search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரை படத்தில் காணலாம்.
    X
    பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினரை படத்தில் காணலாம்.

    ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடியே 40 லட்சம் மோசடி

    ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.1 கோடிேய 40 லட்சம் மோசடி செய்த லாரி டிரைவரின் வீட்டு முன்பு அமர்ந்து பாதிக்கப்பட்ட இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பேரணாம்பட்டு:


    பேரணாம்பட்டு அருகே உள்ள எம்.வி.குப்பம் கிராமம் கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது 47), லாரி டிரைவர். இவர் எம்.வி.குப்பம், மேல் கொத்தக்குப்பம், உமராபாத் பள்ளி தெரு, மிட்டாளம் மற்றும் வேலூரை அடுத்த பொய்கை ஆகிய சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் 35-க்கு மேற்பட்டோரிடம் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகளை கூறி வந்தார்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு பலருக்கு ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி ஒருவரிடம் தலா ரூ.4 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை பெற்று வேலை வாங்கி தராமல் மோசடி செய்து காலம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

    மேலும் பணம் கொடுத்த இளைஞர்கள் பலரை பெங்களூருவில் உள்ள ஒரு கும்பலிடம் அழைத்துச் சென்று ேபசி, விரைவில் ராணுவ பணிக்கான உத்தரவு வழங்கப்படும் எனக் கூறி நம்ப வைத்துள்ளார். ஆனால் இதுவரை உதயகுமார் யாருக்கும் ராணுவத்தில் வேலை வாங்கி தரவில்லை. அவர் திடீரெனத் தலைமறைவாகி விட்டார்.

    அவரிடம் பணம் கொடுத்து, ராணுவ வேலை கிடைக்காமல் பாதிக்கப்பட்ட இளை ஞர்கள் பலர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், மேல்பட்டி போலீஸ் நிலையம் ஆகியவற்றில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த உதயகுமார் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்தார். தகவல் அறிந்ததும் வேலைக்கு பணம் கொடுத்துப் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பலர் மேல்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை.

    பாதிக்கப்பட்ட இளைஞர்கள், அவர்களின் குடும்பத்தினர் பலர் நேற்று எம்.வி.குப்பம் கோவில்மேடு பகுதியில் உள்ள உதயகுமாரின் வீட்டுக்கு வந்து மேல்பட்டி-ஆம்பூர் சாலையில் அமர்ந்து திடீர் மறியல் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். அவர்கள், உதயகுமாரை கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் மேல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்களிடமும், குடும்பத்தினரிடமும் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததும், சாலை மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×