என் மலர்
வேலூர்
- மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.
- யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட எல்லயைில் உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. பல குழுக்களாக பிரிந்து அடிக்கடி தமிழக பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.
இந்நிலையில் நேற்று மாலை அணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அணையின் கரை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்தது.
இது குறித்து ஆடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
நேற்று இரவு வனத்துறையினர் யானை இறந்து கிடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன.
தூரத்தில் யானை கூட்டம் இருப்பது தெரிந்ததால் வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.
குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனத்துறையினர் இன்று காலையில் மீண்டும் சென்றனர். அப்போது காட்டு யானை கரை ஒதுங்கியது.
இதனைத் தொடர்ந்து இறந்த யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
யானை கரையை கடந்து செல்லும் போது சேற்றில் சிக்கி இறந்ததா? அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்ததா? என பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்
- மின்வாரிய அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழக முதல் அமைச்சரின் உத்தரவுப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
விரைவு (தட்கல்)முறையில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும்.
எனவே, வேலூர் மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட வேலூர், காட்பாடி, ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய கோட்டங்களில் ஏற்கெனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகளில் விருப்பம் உள்ளவர்கள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெறலாம்.
இதற்காக தங்கள் பகுதி மின்வாரிய செயற் பொறியாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கணவன், மனைவி ஆசைப்பட்டு குழந்தையை கடத்தினர்
- போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி பேட்டி
வேலூர்:
குழந்தை கடத்தல் குறித்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் சுருதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தனிப்படை
வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி, ஏ.எஸ்.பி, தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தி சென்ற பத்மா விட்டு சென்ற பொருளிலிருந்து அவரது பெயர் மற்றும் முகவரியை கண்டறிந்தோம். அவர் குழந்தையின் தாயுடன் 2 நாட்கள் சகஜமாக பழகி வந்துள்ளார்.
பத்மாவின் புகைப்படத்தை வைத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் இரவு ரோந்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டு அனைத்து பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் தேடுதல் வேட்டையை தீவிர படுத்தினோம்.
அப்போது காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் குழந்தையுடன் பெண் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனை உறுதி செய்த பிறகு குழந்தையை கடத்தி சென்ற பத்மா மற்றும் அவரது கணவனை கைது செய்து குழந்தையை பத்திரமாக மீட்டோம். அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
முதல்கட்ட விசாரணையில் கணவன் மனைவி இருவரும் ஒரு குழந்தைக்கு ஆசைப்பட்டு இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பத்மாவுடன் பிடிபட்டவர் 2-வது கணவர் என்றும், அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லாததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
குழந்தை கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் வேலூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்ட போலீசார் துரிதமாக செயல்பட்டதால் குழந்தையை பத்திரமாகவும், விரைவாகவும் மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
- நண்பர்களுடன் குளிக்க சென்ற போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுக்கொண்டாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 34), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ஜீவிதா (30). தம்பதியினருக்கு பத்மப்பிரியன் (16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பத்மப்பிரியன் கீழ்அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பள்ளியில் நேற்று பிளஸ்-1 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
சிறப்பு வகுப்பு முடிந்ததும் பத்மபிரியன் தனது நண்பர்களுடன், கீழ்அரசம்பட்டில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். நண்பர்களோடு குளித்த போது தண்ணீரில் மூழ்கிய பத்மபிரியன், நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் அதிர்ச்சடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் மூழ்கிய மாணவனை தேடினர்.
நீண்ட நேர தேடலுக்கு பின்பு சேற்றில் சிக்கியிருந்த பத்மப்பிரியனை பிணமாக அந்த பகுதி மக்கள் மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு நடந்தது
- கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது
வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான, நந்தகுமார் தலைமை தாங்கினார்.
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அவைத் தலைவர் முகமது சகி, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
- தூங்கிக்கொண்டிருந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுகொண்டாபுரம் ஊராட்சி, மேதலபாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 76). இவரது மனைவி ரேவதி(68).
தம்பதியினருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கண்ணன் கடந்த மாதம் இறந்துவிட்டார்.
இதனையடுத்து ரேவதி தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ரேவதி தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கினார். நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்தப் பகுதியாக ஊர்ந்து வந்த நாகப்பாம்பு ரேவதியை கடித்துவிட்டு அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது.
வலி தாங்க முடியாமல் ரேவதி கூச்சலிட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதில் நேற்று முன்தினம் ரேவதியின் வீட்டு வாசலில் கட்டி வைத்திருந்த நாயும் பாம்பு கடித்து உயிர் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார்.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது மனைவி சூரியகலா. இவரால் சரியாக பேச முடியாது. காதும் கேட்காது. இவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் கருத்தடை சிகிச்சைக்காக சூரியகலா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் சூரியகலாவுடன் குழந்தையும் இருந்தது.
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் உணவு இடைவேளை தவிர மற்ற நேரத்தில் நோயாளிகளின் உறவினர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. நோயாளிகளுக்கு உதவியாக பெண்கள் ஒருவர் மட்டுமே வார்டில் உடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு சூரியகலா இருந்த வார்டுக்கு ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை அடுத்த அய்யம்பேட்டைசேரியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி பத்மா என்பவர் வந்தார்.
