என் மலர்tooltip icon

    வேலூர்

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பின்னடைவை சந்தித்து வந்த துரைமுருகன் 17-வது சுற்றில் 57 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராமு களம் இறங்கினார். துரைமுருகன் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடக்கத்தில் இருந்து பின்தங்கினார். ஒரு கட்டத்தில் பின்னடைவு வித்தியாசம் 6 ஆயிரத்தை நெருங்கியது.

    அதன்பின் பின்னடைவு வித்தியாசம் குறைய ஆரம்பித்தது. 17-வது சுற்றில் துரைமுருகள் 55324 வாக்குகள் பெற்று ராமுவை விட 57 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளது. ராமு 55267 வாக்குகள் பெற்றுள்ளார்.
    வேலூர், வள்ளலாரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது தாய், சேய் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் உள்ள பாபுராஜேந்திர பிரசாத் தெருவை சேர்ந்தவர் ராஜா. பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவருடைய மனைவி மகாலட்சுமி (வயது 32). இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லாததால் அவர்கள் வேலூர் வள்ளலாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் மகாலட்சுமி கர்ப்பமானார்.

    இதனை தொடர்ந்து பிரசவத்திற்காக நேற்று மகாலட்சுமியை அந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரவு 10.30 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை இறந்து விட்டதாக உறவினர்களிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து சில மணி நேரத்துக்கு பின்னர் மகாலட்சுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் தங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், இறந்த குழந்தையை காண்பிக்கவில்லை என்றும், எங்களிடம் எந்த விதமான கையெழுத்தும் பெறவில்லை என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனைதொடர்ந்து அவர்கள் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், டாக்டர்கள் கவனக்குறைவு காரணமாகவே மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தை இறந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து இறந்த மகாலட்சுமி மற்றும் அவரது குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் காரணமாக தேங்காய் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்ததால் அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் தேங்காய் விளைவிக்கப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்கள் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்து பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தேங்காய் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    இது குறித்து தேங்காய் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் தாஜுதீன் கூறுகையில், ‘‘சித்திரை மாதம் என்றாலே தேங்காய் விலை ஏறுமுகத்தில் இருக்கும். வெளிமாநில வியாபாரிகள் அதிகளவில் தேங்காயை வாங்கிச் செல்வார்கள்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை மாதங்களில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களுக்கு தேங்காயை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். உள்ளூரில் வியாபாரம் செய்யலாம் என்றால் திருவிழாக்களும் தடைசெய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வேலூர் மாவட்டம் முழுவதும் தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்’’ என்றார்.

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் மூன்றில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது தந்தி டி.வி.யின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
    வேலூர் மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வெற்றி வாய்ப்பு விவரம்:

    அணைக்கட்டு

    அதிமுக

    வேலூர்

    கடும் போட்டி

    குடியாத்தம்

    கடும் போட்டி

    கே.வி.குப்பம்

    கடும் போட்டி

    காட்பாடி

    திமுக

    கொரோனா ஒழியவேண்டி வேலூரில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தாலிக்கட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
    வேலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில் வேலூர் ஓல்டுடவுன் பஜனைகோவில் தெருவில் கூத்தாண்டவர் திருவிழா நடந்தது. இதையொட்டி அரவானை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து திருநங்கைகள் தலைவி கங்காநாயக் தலைமையில் சிறப்பு பூஜை செய்து தாலி கட்டி கொண்டனர். பின்னர் உற்சாகமாக ஆடிப்பாடினார்கள். அதையடுத்து பாரதிநகர் சுடுகாட்டில் தாலி அறுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் அனைவரும் தங்களது தாலியை அறுத்து கொண்டு அழுதனர்.

    இதுகுறித்து விழாவில் பங்கேற்ற திருநங்கைகள் கூறுகையில், கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறவில்லை. கொரோனா ஒழிந்து நாடு இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும். இதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தோம். கொரோனாவில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும். அடுத்தாண்டு கூவாகத்துக்கு சென்று திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்றனர்.
    வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பில் 60 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். எனவே மாநகராட்சி பகுதியில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. முககவசம் அணியாத, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிப்பு, கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வருகிற 30-ந் தேதிக்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாநகராட்சி 4 மண்டலங்களின் பல்வேறு பகுதிகளில் தினமும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் மற்றும் சிறப்பு முகாம் குறித்து மாநகராட்சி ஊழியர்கள் தெரு, தெருவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 92 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, சிறப்பு தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 66 ஆயிரம் பேர் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.

    தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின்போது பொதுமக்களில் சிலருக்கு தடுப்பூசி போட்டு கொள்வதால் உடல்நலக்குறைவு ஏற்படுமோ என்ற எண்ணம் உள்ளது. அச்ச உணர்வு காரணமாக அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி போடுவதால் எவ்வித உடல்நலக்குறைவும், பக்க விளைவும் ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்’’ என்றனர்.
    வேலூரில் தங்கும் விடுதியில் வால்பாறை நகராட்சி தூய்மை ஆய்வாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேலூர்:

    திண்டுக்கல் மாவட்டம் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 46). இவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் தூய்மை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஜான்சன் கல்லீரல் பாதிப்பால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் கடந்த 23-ந் தேதி வேலூருக்கு வந்தார். வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தங்கும் விடுதியில் (லாட்ஜ்) அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் அதே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜான்சன் பரிசோதனை செய்துள்ளார். மீண்டும் அறைக்கு சென்ற அவர் அதன் பின்னர் வெளியே வரவில்லை.

