என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் குறித்த முழு விவரத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். அறிகுறி இல்லாத ‘ஏ சிம்டம்' நோயாளிகளை தனியாக ‘கோவிட்’ நலமையம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு தரப்பில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைபட்டால் உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்பு வசதி கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மே மாதம் தொடக்கத்தில் வேலூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 600 ஆக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் நாம் தயாராக இருக்க வேண்டும்.
மொத்தம் தற்போது 2000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. அவற்றை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்பை அதிகபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே தற்போதைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
வேலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்திடமும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்டுள்ளோம். கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் வீடுகளில் தடுப்பூசி போடப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. வரும் காலங்களில் பரிசோதனையை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இதில், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகராட்சி நல அலுவலர் சித்ரசேனா மற்றும் பல்வேறுத்துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமையில், 2-வது மண்டல உதவி கமிஷனர் பாலு, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று மண்டி வீதி, சுண்ணாம்புகார தெரு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தடுப்பூசி செலுத்தினார்களா? என ஆய்வு செய்தனர்.
மண்டிவீதியில் ஆய்வு மேற்கொண்டிருந்தபோது அங்குள்ள ஒரு பார்சல் சர்வீஸ் கடையின் முன்பு 5 பெட்டிகள் இருந்தது. இதைப்பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அதை அதிகாரிகள் உடனடியாக பிரித்து பார்த்தனர். அப்போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கடைக்காரர், பார்சலில் குறிப்பிட்ட முகவரிக்கு பார்சலை அனுப்பி வைக்கும் பணி மட்டுமே எங்களது பணி. அதில் என்ன பொருட்கள் உள்ளது என்பது எங்களுக்கு தெரியாது என்றார். தொடர் விசாரணைக்கு பின்னர் அதிகாரிகள் அந்த கடைக்காரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் அந்த பார்சலை அனுப்பியது யார்? அதில் குறிப்பிட்டுள்ள முகவரி யாருடையது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்சல் மூலம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டவை அனைத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் என்பதால் டாஸ்மாக் பார் நடத்துபவர்கள் இந்த நூதன முறையை கையாண்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 51). வேலூரில் உள்ள தனியார் பஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி லதா (49). இவருக்குகடந்த 21-ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து லதா அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார்.இதனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பொதுவார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை கொரோனா விதிமுறைப்படி வேலூரில் அடக்கம் செய்தனர். மனைவி இறந்த அதிர்ச்சியில் கார்த்திகேயன் உடல் நிலை மேலும் மோசமானது. அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி, பென்ட்லேன்ட் அரசு ஆஸ்பத்திரி, சி.எம்.சி., நாராயணி ஆஸ்பத்திரி, நறுவீ ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 171 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் நேற்று முன்தினம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 6 பேர் இறந்தனர். நேற்று இரவு மேலும் 4 பேர் பலியானார்கள். கடந்த 2 நாட்களில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 10 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோல அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறி இல்லாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் நேற்று முன்தினம் 4 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர்.
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 7 பேர் நேற்று முன்தினம் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். 7 பேரும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்.
வேலூர் மாவட்டத்தில் தொற்று பரவல் ஒருபுறம் அதிகரிக்க மற்றொருபுறம் இறப்பும் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்:- வேலூரில் சிகிச்சை பெற்ற வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலியானதாக தகவல் எதுவும் வரவில்லை என்றனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். எனவே சிறப்பு மையங்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மக்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
தினமும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நேற்று வெளியான முடிவில் மாவட்டம் முழுவதும் 336 பேருக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த பட்டியலில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதவிர அங்கு பணிபுரியும் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட 28 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே போலீஸ் நிலையத்தில் புகார் மனு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மனு அளிக்க வசதியாக போலீஸ் நிலையம் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, மேசைகள் போடப்பட்டுள்ளது.