சூரியகலாவுடன் நெருங்கி பழகுவது போல் நடித்து, அவருக்கு உணவு கொடுத்துள்ளார். அந்த உணவை சாப்பிட்ட சூரியகலா சிறிது நேரத்திலேயே மயக்கமாகிவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரியகலாவின் ஆண் குழந்தையை பத்மா கடத்தி சென்றுவிட்டார். சூரியகலா கண் விழித்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனதை அறிந்த அவர் கதறி அழுது துடித்தார். இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையில், வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் ஆஸ்பத்திரியில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பத்மா, குழந்தையை கடத்திக்கொண்டு வேக வேகமாக ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே செல்வது பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, குழந்தையை கடத்தி சென்ற பத்மா திருவண்ணாமலை செல்லும் பஸ்சில் ஏறி தப்பி சென்றது தெரிந்தது.
பத்மா பயணம் செய்த வழித்தடங்களில் உள்ள அண்டை மாவட்டங்கள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர்.
கண்காணிப்பு கேமராவின் தொடர்ச்சியை வைத்து இறுதியாக 8 மணி நேரத்தில் காஞ்சிபுரத்தில் பத்மா இருப்பதை கண்டுபிடித்தனர். விரைந்து சென்ற தனிப்படை போலீசார் பத்மா மற்றும் அவரது கணவர் திருநாவுக்கரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டனர்.
மேலும், குழந்தையை கடத்திய பத்மா மற்றும் அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பத்மா போலீசில் சிக்காமல் இருக்க ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த பின்னர் பஸ் மூலம் திருவண்ணாமலை சென்று, அங்கிருந்து வந்தவாசி வழியாக காஞ்சிபுரம் சென்றுள்ளார். அவர் தெளிவாக திட்டமிட்டு குழந்தையை கடத்தி சென்றுள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரத்தில் பத்மாவின் கணவரும் சுற்றித் திரிந்ததுள்ளார். பத்மா காஞ்சிபுரம் செல்லும் நேரத்தில், அவரது கணவர் தயார் நிலையில் இருந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தொடர் குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களா அல்லது குழந்தை கடத்தல் கும்பலாக செயல்படுபவர்களா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
- குடிபோதையில் விபரீதம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கரடிகுடி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40), கம்பி கட்டும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி கலையரசி (31) என்ற மனைவியும், 3 மகன்கள் உள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான சரவணன் தினமும் குடித்து விட்டு வந்து, மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம்.
அதன்படி சரவணன் நேற்று இரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன்- மனைவியிடையே வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரவணன், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து கலையரசி மார்பில் குத்தினார்.
வலி தாங்க முடியாமல் கலையரசி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தபோது சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த கலையரசியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சரவணனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போக்சோவில் வழக்கு பதிவு
- போலீசார் விசாரணை
வேலூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். குடியாத்தம் அடுத்த கொட்டாற மடுகு நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 21). இளம் பெண்ணும் கிருஷ்ணமூர்த்தியும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.
இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரது வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது இளம் பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியாக உள்ள தனது மகளை சேம் பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்துச் சென்றார்.
அங்கு இளம் பெண்ணை பரிசோதித்த டாக்டர் மைனர் பெண் கர்ப்பமாக உள்ளது குறித்து சமூக நலத் துறைக்கு தகவல் அளித்தார்.
சமூக நலத்துறை அதிகாரிகள் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சியாமளா போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர், தொரப்பாடி யை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மகன் சுகந்தன் (வயது 21).
இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சுகந்தன் நேற்று இரவு 8 மணி அளவில் தனது நண்பர்களுடன் அரியூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனிக்காமல் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த சுகந்தன் ரெயில் அருகே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சுகந்தன் உள்ளிட்ட நண்பர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். அதற்குள் வேகமாக வந்த ரெயில் சுகந்தன் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.
படுகாயம் அடைந்த சுகந்தனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுகந்தன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சிகிச்சை பலனின்றி பறிதாபம்
- ஒருவர் கைது
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). மேளம் அடிக்கும் தொழிலாளி.
இவர் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரில் வசித்து வந்தார். கடந்த 9-ந் தேதி காகிதப்பட்டறையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில் திருவிழா நடந்தது. கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கொள்வதற்காக ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.
அப்போது ஆகாசுக்கும் காகிதப்பட்டரையை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் மது பாட்டிலை உடைத்து ஆகாஷ் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ஆகாஷ் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஷை கைது செய்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகாஷ் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து வேலூர் வடக்கு போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்தனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
- அம்மன் திருவீதி உலா நடந்தது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் பகுதியில் மிகவும் சிறப்பு மிக்க எல்லையம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி முதல் வெள்ளி தொடங்கி தொடர்ந்து 9 வாரங்கள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழா நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டும் வெள்ளி மற்றும் ஞாயிறுகிழமைகளில் நடக்கும் திருவிழாக்களில் ஏராளமான பக்தர்கள் குவிந்து பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை படையலிட்டு வழிபாடு செய்கின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பல் உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது.
2-வது நாளான நேற்று எல்லையம்மன் மாவடி சேவை அலங்காரத்தில் எழுந்தருளி, 5 முறை குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது.
சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் நரசிம்மாமூர்த்தி மற்றும் கணக்காளர் சரவணபாபு, மணியம் முரளி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






