என் மலர்tooltip icon

    வேலூர்

    • கேலி கிண்டல் செய்ததாக புகார்
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட பொதுமக்கள் வலியுறுத்தல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபா ளையத்தில் இருந்து ஒடுகத்தூர் செல்லும் சாலையை ஒட்டி பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரைமீது தினமும் மாலை நேரத்தில் குடிமகன்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களை போதை வாலிபர்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

    ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடம் போதை வாலிபர்கள் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடனே பயணிக்கின்றனர்.

    இது குறித்து பொதுமக்கள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் நேற்று வேப்பங்குப்பம் ஏரிக்கரை மீது அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வாலிபர்கள், சாலையில் நின்றுக்கொண்டு கேலி கிண்டல் செய்ததோடு, பெண்களிடம் அத்து மீறியதாக தெரிகிறது.

    இது குறித்து பொதுமக்கள் தகவலின் பேரில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி, போலீசில் புகார் செய்தார்.

    விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார் கேலி கிண்டல் செய்து கொண்டிருந்த வாலிபர்கள் மற்றும் மது அருந்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தனர். அப்போது போதை வாலிபர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓடினர்.

    ஏரியின் கரைமீது மது அருந்தவோ, பொழுதை கழிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இருப்பினும் அவ்வப்போது போதை ஆசாமிகள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. எனவே தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
    • 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சியில் 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    இதனையொட்டி ரங்கப்பன்கொட்டாய் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யாஉமாபதி தலைமை தாங்கி, கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    தொடர்ந்து, ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. மேலும் ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.

    அதனை அகற்ற 4 மாதத்திற்க்கு முன்பு அதிகாரிகள் அனைவரும் அனுமதி வழங்கியபிறகும் கூட தற்போது வரை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் உள்ளது. எனவே ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி ஏரியை தூர் வார வேண்டும்.

    உத்திர காவேரி ஆற்றில் இருந்து ஒடுகத்தூர் வழியாக ஏரிக்கு தண்ணீர் எடுத்துவர அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். இல்லை என்றால் வருகிற அக்டோபர் மாதம் நடைப்பெறும் கிராமசபை கூட்டத்தை அனைவரும் புறக்கனிக்கப்போவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, 20 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 10 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 15 மாற்றுதிறனாளிகளுக்கு அடையாள அட்டை மற்றும் முதியோர் உதவி தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மேலும், புதிய வீடு கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர். இதற்கு அடுத்த 2 மாதத்திற்க்குள் அனைவருக்கும் வீடு கட்ட அனுமதி பெற்றுதரப்படும் என ஊராட்சி மன்ற தலைவர் கூறினர்.

    மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தலா 2 மரக்கன்றுகள் வீதம் மொத்தம் 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    அதேபோல் முதியோர்களுக்கு மூட்டு வலி போக்கும் நிவாரணி, அனைத்து பெண்களுக்கும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இக்கூட்டத்தில் அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

    • விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது
    • வேளாண் அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    காட்பாடி யூனியனில் 41 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில், பெரும்பாலானவை விவசாய நிலங்களை சார்ந்த கிராமங்களாகும்.

    இதனால், காட்பாடி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், மானிய விலையில் விதைகள், உரம் வகைகள், விவசாய கருவிகள் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டு சாகுபடிக்குதேவையான நெல் (கோ-51), ஆர்என்ஆர், உளுந்து, துவரை, கேழ்வரகு உள்ளிட்ட விதைகள் வந்துள்ளதாகவும், விவசாயிகள் தங்கள் நிலத்தின் சிட்டா, ஆதார் கார்டு நகலை அலுவலகத்தில் கொடுத்துவிதைகளை பெற்றுக்கொள்ளுமாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து காக்கவும், அதிக மகசூல் தரக்கூடிய நுண்ணூட்டசத்து, திரவ உயிர் உரங்கள் ஆகியவையும் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

    தேவையானவர்கள் பெற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் காட்பாடி யூனியனில் மணிலா 2,500 ஹெக்டேர், நெல் 750 ஹெக்டேர், கரும்பு 350 ஹெக்டேர், காய்கறி வகைகள் 50 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வேளாண் துறை தெரிவித்தனர்.

