என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சொந்த ஊர்களுக்கு செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளிகள்

    இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தினர் ரெயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல காட்பாடி ரெயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

    வேலூர்:

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இரவு 10 மணிக்கு மேல் பஸ், ஆட்டோ, கார், வேன் என எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என்பதால் வெளியூர்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, ஆன்மீகம் என பல்வேறு காரணங்களுக்காக வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தினர் சொந்த ஊருக்கு செல்ல ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர்.

    அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் பயணிக்க ஆயிரக்கணக்கான பயணிகள் நேற்று ரெயில் நிலையத்தில் கூடினர்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடை, 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் வட மாநிலம் செல்லும் ரெயில்கள் வந்து நின்று செல்லும் என்பதால் அந்த 3 நடைமேடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று கூடியது.

    இதைக்கண்ட ரெயில்வே பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் டேப்ரத்சத்பதி, சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.

    முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவச முகக்கவங்களை வழங்கி, கொரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முன்பதிவு செய்து ரெயிலில் பயணிக்கும் பயணிகளை மட்டுமே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிப்பட்டு வருவதால் வழியனுப்ப வந்தவர்களை ரெயில் நிலையம் முகப்பிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். 

    Next Story
    ×