என் மலர்
வேலூர்
- புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
முதல் சனிக்கிழமை முன்னிட்டு வெங்கடேச பெருமாள் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீ பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில் 27 ஆம் ஆண்டு புரட்டாசி பெருவிழா நடைபெற்றது தொடர்ந்து மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி வினியோகம்
- மாநகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சுண்ணாம்பு கார தெருவில் இன்று நடந்தது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார்.
கார்த்திகேயன் எம் எல் ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாநகராட்சி கமிஷனர் அசோக் குமார் கலந்து கொண்டு பேசுகையில்:-
வேலூர் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் போது பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் மண்ணிற்குள் புதைந்து மண்ணின் தன்மையை கெடுத்து விடுகிறது. குப்பைகளை கால்வாய்களில் கொட்டாமல் குப்பை சேகரிக்க வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தனித்தனியாக வழங்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் 2-வது மண்டல குழு தலைவர் நரேந்திரன் மாநகராட்சி கவுன்சிலர் வி எஸ் முருகன் உட்பட மாநகராட்சி ஊழியர்கள், வியாபாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல
- ஏரிக்கரையை பலப்படுத்தவும் தீர்மானம்
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் எம். கார்த்திகேயன், துணைத் தலைவர் கே.கே.வி.அருண்முரளி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில் ராமாலை நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை, ராமாலைப் பகுதியில் புற காவல் நிலைய அமைக்க வேண்டும்,
குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், பல கிராமங்களில் டவுன் பஸ் நிறுத்தப்பட்டுள்ளது டவுன் பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
கூட நகரம் ஏரிக்கரை ஒரு பகுதியில் சாலை அமைக்காமல் உள்ளது உடனடியாக சீர் செய்து சாலை அமைக்க வேண்டும், கள்ளூர்மேடு பகுதியில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும்,
உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், கருணீகசமுத்திரம் ஏரி நிரம்பினால் ஊருக்குள் தண்ணீர் வருகிறது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், வளத்தூர் ஏரி நிரம்பி செல்லும்போது ஒரு சாலை துண்டிக்கப்படுகிறது உடனடியாக பாலம் வேண்டும்,
முக்குன்றம் கிராமத்தில் உள்ள பள்ளியில் மழை காலங்களில் வகுப்பறைகளுக்குள் மழை நீர் ஒழுகுகிறது மழை பெய்தால் விடுமுறை அளிக்கப்படுகிறது உருண்டையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,
உறுப்பினர் இமகிரிபாபு பேசும்போது வள்ளலார் நகரில் தெருவின் நடுவே மூன்று மின்கம்பங்கள் உள்ளது இதனால் அப்பகுதியில் கார், ஆட்டோ செல்ல முடியவில்லை அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் அல்லது தீயணைப்பு வாகனம் வருவதற்கு வழியில்லை, மூன்று மின்கம்பங்களை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனையடுத்து மின்கம்பங்களை அகற்ற தனது சொந்த பணத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அகற்றப்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ராமாலை பகுதியில் புற காவல் நிலையம் அமைக்க உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் தீர்மானங்களை கொண்டு வந்தார் அதில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து பாலங்கள் துண்டிக்கப்பட்டு சாலைகள் பழுதடைந்தது அதை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பழுதடைந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதனை தடுக்கும் பொருட்டு 3 ஆயிரத்து 800 மீட்டர் நீளமுள்ள ஏரிக்கரையை பலப்படுத்தி நடைப்பாதை அமைக்க வேண்டும், சீவூர்-மூங்கப்பட்டு இடையே பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மனோகரன், குட்டி வெங்கடேசன், சுரேஷ்குமார், தியாகராஜன், ரஞ்சித் குமார், சரவணன், தீபிகா உள்பட பலர் பேசினார்கள்.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
- குடியாத்தம் அரசு மருத்துவமனையில் போதிய இடம் இல்லை என்று புகார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், கே.வி.குப்பம், பள்ளிகொண்டா, மாதனூர், ஒடுகத்தூர், பரதராமி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் என தினமும் 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக கூடுதலாக தனி வார்டு அமைக்க வேண்டும் எனவும், புற நோயாளிகள் பிரிவுக்கு கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என அமலுவிஜயன் எம்.எல்.ஏ. விடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலையில் நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோ ருடன் திடீரென குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அமலுவிஜயன் எம்.எல்.ஏ. சென்றார்.
