என் மலர்
வேலூர்
- 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் சாரதி மாளிகையில் உள்ள கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகள் கார்த்திகேயன் எம் எல் ஏ, மேயர் சுஜாதா ஆனந்தகுமார், கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் நாகராஜன் மேலாளர் ஞானபிரகாசம், விற்பனை மேலாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அரசு ஊழியர்களுக்கு வட்டி இல்லா கடன் வசதி செய்யப்பட்டுள்ளது. துணி ரகங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் மண்டலத்தின் கீழ் காஞ்சிபுரம் வேலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பதி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 14 விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.3 1/2 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- குடியாத்தத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் ஊட்டச்சத்து மாத விழாவிற்கான ஊராட்சி களில் ஊட்டச்சத்தை தூண்டுதல் மற்றும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ராஜாகோவில் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் வேலூர் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம். கார்த்திகேயன், எஸ்.சாந்தி, ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரிபிரேம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தீபிகாபரத், அமுதாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், தாசில்தார் எஸ்.விஜயகுமார், நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, வட்டார மருத்துவ அலுவலர் விமலகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 300 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.
இதில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் தனது சொந்த செலவில் 300 கர்ப்பிணி பெண்களுக்கு புடவை, வேட்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை அனுப்பி வைத்தார் இந்நிகழ்ச்சியில் அந்த சீர்வரிசை பொருட்கள் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.ரமேஷ், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் எம். சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட குடியாத்தம் வட்டார அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.
- போதை பொருள் விற்பனையை தடுக்க நடவடிக்கை
- சிகரெட்கள் பறிமுதல்
குடியாத்தம்:
வேலூர் சரக டிஐஜி பொறுப்பு சத்யபிரியா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் நகரில் பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என அதிரடி சோதனை நடைபெற்றது.
குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி தலைமையில், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட ஏராளமான போலீசார் குடியாத்தம் பலமநேர் ரோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளி, காந்தி ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே உள்ள கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது பள்ளிக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் இருந்த கடைகளில் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த சிகரெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- இதுவரை 58 பேர் பாதிப்பு
- கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவலாக மழை பெய்தது. இதனால் நல்ல நீரில் வளரக்கூடிய ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளன.
இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாநகராட்சி பகுதியில் நேற்று 2 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர்களின் வீடுகள் மற்றும் சுற்றுப்பகுதியில் டெங்கு கொசு உற்பத்தி உள்ளதா என சுகாதார அலுவலர் தலைமையில் ஆய்வு செய்தனர்.
டெங்கு கொசு ஒழிப்பு பணியில் அதற்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாதத்தில் வேலூரில் 6 பேருக்கு டெங்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேருக்கு டெங்கு அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று முன்தினம் வரை வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 58 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதில் 58 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர்.
- கேமரா உதவியால் 24 மணி நேரத்தில் சிக்கினார்
- நகைகள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் சித்தேரியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 49) தனியா நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கணியம்பாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.அங்கு இருந்த 10.75 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ் பாபு வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ரமேஷ் பாபுவின் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த வாலிபர் படத்தை வைத்து விசாரித்த போது அவர் பெங்களூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் வினோத்(வயது 36)என்பது தெரியவந்தது.
இவர் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த மாதம் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.
பெங்களூருக்கு சென்றிருந்த வினோத் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் வேலூர் வந்தார்.சித்தேரி பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு சென்றுள்ளார். அப்போது ரமேஷ் பாபு வீடு பூட்டி கிடந்தது.
இதனால் வினோத் வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 10.75 பவுன் தங்க நகை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
- கேமரா மூலம் கண்டுபிடிக்க உத்தரவு
- ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் முடிவு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இது தவிர குப்பைகள் இல்லாத மாநகரமாக உருவாக்க திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமலில் உள்ளது.
ஆனாலும் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் நகரின் அழகு பாதிக்கப்படுகிறது.
வேலூர் மாநகராட்சி பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து மாநகராட்சி துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் மேற்பார்வை அதிகாரிகள் ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் துப்புரவு அலுவலர்கள் சிவக்குமார் லூர்துசாமி முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது;
வேலூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரிப்பு மையங்களில் குப்பைகளை தரம் பிரிக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டி விடுவதாக புகார்கள் வந்துள்ளது. அப்படி இனி வர வாய்ப்பு அளிக்கக்கூடாது.
குப்பைகளை முழுமையாக சேகரித்து தரம் பிரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.வெளியில் குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும். மக்கும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். மீறி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள். குப்பைகள் வெளியில் வீசப்படுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தலாம். பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும. நகரம் தூய்மையாக வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- வருகிற 25-ந் தேதி நடக்கிறது
- வேலூரில் நடந்த அவசர கூட்டத்தில் தீர்மானம்
வேலூர்:
வேலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர்நரசிம்மன் மாவட்ட துணை செயலாளர்கள் ஆர்.பி.ஏழுமலை, பாண்டியன், மலர்விழி, செயற்குழு உறுப்பினர் அ.மா.ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.விஜய், மற்றும் நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டு பள்ளி குழந்தைகளுக்கு தாயுள்ளத்தோடு சுவையான காலை உணவை அளித்து பசிபோக்கி கல்வியின் அவசியத்தை உணர செய்த முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேலூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக எதிர் கட்சியாக இருந்த நேரத்தில் தலைமை அறிவித்த எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள், சாலை மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் என மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்ற நிகழ்வுகளில் விருப்பு,. வெறுப்பின்றி தன்னலம் கருதாமல் உழைத்த அத்தனை நிர்வாகிகளுக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி.
