என் மலர்tooltip icon

    வேலூர்

    ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை விரைந்து கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று வேலூரில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
    வேலூர்:

    வேலூரில் கனமழையையொட்டி திடீர்நகர், முள்ளிபாளையம் பகுதிகளை சேர்ந்த சுமார் 450 பேர் கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, உணவு, போர்வை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், நந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து அவர்கள் மாங்காய் மண்டி பகுதியில் மழைநீர் செல்லும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

    முன்னதாக துரைமுருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நிவர்’ புயல் ஏராளமான மரங்களை சாய்த்துள்ளது. பயிர்களை சேதப்படுத்தி உள்ளது. அரசு விரைவாக நஷ்டத்தை கணக்கிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். காரணம், சமீபத்தில் தமிழகத்துக்கு வந்த அமித்ஷா தமிழகத்துக்கு கொட்டி கொடுப்பது போல் பேசிவிட்டு சென்றார்.

    இந்த புயல் சேதத்துக்கு எவ்வளது கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட திடீர்நகர் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் தண்ணீர் தேங்கி உள்ளது.

    மோர்தானா நீர் செல்லும் இரு கால்வாயை தூர்வாராததால் ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. அதை சரி செய்ய வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்த புயலுக்கும் வெளியே செல்லாதவர். ஆனால் தற்போது தேர்தல் காரணமாக அவர் கடலூர் சென்றுள்ளார். மழை வந்தால் மட்டுமே ஆக்கிரமிப்பை அகற்ற இந்த அரசுக்கு ஞானம் வருகிறது. அமைச்சர்கள் அனைவருமே பொய் பேசி வருகிறார்கள். பயிர் காப்பீடு செய்தவர்களுக்கு முதலில் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச் சென்றது.
    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இரு பாலாற்று பாலங்களுக்கு இடையே ஏராளமான நாய்கள் வசித்து வந்தன. நிவர் புயலால் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் வந்தபோது பாலாற்றில் வசித்து வந்த நாய்கள் வேறு இடங்களுக்கு ஓடின.

    இந்த நிலையில் 8 குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று வெள்ளத்தில் இருந்து குட்டிகளை காப்பாற்ற ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு தூக்கிச் சென்றது. அப்போது மழை வெள்ளம் நாயை சிறிது தூரம் இழுத்துச் சென்றது. எனினும் அதை பொருட்படுத்தாமல் துணிந்து, தனது குட்டிகளை காப்பாற்றியது. ஆனால் அந்த நாயால் 5 குட்டிகளை மட்டும் காப்பாற்ற முடிந்தது. மீதம் உள்ள 3 குட்டிகளும் ஆற்றின் நடுப்பகுதியில் பாலத்தின் கீழே தவித்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறங்கி 3 நாய்களையும் மீட்டனர். நாயின் பாசத்தையும், தீயணைப்பு வீரர்களின் செயலையும் பொதுமக்கள் கண்டு வியந்தனர்.
    குடியாத்தம் அருகே மோர்தானா அணை இடதுபுற கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீரை, கலெக்டர் திறந்து வைத்தார். கரையோர மக்கள் மேடான பகுதிக்கு செல்ல கலெக்டர் அறிவுறுத்தினார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த மோர்தானா அணை தண்ணீரை ஜிட்டப்பல்லி செக் டேமில் இருந்து இடதுபுற கால்வாயில் பாசனத்துக்காக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று மதியம் திறந்து வைத்தார். மோர்தானா அணை இடதுபுற கால்வாய் மூலம் பெரும்பாடி ஏரி, ஒக்கணாபுரம் ஏரி, விரிஞ்சிபுரம் ஏரி, பசுமாத்தூர் சித்தேரி, அக்ராவரம் ஏரி, அம்மணாங்குப்பம் ஏரி, நெட்டேரி, எர்த்தாங்கல் ஏரி, மேல்மொணவூர் ஏரி, இறைவன்காடு ஏரி, மேல்மொணவூர் பெரிய ஏரி, கீழ் ஆலத்தூர் ஏரி, பசுமாத்தூர் பெரிய ஏரி, வேப்பூர் ஏரி, செதுவாலை ஏரி, காவனூர் ஏரி, தொரப்பாடி ஏரி, செருவங்கி ஏரி, சதுப்பேரி உள்பட 19 ஏரிகளுக்கு தண்ணீர் சென்று நிரம்பும் வகையில் இடதுபுற கால்வாய் திறக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து 19 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் பிரிவு கால்வாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    முன்னதாக, குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஆற்றின் கரையோரம் வசித்த பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள முகாமுக்கு சென்று அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். 2 நாட்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    அதைத்தொடர்ந்து அக்ராவரம் தடுப்பணை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தினார். உப்பரபள்ளி, சேம்பள்ளி, ஜிட்டப்பல்லி ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ், செயற்பொறியாளர் சண்முகம், உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், குணசீலன், உதவி திட்ட இயக்குனர் மில்டன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
    வேலூர் பாலாற்றில் பாய்ந்தோடும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். ஏரிகளுக்கு செல்லும் கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    வேலூர்:

