என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் 2 போலீசார் ஓட்டலில் உணவு வாங்க வந்த 2 பெண்களை இரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என கேட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருணகிரி சத்திரம் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 43). இவர் கடந்த 12-ந் தேதி ஆரணி காந்தி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த ஆரணி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் 2 போலீசார் ஓட்டலில் உணவு வாங்க வந்த 2 பெண்களை இரவு நேரத்தில் இங்கு என்ன வேலை என கேட்டு கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கிருந்த ஜெகநாதன் போலீசாரிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஜெகநாதன் போலீசாரை ஒருமையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர்கள் ஜெகநாதனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்ததும் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், ஜெகநாதனை அழைத்து சமாதானம் செய்து புகார் எதுவும் வேண்டாம் என கூறி அனுப்பி உள்ளனர்.

    இதற்கிடையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டிக்கு தகவல் தெரிந்ததும், அவர் சம்பந்தப்பட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
    ஆரணி பகுதியில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜமாணிக்கம். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அதேபோன்று ஆரணி கொசப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்த லட்சுமி (வயது52) என்ற பெண்ணும் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆரணி பகுதியில் 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சின்னபுஷ்பகிரி, வெள்ளூர், காளசமுத்திரம், களம்பூர், கஸ்தம்பாடி, எடப்பிறை, கொரால்பாக்கம் ஆகிய 9 இடங்களில் 706 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வழூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிமேகலை தலைமை தாங்கினார். முகாமில் 100-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் மருந்தாளுனர் மணிகண்டன், அன்பு, குமார்,செவிலியர் மலர்க்கொடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர் முகாமை தொடங்கி வைத்தார். போளூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் மிஸ்ஸியம்மா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன் வரவேற்றார்.

    மேலும் போளூர், சின்னபுஷ்பகிரி, வெள்ளூர், காளசமுத்திரம், களம்பூர், கஸ்தம்பாடி, எடப்பிறை, கொரால்பாக்கம் ஆகிய 9 இடங்களில் 706 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    கண்ணமங்கலம் அருகே உள்ள சந்தவாசல் ஊராட்சியில் சின்னபுஷ்பகிரி பள்ளியிலும், வெள்ளூர் கிராமத்தில் காலனி பள்ளியிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சந்தவாசல் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் இளங்கோவன், அக்‌ஷிதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர் அருண் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு 140 பேருக்கு தடுப்பூசி போட்டனர். காளசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மந்தைவெளி பகுதியில் டாக்டர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ராமு மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக்குழுவினர் 105 பேருக்கு தடுப்பூசி போட்டனர்.

    செங்கம் தாலுகாவில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 668 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    சேத்துப்பட்டு அருகே சாராயம் விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷமங்கலம் கிராமத்தில் மணி (வயது 50)) என்பவரும், அரசம்பட்டு கிராமத்தில் பாலாஜி (25) என்பவரும், குடுமித்தாங்கல் கிராமத்தில் கன்னியப்பன் (55) என்பவரும் சாராயம் விற்றது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வந்தவாசி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதிரி ஊராட்சியில் வந்தவாசி - விளாங்காடு சாலையில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த மதுபானக் கடை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

    இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து மதுபானக் கடையை முற்றுகையிட்டனர். மேலும் அவர்கள் மதுபானக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருவதால் பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    எனவே மதுபானக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றனர். மேலும் கைகளில் பதாகைகளை பிடித்துக் கொண்டு மதுபானக் கடைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    இதுகுறித்து தகலவறிந்த தாசில்தார் திருநாவுக்கரசு, டி.எஸ்.பி. தங்கராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்கள் டாஸ்மாக் கடையை மூடுவது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். 

    திருவண்ணாமலை, ஆரணி மற்றும் வந்தவாசியில் டாஸ்மாக் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள பா.ஜ.க. மாவட்ட அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் டாஸ்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரமாக கடைகளை மூட வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அதேபோல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி திருவண்ணாமலையில் பா.ஜ.க.வினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தியும், பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆரணியை அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் பா.ஜ.க. ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமையில் டாஸ்மாக் கடைகள் திறப்பை கண்டித்து, அவரின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பி.கோபி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர் சரவணன், ஒன்றிய இளைஞரணி தலைவர் கார்த்தி, ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் தினேஷ், விவசாய அணி தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வந்தவாசியில் சன்னதி தெருவில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தேசிய குழு உறுப்பினர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

    சென்னாவரம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முத்துசாமி தனது வீட்டின் முன்பு குடும்ப உறுப்பினர்களுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

    ஆரணி ஆற்றுப்படுகையில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணி:

    ஆரணி வி.ஏ.கே.நகர் ஆற்றுப்படுகை பகுதியில் நேற்று ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனை மற்றும் ஆய்வுப் பணி மேற்கொள்ள சென்று கொண்டிருந்தனர். அப்போது முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 28) என்பவர் மணல் நிரப்பப்பட்ட 2 கோணிப்பை மூட்டைகளை மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மணல் மூட்டைகள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்திப்பாக்கம் கிராமம் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது.
    வந்தவாசி:

    வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அத்திப்பாக்கம் கிராமம் ஆகிய 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் மணிமேகலை தலைமையிலான மருத்துவக் குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொரோனா தடுப்பூசி போட்டனர்.

    மேற்கண்ட 3 இடங்களிலும் 150-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். முகாமில் மேற்பார்வையாளர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் லீலாவினோத், நர்சு மலர்கொடி மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. டாக்டர் வர்கிஸ்வர், செய்யாறு பூச்சியியல் வல்லுனர் துரைராஜ் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் கணேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டு வியாபாரிகள், கடை ஊழியர்கள், பொதுமக்கள் 70 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.

