என் மலர்tooltip icon

    வேலூர்

    • வடமாநிலத்தை சேர்ந்தவர்
    • சாலையை கடந்த போது விபரீதம்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வாலிபர் ஒருவர் காட்பாடி சாலையை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த லாரி வாலிபர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் வாலிபரின் சட்டையை சோதனை செய்தபோது அவரது ஆதார் கார்டு இருந்தது. அதில் அசாம் மாநிலம் சிராங் பகுதியை சேர்ந்த பிக்கின் முச்சாரி (வயது 30) என தெரிய வந்தது.

    விபத்தில் சிக்கி இறந்த வாலிபர் வேலூரில் வேலை செய்து வருகிறாரா அல்லது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தாரா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்விக்கேற்ப வேலைவாய்ப்புகள் பெற காவல்துறை சார்பில் உதவி செய்வதாகவும் கூறினர்
    • ரெயில்களில் பயணிகளை துன்புறுத்துவது போன்ற பல்வேறு புகார்கள் வந்துள்ளது

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் இன்று திருநங்கைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

    திருநங்கைகள் சங்க தலைவர் மாயா உள்பட 20 திருநங்கைகள் பங்கேற்றனர். திருநங்கைகள் ரெயில்களில் பிச்சை எடுப்பது, பயணிகளிடம் பணம் பறிப்பது, பயணிகளை துன்புறுத்துவது போன்ற செயல்கள் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளது.

    திருநங்கைகள் ஈடுபட கூடாது என அறிவுரைகளை வழங்கினர். மேலும் திருநங்கைகளுக்கு எதிரான தீமையைத் தவிர்க்க அவர்களின் கல்விக்கேற்ப வேலைவாய்ப்புகள் பெற காவல்துறை சார்பில் உதவி செய்வதாகவும் கூறினர்.

    • 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்
    • ஏராளமானனோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம் ரோட்டரி சங்கம், நல்லம்மை ராமநாதன் ரோட்டரி மருத்துவமனை, கோவை சங்கரா கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் அமரர் மு.க.மெய்ஞானம்- வசந்தி அம்மாள் அறக்கட்டளை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது.

    முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.மேகராஜ் தலைமை தாங்கினார். பொருளாளர் கே.எம்.ராஜேந்திரன், இயக்குனர் பாபு, தலைவர் தேர்வு ரங்காவாசுதேவன், சி.கண்ணன்,மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண் சிகிச்சை முகாமை கே.எம்.ஜி.கல்வி நிறுவன ங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், வழக்கறிஞர் கே.எம்.பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர்கள் ஆர்.கே.மகாலிங்கம், செ.கு.வெங்கடேசன், அரிகிரு ஷ்ணன், அன்பு அன்பரசன் உள்பட ஏராளமான ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் 650 பேர் கண் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை செய்து கொண்டனர். 250 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    • கதிர் ஆனந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார்

    வேலூர்:

    காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் துணை மேயர் சுனில் குமார் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு துணை மேயர் சுனில் குமார் தலைமை தாங்கினார். கதிர் ஆனந்த் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

    பின்னர் பொது மக்களுக்கு ஆப்பிள், திராட்சை, தர்பூசணி, இளநீர், குளிர்பானம் மற்றும் மோர் வழங்கினார். 

    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது
    • உடைந்த கானாற்றின் சுவற்றை சீரமைக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூரில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    வேலூர் தோட்டப்பாளையத்தில் செல்லும் கானாறு தூர் வாராததால் மழை நீருடன் கழிவு நீர் கழிவு நீர் நிரம்பி வெளியேறியது. அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சேறும் சகதியுமாக கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.

    மேலும் சாலை முழுவதும் மழை நீருடன் குப்பைகள் தேங்கி சேறும் சகதியமாக மாறியது. பொதுமக்கள் சாலையில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

    கானாறை தூர்வாரி உடைந்துள்ள கானாற்றின் சுவற்றை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன
    • தகவல் எலக்ட்ரானிக் சாதனம் சார்ந்த பொருட்களுக்கு அனுமதி இல்லை

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 11 மையங்களில் 6,883 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.

    இந்திய அளவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ துறையில் சேருவதற்காக ஆண்டுதோறும் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு (நீட்) நாளை நடைபெற உள்ளது.

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 6,883 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.