    • தண்டனை குறைத்து விடுதலை செய்யப்பட்டனர்
    • ஜெயிலில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதிய தொகை வழங்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் சுதந்திர தினத்தையொட்டி பொன்னுசாமி என்கிற சித்திக் (வயது 77)

    ஜாகிர் உசேன் (50) இருவரும் தண்டனை குறைப்பு பெற்று நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை விடுவிப்பதற்கான சான்றுகளை ஜெயில் சூப்பிரண்டு அப்துல் ரகுமான் வழங்கினார்.

    மேலும் அவர்கள் சிறையில் செய்த வேலைகளுக்காக உழைப்பூதியத்துக்கான தொகையினையும் வழங்கினார்.

    இந்த நிகழ்வின் போது தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் டி.எம்.விஜயராகவலு தலைமையில், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் அரிசி பருப்பு, உப்பு புளி மிளகாய், உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்வின் போது உதவி சிறை அலுவலர் அருள்குமரன் சிறை கண்காணிப்பு உதவி ஆய்வாளர் டி.மீனாட்சிசுந்தரம் தலைமை காவலர் கே.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தீயணைப்பு படை வீரர்கள் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த ஓட்டேரிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரது வீட்டில் நாகபாம்பு ஒன்று குடிநீர் தொட்டியில் புகுந்துள்ளது.

    தண்ணீர் தொட்டியில் இருந்து சத்தம் வருவதைகண்ட வினோத்குமார் அருகே சென்று பார்த்தார். அப்போது நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் 4 அடி நீளம் கொண்ட நாகபாம்பை பிடித்தனர்.

    அதேபோல், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த மதிவாணன் என்பவரது வீட்டில் நேற்று மாலை 5 அடி நீளம் முள்ள நாகபாம்பு ஒன்று புகுந்தது.

    இதுகுறித்து உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வீட்டில் பதுங்கி இருந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தனர்.

    தொடர்ந்து, பிடிபட்ட 2 பாம்புகளையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட 2 நாகபாம்புகளை ஒடுகத்தூர் காப்பு காட்டில் கொண்டு பத்திரமாக விட்டனர்.

    • அதிகாலை முதல் ஏராளமானோர் குவிந்தனர்
    • வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

    வேலூர்:

    இந்துக்கள் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவது வழக்கம். அன்றைய தினம் முன்னோர்களின் நினைவாக தானம் செய்வார்கள். மேலும் காக்கைக்கு உணவு படைப்பார்கள்.

    ஆடி அமாவாசை

    ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினம் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட சிறப்பானதாகும்.

    இது போன்ற விரத நாட்களில் முன்னோர்கள் கூட்டமாக வந்து நம்முடன் தங்கி இருந்து, அவர்களை நினைத்து நாம் வழிபாடு செய்யும் முறைகளை பார்த்து, மனம் குளிர்ந்து, நம்மை ஆசீர்வதிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

    அதன்படி ஆடி அமாவாசை ஒட்டி இன்று ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பாலாற்றங்க ரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அதிகாலையில் இருந்தே ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    அவர்கள் அங்குள்ள காரிய மண்டபத்தில் புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    விரதம்

    பலர் விரதம் இருந்து தங்கள் வீடுகளில் வடை, பாயாசத்துடன் முன்னோர்களுக்கு படையலிட்டனர். பின்னர் காக்கைக்கு உணவு படைத்து வழிபாடு செய்தனர்.

    ஆடி அமாவாசை யொட்டி திருஷ்டி பூசணிக்காய், பூக்கள் அதிக அளவில் விற்பனையானது. இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்தது.

