என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • திவ்யா அளித்த புகாரில் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    சின்னத்திரை நடிகர் அர்னவ், சின்னத்திரை நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்ட இவர்கள் இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்ட புகைப்படத்தை திவ்யா பதிவிட்டதால் ஏற்பட்ட சர்ச்சையாலும், அர்னவ் தன்னுடன் நடிக்கும் மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக அவரது மனைவி திவ்யா கூறிவரும் நிலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் சமூக வலைதளத்தில் இருவரும் பேசும் ஆடியோக்களும் வலம் வந்து கொண்டு இருக்கிறது.

    தற்போது திவ்யா அளித்த புகாரில் அர்னவ் மீது கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அரனவை விசாரணைக்கு ஆஜராகுமாறு போரூர் அனைத்து மகளிர் போலீசார் கூறி வந்த நிலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து வரும் 14-ஆம் தேதி இந்த வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போரூர் அனைத்து மகளிர் போலீசார் அரனவிற்கு சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணைக்கு அர்னவ் ஆஜரான பிறகு இந்த வழக்கின் முக்கிய நகர்வாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க வேண்டி இருந்தது.
    • லேப்டாப்பை போலீசார் மீட்டு சின்னாவை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டோல்கேட் ஜே.ஜே.நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்புச் செல்வன். இவர் திருவள்ளூரில் இயங்கி வரும் பிரபல தனியார் ஆன் லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் தினசரி மினி வேனில் பொருட்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் நகர் முழுவதும் சென்று அதை டெலிவரி செய்து வருவது வழக்கம். கடந்த 1-ந்தேதி வழக்கம் போல் டெலிவரி நிறுவனத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்று பிற்பகல் வரை டெலிவரி செய்தார்.

    பின்னர், டோல்கேட் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டு விட்டு வெளியில் வந்து மீண்டும் வாகனத்தை எடுத்து டெலிவரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால் வாகனத்தில் பார்த்தபோது லேப்டாப் மாயமாகி இருந்தது. காலையில் டெலிவரி நிறுவனத்தில் இருந்து எடுக்கும் போது இருந்த லேப்டாப் மதியம் வீட்டிற்கு சென்றிருந்த போது வேனில் இருந்து மாயமானது தெரியவந்தது.

    இது குறித்து அன்புச் செல்வன் திருவள்ளூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் அன்புச் செல்வன் வீடு மற்றும் அந்த வாகனம் சென்ற இடங்களில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அப்போது மர்ம நபர் ஒருவர் பைக்கின் முன்புறம் லேப்டாப்பை வைத்து எடுத்துச் சென்றது தெரிந்தது. விசாரணையில் அவர் திருவள்ளூர் தலக் காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சின்னா (30) என்பதும் அவர் ஏற்கனவே ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.

    பணியில் இருந்து நிறுத்தப்பட்டதால் இதற்கு பழிவாங்கும் விதமாக அவர் லேப்டாப்பை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்த லேப்டாப்பை போலீசார் மீட்டு சின்னாவை கைது செய்தனர். பின்னர் அவரை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மனித சங்கிலியில் பொன்னேரியில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • காரனோடையில் பஜாரில் இருந்து சோழவரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை, மதசார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி முன்னிறுத்தி சமூக நல்லிணக்க மனித சங்கிலி பொன்னேரி அண்ணா சிலை அருகில் இருந்து ஹரிஹரன் பஜார் வரையும், காரனோடை பஜாரில் இருந்து சோழவரம் வரையும் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட மனித சங்கிலியில் பொன்னேரியில், காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு இடது, வலது, முஸ்லிம் லீக் கட்சி, திராவிட கட்சி உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    காரனோடையில் பஜாரில் இருந்து சோழவரம் வரை 1 கிலோ மீட்டர் தூரம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் காங்கிரஸ் கட்சி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட கட்சி, மக்கள் விடுதலை, பழங்குடி மக்கள் இயக்கம், ஜனநாயக தொழிலாளர் கட்சி உட்பட கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்

    • வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை
    • உள்ளூர் வணிகத்தை நசுக்கும் வகையில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தல்

    பூந்தமல்லி:

    தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேர கட்டுப்பாடு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாங்காட்டில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

    பட்டாசு வெடிக்கும் நேரம் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும், வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி மாங்காட்டில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்த நிர்வாகிகள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால்களை அனுப்பினர்.

    மேலும் தமிழகத்தில் அணு உலைகள், தோல் தொழிற்சாலைகள் இதனால் ஏற்படாத மாசு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் ஏற்பட்டு விடுமா என்றும் இதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பட்டாசு விற்பனையை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்களை பாதுகாக்கவும், உள்ளூர் வணிகத்தை நசுக்கும் வகையில் உள்ள இந்த சட்டத்தை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை துணை தலைவர் ராம.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற தபால் அனுப்பும் போராட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தபால் அனுப்பும் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    • திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் தேவி.
    • தேவி வேலைக்கு சென்ற பிறகு அவரது தாயார் சாவித்திரி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் தேவி (வயது 55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு இறந்ததால் தனது தாயாருடன் வசித்து வருகிறார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் தேவி வேலைக்கு சென்ற பிறகு அவரது தாயார் சாவித்திரி வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் தேவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அமைச்சர் பேசினார்.
    • நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    திருத்தணி:

    குழந்தைகள் தடுப்பு திருமணம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் கூட்டம் திருத்தணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் லலிதா அனைவரையும் வரவேற்று பேசினார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் ஆகியோர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் 18 வயது பூர்த்தி அடையாத பெண்களுக்கு திருமணம் செய்வதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு உரை ஆற்றினர்.

    சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் இந்த குழந்தை திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு உறுதி மொழியும் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    18 வயதுக்கு குறைவான பெண்களுக்கு திருமணம் செய்வதால் உடல் ஆரோக்கியம் பாதிப்பு முதிர்ச்சியில்லாத அனுபவம் மற்றும் கல்வி பாதிப்பு சமூகத்து முன்னேற்றத்திற்கு தடை உள்ளிட்டவை குறித்து அமைச்சர் பேசினார்.

    பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் மாணவிகள் அவர்கள் வாழும் பகுதியில் 18 வயதுக்கு நிரம்பாத பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கு யாரேனும் முயற்சி செய்தால் அதை மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சொல்லி அதற்கு உண்டான அஞ்சல் அட்டையை பெற்றோர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. ஹசரத் பேகம், திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதி பூபதி, நகராட்சி துணைத்தலைவர் ஆ.சாமி ராஜ் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஏராளமான மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் விரிவாக்க அலுவலர் தனலட்சுமி நன்றி கூறினார். மேலும் அனைத்து மாணவிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    • புதிதாக வேப்பம் புண்ணாக்கு அரவை எந்திரத்தில் அரவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
    • டிராக்டர் மற்றும் உரம், பயிர் மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் கூண்டு வேன் உள்ளிட்டவை குறைந்த வாடகையில் வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மெதூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய டிராக்டர் மற்றும் உரம், பயிர் மருந்து உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்லும் கூண்டு வேன் உள்ளிட்டவை குறைந்த வாடகையில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் புதிதாக வேப்பம் புண்ணாக்கு அரவை எந்திரத்தில் அரவையும் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட இணை இயக்குனர் ஜெய்ஸ்ரீ, துணைப் பதிவாளர் ராஜநந்தினி, மெதுர் சசிகுமார் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு இடங்களில் குட்கா புகையிலை விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.
    • போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ்சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண் உத்தரவின் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    தமிழகத்தில் தடை செய்யப்பட்ட கட்கா, புகையிலை் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தாலோ பதுக்கி வைத்தாலோ சொத்துக்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    எனினும் பல்வேறு இடங்களில் குட்கா புகையிலை விற்பனை தொடர்ந்து நடந்து வருகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸ்சூப்பிரண்டு சீபாஸ்கல்யாண் உத்தரவின் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் .மகாலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பொன்னேரி பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது பொன்னேரி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள முட்டை கடையில் குட்கா, புகையிலை விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் அந்த முட்டை கடையில் சோதனை செய்த போது குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதையடுத்து வியாபாரி மசூர் என்பவரை போலீசார் கைது செய்தனர். ரூ.20 ஆயிரம் ரொக்கம், தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    • மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் கொள்ளை கும்பல் உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.
    • மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த மேட்டுப்பாளையம் பொன்னேரி- மீஞ்சூர் சாலையில் ஜோதி சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    காலையில் பக்தர்கள் வந்தபோது கோயில் முன்பு இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு பணம் கொள்ளைபோய் இருந்தது. நள்ளிரவில் வந்த மர்மகும்பல் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். உண்டியலில் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேல் இருந்ததாக தெரிகிறது.

    மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பொன்னியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் கொள்ளை கும்பல் உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர். அடுத்தடுத்து 2 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த சில நாட்களாக மீஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை நடந்து வருகிறது. வழிப்பறி சம்பவங்களும் நடக்கிறது. இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொள்ளையர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.
    • மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியலில் இருந்த 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் ரவுடிகள் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களாக ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இதேபோல் ஆவடி காவல் ஆணையத்துக்கு உட்பட்ட ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்டத்தில் இயங்கி வரும் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது.

    கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் நடைபெற்ற அதிரடி நடவடிக்கைகளில் மொத்தம் 119 ரவுடிகள் பிடிபட்டு உள்ளனர்.

    இவர்களில் 87 ரவுடிகள் மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவுப்படி ரவுடிகள் பட்டியல் தயார் செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் மாவட்டத்தில் உள்ள 24 போலீஸ் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியலில் இருந்த 58 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. இவர்கள் உறுதிமொழியை மீறினால், உடனடியாக கைது செய்யப்பட்டு, 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவர் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • முலாயாம் சிங் யாதவ் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ஒன்றிய தலைவர் சுந்தரம்யாதவ், செயலாளர் முத்து யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயாம் சிங் யாதவ் மறைவையொட்டி தமிழ்நாடு யாதவ மகாசபை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் சார்பில் பொன்னேரி அண்ணா சிலை அருகே அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்டத் தலைவர் கோகுல சேகர் யாதவ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் ஒன்றிய தலைவர் சுந்தரம்யாதவ், செயலாளர் முத்து யாதவ், சேர்மன் ரவி, மாவட்ட துணை செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனியாதவ், ஒன்றிய பொருளாளர் தயாளன் யாதவ், சத்யஜோதி பள்ளி தாளாளர் ஆனந்தபாபு, இளைஞர் அணி ஞானப்பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு்திவு செய்து பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருத்தணி:

    திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே உள்ள தாமனேரி கிராமம் ரங்காபுரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஆதிவராதபுரம் காலனி, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த பஞ்சாட்சரம் என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு்திவு செய்து பஞ்சாட்சரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×