என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரிய அலுவலகங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என தி.மு.க. சார்பில் மனு அளித்த போது எடுத்த படம்.
    X
    மின்வாரிய அலுவலகங்களை இடமாற்றம் செய்யக்கூடாது என தி.மு.க. சார்பில் மனு அளித்த போது எடுத்த படம்.

    குடியாத்தத்தில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகங்களை இடமாற்றம் செய்யக்கூடாது - அதிகாரியிடம் அரசியல் கட்சியினர் மனு

    குடியாத்தத்தில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகங்களை இடமாற்றம் செய்யக்கூடாது எனக்கோரி அரசியல் கட்சியினர் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் செருவங்கி பகுதியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும் வளத்தூர் பகுதியிலும், குடியாத்தம் நகரின் மையப்பகுதியான நடுப்பேட்டை வ.உ.சி. தெருவில் 2 அலுவலகங்களும், சந்தப்பேட்டை பகுதியில் 2 அலுவலகங்களும் இயங்கின. மின் வாரிய அலுவலகங்களில் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் புதிய மின் இணைப்பு பெற மேற்கண்ட அலுவலகங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை கொடுத்து வந்தனர்.

    தற்போது வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் மின்வாரிய அலுவலகங்களை சொந்த கட்டிடங்களுக்கு இடமாற்றம் செய்ய, மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

    இதனால் வளத்தூரில் இயங்கும் அலுவலகம் பரவக்கல் பகுதிக்கும், குடியாத்தம் வ.உ.சி தெருவில் இயங்கும் அலுவலகம் ஒன்று சித்தூர் கேட் அரபி கல்லூரி அருகில் உள்ள பிச்சனூர் துணை மின் நிலையத்துக்கும், மற்றொரு அலுவலகம் டி.டி. மோட்டூர் பகுதிக்கும், சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள 2 அலுவலகங்களில் ஒரு அலுவலகம் உப்பரபல்லி துணை மின் நிலையத்துக்கும், மற்றொரு அலுவலகம் மேல்ஆலத்தூர் ரோட்டில் உள்ள செதுக்கரை துணை மின் நிலையத்துக்கும், செயற்பொறியாளர் அலுவலகம் பாக்கம் துணை மின் நிலையத்துக்கும் மாற்றப்படுவதாகவும், இதில் ஒருசில அலுவலகங்கள் உடனடியாக மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

    நகரின் மையப் பகுதியில் இருந்த இந்த அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுடைய மின் கட்டணங்களை செலுத்தி வந்தனர். ஆனால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அலுவலகங்கள் மாற்றப்பட்டால் பொதுமக்கள் சிரமப்படுவார்கள்.

    இதுகுறித்து குடியாத்தம் நகர தி.மு.க. சார்பில் நகர பொறுப்பாளர் எஸ். சவுந்தரராஜன் தலைமையில் நேற்று மின்சார வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதியிடம் மின் வாரிய அலுவலகங்கள் இடமாற்றம் செய்யக்கூடாது, எனக்கூறி மனு ெகாடுத்தார்.

    அப்போது கூட்டுறவு வங்கி இயக்குனர் கோவிந்தராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகாலிங்கம், நகர தொண்டரணி அமைப்பாளர் ஜெயக்குமார் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மதிவாணன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    இதற்கிடையே, மின்வாரிய அலுவலகங்களை இடமாற்றம் செய்யக் கூடாது எனக்கூறி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் தலித் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சோமு, ஊர் நாட்டாமை மணவாளன், மாவட்ட மாணவரணி மணிகண்டன், ஸ்டாலின் ஜெபக்குமார், நகர தலைவர் சாமு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், மின்வாரிய அலுவலகங்களை இடமாற்றம் செய்வதால் பொதுமக்களும், விவசாயிகளும், வணிகர்களும் மிகச் சிரமத்துக்கு ஆளாவார்கள். அவர்கள் பல கிலோ மீட்டர் தூரத்துக்குச் சென்று வரும் அவல நிலை ஏற்படும். மின் கட்டணம் வசூலிக்க நகரின் மையப்பகுதியில் நிரந்தரமாக ஒரு கட்டண வசூல் மையம் அமைக்க வேண்டும், என வலியுறுத்தினர். இதையடுத்து அவர்கள், அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

    Next Story
    ×