என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெறையூர் ஏரி தற்போது வறண்டு காணப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.
    வாணாபுரம்:

    திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வெறையூர் கிராமம். அங்கு 80 ஹெக்டர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில், மழைக்காலங்களில் மழைநீர் தேக்கி வைக்கப்படும். இதன் மூலம் கோடைக்காலத்தில் சுற்று வட்ட பகுதியைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். அது மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு இப்பகுதியில் குறைந்த அளவே மழை பெய்தது. இதனால் ஏரிக்கு ஓரளவுக்கு மட்டும்தான் தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீரும் தற்போது வடிந்து விட்டது. இதனால் ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் கூறுகையில், மழை அதிகளவில் பெய்தால் மட்டுமே இந்த ஏரிக்கு தண்ணீர் வரும். மேலும் ஏரிக்கு வரும் கிளை கால்வாய்கள் அனைத்தும் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் தடைபட்டு விட்டது. மேலும் சிறு சிறு ஓடைகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளிவரக்கூடிய தண்ணீர் செல்ல வழியில்லாததால் அப்பகுதி முழுவதும் தூர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வருவது கிடையாது.

    இது ஒருபுறமிருக்க சாத்தனூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில் இடதுபுற கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் சுற்றுவட்டாரப் பகுதியில் அனைத்துக் கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆனால் இங்குள்ள வெறையூர் ஏரிக்கு தண்ணீர் வருவது இல்லை.

    ஏரிக்கு தண்ணீர் வர வழிவகை செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. குடிமராமத்துப் பணியின்கீழ் ஏரியில் செடி, கொடிகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது. கரைகளும் பலப்படுத்தப்பட்டது. எனினும், ஏரி தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

    எனவே சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரி தற்போது வறண்டு காணப்படுவதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எதிர் வரும் காலங்களில் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டுவதற்கு தூர்ந்து கிடக்கும் கால்வாய்கள் மட்டுமல்லாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய்களை மீட்டு ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
    செங்கம்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று குறைந்ததையடுத்து கடந்த 7-ந் தேதி முதல் கடைகள் திறக்க தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில் செங்கம் புதிய பஸ் நிலையம் அருகே போலீசார் துணை சூப்பிரண்டு சரவணகுமரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து இ-பதிவு ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்கள் மற்றும் செங்கம் பகுதியில் தேவையின்றி சாலையில் சுற்றியவர்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்டவைகள் அத்யாவசிய தேவையின்றி வரக் கூடாது எனவும் மீறி வரும் வாகனங்கள் மீது அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
    கிராம மக்கள் மழை வேண்டி ஓன்று கூடி ஆதனூர் ஏரியில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.
    ஆரணி:

    ஆரணியில் மழை வேண்டி மூதாட்டிகள் ஒப்பாரி வைத்து நூதன வழிபாடு செய்தனர். கிராம மக்களுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.

    இந்த கிராமத்தில் சுமார் 1500 ஏக்கர் பரபரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர்.

    இந்தாண்டு கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகளவில் உள்ளதால் நிலத்தடி நீர் வறண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் கிராம மக்கள் மழை வேண்டி ஓன்று கூடி ஆதனூர் ஏரியில் உள்ள ஸ்ரீசெல்லியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அம்மனுக்கு களி, கறி விருந்து உள்ளிட்டவைகளை படையல் போட்டு வழிபட்டனர்.

    பின்னர் மூதாட்டிகள் ஓன்றிணைந்து ஓப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். இதையடுத்து கிராம மக்களுக்கு கறி, களி விருந்து பரிமாறப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.



    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் பெண்கள் ஆர்வத்துடன் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து உள்ள காரணத்தால் தமிழக அரசு கடந்த இரண்டு வாரங்களாக முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விவசாய பணிகள் மட்டும் தடையின்றி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாபட்டு கிராமத்தில் விவசாய நிலத்தில் பெண்கள் ஆர்வத்துடன் நெல் நாற்று நடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூரில் வழிப்பறி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் அங்குள்ள டீக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு முருகன் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது எதிரில் ஆட்டோவில் வந்த 2 வாலிபர்கள், முருகனை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் பாக்கெட்டில் வைத்திருந்த 1,000 ரூபாயை பறித்துக்கொண்டு ஆட்டோவில் தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து முருகன் ஆட்டோ நம்பருடன் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து வழுதலங்குணம் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வினோத் என்ற பென்னி (வயது 22), வேடியப்பன் மகன் செல்வம் (21) ஆகிய இருவரையும் இன்ஸ்பெக்டர் சியாமளா, சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் ஆகியோர் கைது செய்தனர்.
    ஊரடங்கு அமலில் உள்ளதை கடைப்பிடிக்காமல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு ஜவுளிக்கடைக்கு சீல் வைத்தனர்.
    போளூர்:

    போளூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், துப்பரவு ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு அமலில் உள்ளதை கடைப்பிடிக்காமல் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த ஒரு ஜவுளிக்கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
    கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சீதா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வேங்கிக்கால் தீபம்நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 50). இவரின் மனைவி சீதா (45). இவர்களுக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். சீதா கடந்த சில மாதங்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை.

