என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • புரட்டாசி கடைசி சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில் சிறப்பு வழிபாடு.
    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    திருவள்ளூர் மாவட்டத்தில் 108 திவ்ய தேசங்களில் உள்ள திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவர் பெருமாள் கோவில், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோவில் உள்ளது. இந்நிலையில் பெருமாளுக்கு உகந்த மாதமாக கருதப்படும் புரட்டாசியில் கடைசி சனிக்கிழமையான இன்று அதிகாலை முதலே ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள், திருநின்றவூர் என்னைப் பெற்ற தாயார் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் குவிந் தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

    இதேபோல் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்க டேச பெருமாள் கோவிலும் திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு
    • அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து வருவதாக, விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சமாதானம் செய்த நிலையில் விவசாயிகள், கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இக்கூட்டத்தில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். அப்போது அரசு அதிகாரிகள் அதனை கவனிக்காமல், செல்போனில் மூழ்கியிருந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

      திருவள்ளூர்:

      தீபாவளிப் பண்டிகையையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது.

      இந்த நிலையில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்வது குறித்து தீயணைப்புத் துறையினர், கடை உரிமையாளர்களுக்கு செயல் முறை விளக்கம் பயிற்சி அளித்தனர்.

      பட்டாசு கடையில் மற்ற பொருள்களை விற்பனை செய்யக் கூடாது, குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தக் கூடாது, ஈரசாக்குப்பை, தண்ணீர், மணல் வாளி உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும், உதிரிப் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது, கடையைச் சுற்றியுள்ள பகுதிகளில் யாரும் புகை பிடிக்காமல் கண்காணிக்க வேண்டும், அதிக ஒளி, வெப்பம் பரவும் மின் விளக்குகளை அமைக்கக் கூடாது, தீயணைப்பு நிலைய தொலைபேசி எண்ணை எழுதி வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்குமாறு வலியுறுத்தப்பட்டது.

      தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு அணைப்பது என்பது குறித்த செயல்முறை விளக்கம், பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு மாவட்ட அலுவலர் பாஸ்கரன், உதவி மாவட்ட அலுவலர் வில்சன், நிலைய அலுவலர் இளங்கோ மற்றும் 50க்கும் மேற்பட்ட பட்டாசு கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

      • இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
      • உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவில் உணவு பொருட்களை தரம் பிரித்து நல்ல முறையில் கையாள வேண்டும்.

      திருவள்ளூர்:

      திருவள்ளூர் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பண்டிகைகால இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

      இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருவள்ளூர், மணவாளநகர், கடம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      இந்தக் கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வணிகர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் அரசின் விதி முறைகளை முறையாக கடைப்பிடித்து நடக்க வேண்டும்.

      இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்யும் இடத்தை நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில், சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். தரமான பொருட்கள் மற்றும் எண்ணையை கொண்டு பலகாரங்களை தயார் செய்ய வேண்டும்.

      மேலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் வண்ண நிறமிகளை சேர்க்கக்கூடாது. தயாரிக்கப்படும் உணவு பொருட்களை முறையாக மூடி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கண்டிப்பாக ஒட்டி வைக்க வேண்டும்.

      உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவில் உணவு பொருட்களை தரம் பிரித்து நல்ல முறையில் கையாள வேண்டும்.

      மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இனிப்பு மற்றும் காரவகை தயாரிக்கும் வணிகர்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

      • வேண்பாக்கம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில். மின்சாரம் சம்பந்தமான நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
      • கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

      பொன்னேரி:

      பொன்னேரியை அடுத்த வேண்பாக்கம் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில். மின்சாரம் சம்பந்தமான நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். பொன்னேரி செயற்பொறியாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.

      இதில் பொன்னேரி, அனுப்பம்பட்டு, கும்மிடிப்பூண்டி ஏலாவூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள், தொழிற்சாலை அதிகாரிகள், பொதுமக்கள், கலந்து கொண்டு பல்வேறு குறைகளை தெரிவித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். கூட்டத்தில் மின்வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

      • ஊழியர்கள் சிலர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது.
      • மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜுடி அபிகெயில் தெரிவித்தார்.

      ஊத்துக்கோட்டை:

      திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் அமைந்துள்ள அண்ணாநகர் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து துறை சோதனைச்சாவடி உள்ளது.