அப்போது ஒவ்வொரு வார்டாகச் சென்று நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மருத்துவ அலுவலர் மாறன்பாபு காய்ச்சலுக்காக மருத்து வமனையில் எடுக்கப்ப ட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
ஆண்கள், பெண்கள் என தனியாக 25 படுக்கைகள் கொண்ட காய்ச்சலுக்கான தனி வார்டுகள் அமைக்க ப்பட்டுள்ளதாக மருத்துவ மனை சார்பில் தெரி விக்கப்பட்டது. இருப்பினும் கூடுதலாக வார்டுகள் ஏற்படுத்த வேண்டும் என எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.
மேலும் புறநோயாளிகள் பிரிவில் குறைந்த பட்சம் ஐந்து டாக்டர்கள் பணியில் அமர்த்த வேண்டும் எனவும் பகல் 12 மணி வரை இயங்க வேண்டும் எனவும், அவசர சிகிச்சை பிரிவில் கூடுதலாக மருத்துவரை நியமிக்க வேண்டும் எனவும் மாலை மற்றும் இரவு நேரங்களில் காய்ச்சலுக்காக வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக டாக்டர்களை நியமிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆய்வுக்கு வந்த நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோ ரிடம் நகராட்சி பகுதி மற்றும் கிராம பகுதிகளில் முழு தூய்மை பணியை மேற்கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகர மன்ற உறுப்பினர்கள் எம். மனோஜ், ஏ.தண்டபாணி, அரசு மருத்து வமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் எம்.முத்து, யு.சரவணன், ஆர்.தட்சணாமூர்த்தி, எஸ். அன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது.
- இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
வேலூர்:
பாலாறு கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிலோமீட்டர் தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிலோமீட்டர் தொலைவும் தமிழகத்தில் 222 கிலோமீட்டர் தொலைவும் பாய்ந்து சென்னைக்கு தெற்கே வாயலூர் என்னுமிடத்தில் கலக்கிறது.
33 கிலோமீட்டர் மட்டுமே ஓடும் ஆந்திராவில் 22 இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. 10 முதல் 15 மீட்டர் உயரம் வரை சில தடுப்பணைகள் உள்ளன.
இந்த தடுப்பணைகளின் உயரத்தை மேலும் அதிகரிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக தடுப்பணைகளை தாண்டி பாலாற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் வறண்டு கிடந்த பாலாறு மீண்டும் உயிர்த்தெழுந்து உள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாலாற்று படுகையில் உள்ள ஏரிகளில் தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் விவசாய பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழக எல்லையில் உள்ள குப்பம் தொகுதிக்கு வந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்:-
முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொகுதியான குப்பத்தில் ஒரு வளர்ச்சி பணிகள் கூட நடைபெறவில்லை. ஹந்திரி நீ வா குடிநீர் கால்வாய் பணிகள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்படும்.
யாமி கானி பல்லி, மதனப்பல்லி பகுதிகளில் ரூ.250 கோடி செலவில் சிறிய அணை கட்டப்படும்.
குப்பம் தொகுதி மக்களுக்காக பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்க பணிகள் நடைபெறும் என அறிவித்தார்.
இதன் மூலம் பாலாற்றில் உள்ள 22 தடுப்பணைகளில் உயரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. புதிய தடுப்பணைகளும் வர வாய்ப்புள்ளது என ஆந்திர மாநில விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.