    இதனால் மனமுடைந்த சீதா சம்பவத்தன்று விஷத்தை குடித்து வீட்டார். மயக்கமடைந்து கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதா பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதை அறிந்த மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது.
    திருவண்ணாமலை:

    கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் உயிரிழப்புகள் அதிகரித்து உள்ளது. சராசரியாக தொற்றால் ஒரு நாளுக்கு 5 பேர் வரை உயிரிழக்கின்றனர். தினசரி 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    இதனை கட்டுப்படுத்த ஒரே தீர்வாக தற்போது தடுப்பூசி கருதப்படுகிறது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தடுப்பூசி முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தினமும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    ஆரம்ப கட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டினர். அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சினர். இதனால் முகாம்களில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.

    இந்த நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டு வருவதை அறிந்த மக்கள் விழிப்புணர்வு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக திடீரென தடுப்பூசி போடும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பொதுமக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டு கொண்டனர். மக்களிடம் தடுப்பூசி போட்டு கொள்ள ஆர்வம் அதிகரித்து உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நான் உள்பட என்னுடன் உள்ள அனைத்து அதிகாரிகளும் தடுப்பூசி போட்டு உள்ளார்கள். அதனால் தான் நான் தினமும் வெளியில் தைரியமாக வருகிறேன்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தில் கொரோனா பரிசோதனை முகாம் மற்றும் பழங்கோவில், மோட்டூர் ஆகிய ஊராட்சிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை கலெக்டர் சந்தீப் நந்தூரி, சரவணன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    அப்போது கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

    மருத்துவ பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்யும்போது மிகவும் பாதுகாப்புடனும் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அடிக்கடி சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.

    கொரோனா வைரஸ் 3-ம் அலை வருவதற்கு முன்பு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்காக ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எந்த அளவுக்கு அவதிப்படுகிறார்கள் என்பதை மருத்துவமனையில் சென்று பார்த்தால் தெரியும். பெரும்பாலானோர் தனக்கு வயதாகிவிட்டது, உடல்நிலை சரியில்லை, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது என கூறி தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர்.

    தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. நான் உள்பட என்னுடன் உள்ள அனைத்து அதிகாரிகளும் தடுப்பூசி போட்டு உள்ளார்கள். அதனால் தான் நான் தினமும் வெளியில் தைரியமாக வருகிறேன். இதனால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் ஆர்த்தி, ஒன்றியக்குழு தலைவர் அன்பரசிராஜசேகர், தாசில்தார் அமுல், வட்டார மருத்துவ அலுவலர் கவுதம்ராம், வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    வந்தவாசியை அடுத்த கொடநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

    இதில் வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்தன், மருந்தாளுனர் மணிகண்டன், அன்பு மற்றும் செவிலியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-ம் அலை அதிகரிக்க தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அல்படுத்தி உள்ளது.

    இந்த முழு ஊரடங்கு காரணமாக மாவட்ட எல்லை உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ரோந்து பணியிலும், வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலையில் வழக்கத்தை விட பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. சில பகுதிகளில் பஸ், ஆட்டோக்கள் மட்டுமே ஓடவில்லை. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது போன்று காணப்பட்டது. சோதனை சாவடிகளில் போலீசார் விசாரணை நடத்தி வாகனங்களில் செல்ல அனுமதித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறையும் நிலையில் பொதுமக்களில் சிலர் வெளியில் சுற்றி வருவதால் தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்படும். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஆரணி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஆரணி:

    ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும்  சேவூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் சரிவர வழங்படவில்லை.

    இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளாவிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் சேவூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதிக்கு குடிநீர் வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் தரணி போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த கொரோனா காலத்தில் நாங்கள் வெளியிலும் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றோம். கடந்த 20 நாட்களாக எங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை. உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வி. மூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் ஒன்றிய பொது நிதி மூலம் பழுதான குடிநீர் மோட்டாரை சீர்செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை அடுத்து முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    போளூரில் சாராயம் விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போளூர்:

    போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போளூர் சாவடி தெருவில் வீட்டில் சாராயம் விற்ற சாந்தி (வயது 57) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
    ×