search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்பாடி ரெயில் நிலையம்"

    • ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும்
    • பயணிகள் வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தின் வழியாக தினமும் சுமார் 120 ரெயில்கள் சென்னை மார்க்கமாகவும், ஜோலார்பேட்டை மார்க்க மாகவும், திருப்பதி மார்க்க மாகவும், வேலூர் மார்க்கமாக இயக்க படுகின்றன.

    தினமும் 30 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

    இந்த ரெயில் நிலையத்தில் 5 பிளாட்பாரங்கள் உள்ளன. 4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஆந்திராவில் இருந்து வரக்கூடிய ரெயில்கள் நின்று செல்கின்றன.

    ரெயில் நிலையத்தில் ரயில்கள் வரக்கூடிய நேரம் மற்றும் பெட்டிகள் நிற்கும் இடங்கள் குறித்த அறிவிப்புகள் செய்யப்படுகிறது.

    4 மற்றும் 5-வது பிளாட்பாரங்களில் ஒலிபெருக்கி வசதி இல்லை. இதனால் அந்த பிளாட்பா ரங்களில் நிற்கும் பயணி களுக்கு அறிவிப்பு கேட்க முடியாத நிலை உள்ளது.

    இதனால் அவர்கள் ரெயில் வருகை குறித்த தகவல் மற்றும் பெட்டிகள் நிறுத்துவது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ள ரெயில் நிலையத்தில் பிளாட்பா ரங்களில் கூடுதல் ஒலிபெருக்கிகளை பொருத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    • காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் (25) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் பைக் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் காஞ்சனா தனிமையில் வசித்து வந்தார். கணவரும் இல்லை, மேலும் மகன் இறந்த துக்கத்தை அவரால் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    இன்று காலையில் அவர் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையத்தை கடந்து சென்றார். காலை 7.40 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் நியூ டின் சிகியா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது காஞ்சனா ஓடி சென்று ரெயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார்.

    அவர் என்ஜின் டிரைவரை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட டிரைவர்கள் ரெயில் பிரேக் போட்டனர். மேலும் அலாரம் எழுப்பினர்.

    ஆனாலும் ரெயில் காஞ்சனா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாாக இறந்தார்.

    இதனை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே 1-வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் கிருபா (வயது 54) என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.

    ரெயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தெரியவந்தது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
    • வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது.

    வேலூர்:

    தமிழ்நாட்டின் முக்கியமான ரெயில் நிலையங்களில் காட்பாடியும் ஒன்று. நாளொன்றுக்கு சராசரியாக 37,595 பயணிகளை கையாளும் இந்த ரெயில் நிலையம் தற்போது தெற்கு ரெயில்வே மூலம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சென்னை-பெங்களூர் மார்க்கத்தில் வேலூர் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளதும்.

    வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டை, சிஎம்சி மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம் மற்றும் தங்க கோவில் போன்ற முக்கிய இடங்கள் காட்பாடியை சுற்றியே அமைந்துள்ளதால் இந்த ரெயில்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    காட்பாடி ரெயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.329.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.மறுசீரமைப்பு பணிகளை 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தற்போதுள்ள ரெயில் நிலையத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதியை மேம்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள ரெயில் நிலையக் கட்டிடம் 2 கட்டங்களாக இடிக்கப்பட்டு, அனைத்தும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்படும். தெற்குப் பக்கத்தில், ரெயில் நிலையத்திற்கு வரும் மற்றும் ரெயில் நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகளை பிரிப்பதற்காக ஒரு தனி வருகை முனையமும், புறப்பாடு முனையமும் கட்டப்படும்.

    வடக்குப் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய முனையம் கட்டப்படும். அனைத்து கட்டடங்களும் காட்பாடி-வேலூர் கோட்டை நகரத்தின் தழுவலோடு, தொன்மை மாறாமல் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், அதே நேரத்தில் புதிய தொழில்நுட்ப கட்டட கலையுடன் அமைய உள்ளது.

    தெற்குப் பகுதியில் அமைய உள்ள புறப்பாடு முனையக் கட்டிடம் தாழ்தள பால்கனி உடன் 4 மாடியுடன் 10,250 ச. மீ. இல் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படும். தரை தளத்தில் பயணிகள் புழக்கத்திற்கு இடவசதியும், புறப்பாடு பகுதி, உதவி மையம், ஏசி காத்திருப்பு அறை, முன்பதிவு பயணச் சீட்டு அலுவலகங்கள், எஸ்கலேட்டர், மின் தூக்கிகள், மற்றும் பால்கனி தளத்தில் ஓய்வறைகள் இருக்கும்.

    முதல் தளத்தில் ஏசி மற்றும் ஏசி அல்லாத காத்திருப்பு அறை, பொருட்கள் வைப்பு அறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.

