என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.
    • தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற அலகுகளில் மின்உற்பத்தி நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் முதல் நிலையின் 1-வது அலகில் நிலக்கரி துகளாக்கும் பிரிவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்ட 210 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

    தொழில் நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற அலகுகளில் மின்உற்பத்தி நடந்து வருகிறது.

    • பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியை சேர்ந்தவர் லதா.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி மூலம் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியை சேர்ந்தவர் லதா. இவர் மகள் நிர்மலாவுடன் திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இரவு 7 மணி அளவில் மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக திருவள்ளூர் பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி செல்லும் அரசு பஸ்சில் ஜன்னல் வழியாக இருக்கையில் அமர்வதற்கு நகை இருந்த பையை வைத்தார். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் இடம் பிடிக்க லதா வைத்த கை பையில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் 2 செல்போன்களை திருடி தப்பிச்சென்று விட்டனர்.

    இருக்கை கிடைத்த மகிழ்ச்சியில் லதா பையை திறந்து பார்த்தார். நகை செல்போன் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி மூலம் தேடி வருகின்றனர்.

    • முரளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீன் குழம்புடன் உணவு சாப்பிட்டார்.
    • முரளி சாப்பிட்ட மீன் குழம்பு அவரது உயிரை பறித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பழவேற்காடு, குளத்து மேடு, அங்காளம்மன் தெரு வைச் சேர்ந்தவர் முரளி (வயது35). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி குமாரி. இரவு முரளி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மீன் குழம்புடன் உணவு சாப்பிட்டார். பின்னர் வீட்டின் வெளியே கிடந்த நாற்காலியை எடுக்க சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முரளியை மீட்டு பழவேற்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே முரளி இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் சாப்பிட்ட மீன் குழம்பு உயிரை பறித்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திருப்பாலைவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மீன்குழம்பு சாப்பிட்ட சிறிதுநேரத்தில் தொழிலாளி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சுசீலா குடும்பத்தாரிடம் தாங்கள் இப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் கட்டுமான பணிக்காக வந்திருப்பதாக தெரிவித்தனர்.
    • சுசீலா அணிந்து இருந்த 11 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா (65). இவர் தனது தாயார் காளியம்மாள், மகன்கள் சீனிவாசன், மருமகள் மாலதி மற்றொரு மகன் பார்த்திபன் ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது பக்கத்து வீட்டில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த கணேசன், லட்சுமி என்ற தம்பதியினர் புதியதாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர்.

    அவர்கள் சுசீலா குடும்பத்தாரிடம் தாங்கள் இப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் கட்டுமான பணிக்காக வந்திருப்பதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டிலிருந்த சுசீலா, கன்னியம்மாள், பார்த்திபன் ஆகியோர் மயங்கிய நிலையில் இருந்தனர். மேலும் சுசீலா அணிந்து இருந்த 11 பவுன் நகை கொள்ளைபோய் இருந்தது.

    இதுபற்றி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுசீலாவை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுசீலாவிற்கு பாலும், காளியம்மாளுக்கு பிரியாணியும், பார்த்திபனுக்கு மதுவிலும் மயக்க மருந்து கொடுத்து மயக்கம் அடைய செய்தது தெரியவந்தது.

    விசாரணையில் புதிதாக வந்த தம்பதி கணேசன், லட்சுமி ஆகியோர் மாயமாக இருப்பது தெரிய வந்தது. அவர்கள் வாடகைக்கு தங்கி நான்கு நாட்களிலே மயக்க மருந்து கொடுத்து தங்க நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    • நண்பர்கள் இருவரும் சென்னையில் இருந்து நந்தியம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
    • நண்பர்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் தீபக் (வயது 25), வினோத் (24). நண்பர்களான இருவரும் சென்னையில் இருந்து நந்தியம்பாக்கம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

    மீஞ்சூர் அருகே உள்ள கொண்டக்கரை பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளோடு இருவரும் தவறி கீழே விழுந்தனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த தீபக் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வினோத் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வினோத்தும் இறந்தார்.

    நண்பர்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
    • சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

    போரூர்:

    மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா இவர்களது மகள் தியா (வயது2).

    பூர்ணிமா மகள் தியாவுடன் நேற்று முன்தினம் அருகில் உள்ள அக்கா மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்றார் பின்னர் சகோதரிகள் இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது குழந்தை தியா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள். உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி லட்சுமிபுரம் ரோடு பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(38), காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா இவர்களுக்கு தர்சன்(3) என்ற மகனும், கயல்விழி என்ற 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் குழந்தை வீட்டில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்து விசிலை எடுத்து விழுங்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனைக்கண்ட பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு குழந்தையை தூக்கியபோது மூச்சு திணறலால் மயங்கியது.

