என் மலர்tooltip icon

    வேலூர்

    ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1 கோடிேய 40 லட்சம் மோசடி செய்த லாரி டிரைவரின் வீட்டு முன்பு அமர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பேரணாம்பட்டு:


    பேரணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் கிராமம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47), லாரி டிரைவர். இவர் எம்.வி.குப்பம், மேல் கொத்தக்குப்பம், உமராபாத் பள்ளி தெரு, மிட்டாளம் மற்றும் வேலூரை அடுத்த பொய்கை ஆகிய சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் 35-க்கு மேற்பட்டோரிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி வந்தார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒருவரிடம் தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்து காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பணம் கொடுத்த இளைஞர்கள் பலரை பெங்களூருவில் உள்ள ஒரு கும்பலிடம் அழைத்துச் சென்று ேபசி, விரைவில் ராணுவ பணிக்கான உத்தரவு வழங்கப்படும் எனக் கூறி நம்ப வைத்துள்ளார். ஆனால் இதுவரை உதயகுமார் யாருக்கும் ராணுவத்தில் வேலை வாங்கி தரவில்லை. அவர் திடீரெனத் தலைமறைவாகி விட்டார்.

    அவரிடம் பணம் கொடுத்து, ராணுவ வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இளை ஞர்கள் பலர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மேல்பட்டி போலீஸ் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதயகுமார் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்தார். தகவல் அறிந்ததும் வேலைக்கு பணம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் மேல்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

    பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அவர்களின் குடும்பத்தினர் பலர் நேற்று எம்.வி.குப்பம் கோவில்மேடு பகுதியில் உள்ள உதயகுமாரின் வீட்டுக்கு வந்து மேல்பட்டி-ஆம்பூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்கள், உதயகுமாரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடமும், குடும்பத்தினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததும், சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் உள்பட 7 நோயாளிகள் நேற்று ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கடப்பா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் உள்ளது. இந்த கொள்கலனில் நேற்று பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற 59 பேர் மற்றும் மற்ற பிரிவுகளில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற 62 பேர் என்று மொத்தம் 121 பேருக்கு மாற்று ஏற்பாடாக சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கோப்புப்படம்


    இந்தநிலையில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 4 உள்பட 7 பேர் நேற்று ஒரே நாளில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அவர்கள் விவரம் வருமாறு:-

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 68), திருவண்ணாமலை மாவட்டம் அழகுசேனை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (56) மற்றும் பிரேம் (40), திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த செல்வராஜ் (66), காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்த லீலாவதி (72), விருதம்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன், கபாலி (37).

    இவர்களில் லீலாவதி, ராஜேஸ்வரி, வெங்கடேசன், செல்வராஜ் ஆகிய 4 பேரும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். மற்ற 3 பேரும் இதய கோளாறு, சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களால் அனுமதிக்கப்பட்டு பொது வார்டில் இருந்தவர்கள் ஆகும்.

    7 பேரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக அவர்களுடய உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆக்சிஜன் சரிவர சப்ளை இல்லாத பிரச்சினை, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் மெத்தனமாக கண்டும், காணாமல் இருந்ததாக நோயாளிகளின் உறவினர்கள் கூறுகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன், ஐஸ் கட்டியாக உறைந்து விட்டதாகவும், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. ஐஸ் கட்டியாக உறைந்ததால் ஆக்சிஜன் பிளான்ட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து ஐஸ்சை கரைக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஒரே நாளில் 7 நோயாளிகள் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 4,533 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததே பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணமாகும். வேலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையான 15 லட்சத்து 59 ஆயிரத்து 968 பேரில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 653 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 75 சிறப்பு முகாம்களில் கொரோனா பரிசோதனையும், தடுப்பூசி போடும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியலின்படி வேலூர் மாவட்டத்தில் 5 லட்சத்து 57 ஆயிரத்து 310 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். வேலூர் மாநகராட்சி பகுதியில் அதிகபட்சமாக 1,86,836 பேர் உள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,37,437 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில், யாருக்கும் பக்கவிளைவோ, மருத்துவ கோளாறுகளோ நிகழவில்லை. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளில் 1,654 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இ.எஸ்.ஐ., அரசு பென்லேன்ட், குடியாத்தம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 535 படுக்கைகள் உள்ளன. வி.ஐ.டி., குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 1,288 படுக்கைகள் தயாராக உள்ளது. இங்கு இன்று முதல் (திங்கட்கிழமை) லேசான அறிகுறி காணப்படும் நபர்கள் அனுமதிக்கப்படுவர்.

    வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு தொழிற்நுட்ப கல்லூரி, குடியாத்தம் தனியார் பாலிடெக்னிக் ஆகியவை கொரோனா வார்டுகளாக செயல்படுத்தப்படும். கொரனா வார்டுகளில் 2,364 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளது. கொரோனா சிகிச்சைக்காக 4,533 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 257 ஐ.சி.யு. வசதி கொண்ட படுக்கைகளும், 1,127 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டவையாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. எனவே ஆக்சிஜன் தட்டுபாடு இருக்காது.

    ரெம்டெசிவீர் மாத்திரைகள் 1,032 உள்ளன. ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி ஓரிருநாளில் வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. ஜிங் சல்பேட் மற்றும் மல்டி வைட்டமின் மாத்திரைகள், தலா 3 லட்சம் இருப்பு உள்ளன. முதற்கட்டமாக அவற்றில் 80 ஆயிரம் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. வேலூர் நேதாஜி மார்க்கெட் சில்லரை விற்பனை காய்கறி, பூக்கடைகள் தற்காலிக மார்க்கெட்டிற்கு மாற்றப்படுகிறது. கிராமப்புறங்களில் செயல்படும் வாரச்சந்தைகள் ஏற்கனவே செயல்பட்டு வந்த பள்ளி மைதானங்களுக்கே இடமாற்றம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.


    வேலூர் மாவட்டத்தில் 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 195 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 192 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். வேலூரில் தங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பிறமாநிலங்களை சேர்ந்த 20 பேரும் பாதிக்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    காஞ்சீபுரத்திலிருந்து பெங்களூருக்கு லாரியில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    அணைக்கட்டு:

    காஞ்சீபுரத்தில் இருந்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் பானுவுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் கோடீஸ்வரன், காட்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபிரகாஷ ஆகியோர் கொண்ட குழு நேற்றுமுன் தினம் இரவு 12 மணிக்கு பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் லாரியில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் (வயது 32), தினேஷ் (28) என்பது தெரியவந்தது. மேலும் காஞ்சீபுரத்தில் இருந்து பெங்களூருக்கு 5 டன் ரேஷன் அரிசியை கடத்தி செல்வதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

    அதன்பேரில் லாரியில் கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வேலூர் தொரப்பாடியில் உள்ள வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசி கடத்திய லாரி, டிரைவர்கள் வெற்றிவேல், தினேஷ் ஆகிய 2 பேரை காட்பாடியில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
    பாம்பு கடித்து கல்லூரி மாணவி பலியான சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    மாதனூரை அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித், கூலித்தொழிலாளி. இவரின் மகள் மோகனா (வயது 15). இவர், குடியாத்தம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்தார். நேற்று வீட்டில் உள்ள பீரோவுக்கு அடியில் எலியின்வால் போல இருந்தது.

    அதைப் பார்த்த மோகனா அந்த வாலை பிடித்து இழுத்துள்ளார். அப்போது அவரை, பீரோவுக்கு அடியில் இருந்து ஏதோ ஒரு விஷ உயிரினம் கடித்துள்ளது. அவர், மாதனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று, தன்னை எலி கடித்து விட்டதாகக் கூறி, சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்து படுத்துள்ளார். சில மணி நேரத்திலேயே மோகனா பரிதாபமாக இறந்து விட்டார். அவரின் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.

    பீரோவை நகர்த்தி தேடியபோது, அதன் அடியில் விஷ பாம்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது மகள் பாம்பு கடித்து இறந்து விட்டதாகக் கூறி பெற்றோர் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பஸ் நிலையம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பஸ் நிலையம் அருகே மோகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் உள்ளது. இன்று காலை மோகன் பட்டாசு கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார்.

    அப்போது சிலர் பட்டாசு வாங்க வந்தனர். குடோனில் இருந்த பட்டாசுகளை எடுத்து வந்து வாடிக்கையாளர்களுக்கு மோகன் காண்பித்தார். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் மளமளவென்று வெடித்து தீ பட்டாசு குடோன் முழுவதும் பரவியது.

    பட்டாசு குடோனில் மோகனின் 2 பேரப்பிள்ளைகள் இருந்ததால் அவர்களை காப்பாற்ற மோகன் அங்கு ஓடினார். அதற்குள் குடோன் முழுவதும் தீ பரவி பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் குடோனில் சிக்கியவர்கள் வெளியே வராமல் உள்ளே மாட்டிக் கொண்டனர்.

    காட்பாடி மற்றும் குடியாத்தம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் பட்டாசுகள் அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அவர்களால் பட்டாசு குடோன் அருகே நெருங்க முடியவில்லை.

    இதையடுத்து அருகில் உள்ள மாடிகள் மீது ஏறி நின்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ ஓரளவுக்கு அணைந்த பின்னர் தீயணைப்பு துறையினர் உள்ளே புகுந்து பார்த்தனர். அப்போது அங்கு மோகன் உள்பட 2 குழந்தைகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தீ விபத்தை காண திரண்ட பொதுமக்கள்.