    புறப்படும் முனைய கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் பெண்கள் காத்திருப்பு அறை, ஏசி அல்லாத காத்திருப்பு அறை, குழந்தை பராமரிப்பு மற்றும் வணிகப் பகுதி மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் வணிக நிறுவனங்கள் அமைய உள்ளன.

    தெற்கு பகுதியில் அமைய உள்ள வருகை  தாழ்தள பால்கனி வசதியுடன் 4 மாடியுடம் 10,250 சதுர மீட்டரில் அமைய உள்ளது. தாழ்தளத்தில் பயணிகளின் வசதிக்காக உதவி மையம், சுற்றுலா தகவல் மையம், பொருட்கள் வைப்பறை மற்றும் ரெயில்வே அலுவலகங்கள் அமைய உள்ளன.

    இதன் முதல் தளத்தில் பல்வேறு ரெயில்வே அலுவலகங்களும் மற்ற மூன்று தளங்களும் வணிக நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

    புறப்பாடு மற்றும் வருகை முனையங்களை இணைப்பதற்காக இரு சுரங்கப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகை மற்றும் புறப்பாடு பயணிகளை பிரிப்பதற்காக 2 பொதுத்தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இவை வருகை முனையத்திலிருந்து அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனையத்தை இணைக்கும்.

    இதே போலவே புறப்பாடு முனைய பொதுத்தளம் புறப்பாட்டு முனையத்தை அனைத்து நடைமேடைகள் மற்றும் வடக்கு முனைய கட்டடத்துடன் இணைக்கும். அனைத்து நடைமேடைகளிலும் போதுமான அளவு எஸ்கலேட்டர், மின் தூக்கி, படி வசதிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு பொது தளங்களும் பயணிகளுக்கான வசதிகளுடன் நடைமேடைகள் பயணிகளுக்கு எளிதில் புலப்படும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தரை தளத்தில் 600 சதுர மீட்டரில் அமைய உள்ள வடக்கு முனையம் பயணச்சீட்டு மையம், புறப்பாட்டு பகுதி ஆகியவற்றுடன் அமைய உள்ளது. வடக்கு முன்னயத்தின் முன் பகுதி 300 சதுர மீட்டரில் அமைய உள்ளது.

    வடக்கு முனையத்தில் இருந்து பயணிகள் வெளியேறும் பகுதியாக இது அமைய உள்ளது. இந்த பகுதியில் வாகனங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதற்கான வசதிகளும் அமைய உள்ளது.

    இந்த பன்னடுக்கு கார் பார்க்கிங் வசதி 6 மாடியுடன் 9250 சதுர கிலோ மீட்டரில் பிரமாண்டமாக அமையுள்ளது. இதில் 258 கார்கள், 2120 இருசக்கர வாகனங்களை நிறுத்திக் கொள்ள முடியும். புறப்பட்டு முனையத்திலிருந்து கார் பார்க்கிங் வருவதற்கு அகலமான சாலை வசதி அமைக்கப்பட்டு வருகிறது.

    • காட்பாடி சாலையில் இருபுறம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
    • பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    வேலூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வேலூருக்கு வருகை தந்தார். அவர் சென்னையில் இருந்து ரெயிலில் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஜெகத்ரட்சகன் எம்.பி. உடன் வந்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேலூர் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அமைச்சர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ, கதிர் ஆனந்த் எம்.பி. கார்த்திகேயன் எம்.எல். ஏ., வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, வேலூர் ஒன்றிய குழு தலைவர் வள்ளிமலை வேல்முருகன், கவுன்சிலர் அன்பு, சுதாகர் 21-வது வார்டு செயலாளர் வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காட்பாடி சாலையில் இருபுறம் கொடி தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    வரும் வழியெல்லாம் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் திரண்டு இருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மேளதாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    விழா நடைபெறும் பள்ளி போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மெயின் ரோடு மற்றும் பள்ளி நுழைவுவாயில் என 2 அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    மெயின் ரோட்டில் இருந்து பள்ளி வரை இருபுறமும் வாழை மரங்கள் மற்றும் பூக்களால் அலங்கார தோரணங்கள் செய்யப்பட்டிருந்தன.

    பள்ளிக்கு வரும் அனைவரையும் தீவிர சோதனைக்கு பின்னரே வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கேமராக்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் கீழ் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கு ரூ.784 கோடி மதிப்பில் கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டுகிறார்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 55 ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 114 வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.15 கோடியே 96 லட்சத்தில் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.

    காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மேம்பாட்டு திட்டத்தில் அரசு பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய கட்டிட பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 670 அரசு பள்ளி மாணவ மாணவிகள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு உள்ளே அனுமதி வழங்கப்படவில்லை.

    ×