    ‘நிவர்’ புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் 2 நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனால் நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கவுண்டய ஆறு, அகரம் ஆறு மற்றும் காட்டாறுகளில் இருந்து வரும் மழைநீர் பாலாற்றில் கலந்து வேலூர் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் பழைய மற்றும் புதிய பாலத்தில் நின்று பாலாற்றில் செல்லும் வெள்ளத்தை வேடிக்கை பார்த்தனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    பாலாற்றில் உள்ள செடி, கொடிகளை மேய்ந்து கொண்டிருந்த 3 பசுமாடுகள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. அதில் 2 மாடுகள் வெள்ளத்தில் இருந்து மீண்டுவந்துவிட்டன. ஒரு மாடு மட்டும் மாட்டிக் கொண்டது. அதை பொதுமக்கள் மீட்க போராடியும் முடியவில்லை. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் பசு மாட்டை மீட்டனர். இதை பாலத்தில் நின்றிருந்தபடி பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்த்தனர்.

    இதனிடையே ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக கலவகுண்டா அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பொன்னை ஆற்றில் பாய்ந்தது. மேலும் பொன்னை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 42,680 கனஅடிநீர் ஆற்றில் செல்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெள்ளப்பெருக்கை காணவும், அதனை செல்போனில் படம் பிடிக்கவும் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். ஆர்வமிகுதியால் சிலர் தண்ணீரில் இறங்கி விளையாட தொடங்கினர். அவர்களை வருவாய்த்துறையினர், போலீசார் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். யாரும் ஆறு, ஏரிகளில் குளிக்க வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கரையோர பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பாலாற்றில் இருந்து பெரியஏரி, கடப்பேரி, சதுப்பேரி ஆகிய ஏரிகளுக்கு பொய்கை அருகே கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்லும். ஆனால் இந்த ஏரிகளுக்கு நீர்செல்லும் கால்வாயை தூர்வாராததால் சிறிது தூரம் சென்ற மழைநீர் மீண்டும் பாலாற்றுக்கே திரும்பியது. எனவே இந்த கால்வாயை தூர்வார வேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
    நிவர் புயலால் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் 17 ஏரிகள் முழுமையாக நிரம்பின.
    வேலூர்:

    நிவர் புயலின் தாக்கத்தால் வேலூர் மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி பகல் முழுவதும் மிதமான மழை பெய்தது. இதையடுத்து அன்றிரவு புயல் கரையை கடக்கும்போது 10.30 மணி அளவில் பலத்த மழையாக உருவெடுத்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழை 2-வது நாளாக நேற்று முன்தினமும் நீடித்தது.

    காலை முதல் பிற்பகல் வரை பலத்த மழை இடைவிடாது பெய்தது. பல இடங்களில் பலத்த காற்றும் வீசியது. அதைத்தொடர்ந்து மழையின் வேகம் குறைந்தபோதிலும் சாரல் மழை பெய்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்தது. மழையின் காரணமாக நீர்நிலைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்தது.