    இதையடுத்து குழந்தையின் முதுகில் தட்டியபோது வாயிலிருந்து விசில் கீழே விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அப்போதுதான் விசிலை விழுங்கியது தெரியவந்தது. இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன குழந்தை கயல்விழி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

    விளையாடும்போது குழந்தை விசில் விழுங்கி இறந்துபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருத்தணி முருகன் கோவிலுக்கு அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
    • பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத் திகழும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலுக்கு தமிழக மட்டும் அண்டை மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம், திருத்தணி முருகன் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதில் 13 நாட்களில் 63 லட்சத்து 65 ஆயிரத்து 549 ரூபாய் ரொக்கம் மற்றும் 365 கிராம் தங்கம், 5357 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நூற்றாண்டு ஜோதி தமிழ்நாடு முழுவதும் பயணித்து நூற்றாண்டு விழா நடக்க உள்ள மாமல்லபுரத்தை டிசம்பர் 5 அன்று வந்தடையும்
    • தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    பூந்தமல்லி:

    தமிழ்நாட்டில் பொதுசுகாதாரத்துறை 1922-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கர்னல் எஸ்.டி.ரஸ்ஸல் என்பவரை இயக்குநராகக் கொண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு பொது சுகாதார துறை தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவிலேயே முதன்முறையாக வரும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச பொது சுகாதாரத்துறை மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    சென்னையில் நடைபெற உள்ள இந்த பன்னாட்டு பொது சுகாதார மாநாடு வரும் டிசம்பர் மாதத்தில் 3 நாட்கள் நடைபெறும். உலகளாவிய பொதுசுகாதார வல்லுநர்கள், முன்னோடிகள், ஆய்வு அறிஞர்கள் தமிழகத்திற்கு வரவழைத்து அவர்தம் திறன் நுட்பங்களை அனுபவங்களை பல்வேறு தலைப்புகளின்கீழ் நம்மோடு பகிர்ந்துகொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழக பொதுசுகாதாரத் துறை கடந்து வந்த பாதை, சாதனைகளை கண்காட்சியாக இந்த பன்னாட்டு சுகாதார மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

    இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நூற்றாண்டு ஜோதி சென்னையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பயணித்து நூற்றாண்டு விழா நடக்க உள்ள மாமல்லபுரத்தை டிசம்பர் 5 அன்று வந்தடைய உள்ளது. இதில் முதலாவதாக பூந்தமல்லி சுகாதார மாவட்டத்திற்கு நூற்றாண்டு ஜோதி சென்னையிலிருந்து வந்தடைந்தது.

    இதனைத் தொடர்ந்து பொது சுகாதார நிறுவனத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் பொது சுகாதார நிறுவன துணை இயக்குநர் மருத்துவர். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனை தொடர்ந்து பொது சுகாதார துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பொது சுகாதார துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதனை தொடர்ந்து பொது சுகாதார நிறுவன நிர்வாக அலுவலர் குமார் நன்றி கூறினார்.

    இந்த நூற்றாண்டு ஜோதி 3315 கிலோ மீட்டர்கள் பயணித்து விழா நடக்கும் மாமல்லபுரத்தை டிச.5 அன்று அடைகிறது. பூந்தமல்லி சுகாதார மாவட்டத்தை தொடர்ந்து திருவள்ளூர் சுகாதார மாவட்டத்திற்கு இந்த நூற்றாண்டு ஜோதி செல்ல இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • சட்டவிரோதமாக நுழைந்தவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் இன்று தீர்ப்பு வழங்கினார்.

    பூந்தமல்லி:

    வங்காளதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்த டி மகபுல் சேசம் பாட்ஷாவை ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் பிடித்து விசாரித்த போது உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் 2021 ம் ஆண்டு டி மகபுல் சேசம் பாட்சாவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வந்தவர் திருச்சியில் உள்ள அயல்நாட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்டம் அமர்வு நீதிமன்றம் இரண்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, கீழமை நீதிமன்றம் வழங்கிய 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார்.
    • இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

    பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு டீச்சராக இருந்து வரும் ஷர்மிளாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. பள்ளியில் பாடம் நடத்திய பிறகு மாலை நேரத்தில் தனது வீட்டில் வைத்தே மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடம் நடத்தி இருக்கிறார்.

    இவரிடம் அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் பலர் டியூசனில் சேர்ந்து படித்து உள்ளனர். கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவரும் ஆசிரியை ஷர்மிளாவிடம் டியூசனுக்கு சென்று படித்து உள்ளார்.