    அவர்கள் தேர்வு எழுதவற்கு வேலூர் சாய்நாதபுரம் வி.வி.என்.கே.எம். சீனியர் செகன்டரிபள்ளி, டி.கே.எம். மகளிர் கலைக்கல்லூரி, ஸ்ரீபுரம் நாராயணி சீனியர் செகண்டரி பள்ளி, சிருஷ்டி மெட்ரிக்பள்ளி, சிருஷ்டி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி பள்ளி, கிங்ஸ்டன் என்ஜினீயரிங் கல்லூரி, சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி, வாணியம்பாடி மருதர்கேசரி ஜெயின் கல்லூரி, ராணிப்பேட்டை டி.ஏ.வி. பெல்பள்ளி, சோளிங்கர் வித்யாபீடம் பள்ளி ஆகிய 11 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். தேர்வு மையத்துக்குள் காலை 11 மணி முதல் தேர்வர்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும். பிற்பகல் 1.30 மணிக்குள் மாணவர்கள் மையத்துக்குள் வர வேண்டும். அதன்பின்னர் வரும் மாணவர்களுக்கு அனுமதி கிடையாது. மாணவ-மாணவிகள் முழுபரிசோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். மாணவர்கள் தேர்வுக்கான நுழைவு சீட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

    தேர்வு மையங்களுக்கு சென்று வர வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் பஸ்நிலையங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் இருந்து காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    தேர்வு மையத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    அனுமதி அட்டை (அட்மிட் கார்டு) ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் செல்லுபடியாகும் அசல் அடையாளச் சான்று மாற்றுத்திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் (பொருத்தினால்) முகமூடி, சானிடைசர், கையுறைகள் மற்றும் டிரான்ஸ்பரண்ட் தண்ணீர்பாட்டில் எடுத்து செல்லலாம்.

    செல்போன், புளூடூத், இயர்போன்கள், மைக்ரோபோன்கள், போன்ற எந்தவொரு தகவல் தொடர்பு சாதனமும், ஆபரணங்கள் கைக்கடிகாரம், வளையல் கேமரா போன்றவை மற்றும் எழுது பொருட்கள் தகவல் எலக்ட்ரானிக் சாதனம், கண்ணாடிகள், கைப்பைகள், பெல்ட், தொப்பி போன்ற பிற பொருட்கள், எந்த உணவுபொருளும் திறக்கப்பட்டது அல்லது பேக் செய்யப்பட்டது போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.

    • 500 ஆண்டுகள் பழமையானது
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த குப்பம்பட்டு கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கு தி.மு.க. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அதிமுக மாதனூர் ஒன்றிய செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, நிர்வாகிகள் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • ஒருவர் கைது
    • வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுதுத்த வெங்கனபாளையம் பகுதியில் மண்ணுளி பாம்பை ஒருவர் சட்டவிரோதமாக வளர்த்து வருவதாக வனத்து றையினருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாபு (வயது50) என்பவரின் வீட்டில் பிளாஸ்டிக் பேரலில் மணலில் வைத்து இருந்த 3 அடி நீளமும் சுமார் 4 கிலோ எடை கொண்ட மண்ணுளி பாம்பு இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பணத்திற்கு ஆசைப்பட்டு சில மாதங்களாக உணவு கொடுத்து மண்ணுளிப் பாம்பை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

    மீட்கப்பட்ட மண்ணுளிப் பாம்பை அருகே இருக்கும் பருவமலை காப்பு காட்டில் பத்திரமாக வனத்துறையினர் கொண்டுபோய் விட்டனர். சட்ட விரோதமாக பாம்பை பிடித்து வளர்த்து வந்த பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போதையில் இறந்திருக்கலாம் என சந்தேகம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் பாகாயம் அருகே உள்ள என்.கே. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவருடைய மகன் ராஜேஷ் (வயது 37) இவர் நேற்று அடுக்கம்பாறை அருகே உள்ள காளி கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்தார்.

    நீண்ட நேரமாக அவர் காரில் அசைவு இல்லாமல் இருந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மது போதையில் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுத்தமாக வைத்திருக்க வேண்டும்
    • இன்று இரவு ஊர்வலம் நடக்கிறது

    வேலூர்:

    வேலூரில் இன்று இரவு புஷ்ப பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது.

    ஊர்வலம் நடைபெறும் லாங்கு பஜார், மெயின் பஜார், கமிசரி பஜார், அண்ணா கலையரங்கம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி, ஆய்வு செய்தார்.

    மேலும் புஷ்ப பல்லக்கு செல்லும் பாதையில் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

    • தம்பிக்கு புதிய வாகனம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பொன்னையை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் நவீன் குமார் (வயது 25).இவர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் மது குடிக்கும் பழக்கத்திற்கும் ஆளானார் இந்த நிலையில் இவருடைய தம்பிக்கு பெற்றோர் புதிய பைக் வாங்கி கொடுத்தனர்.

    ஆனால் நவீன் குமாருக்கு பழைய பைக் வாங்கி தந்தனர். இது குறித்து நவீன் குமார் வீட்டில் தகராறு செய்தார். மேலும் மனமுடைந்த அவர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பொன்னை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள சாத்து மதுரையை சேர்ந்தவர் பரமசிவன் (வயது 48). கட்டிட மேஸ்திரி. இவர் வேலூர் சலவன்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது 2-வது மாடியில் இருந்து திடீரென தவறி கீழே விழுந்தார்.

    அவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×