    ஏராளமானோர் தீ விபத்தை காண அந்த பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லத்தேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்தவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    வேலூர்:

    நகைக்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக் உடல் நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார்.

    நடிகர் விவேக் நடிப்பின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். திரை உலகைத் தாண்டி பொது வாழ்க்கையிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

    குறிப்பாக மரக்கன்றுகள் நட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். அவரது கனவை நனவாக்கும் வகையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த உள்ளி கிராமத்தில் பாலாற்று படுகையில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.

    விவேக்

    உள்ளி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் தமிழக அரசின் உதவியுடன் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார். விவேக்கின் மறைவையடுத்து கூடுதலாக 500 மரக்கன்றுகள் நடும் பணியை அவர் தொடங்கினார்.

    அவருக்கு உதவியாக உள்ளி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு அவர்கள் மரக்கன்றுகள் பராமரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுவர் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரை சேர்ந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் வீடு வீடாக சென்று 100 மரக்கன்றுகளை வழங்கினார்.

    குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் தாலுகா கல்லப்பாடி ஊராட்சி வெங்கட்டூர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு தனியாக சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சுடுகாடு மிகவும் குறுகி விட்டதாக கூறப்படுகிறது.

    சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களிலும், தாலுகா அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று இறந்து விட்டார். அவரது உடலை சுடுகாட்டில் எரிக்க இடம் இல்லாததால் அப்பகுதியிலுள்ள ஓடை பகுதியில் உறவினர்கள் எரித்துள்ளனர். சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இந்த அவலநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றாத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், குடியாத்தம்- சித்தூர் சாலையில் கல்லப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலையில் வெங்கட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று பொதுமக்களிடம் சுடுகாடு ஆக்கிரமிப்பு குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.
    வேலூரில் குரங்குகள் தேன் கூட்டை கலைத்ததால் தேனீ கொட்டி முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் கஸ்பா சாஸ்திரி நகர் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமானுஜம் (வயது 85). கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்.

    இவர் வீட்டை ஒட்டி உள்ள புளிய மரத்தில் பெரியதேன்கூடு உள்ளது. அப்போது அங்கு வந்த குரங்குகள் தேன்கூட்டை கலைத்து விட்டன.

    தேன் கூட்டில் இருந்து கிளம்பிய தேனீக்கள் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ராமானுஜத்தின் உடல் முழுவதும் கொட்டியது.

    ராமானுஜம் வலி தாங்காமல் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளை சேர்ந்த அலமேலு, காவேரி, சக்தி காந்தா ஆகியோர் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். அவர்களையும் தேனீக்கள் கொட்டியது.

    இதையடுத்து தேனீ கொட்டியதில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பெண்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ராமானுஜம் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    படுகாயமடைந்த 4 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குரங்குகள் தேன் கூட்டை கலைத்ததால் தேனீ கொட்டி முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
    செய்யாறு:

    செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த வாரம் பெய்த கோடை மழையில் அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்தனர்.

    இந்த நிலையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க தவறிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் நிர்வாகத்தை கண்டித்து செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தார்பாயை உயர்த்தி பிடித்து கொண்டும், தேங்கி இருந்த மழை நீரில் உருண்டு புரண்டும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு வட்டங்களில் நவரை சாகுபடி அறுவடை நடைபெறுகிறது.

    80 ஆயிரம் மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், தனியார் கமிட்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர்.

    செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தினசரி 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வரத்து அதிகம் இருப்பதால், 30 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவிந்து கிடக்கிறது. எனவே, எடை பணியாளர் மற்றும் எடை போடுவதற்கான உபகரணங்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து, எடை போடும் பணியை அதிகரிக்க வேண்டும். மேலும், வெளியூர் வியாபாரிகளை அனுமதித்து, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதையும் அதிகரிக்க வேண்டும். 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் என்பதை, 30 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை, 600 மூட்டைகளாக அதிகரிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்கள் வழங்க வேண்டும். செய்யாறு மற்றும் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள தலா ஆயிரம் டன் கொள்ளளவு உள்ள 2 கிடங்குகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர்.


    மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.
    நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் தொல்லியல் துறை காட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும் நேற்றிரவு மூடப்பட்டது. அதேபோல் பழைய மசூதி, சமணர் குகை கோவில், மேல்பாடி சுப்ரமணியன் சாமி கோவிலி ஆகியவையும் மூடப்பட்டதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து வேலூர் கோட்டையின் நூழைவு வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் காந்தி சிலை அருகே திடீரென பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று காலை ஏராளமான பொதுமக்கள் கோட்டை கோவிலில் தரிசனம் செய்யவதற்கும், மைதானத்தில் வாக்கிங் செல்வதற்கும் சென்றனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
    ×