என் மலர்
நீங்கள் தேடியது "The public gathered loudly"
- சரமாரியாக அடித்ததால் மயங்கி விழுந்தான்
- போலீசார் ரோந்து சென்றாலும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறையவில்லை
வேலூர்:
வேலூர் அருகே உள்ள மூஞ்சூர் பட்டு கிராமத்தில் 2000-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன.
இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதி மக்கள் தூக்கமின்றி அச்சத்தில் தவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசில் புகார் செய்தும் திருட்டு சம்பவங்கள் தொடர்கதையாக இருந்தது.
இரவு நேரங்களில் போலீசார் ரோந்து சென்றாலும் மர்ம நபர்களின் நடமாட்டம் குறையவில்லை.
இதனால் பொறுமை இழந்த பொதுமக்கள் கிராமங்களில் உள்ள தெருக்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி மர்ம நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் புதுத் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் மர்ம நபர் கையில் இரும்பு கம்பியுடன் நடமாடுவது கேமராவில் பதிவானது. இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ஆங்காங்கே பொதுமக்கள் மறைந்திருந்து மர்ம நபர்களை கண்காணித்தனர்.
அப்போது நள்ளிரவு 1.45 .மணி அளவில் மர்ம நபர் ஒருவர் வீட்டில் மாடியில் ஏறி சென்றதை கண்டனர்.
உடனே சத்தம் போட்டபடி திரண்ட பொதுமக்கள். மர்ம நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
இதனால் அந்த நபர் மயங்கி விழுந்தார். இது குறித்து தகவல் அறிந்து விரைந்த வேலூர் தாலுகா போலீசார் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விசாரணையில் அந்த நபர் காட்டுப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி (வயது 52) என்பதும்,
இவருடன் மேலும் 3 பேர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை மாதமாக பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் சவாலாக இருந்த திருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.