காட்பாடி காங்கேயநல்லூர் செல்லும் வழியில் உள்ள முனிசிபல் காலனி தெருவில் ஒருகுடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் கிருமிநாசினி அடித்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அந்த தெருவில் வேறுயாரும் செல்லாத வகையில் தகரத்தால் அடைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் 297 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று 300 பேரை தாண்டி 336 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் வடமாநிலத்தவர்களும் அடங்கும். மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 24 ஆயிரத்து 196 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. துறைவாரியாக அரசு அதிகாரிகள், ஊழியர்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஆகியோருக்கு சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டன. வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் 2,320 பேர் பணிபுரிகிறார்கள். அவர்களில் 1,837 பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள அனைவருக்கும் சிறப்பு முகாம் மூலம் ஓரிருநாளில் தடுப்பூசி போடப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் குறைவாக காணப்பட்ட கொரோனா தற்போது 200-ஐ தாண்டி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான முடிவில் 297 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. அதில் வேலூர் மாநகர பகுதியில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் சிகிச்சைக்காக வந்த வெளிமாநிலத்தவர்கள் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செதுக்கரை, பள்ளூர், பிச்சனூர், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, செதுவாலை பகுதிகளிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நேற்று வேலூர் மாவட்டத்தில் 297 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 35 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள இந்தியன் வங்கியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டு, வங்கியில் கொரோனா தொற்று உள்ளது என எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மதியத்திற்கு மேல் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதனால் நேற்று மதியம் முதல் வங்கி மூடப்பட்டது எனவும், நாளை (இன்று) முழு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வழக்கம்போல் வங்கி இயங்கும் என தெரிவித்தனர்.
வேலூர்:
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இரவு 10 மணிக்கு மேல் பஸ், ஆட்டோ, கார், வேன் என எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என்பதால் வெளியூர்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, ஆன்மீகம் என பல்வேறு காரணங்களுக்காக வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தினர் சொந்த ஊருக்கு செல்ல ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.
அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிக்க ஆயிரக்கணக்கான பயணிகள் நேற்று ரெயில் நிலையத்தில் கூடினர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடை, 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் வட மாநிலம் செல்லும் ரெயில்கள் வந்து நின்று செல்லும் என்பதால் அந்த 3 நடைமேடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று கூடியது.
இதைக்கண்ட ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.
முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவச முகக்கவங்களை வழங்கி, கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முன்பதிவு செய்து ரெயிலில் பயணிக்கும் பயணிகளை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிப்பட்டு வருவதால் வழியனுப்ப வந்தவர்களை ரெயில் நிலையம் முகப்பிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியை சேர்ந்த மோகன் ரெட்டி (வயது60). லத்தேரி பஸ் நிலையத்தில் பட்டாசுக்கடை நடத்தி வந்தார். மாடு விடும் விழாவிற்காக காளை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர்.
அந்த பகுதியில் நடைபெறும் எருது விடும் விழாக்களில் மோகன் ரெட்டி காளை வருகிறது என்று அறிவித்தால் அதிக ஆரவாரம் செய்வார்கள். மோகன் ரெட்டியின் மகள்கள் வித்யா (வயது33), திவ்யா.
வித்யாவிற்கு சுரேஷ் என்பவருடன் திருமணமானமானது. இவருடைய மகன்கள் தேஜஸ் (8) தனுஜ்மோகன் (6). கருத்து வேறுபாடு காரணமாக வித்யா கணவரை பிரிந்தார். இதனையடுத்து தனது மகன்களுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 18-ந்தேதி மோகன் ரெட்டி தன்னுடைய பேரப் பிள்ளைகளான தேஜஸ், தனுஜ்மோகன் ஆகியோருடன் கடையில் இருந்தார். மதியம் 12 மணி அளவில் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் பட்டாசை வெடித்து காண்பிக்கச்சொன்னதால் மோகன் பட்டாசை வெடித்துள்ளார்.
அதில் ஏற்பட்ட தீ பொறி கடையில் உள்ள பட்டாசுகள் மீது விழுந்து வெடித்தது. அப்போது மோகனின் பேரன்கள் தேஜஸ், தனுஜ்மோகன் பயந்து கடைக்குள் ஓடினர். பேரன்களை காப்பாற்ற முயன்ற போது மோகனும் கடைக்குள் சிக்கினார். அதற்குள் பட்டாசுகள் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டதால் மோகன் ரெட்டி மற்றும் 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்நிலையில் இறந்த சிறுவர்களின் தாய் வித்யா மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். கணவரும் பிரிந்து சென்றுவிட்டார். தந்தை, மகன்களும் இறந்து விட்டனர். இதனால் வித்யா கடும் சோகத்திலும் விரக்தியிலும் இருந்துள்ளார்.
வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் இன்று அதிகாலை 3 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றார். அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் சென்ற அவர் வேகமாக வந்த ஒரு ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். வித்யா வீட்டில் இல்லாததால் பதற்றமான உறவினர்கள் அவரை தேடினர்.
அப்போது லத்தேரி ரெயில் நிலையம் அருகே பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொது மக்கள் கூறினர். உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்துகிடந்தது வித்யா என தெரியவந்தது. அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாசு வெடி விபத்தால் தந்தை, குழந்தைகளை இழந்த பெண் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