    குறிப்பாக, குடியாத்தம் அருகே 25 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநில காட்டுப்பகுதியை ஒட்டியபடி தமிழக எல்லையில் அமைந்துள்ள மோர்தானா அணை நிரம்பி, கவுண்டய ஆற்றில் உபரிநீர் வெளியேறுகிறது

    மேலும், பொன்னை அருகே குட்டாறு, அகரம், நாகநதி, அமிர்தி, சிங்கிரிகோவில் ஆறு, மேல்அரசம்பட்டு ஆகிய ஆறுகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கரையோர மக்களுக்கு தண்டரோ, ஆட்டோ மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் 101 ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி 15 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள 134 ஏரிகளில் 2 ஏரிகளும் என 17 ஏரிகள் முழுவதும் நிரம்பியது.

    மழையின் காரணமாக மாவட்டத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை, நெல், பப்பாளி பயிர்கள் சேதமடைந்தது. சேதமடைந்த மரம், மின்கம்பங்கள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேல்பாடி அருகே தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் பாலத்தை மூழ்கடித்த படி பொன்னையாற்றில் வெள்ளம் பாய்ந்து ஓடியது.

    நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 6 இடங்களில் மொத்தம் 669.3 மி.மீ. மழை பெய்தது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 111.55 மி.மீ. மழை பெய்திருந்தது.
    மலையில் இருந்து பாறை உருண்டோடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காற்றினால் சாலையோர மரங்கள், தென்னை மரங்கள் தலைவிரித்தாடின. பல இடங்களில் மரங்கள் சரிந்து சாலைகளில் விழுந்தன. ஓல்டு டவுன் மலையில் இருந்து பாறை உருண்டோடி அந்த பகுதியில் வசித்த தொழிலாளி முருகன் வீட்டின் அருகே விழுந்தது. அதைக்கண்டு முருகன் மற்றும் அவருடைய மனைவி ஆனந்தி அதிர்ச்சி அடைந்தனர். இன்னும் சற்று தொலைவில் விழுந்திருந்தால் வீட்டின் மீது விழுந்திருக்கும். 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர்கள் இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த பாறையை அங்கிருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக முருகன், ஆனந்தி மற்றும் அந்த பகுதியில் வசித்தவர்கள் அருகேயுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மலையில் இருந்து பாறை உருண்டோடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் நேற்று 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழை கொட்டித்தீர்த்தது. ஆறு, ஏரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    வேலூர்:

    வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று முன்தினம் இரவு கரையை கடந்தது.

    அதைத்தொடர்ந்து நிவர் புயல் வடமேற்கு பகுதியை நோக்கி நகர்ந்தது. அதனால் வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்தது. இரவு 10.30 மணி முதல் மழையின் வேகம் அதிகரித்தது. விடிய, விடிய மழை தொடர்ந்து வெளுத்து வாங்கியது. காலை 9 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 38 செ.மீ. மழை அளவு பதிவாகியிருந்தது. வேலூர், அம்முண்டி சர்க்கரை ஆலை, காட்பாடி பகுதியில் அதிகளவு மழை பெய்திருந்தது.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலையில் மிதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது. குறிப்பாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலூரில் பல இடங்களில் இடைவிடாது மழை வெளுத்து வாங்கியது. சில சமயங்களில் இடி சத்தம் கேட்டது. தொடர்ச்சியாக வேலூர் மாநகரில் மதிய வேளையில் பலத்த காற்று வீச தொடங்கியது. அதனால் மழையின் வேகமும் அதிகரித்தது. சாலையோர மரங்கள், தென்னை மரங்கள் காற்றினால் தலைவிரித்து ஆடின. நேரம் செல்ல செல்ல மழையின் தீவிரமும், காற்றின் வேகமும் கூடியது. மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழையளவு பதிவானது. அதிகபட்சமாக பொன்னையில் 16 செ.மீ. மழை பெய்திருந்தது.