    இந்த பிளஸ்-2 மாணவனை ஆசிரியை ஷர்மிளா காதல் வலையில் வீழ்த்தி உள்ளார். மாணவனுக்கு பள்ளி பாடத்துடன் சேர்த்து காதல் பாடத்தையும் அவர் கற்றுக்கொடுத்துள்ளார்.

    இப்படி ஷர்மிளா டீச்சர் நடத்திய காதல் லீலையால் பிளஸ்-2 மாணவரும் அவருடன் நெருக்கம் காட்டி உள்ளார். இருவரும் அருகருகே நின்ற படி செல்போனில் புகைப்படங்களையும் எடுத்துள்ளனர்.

    இந்த படங்களை இருவருமே வாட்ஸ்அப்பில் பகிர்ந்து தங்களது பழக்கத்தை அதிகரித்துள்ளனர். இப்படி பிளஸ்-2 ஆசிரியை-மாணவனின் காதல் நீண்டு கொண்டே சென்றுள்ளது.

    டியூசன் முடிந்து வீடு திரும்பிய பிறகும் ஆசிரியை ஷர்மிளா, செல்போனில் தொடர்பு கொண்டு மாணவனுடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் மாணவன் பள்ளிப்படிப்பை முடித்து உள்ளார்.

    இதன் பிறகு ஆசிரியை, மாணவன் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது. ஆசிரியைக்கு வேறு இடத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. இதனால் மாணவனுடன் பேசுவதை ஆசிரியை தவிர்த்து வந்துள்ளார். அதே நேரத்தில் மாணவனோ ஆசிரியையுடன் தொடர்ந்து பேச வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்துள்ளார்.

    இது தொடர்பாக ஆசிரியை ஷர்மிளாவை நேரில் சந்தித்து மாணவன் பேசி உள்ளார். என்னை காதலித்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்வது நியாயமா? என்று கேட்டு ஷர்மிளாவுடன் மாணவன் சண்டை போட்டு உள்ளார்.

    ஆனால் மாணவனுடனான தொடர்பை துண்டிப்பதில் ஆசிரியை உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதன்படி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதனர்.

    இது தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாணவன் பயன்படுத்திய செல்போனை அவனது நண்பர்கள் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஷர்மிளா டீச்சரும், மாணவனும் ஒன்றாக இருக்கும் படங்கள் அதில் இருந்தன.

    நீண்ட நேரமாக இருவரும் செல்போனில் பேசி இருப்பதும் பதிவாகி இருந்தது. இது பற்றி மாணவனின் உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அம்பத்தூர் மகளிர் போலீஸ் ஷர்மிளாவை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது செல்போனையும் வாங்கி பார்த்து ஆய்வு செய்துள்ளனர். அதில் ஷர்மிளா டீச்சர் மாணவனை காதலில் வீழ்த்தியது உறுதியானது.

    பிளஸ்-2 மாணவன் மைனர் என்பதாலும், தவறான கண்ணோட்டத்தோடு பழகிய குற்றத்துக்காகவும் ஷர்மிளா டீச்சர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ஆசிரியை ஷர்மிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஆசிரியை ஷர்மிளா, மாணவனுடன் எந்த மாதிரியான தொடர்பில் இருந்தார்? என்பது பற்றி கண்டு பிடிப்பதற்காக அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் வந்த பின்னரே, ஷர்மிளா டீச்சர் மாணவனோடு உடல் ரீதியான உறவு வைத்திருந்தாரா? என்பது தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இளம் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவனை காதல் வலையில் வீழ்த்தியதும், இதன் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டதும் அம்பத்தூர், கள்ளிகுப்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த சம்பவம் மாணவன் படித்த பள்ளியை சேர்ந்த மற்ற மாணவ-மாணவிகள், ஆசிரியைகள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.

    • திருவள்ளூரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • திருவள்ளூர் நகரத்தில் தெருவோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை குப்பைகள் இல்லாத நகரமாக மாற்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதனை திருவள்ளூர் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், நகராட்சி ஆணையர் க.ராஜலட்சுமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதி வழியாக சென்று திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே நிறைவடைந்தது. இதில் நகர மன்ற துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன் கவுன்சிலர்கள் டி.கே.பாபு, இந்திரா பரசுராமன், பிரபு, மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் நிருபர் களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் நகரத்தில் தெருவோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீட்டில் உள்ள குப்பைகளை தெருவில் அல்லது பொது இடத்தில் கொட்டியது கண்டுபிடிக்கப்பட்டால் குப்பைகளை கொட்டியவருக்கு ரூ.300 அபராதம் விதிக்கப்படும்.

    மேலும் குப்பை கொட்டுபவர்கள் குறித்து படம்பிடித்து அனுப்பினால் ரூ.300 சன்மானம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×