    நலக் கல்வியாளர் எல்லப்பன், தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகைவேல், நசுருதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கொரோனா தொற்று முதல் அலை வந்த பொழுது வேலைக்கு செல்ல முடியாமல் பல குடும்பங்கள் உணவு இல்லாமல் தத்தளித்தது. இதையெல்லாம் உணர்ந்த முதல்- அமைச்சர் இந்த கொரோனா காலத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.4 ஆயிரம் அறிவித்து 2 தவணையாக சுமார் 2 கோடியே 7 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறும் வகையில் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை இலவசமாக வழங்க உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நாளடைவில் நமது மாவட்டத்தில் இந்நோய் தொற்றே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கொரோனா தொற்று குறைவதற்கு காரணமாக இருந்த, 24 மணி நேரமும் பணியாற்றிய மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அரசின் சார்பில் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மருத்துவமனைகள், கொரோனா பராமரிப்பு மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று ‘ஜீரோ’ என்ற நிலையை உருவாக்க அனைத்து அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை முககவசம், பிளீச்சிங் பவுடர் உள்பட கொரோனா தடுப்பு உபகரணங்கள் போதிய அளவிற்கு இருப்பில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் முககவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது என அரசின் வழிமுறைகளை பின்பற்றாததாக 60 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 35 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    சுமார் 1 லட்சத்து 32 ஆயிரத்து 325 நபர்கள் முதல் தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள். 31 ஆயிரத்து 557 நபர்கள் 2-வது தடுப்பூசியை செலுத்தி கொண்டு உள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொள்வதில் 15 நாட்களுக்கு முன்பு நமது மாவட்டம் பின்தங்கி இருந்தது. ஓரிரு நாட்களில் தடுப்பூசிகள் வந்து விடும். தடுப்பூசி வந்த பிறகு மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கூடுதல் முயற்சிகள் எடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில் திருவண்ணாமலை மாவட்டம் முதல் 3 இடங்களில் உள்ளது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    கொரோனா தொற்றின் 3-ம் அலை வந்தால் அதனை தடுக்க என்னென்ன தேவைகள் தேவை என்று கூறினால் அரசிடம் இருந்து அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுப்பணித் துறை அமைச்சருக்கு போலீசாரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் குடும்ப அட்டை பெறாத 332 தி்ருநங்கைகளுக்கு கொரோனா கால நிவாரண தொகை தலா ரூ.2 ஆயிரம், 275 பெண்களுக்கு இலவச தையல் எந்திரம், வருவாய்த்துறை சார்பில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, 4 பயனாளிகளுக்கு நத்தம் பட்டா, பட்டா மாறுதல் ஆகிய அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். மேலும் கூட்டத்தில் தடுப்பூசி போடுவது குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

    கூட்டத்தில் எம்.பி.க்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.கே.விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, மாவட்ட வன அலுவலர் அருண்லால், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, அனைத்து துறைகளின் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
    போளூர், வந்தவாசி, கண்ணமங்கலத்தில் ஊரடங்கை மீறிய 13 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    போளூர்:

    கொரோனாவை தடுக்க தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. போளூரில் ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறையினர் தாசில்தார் சாப்ஜான் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சிவக்குமார், துப்புரவு ஆய்வாளர் ரவிக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் போளூரில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது போளூர் சுப்பிரமணியம் தெரு, ெரயில்வே ஸ்டேஷன் ரோடு, பஜார் வீதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வியாபாரம் செய்த 7 கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். அந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வரதராஜ், மாறன் மற்றும் போலீசார் சேத்துப்பட்டு, நெடுங்குளம், தேவிகாபுரம் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது பல்வேறு இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்காத 11 கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்து ரூ.5,500 வசூலிக்கப்பட்டது. மேற்கண்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சுற்றித் திரிந்த 40 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

    சேத்துப்பட்டு தாலுகா அளவில் தாசில்தார் பூங்காவனம், சமூக நல தாசில்தார் ஹரிதாஸ், மண்டல துணை தாசில்தார் கோமதி மற்றும் வருவாய்த்துறையினர் தாலுகாவில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது முக கவசம் இல்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.3,500 வசூல் செய்யப்பட்டது.

    வந்தவாசியில், ஊரடங்கை மீறி அனுமதிக்காத கடைகளை திறந்து சிலர் வியாபாரம் செய்வதாக போலீசாருக்கும், அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் வந்தவாசி நகர பகுதியான அச்சரப்பாக்கம் சாலையில் செல்போன் கடை, குளர்பானக்கடையை திறந்து வியாபாரிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் வாடிக்கையாளர்கள் அதிகம் கூடும் வகையில் வியாபாரம் செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    கண்ணமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி ஜவுளிகடைகள், செருப்பு கடைகள் உள்பட பல்வேறு கடைகளை திறந்து வியாபாரம் செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று, திறந்து இருந்த 4 ஜவுளிகடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
    திருவண்ணாமலை அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் கீழே விழுந்த தொழிலாளி லாரி சக்கரத்தில் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் தாலுகா சின்னகாப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 56), கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையிலிருந்து ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

    வேலூர் சாலையில் சீலபந்தல் ஜங்ஷன் வழியே செல்லும்போது முன்னே சென்ற லாரியை அவர்கள் முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது கருணாகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் கருணாகரன் கீழே விழுந்தார். அப்போது அவர்கள் முந்த முயன்ற லாரியின் சக்கரம் கீழே விழுந்த கருணாகரன் மீது ஏறி நசுக்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருணாகரனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×