என் மலர்
வேலூர்
- சரமாரியாக அடித்ததால் மயங்கி விழுந்தான்
- போலீசார் ரோந்து சென்றாலும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறையவில்லை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தில் 2000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி அச்சத்தில் தவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் செய்தும் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தது.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்றாலும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறையவில்லை.
இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் கிராமங்களில் உள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புதுத் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் மர்ம நபர் கையில் இரும்பு கம்பியுடன் நடமாடுவது கேமராவில் பதிவானது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ஆங்காங்கே பொதுமக்கள் மறைந்திருந்து மர்ம நபர்களை கண்காணித்தனர்.
அப்போது நள்ளிரவு 1.45 .மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டில் மாடியில் ஏறி சென்றதை கண்டனர்.
உடனே சத்தம் போட்டபடி திரண்ட பொதுமக்கள். மர்ம நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
இதனால் அந்த நபர் மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வேலூர் தாலுகா போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விசாரணையில் அந்த நபர் காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது 52) என்பதும்,
இவருடன் மேலும் 3 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை மாதமாக பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் சவாலாக இருந்த திருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
- அடுக்கம்பாறை அரசு மருத்துவகல்லூரியில் விழா நடந்தது
- குழந்தை கடத்தல் தொடர்பாக துறை ரீதியாக நடவடிக்கை
வேலூர்:
அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இதில் கலந்து கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூர் வந்தார்.
அவருக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், அணைக்கட்டு தாலுகா பொய்கை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புற நோயாளிகள் பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் விதமாக கல்வெட்டினை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து புற நோயாளிகள் பிரிவில் வைட்டல் பே தனிப்பிரிவு தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களையும் பொருத்தினார்.
பின்னர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் பலத்த பாதுகாப்பு இருக்கும் நிலையில் அறிமுகம் இல்லாத நபர் எப்படி உள்ளே நுழைந்து குழந்தையை கடத்தி சென்றார் என்பது குறித்து குழு அமைத்து டாக்டர்கள், பணியாளர்கள், உள்ளிட்ேடார் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலபடுத்தப்படும் என்றார்.
- வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அவலம்
- கழிவறைகளை இலவசமாக பயன்படுத்துவதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை
வேலூர்:
வேலூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்9.25 எக்டேர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இது ரூ.53.13 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.
இங்கு 84 பஸ் பிளாட்பாரங்கள் , 83 கடைகள், 3 உணவு விடுதிகள், 11 காத்திருப்பு அறைகள் மற்றும் 2 லிப்ட்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி ஓய்வு அறைகள் மற்றும் சாய்வுதளங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் அருகே பல அடுக்கு வாகன நிறுத்துமிடமும் உள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் 560-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் பெங்களூரு, கோயம்புத்தூர், சென்னை, சேலம், திருப்பதி, புதுச்சேரி மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே இயங்கும் தனியார் பஸ்கள் நிறுத்தும் இடமாக இந்தப் புதிய பஸ் நிலையம் உள்ளது
சராசரியாக, தினமும் 75,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர்.
இங்கு 1,200-க்கும் மேற்பட்ட பஸ் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சுகாதாரமற்ற குடிநீர் , கட்டண கழிப்பறைகள் , இரவு நேரங்களில் தங்குவதற்கு ஓய்வு அறைகள் இல்லாதது போன்றவைகளால் போக்குவரத்து ஊழியர்கள், குறிப்பாக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பாதிக்கப்படு கின்றனர்.
மேலும் அங்குள்ள கழிவறைகள் தனியார் ஒப்பந்ததாரர்களால் பராமரிக்கப்படுகிறது. இதனால் பணியாளர்கள் இலவசமாக பயன்படுத்து வதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை.
இந்தநிலையில் பஸ் பணியாளர்களுக்கு கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவு றுத்தினார். இருப்பினும் இலவசமாக பயன்படுத்த அனுமதிப்பதில்லை என அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 2 பேர் உயிர் தப்பினர்
- சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே கொய்யாக்காய் வியாபாரம் செய்யும் தள்ளுவண்டி சாலையைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத வந்த சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
பள்ளிகொண்டா பார்த்தசாரதி நகரை சேர்ந்தவர் பழனி (வயது 50) இவர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தள்ளு வண்டியில் கொய்யா வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் வெயில் காரணமாக மாற்று இடத்திற்காக கொய்யாகாய் விற்பனை செய்ய தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை தள்ளி சென்றார்.
வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த சொகுசு கார் கொய்யாக்காய் தள்ளு வண்டி மீது வேகமாக மோதியது. இதில் தள்ளுவண்டி உருக்குலைந்த நிலையில் சாலை எங்கும் கொய்யாக்காய் சிதறி ஓடியது.
விபத்தில் காரில் இருந்த தொழிலதிபர் பிரகாஷ் (50) மற்றும் கொய்யாக்காய் வியாபாரியான பழனி ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
- 50 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருவதாக வேதனை
- தரைமட்ட மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்படி ஒன்றியத்துக்கு உட்பட்ட நஞ்சுகொண்டா புரம் ஊராட்சி, மேதலபாடி கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்களில் யாரேனும் இறந்தால் அவர்களை புதைப்பதற்காக மேதலப்பாடி வழியாக செல்லும் கமண்டல நாகநதி ஆற்றின் வழியாக சென்று ஆற்றின் மறுகறையில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டி உள்ளது.