    அறையின் கதவு 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் இதுகுறித்து மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத், தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் தங்கும் விடுதிக்கு சென்றனர். போலீசார் சிறிதுநேரம் அறையின் கதவை தட்டி ஜான்சனை கூப்பிட்டனர். ஆனால் எவ்வித பதிலும் வரவில்லை.

    அதைத்தொடர்ந்து போலீசார் மாற்று சாவி மூலம் அறையின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு ஜான்சன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். அவரின் உடல் அருகே விஷபாட்டில் கிடந்தது. பின்னர் அந்த அறையை போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், எனக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் உயிர் வாழ விரும்பவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நானே பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று உருக்கமாக எழுதியிருந்தார்.

    அதையடுத்து அந்த உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜான்சன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போடிநாயக்கனூர்பட்டியில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    கே.வி.குப்பம் அருகே 18 வயது பூர்த்தி ஆகாத 3 சிறுமிகளின் திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    கே.வி.குப்பம் அருகேயுள்ள குறிஞ்சிநகரில் 18 வயது பூர்த்தி ஆகாத பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடைபெறுவதாக வேலூர் மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சைல்டுலைன் அணி உறுப்பினர்கள் வெங்கடேசன், மகாலட்சுமி, சமூகநல அலுவலர் ராணி ஆகியோர் அங்கு சென்று விசாரித்தனர். அதில், குடியாத்தம் அருகே உள்ள அரசுப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும், குறிஞ்சிநகரை சேர்ந்த உறவினரின் மகனுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது தெரிய வந்தது. சிறுமிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இருதரப்பினரிடமும் சிறுமிக்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைப்போம் என்று அலுவலர்கள் எழுதி வாங்கி கொண்டனர்.

    இதேபோன்று புலிமேடு பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த 16 வயது சிறுமியின் திருமணமும், வேலூரை அடுத்த திருமலைக்கோடி பகுதியில் நடைபெற இருந்த 17 வயது சிறுமியின் திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டது. 2 சிறுமிகளும் ராணிப்பேட்டையில் உள்ள குழந்தைகள் நலக்குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் வீட்டில் மீண்டும் விடப்பட்டனர்.
    வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி ஒரேநாளில் ரூ.8 கோடியே 63 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் வசதிக்காக வேலூர், அரக்கோணம் ஆகிய 2 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் அடங்கி உள்ளது. வேலூர் கோட்டத்தில் 116 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.

    தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு பரவலை தடுக்கும் விதமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையொட்டி நேற்று முன்தினம் வேலூர், அரக்கோணம் கோட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலை முதல் இரவு விற்பனை நேரம் முடியும் வரை ஏராளமான மதுபிரியர்கள் கடைகளின் முன்பு குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை வாங்கி உற்சாகத்துடன் சென்றனர்.

    அதனால் வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட ரூ.2½ கோடி மதுபானங்கள் கூடுதலாக விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.5 கோடியே 61 லட்சம் மதுபானங்கள் விற்பனையாகின. வழக்கமாக மற்ற நாட்களில் ரூ.2¾ முதல் ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனையாகும்.

    அரக்கோணம் டாஸ்மாக் கோட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.3 கோடியே 2 லட்சம் மதுபானங்கள் விற்பனையானது. மற்ற நாட்களில் ரூ.2 கோடி வரை விற்பனை செய்யப்படும்.

    வேலூர், அரக்கோணம் டாஸ்மாக் கோட்டங்களில் நேற்று முன்தினம் மொத்தம் ரூ.8 கோடியே 63 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

    அனைத்து கடைகளிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 1 லட்சத்து 40 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்தன. அவை தீர்ந்தவுடன் 1 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கும்படி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2-ம் கட்டமாக 13 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவற்றில் தற்போது 4 ஆயிரம் இருப்பில் உள்ளன. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்துக்கு 3 ஆயிரம் டோஸ் கோவாக்சின், 2 ஆயிரம் டோஸ் கோவிஷூல்டு என்று மேலும் 5 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தன. அவை வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மருந்து வளாகத்தில் குளிர்சாதன கிடங்கில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    கே.வி.குப்பம் அருகே வீட்டில் வைத்து தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49), தொழிலாளி. இவர், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கே.வி.குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் மக்களிடையே பரவல் அதிகமாக உள்ளது.

    மாவட்டத்தில் 24 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு உள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர வி.ஐ.டி.யில் சிறப்பு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தினமும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுகிறது. அதன்படி நேற்று வெளியான முடிவில் ஒரேநாளில் மாவட்டம் முழுவதும் 367 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகர பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூரில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் காந்திரோடு, மெயின் பஜார், காகிதப்பட்டறை பகுதியில் உள்ள 20 தங்கும் விடுதிகளில் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    குடியாத்தம், அணைக்கட்டு, பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு, கோரந்தாங்கல், லத்தேரி, திப்பசமுத்திரம் பகுதிகளிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிக்கப்பட்ட 219 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல மூச்சு திணறல் காரணமாக ஒரு நோயாளி உயிரிழந்தார்.

    வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் வேலூர், காட்பாடி உட்கோட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. அதில் பெண் போலீசார் உள்பட பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனாவை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத் துறைஅதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    ×