இந்த பணிகளால் தமிழகத்திற்கு பாலாற்றில் இருந்து தண்ணீர் வருவது கேள்விக்குறியாகி விடும் என வேலூர் உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டுவது மற்றும் ஏற்கனவே உள்ள தடுப்பணைகளை உயரம் அதிகரிக்க செய்யும் பணிகளை தமிழக அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- ஆத்திரமடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார். அவர் உடல் முழுவதும் வேகமாக தீ பரவி பற்றி எரிந்தது.
- திலகவதி ரமேசை வெளியே விடாமல் தீவைக்க முயன்றார். கதவை ஓடிச்சென்று பூட்டி ரமேசை கட்டிப்பிடித்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் திலகவதி (வயது 35) இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர். வேலூர் முள்ளிபாளையம் ராமமூர்த்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கும் குடியாத்தம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ரமேஷ் துணி வியாபாரம் செய்து வந்தார்.
கள்ளக்காதலியை அடிக்கடி சந்திப்பதற்காக ரமேஷ் முள்ளிபாளையம் பகுதியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடியேறினார்.
இருவரும் அந்த வீட்டில் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். நேற்றுமுன்தினம் கணவர் இல்லாத நேரத்தில் திலகவதி ரமேஷ் வீட்டுக்கு சென்றார். இருவரும் அங்கு தனிமையில் இருந்தனர்.
நேற்று காலையில் இருவருக்கும் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார்.
அவருடைய உடலில் தீப்பற்றியது மேலும் ரமேஷ் மீதும் தீப்பற்றி எரிந்தது.
இருவரும் அலறி சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கதவை உடைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் திலகவதியின் உடலில் 90 சதவீதத்திற்கு மேல் தீ பற்றி உடல் கருகியது.
ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடி வெளியே வந்தார். ஆட்டோ மூலம் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்ல முயற்சி செய்தார். வழியில் உடல் எரிச்சல் அதிகமானதால் கோட்டை அகழியில் குதித்தார். அவரை பொதுமக்கள் மீட்டனர்.
வேலூர் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் இருவரையும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த திலகவதி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். ரமேஷ் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திலகவதிக்கும் ரமேசுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. திலகவதியை தனிமையில் சந்திப்பதற்காக ரமேஷ் தனியாக வீடு வாடகைக்கு எடுத்தார்.
அங்கு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். நேற்று முன்தினம் திலகவதி ரமேஷ் அறைக்கு வந்தார். இருவரும் தனிமையில் இருந்தனர். நேற்று காலையில் திலகவதி அவரது மகள்களுக்கு வயது அதிகமாகி வருகிறது.
எனவே கள்ளத்தொடர்பை விட்டுவிடலாம் என கூறியுள்ளார். உன்னால் தான் நான் திருமணம் செய்யாமல் இருக்கிறேன் என ரமேஷ் கூறியுள்ளார். அதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த ரமேஷ் பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்தார். அவர் உடல் முழுவதும் வேகமாக பரவி பற்றி எரிந்தது.
அப்போது அவர் ரமேசை வெளியே விடாமல் தீவைக்க முயன்றார். கதவை ஓடிச்சென்று பூட்டி ரமேசை கட்டிப்பிடித்தார்.
இதில் அவரது உடலில் தீ பற்றியது. இருவரும் கூச்சலிட்டனர். பொதுமக்கள் ஓடி வந்து கதவை உடைத்தனர். ரமேஷ் உயிர் பிழைப்பதற்காக வெளியே ஓடி சென்றார்.
வழியில் உடல் எரிச்சல் அதிகமாக இருந்ததால் கோட்டை அகழியில் குதித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
- வியாபாரம் ஆகக் கூடிய தன்மை அடிப்படையில் அறிக்கை தயார்செய்து வருகின்றனர்
- கடைகள் அனைத்தும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.53 கோடியே 13 லட்சத்தில் நவீன வசதிகளுடன் புதுப் பிக்கப்பட்டது.
இதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் திறந்து வைத்து, பஸ் போக்குவரத் தையும் தொடங்கி வைத்தார். அனைத்து பகுதிகளுக்கும் அங்கிருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள்.
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 85 அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற் றில் 7 அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, போக்குவரத்து ஊழியர்களுக்கு 2 ஓய்வு அறைகள், காவலர் அறை, காவல் கண்காணிப்பு கேமராக்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதைத்தவிர ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு 6 அறைகள் கடைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அவற்றை தவிர மீதமுள்ள 72 அறைகள் கடை களாக மாற்றப்பட்டு கடந்த மாதம் 3 - ந்தேதி பொதுஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 2 - ந்தேதி திடீரென நிர்வாக காரணங்க ளால் ஏலம் ஒத்தி வைக்கப்படுவதாகவும், ஏலம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக் கப்பட்டது. அறைகளின் வாடகை அதிகமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை குறைப்பதற்காக ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏலம் விடாததால் பஸ் நிலையத்தில் கட்டப்பட் டுள்ள கடைகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடி கிடக்கின்றன. அதனால் உணவகங்கள், டீ, காபி, குளிர்பான கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். குறிப் பாக பச்சிளங் குழந்தையின் பசியாற்ற பால், பிஸ்கெட் உள்ளிட்டவற்றை தேடி அலைந்து வாங்கும் நிலை காணப்படுகிறது. வெளிமாநிலங்கள், பிறமாவட்டங்களில் பஸ்சில் இருந்து வேலூர் வழியாக செல்லும் பயணிகள் பஸ் நிலையத்தில் உணவகங்கள், டீக்கடைகள் இல்லாததால் பசியுடன் பயணம் செய்யும் அவலநிலை காணப்படுகிறது.
பஸ் நிலையத்தின் வெளியே சென்று உணவு சாப்பிடும் பயணிகள் சில சமயங்களில் பஸ்சை தவறவிட்டு குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல் லும் இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைகிறார்கள். இரவு நேரத்தில் குழந்தைகளு டன் வரும் பெண்கள், முதியவர்கள் அத்தியாவசிய பொருட்களை பஸ் நிலையம் வெளியே சென்று வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.
பஸ் நிலைய அமைவிடம் கடைகள் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அரசு விதிமுறைப்படி ஒரு கடைக்கு ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாடகை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த கடைகள் ஏலம் போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் புதிய பஸ் நிலைய கடை வாடகை நிர்ணயம் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் புதிய பஸ் நிலையம் அமைவிடம் மற்றும் அங்கு வியாபாரம் ஆகக் கூடிய தன்மை ஆகியவை அடிப்படையில் அறிக்கை தயார் செய்து வருகின்றனர்.
அந்த அறிக்கையின் அடிப்படையில் கடைகளுக்கு வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. அதன் பிறகு ஏலம் விடப்படும். விரைவில் கடைகள் அனைத்தும் ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- 100 கிலோ அளவிற்கு நிலக்கடலையை பிரித்தெடுக்கும் திறன் கொண்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் பிரதான பயிர்களில் நிலக்கடலை ஒன்றாகும். தற்போது நிலவி வரும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நிலக்கடலையை அறுவடை செய்து செடியில் இருந்து பிரித்து எடுக்கும் பணியினை செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் உள்ளது.
இதனால் உரிய நேரத்தில் அறுவடை செய்ய இயலாமல் மகசூல் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. இதனை போக்கும் விதமாக தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் மதிப்பு கூட்டு எந்திரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஊசூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நிலக்கடலை பறிக்கும் எந்திரம் செயல் விளக்கம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த செயல் விளக்கத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை செடிகளில் இருந்து நிலக்கடலையை பறிக்கும் இயந்திரம் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இந்த எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 கிலோ அளவிற்கு நிலக்கடலையை பிரித்தெடுக்கும் திறன் கொண்டது. இதன் மொத்த விலை ரூ.2,30,000 அரசு மானியம் ரூ.75,000 ஆகும்.