    மாத தொடக்கத்தில் வந்த அமாவாசை விட, இன்று அமாவாசை தினத்தில் அதிகமானோர் அமாவாசை தினத்தை கடைப்பிடித்து விரதம் இருந்து வழிபட்டனர். அமாவாசையை யொட்டி வேலூர் பாலாற்றங்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சேர்ந்தவர் பிரதாப் (வயது 34), தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் பிரதாப் தனது குடும்பத்தினரை பணிந்து, வேப்பங்குப்பத்தில் உள்ள ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவருடன் வசித்து வந்தார். கள்ள காதலிக்கும், பிரதாப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ஊசூர் அருகே உள்ள ரெண்டேரிகொடி ஏரியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து தகவல் அறிந்த அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் மர்ம சாவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது
    • பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

    வேலூர்:

    ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி ஆடி அமாவாசை தினமான இன்று அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.அம்மன் கோவில்களில் பக்தரகள் கூழ் ஊற்றி ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனை களும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனை குளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணு துர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப் பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவில், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபட்டனர்.

    • மர்ம நபர்கள் ஒயரால் சஞ்சயை கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு சென்றுள்ளனர்.
    • போலீசார் லாரி செட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்துமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 21), எலக்ட்ரீசியன். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    தாய் தந்தையை இழந்த சஞ்சய் தனது அக்கா வீட்டில் தங்கி வேலை செய்தார். அக்காவுடன் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது லாரி செட்டிலேயே தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் இன்று காலை சேண்பாக்கத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வரும் சர்வீஸ் சாலையில் உள்ள அம்மாகண் செட் அருகே கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் ஒயர்கள் சுற்றப்பட்டு இருந்தது.

    மர்ம நபர்கள் ஒயரால் சஞ்சயை கழுத்தை இறுக்கி கொலை செய்து வீசி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் லாரி செட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    சஞ்சய்க்கு யாரேனும் எதிரிகள் உள்ளனரா? முன்விரோதம் உள்ளவர்களின் விவரம் மற்றும் செல்போனின் அழைப்புகள் உள்ளிட்டவைகளை கொண்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த ஒதியத்தூர் அருகே உள்ள தாங்கல் அம் மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வஜ்ரம்.

    இவரது மகன் தாமோ தரன் (வயது 39). இவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் ராமு (28), ராஜேஷ் (28). தாமோதரன் வீட்டு கழிவுநீர் ராமு மற்றும் ராஜேஷ் வீட்டின் முன் பகுதியில் செல்கிறது. இது குறித்து ராமு, ராஜேஷ் ஆகிய இருவரும், தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று காலை கழிவு நீர் அதிகமாக இவர்கள் வீட்டு முன் சென்றதால் மீண்டும் இவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டு தாமோதரன் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த சரவணன், மற்றும் ராமு, ராஜேஷ் ஆகி யோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் 4 பேரும் காயமடைந்தனர். தாமோதரன் மற்றும் ராமு ஆகிய 2 பேரும் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து 2 தரப்பினரும் பள்ளிகொண்டா போலீ சில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குப் பதிவு செய்து சரவணன் மற்றும் ராமு ஆகிய 2 பேரை கைது செய்தார்.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டதால் விரக்தி
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காட்பாடி:

    காட்பாடி கழிஞ்சூர் இளங்கோ தெருவை சேர்ந்தவர் கதிர வன் (வயது 43), டிரைவர்.

    இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமாகவில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து கதிரவனின் மனைவி சுகுணா விரு தம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நகர மன்ற தலைவர் தேசியக்கொடியை ஏற்றினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் நகராட்சியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பொறியாளர் வே.சம்பத், மேலாளர் சுகந்தி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

    தேசியக்கொடியை நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் ஏற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்த நகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் விஜயகுமார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அருண்முரளி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமலுவிஜயன் எம்எல்ஏ கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

    இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளூர்ரவி, ஏகாம்பரம், நகர மன்ற உறுப்பினர்கள் அரசு, கோவிந்தராஜ், மனோஜ், பாபு, நவீன்சங்கர், ஜாவித்அகமது, சுமதிமகாலிங்கம், ரேணுகாபாபு, இந்துமதிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×