மழைக்காலங்களில் ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அந்த சமயத்தில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் சிரமத்துடன் தூக்கி சென்று அடக்கம் செய்கின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக இதே நிலைதான் நீடித்து வருவதாக அந்தப் பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நாகநதி ஆற்றை கடந்து செல்ல தரைமட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேதலபாடி கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி ரேவதி பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
ஆற்றில் தற்போது தண்ணீர் செல்வதால் உடலை தோள் மீது சுமந்தபடி ஆற்று தண்ணீரில் இறங்கி, சிரமத்துடன் கடந்து சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
- பல மாதங்களாக பயனற்று கிடக்கிறது
- பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலாவுக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
கருத்தடை செய்து கொள்வதற்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த பத்மா என்பவர், சூரியகலாவின் ஆண் குழந்தையை கடத்திச் சென்றார்.
இதனையடுத்து போலீசார் 8 மணி நேரத்தில் குழந்தையை காஞ்சிபுரத்தில் மீட்டு, பத்மாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தற்போது 2 கட்டிடங்களில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திரா மாநிலம் சித்தூர் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். தினமும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது.
இங்கு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரே பதிவில் கொண்ட டேக் பொருத்தப்படும்.
இந்த டேக் மகப்பேறு கட்டிடத்தில் முக்கிய வாயிலில் நிறுவப்பட்டுள்ள ஆர்.எப்.டி. சென்சார் கருவி மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஆர்.எப்.டி. (ரேடியோ ஃப்ரீகுவன்சி டெக்னாலஜி மற்றும் ரேடியோ ஃப்ரீக்வன்சி ஐடென்டிபை) டேக் பொறுத்தப்பட்ட குழந்தை அல்லது தாய் கட்டிடத்தை விட்டு வெளியேரினால் தானியங்கி மூலம் எச்சரிக்கை அலாரம் அடிக்கும். அதன் மூலம் யாருக்கும் தெரியாமல் வெளியே செல்லவோ? அல்லது குழந்தையை கடத்தி செல்லவோ முடியாது.
இந்நிலையில் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் ஆர்.எப்.டி. என்ற தொழில் நுட்ப கருவி முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பழைய மகப்பேறு கட்டிடத்தில் மட்டுமே இந்த ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் இன்னும் பொருத்தப்படவில்லை. மேலும் பழைய கட்டிடத்தில் உள்ள ஸ்கேனர் கருவியும் பல மாதங்களாக பழுதாகி பயனற்று கிடக்கிறது.
இதனால்தான் குழந்தை கடத்தப்பட்ட போது, அதனை தடுக்க முடியவில்லை. எனவே உடனடியாக ஆர்.எப்.டி. ஸ்கேனர் கருவியை பழுது பார்ப்பதோடு, புதிய கட்டிடத்திலும் ஆர்.எப்.டி. கருவி பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.
- யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட எல்லயைில் உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. பல குழுக்களாக பிரிந்து அடிக்கடி தமிழக பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.
இந்நிலையில் நேற்று மாலை அணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அணையின் கரை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்தது.
இது குறித்து ஆடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
நேற்று இரவு வனத்துறையினர் யானை இறந்து கிடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன.
தூரத்தில் யானை கூட்டம் இருப்பது தெரிந்ததால் வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.
குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனத்துறையினர் இன்று காலையில் மீண்டும் சென்றனர். அப்போது காட்டு யானை கரை ஒதுங்கியது.
இதனைத் தொடர்ந்து இறந்த யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
யானை கரையை கடந்து செல்லும் போது சேற்றில் சிக்கி இறந்ததா? அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்ததா? என பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்
- மின்வாரிய அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முதல் அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
விரைவு (தட்கல்)முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
எனவே, வேலூர் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய கோட்டங்களில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளில் விருப்பம் உள்ளவர்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறலாம்.
இதற்காக தங்கள் பகுதி மின்வாரிய செயற் பொறியாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினர்
- போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பேட்டி
வேலூர்:
குழந்தை கடத்தல் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனிப்படை
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பத்மா விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர் மற்றும் முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் 2 நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.
பத்மாவின் புகைப்படத்தை வைத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இரவு ரோந்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம்.
அப்போது காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா மற்றும் அவரது கணவனை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பத்மாவுடன் பிடிபட்டவர் 2-வது கணவர் என்றும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுக்கொண்டாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (30). தம்பதியினருக்கு பத்மப்பிரியன் (16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பத்மப்பிரியன் கீழ்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளியில் நேற்று பிளஸ்-1 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
சிறப்பு வகுப்பு முடிந்ததும் பத்மபிரியன் தனது நண்பர்களுடன், கீழ்அரசம்பட்டில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களோடு குளித்த போது தண்ணீரில் மூழ்கிய பத்மபிரியன், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் மூழ்கிய மாணவனை தேடினர்.
நீண்ட நேர தேடலுக்கு பின்பு சேற்றில் சிக்கியிருந்த பத்மப்பிரியனை பிணமாக அந்த பகுதி மக்கள் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு நடந்தது
- கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது
வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான, நந்தகுமார் தலைமை தாங்கினார்.
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அவைத் தலைவர் முகமது சகி, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- தூங்கிக்கொண்டிருந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 76). இவரது மனைவி ரேவதி(68).
தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன் கடந்த மாதம் இறந்துவிட்டார்.
இதனையடுத்து ரேவதி தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேவதி தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்தப் பகுதியாக ஊர்ந்து வந்த நாகப்பாம்பு ரேவதியை கடித்துவிட்டு அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது.
வலி தாங்க முடியாமல் ரேவதி கூச்சலிட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதில் நேற்று முன்தினம் ரேவதியின் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயும் பாம்பு கடித்து உயிர் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






