என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கடலை பறிக்கும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
விவசாயிகளுக்கு மானிய விலையில் நிலக்கடலை பறிக்கும் எந்திரம்
- கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
- 100 கிலோ அளவிற்கு நிலக்கடலையை பிரித்தெடுக்கும் திறன் கொண்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் பிரதான பயிர்களில் நிலக்கடலை ஒன்றாகும். தற்போது நிலவி வரும் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நிலக்கடலையை அறுவடை செய்து செடியில் இருந்து பிரித்து எடுக்கும் பணியினை செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலையில் உள்ளது.
இதனால் உரிய நேரத்தில் அறுவடை செய்ய இயலாமல் மகசூல் பாதிப்பு அடைய வாய்ப்பு உள்ளது. இதனை போக்கும் விதமாக தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் இயந்திரங்கள் மற்றும் மதிப்பு கூட்டு எந்திரங்கள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் ஊசூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் நிலக்கடலை பறிக்கும் எந்திரம் செயல் விளக்கம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த செயல் விளக்கத்தில் அறுவடை செய்யப்பட்ட நிலக்கடலை செடிகளில் இருந்து நிலக்கடலையை பறிக்கும் இயந்திரம் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.
இந்த எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 100 கிலோ அளவிற்கு நிலக்கடலையை பிரித்தெடுக்கும் திறன் கொண்டது. இதன் மொத்த விலை ரூ.2,30,000 அரசு மானியம் ரூ.75,000 ஆகும்.
இந்த எந்திரம் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, ஆதார் கார்டு நகல், புகைப்படம், வங்கி கணக்கு நகல் ஆகிய ஆவணங்களுடன் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம், பாகாயம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
மேலும், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு நிலக்கடலை பயிரிடப்படும் எந்திரத்தின் செலவுகள் மாவட்ட கலெக்டரின் விருப்ப நிதியிலிருந்து வழங்கப்படும்.
இந்த செயல் விளக்கத்தில் வேளாண்மை இயக்குனர் ஸ்டீபன் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் ஸ்ரீதர், தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன், உதவி செயற்பொறியாளர் பாஸ்கரன், சுகாதாரத் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.