    பொதுவிடுமுறை காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒரு சில ஓட்டல்கள், டீக்கடைகள் மட்டும் திறந்திருந்தன. கனமழை காரணமாக வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காட்பாடிசாலை, ஆற்காடுசாலை, ஆரணிசாலை, பெங்களூரு சாலை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை வெள்ளம் சூழந்தது. பல இடங்களில் ஆறுபோன்று மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    வேலூர் கன்சால்பேட்டை காந்திநகர், இந்திராநகர், சம்பத்நகர், காட்பாடியில் சில பகுதிகள் என்று 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அதனால் பொதுமக்கள் கல்விசான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பத்திரமாக வைத்து வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு சென்றனர். கன்சால்பேட்டை, இந்திராநகர், சம்பத்நகர் பகுதியை சேர்ந்த 120 பேர் கொணவட்டம் அரசுப்பள்ளி, அம்பேத்கர்நகர் அரசுப்பள்ளி உள்ளிட்ட 3 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    காட்பாடியை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மாதாண்டகுப்பம் ஏரி கரை நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீரென உடைந்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி ஊருக்குள் புகுந்தது. இதனால் அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். காட்பாடி தாலுகாவில் 25 இடங்களில் மரங்கள் விழுந்தன. நான்கு இடங்களில் மின்கம்பங்கள் விழுந்து சேதமாகின. கே.வி.குப்பத்தை அடுத்த அரும்பாக்கம், வேப்பங்கநேரி, காளாம்பட்டு, மேல்மாயில் ஆகிய பகுதிகளில் 5 மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    அணைக்கட்டு அடுத்த இலவம்பாடியில் சாலையோரம் இருந்த ஒரு புளியமரமும், குடிசை கிராமத்தில் சாலையோரம் இருந்த இரு புளிய மரங்களும் வேரோடு சாய்ந்தன. மரங்கள் விழுந்தபோது, அருகில் இருந்த மின் கம்பங்களும் சரிந்தன. குடிசை கிராமத்தில் ஒரு புளியமரம் சாய்ந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற ஒரு கார் அதிர்ஷ்டவசமாக விபத்தில் இருந்து தப்பியது. காரில் பயணம் செய்த 4 பேர் உயிர் தப்பினர். புளிய மரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இலவம்பாடி மற்றும் ஊசூர் வழியாக செல்லும் வாகனங்கள் 4 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டு இருந்தன.

    ஜவ்வாதுமலைத் தொடரில் இருந்து உருவாகி மேல்அரசம்பட்டு வழியாக ஓடும் உத்திரகாவேரி (அகரம்) ஆற்றில் கடந்த 3 ஆண்டுகளாக வெள்ளம் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. நிவர் புயல் மழை காரணமாக நேற்று இரவில் இருந்து உத்திரகாவேரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மேல்அரசம்பட்டு பகுதிக்கு விரைந்து வந்து, அங்குக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உத்திரகாவேரி ஆற்று கரையோரம் வசித்து வரும் மக்களை அங்கிருந்து வெளியேற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதியில் 3 ஆயிரத்து 460 கனஅடியும், கவுண்டன்ய நதியில் 3 ஆயிரத்து 320 கனஅடியும், அகரம் ஆற்றில் 4 ஆயிரம் கனஅடியும், பொன்னை ஆற்றில் 7 ஆயிரத்து 40 அடியும், பாலாற்றுக்கு 17 ஆயிரத்து 820 கனஅடி நீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் மாங்காய் மண்டி அருகேயுள்ள நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கால்வாய்க்கு வரும் சிறிய கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக திடீர்நகருக்குள் மழைநீர் புகுந்து, அங்கிருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 படகுகளுடன் உடனடியாக அங்கு சென்றனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினருடன் இணைந்து வீடு, வீடாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். திடீர் நகரில் வசித்த 200 பேரை படகு மூலம் மீட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

    வேலூரில் இருந்து பாலமதி செல்லும் மலைப்பாதையில் ஒரு வளைவு பகுதியில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியில் இருந்த பாறையும் உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பலத்த காற்றினால் வேலூர் தாலுகா சிங்கிரிகோவில் கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 10 ஏக்கர் வாழைமரங்கள் சரிந்து சேதமடைந்தது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் முதல்கட்டமாக 15 ஏக்கர் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மழையினால் 38 மரங்கள் சரிந்து விழுந்தன. அவற்றை மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து அப்புறப்படுத்தினர்.

    வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கொட்டி தீர்த்த மழையால் 132 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பப்பாளி, நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 72 மரங்கள், 10 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 40 வீடுகளும் இடிந்துள்ளன. இந்த வீடுகளில் வசித்தவர்களும், தாழ்வான பகுதி, ஆற்றங்கரையோரம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதி, குடிசை வீடுகளில் வசித்த 1,120 பேர் மீட்கப்பட்டு 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் பெரும் பொருட்சேதமோ, எவ்வித உயிர்சேதமோ ஏற்படவில்லை என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

    நாள் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக வேலூர் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெய்த மழையின் அளவு (செ.மீ.) வருமாறு:-

    பொன்னை-162.4, வேலூர்-131.7, அம்முண்டி சர்க்கரை ஆலை-129.2, காட்பாடி-109.2, குடியாத்தம்-76.4, மேல்ஆலத்தூர்-60

    மாவட்டம் முழுவதும் 8 மணி நேரத்தில் 67 செ.மீ. மழை பெய்துள்ளது.
    ‘நிவர்’ புயல் காரணமாக காட்பாடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. இதனை கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












    காட்பாடி:

    ‘நிவர்’ புயல் காரணமாக காட்பாடி பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் காட்பாடி தாலுகாவில் உள்ள ஏரிகள் நிரம்பி வருகின்றன. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குகையநல்லூர் ஏரி, திருவலம் அருகே உள்ள வீரம் தாங்கல் ஏரி ஆகியவற்றை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதா? என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, கரைகளை பலப்படுத்த அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி செயற் பொறியாளர் விஸ்வநாதன், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
    வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
    வேலூர்:

    வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது. இந்த புயலை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டு இருக்கிறது.

    நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடியில் லேசான மழை பெய்து வருகிறது.


    வீடு வாடகைக்கு எடுப்பது போல் நடித்து பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
    வேலூர்:

    வேலூரை அடுத்த காட்பாடி வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி பரிமளா (வயது 57). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி பரிமளா வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த 3 பேர் அந்த வீட்டின் மாடியில் இருந்த சிறிய வீட்டுக்கு வாடகைக்கு வர விருப்பம் உள்ளதாக கூறினர். மேலும் வாடகை விவரம் போன்றவற்றை கேட்டு, வீட்டை நோட்டமிட்டு சென்றனர்.

    இந்த நிலையில் மறுநாள் பிற்பகல் 2 மணி அளவில் வீட்டில் பரிமளா மட்டும் தனியாக இருந்த போது 3 பேரும் மீண்டும் வந்தனர். அப்போது அவர்கள் பரிமளாவிடம் மாடி வீட்டை திறந்து காண்பிக்குமாறு தெரிவித்தனர். பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென அவர்கள் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, பரிமளாவை தாக்கி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தனர். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள், வீட்டில் இருந்த நகைகள் என சுமார் 24 பவுன் நகைகள், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். மாலையில் வீட்டுக்கு வந்த அவரது குடும்பத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பரிமளாவை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்றது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா, களமருதூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் அருள்நாதன் (29), விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு, சின்னகுப்பம் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் பாலா என்ற பாலமுருகன் (24), காட்பாடி, விருதம்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்த சிங்காரம் மகன் பிரவீன்குமார் (32) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் தடயங்களை மறைக்கும் பொருட்டு இந்த கொலை சம்பவத்தில் அவர்கள் பயன்படுத்திய கத்தி, மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை அன்பூண்டி ஏரியில் தீ வைத்து எரித்தனர்.

    விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சுமார் 108 முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி பாலசுப்பிரமணியன் அளித்த தீர்ப்பில், அருள்நாதன் உள்பட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்களை வேலூர் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா ஆஜரானார்.
    குடியாத்தத்தில் வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பிச்சனூர் தியாகிகுமரன் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). லுங்கி மண்டியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு கோவிலுக்குச் சென்றனர். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த இரும்பு பெட்டி திறந்து இருந்தது, அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து மகேஷ் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை   நடத்தினர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிகுதித்து வீட்டுக்குள் புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் ரூ.1 கோடி நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் மோகன் (வயது 60). இவர் வேலூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். உடல்நலக்குறைவு காரணமாக மோகன் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உதவிக்காக குடும்பத்தினரும் சென்னையில் தங்கினர்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து மோகன் மகன் ஹரீஸ் நேற்று இரவு 7 மணியளவில் வேலூருக்கு திரும்பினார். அப்போது பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 250 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் கொள்ளை போயிருந்தது. பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த மர்மநபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 19-ந் தேதி கண்காணிப்பு கேமராக்கள் துண்டிக்கப்பட்டு ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    ×