search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அரசு, தனியார் மருத்துவமனைகளில் அதிகப்படுத்த வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

    அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் குறித்த முழு விவரத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும். அறிகுறி இல்லாத ‘ஏ சிம்டம்' நோயாளிகளை தனியாக ‘கோவிட்’ நலமையம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். அரசு தரப்பில் இருந்து ஏதேனும் உதவிகள் தேவைபட்டால் உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

    அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இணைப்பு வசதி கொண்ட படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். மேலும் ஆக்சிஜன் இருப்பை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். மே மாதம் தொடக்கத்தில் வேலூர் மாவட்டத்தில் தினசரி பாதிப்பு 600 ஆக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் நாம் தயாராக இருக்க வேண்டும்.

    மொத்தம் தற்போது 2000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. அவற்றை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இணைப்பை அதிகபடுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் அவசர சிகிச்சைகளுக்கு மட்டுமே தற்போதைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

    வேலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்திடமும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கேட்டுள்ளோம். கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் வீடுகளில் தடுப்பூசி போடப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட உள்ளது. வரும் காலங்களில் பரிசோதனையை அதிகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இதில், வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், மாநகராட்சி நல அலுவலர் சித்ரசேனா மற்றும் பல்வேறுத்துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×