இந்த எந்திரம் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் கார்டு நகல், புகைப்படம், வங்கி கணக்கு நகல் ஆகிய ஆவணங்களுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம், பாகாயம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு நிலக்கடலை பயிரிடப்படும் எந்திரத்தின் செலவுகள் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்படும்.
இந்த செயல் விளக்கத்தில் வேளாண்மை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் ஸ்ரீதர், தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், சுகாதாரத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
- போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அறிவுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் குடியாத்தம் துணை கோட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான குற்றத்தடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டி,எஸ்.பி. ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி, கணபதி, சப்- இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிலம்பரசன், சிவச்சந்திரன், தேவபிரகாஷ், பிரபாகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக கஞ்சா, கள்ளச்சாராயம், போதைப் பொருட்களான குட்கா, ஹான்ஸ், லாட்டரி, மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு சமூக விரோத செயல்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி மற்றும் போதைப் பொருட்கள் விற்பவர்கள், அதை வெளியூரிலிருந்து கடத்தி வருபவர்கள், அதனை பதுக்கி வைப்பவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உதவியாக இருக்கும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தீவிரம்
- முக்கிய சந்திப்புகளில் ரோந்து
வேலூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
கேரளா கர்நாடகா தமிழகம் மத்திய பிரதேசம் உட்பட 15 மாநிலங்களில் இந்த சோதனை நடந்தது. மொத்தம் 93 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதனை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையை தொடர்ந்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நேற்று இரவு அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் விடிய விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பொது இடங்களில் போலீசார் ேராந்து சென்றனர். மேலும் சந்தேகப்படும்படியாக சுற்றிய நபர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலையில வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- புடவை வேஷ்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் :
குடியாத்தம் நகராட்சி பகுதியை சேர்ந்த 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மாவட்ட திட்ட அலுவலர் வி.கோமதி தலைமை தாங்கினார்.
நகர் மன்ற உறுப்பினர்கள் சிஎன்.பாபு, எம்.மனோஜ், என்.கோவிந்தராஜ், எம்.ஏகாம்பரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகர் மன்றத் துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, வட்டார மருத்துவ அலுவலர் விமல்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ். சவுந்தரராசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
தொடர்ந்து 150 கர்ப்பிணிகளுக்கு வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் வழங்கிய புடவை வேஷ்டி உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் குடியாத்தம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஷமீம்ரிஹானா நன்றி கூறினார்.
- கோட்டை அகழியில் குதித்ததால் பரபரப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40) இவர் வேலூர் முள்ளிபாளையம் ராமகிருஷ்ணா தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். துணி வியாபாரம் செய்வதாக அந்த பகுதியில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திலகவதி (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் திலகவதி ரமேஷ் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார்.
சிறிது நேரம் அவர்கள் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டது. அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் கேட்டு ஓடிச் சென்றனர்.
அப்போது திலகவதி உடலில் தீபற்றி எரிந்தது மேலும் ரமேஷ் உடலிலும் தீ பற்றியது இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைத்தனர். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் ரமேஷ் அங்கிருந்து முள்ளி பாளையம் சாலைக்கு ஓடி வந்தார்.
அங்கிருந்து ஆட்டோவில் அவர் கோட்டை அகழிக்கரைக்கு வந்தார். பின்னர் அவர் தீக்காயங்களுடன் கோட்டை அகழியில் குதித்தார்.
இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டனர். மேலும் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திலகவதி மற்றும் ரமேஷை மீட்டு அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திலகவதியின் உடலில் 90 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்கள் உள்ளன.
அவர்களது உடலில் எப்படி தீ பற்றியது என்பது தெரியவில்லை. தற்கொலை செய்ய முயன்றார்களா? அல்லது வேறு ஏதாவது நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ரமேஷ் திலகவதியிடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. இருவரும் பேசக்கூடிய நிலையில் இல்லை. இதனால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வேலூரில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