25-ந் தேதி நடைபெறவுள்ள மாவட்ட கழக தேர்தலை சுமூகமாகவும், நேர்த்தியாகவும் நடத்தி முடித்திட மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் தமது ஒத்துழைப்பினை நல்கிட கேட்டுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- ரத்த போக்கு ஏற்பட்டு பரிதாபம்
- ரத்த போக்கு ஏற்பட்டு பரிதாபம் போலீசார் விசாரணை
குடியாத்தம்:
குடியாத்தத்தை அடுத்த ராமாலை ஊராட்சி காந்தி கணவாய் ஜெ.ஜெ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 68). தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மா (63). வரதராஜன் வீட்டிலேயே சிறு சிறு தச்சு வேலைகளை செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலையில் வீட்டில் கட்டில் செய்வதற்காக சிறிய மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை அறுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த எந்திரம் வரதராஜன் வலது காலில் பட்டு காலை துண்டித்துள்ளது.
இதில் ரத்த வெள்ளத்தில் அலறிய வரதராஜனை காப்பாற்ற வந்த அவரது மனைவி முனியம்மாளுக்கும் காலில் பட்டு வலது காலில் பலத்த காயமடைந்தார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
அதற்குள் காலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் ரத்த போக்கு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே வரதராஜன் பரிதாபமாக இறந்தார்.
முனியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் இன்ஸ் பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டினர்
- வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மேல் வல்லம் அருகே உள்ள சந்தன கொட்டா கிராமத்தை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 47) முன்னாள் ராணுவ வீரர்.
நேற்று மாலை கண்ணமங்கலம் செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி அருகே நின்றிருந்த பூங்காவனத்தை தேடி 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர்.
அவர்கள் அருகே கிடந்த மூங்கில் குச்சிகளை எடுத்து பூங்காவனத்தின் தலையில் தாக்கினர். தப்பி ஓடிய பூங்காவனத்தை விரட்டிச் சென்று அடித்தனர். அவர் கீழே விழுந்தபோதும் தாக்கியுள்ளனர்.
இதில் பூங்காவனம் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்ட பூங்காவனத்திற்கும் கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (56) என்பவரது மனைவிக்கும் கள்ள தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சண்முகத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சண்முகம் மற்றும் அவரது உறவினர்கள் அண்ணாதுரை (56) ராஜசேகர் (31) ஜெகதீஷ் (30) ஜெயவேல் (57) ஆகியோர் சேர்ந்து பூங்காவனத்தை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான 5 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.
- சிறுவன் போக்சோவில் கைது
- போலீசார் விசாரணை
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி வீடு உள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவியின் வீட்டிற்கு சென்று ள்ளான். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ள்ளான். மாணவி சத்தம் போடவே அந்த சிறுவன் மாணவியை மிரட்டி விட்டு தப்பி ஓடி விட்டான்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார் இதனை தொடர்ந்து குடியாத்தம் அனைத்தும் மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு லட்சுமி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 17 வயதான சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 140 இடங்களில் நடந்தது
- 25 நடமாடும் குழுக்கள் மூலம் சிகிச்சை
வேலூர்:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மர்ம காய்ச்சலுக்கு சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் பாதிப்பு அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக சிறப்பு மருத்துவ முகாம் நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத் துறை சார்பாக 140 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவர் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பள்ளி கூடங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மேலும் மர்ம காய்ச்சல் பாதித்ததாக அறியப்படும் பகுதிகளில் 25 நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் மருத்துவ முகாம் அமைத்து நோய் பாதித்தவர்களை பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
- பணியில் மெத்தனமாக செயல்பட்டதால் நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பொருட்களை முழுமையாக தடுக்க மாவட்ட எல்லை பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளில் 24 மணிநேரமும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு போதைப் பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் தடுத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மாநில எல்லை சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகனச் சோதனை யில் போலீசார் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆய்வுக்காக அங்கு வந்தார்.
சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டு வந்த காட்பாடி போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த், வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏட்டு மோதிலால் மற்றும் நாராயணசாமி, மேல்பாடி போலீஸ் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் விஜயன், ஏட்டு ஜெகதீசன் ஆகியோர் பணியில் மெத்தனமாக செயல்பட்டனர்.
இது தொடர்பாக டி.எஸ்.பி. ராமமூர்த்தி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார்.
5 பேரையும் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் சஸ்பெண்டு செய்து உத்தர விட்டார்.






