாஸ் மூலம் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 20 பேர் அசோக்குமார், மைதிலி ஆகியோரது வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் வரை செலுத்தி உள்ளனர்.
பணத்தை பெற்று கொண்ட அவர்கள் போலி வேலை ஆணைகளை தயாரித்து 16 பேரிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு துறைக்கு சென்று விசாரித்த போது அந்த ஆணை போலியானது என தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிகொடுத்தவர்கள் அதனை திரும்ப கேட்டுள்ளனர். பணத்தை தர மறுத்த அசோக்குமார்-மைதிலி ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு மாரிமுத்து, முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். ரூ.1 கோடியே 5 லட்சத்து 90 ஆயிரம் மோசடி செய்தது தொடர்பாக முருகதாஸ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அசோக்குமார், மைதிலி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