      இதிலுள்ள ஊழியர்கள் சிலர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது.

      இந்த நிலையில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ஜூடி அபிகெயில் தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு நேற்று மாலை சோதனைச் சாவடியில் திடீர் சோதனை நடத்தினர்.

      அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் பணியில் இருந்தார். இரவு 11 மணி வரை சோதனை நீடித்தது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 53,400 பணம் சிக்கியது.

      இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜுடி அபிகெயில் தெரிவித்தார்.

      • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
      • பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

      பெரியபாளையம்:

      தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், பென்ஷன் தொகை ரூ.7,850, அக விலைப்படி 3 சதவீதம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று மாலை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் காலி தட்டு ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

      திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் ஒரு பகுதியாக பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

      இதற்கு ஹென்றி தலைமை தாங்கினார். மணி, ஞானமூர்த்தி, துரைசாமி, நிர்மலா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் உஷாராணி, ஒன்றிய செயலாளர் தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு பேசினார். ஜெயா நன்றி கூறினார்.

      • பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர்.
      • விவசாயிகளான தாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

      பொன்னேரி:

      பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

      இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர்.ஆனால் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் முடிவெடுக்கும் நிலையில் உள்ள பதில் கூறக்கூடிய நிலையில் உள்ள அலுவலர்கள் கூட்டங்களை புறக்கணித்து வருகின்றனர்.

      அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என கூறி விவசாயிகள் கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்பு செய்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளான தாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேளாண்மை துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளாததால் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து வருவதாகவும், இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதுவரை தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

      பின்னர் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்து இந்த கூட்டத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரிலும், பொன்னேரியின் புதிய சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்திற்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு நடைபெற்ற கூட்டத்தில் சார் ஆட்சியர் நம்பிக்கையளிக்கும் விதத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டார். சில பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

      • சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார்.
      • தர்மலிங்கம் மீது உணவு இடைவேளையின்போது கிரேன் மோதியதாக கூறப்படுகிறது.

      கும்மிடிப்பூண்டி:

      கும்மிடிப்பூண்டி அடுத்த பாத்தபாளையம் கிராமத்தில் கட்டுமான பொருட்களுக்கு தேவையான இரும்பு ராடு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

      இந்த நிலையில் சென்னை கத்திவாக்கத்தை சேர்ந்த தர்மலிங்கம் வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்துள்ளார். தர்மலிங்கம் மீது உணவு இடைவேளையின்போது கிரேன் மோதியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

      இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தர்மலிங்கம் சாவில் மர்மம் இருப்பதாக தொழிலாளர்கள் கூறினார்கள். எனவே அவரது சாவில் மர்மம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
      • பெரியபாளையம் ஆர்ப்பாட்டத்திற்கு ஹென்றி தலைமை தாங்கினார்.

      பெரியபாளையம்:

      தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரியும், சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சரின் ஆலோசனைப்படி சமூக நல இயக்குனர் பரிந்துரையின் பேரில் சட்டப்பூர்வமாக பென்ஷன் தொகை ரூ.7,850, அகவிலைப்படி 3 சதவீதம், குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் காலி தட்டேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

      இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, ஹென்றி தலைமை தாங்கினார். மணி, ஞானமூர்த்தி, துரைசாமி, நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சிவலிங்கம், மாவட்ட பொருளாளர் உஷாராணி, ஒன்றிய செயலாளர் தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில்,மாவட்ட தலைவர் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். முடிவில், ஜெயா நன்றி கூறினார்.

      • திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்.
      • கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த தொழிலாளி வினோத்குமாரை கயிறு மற்றும் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.

      திருவள்ளூர்:

      திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). கூலித்தொழிலாளி.

      இவர் நேற்று இரவு வீட்டின் அருகே இருந்த கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.

      அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் சுமார் 20 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்தது. அதில் வினோத்குமார் தத்தளித்தபடி நீந்தி அலறினார்.

      இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

      மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில், நிலைய அலுவலர் இளங்கோவன், சிறப்பு நிலை அலுவலர்கள் ஞானவேல், ஜெயக்குமார், பரத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

      அவர்கள் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த தொழிலாளி வினோத்குமாரை கயிறு மற்றும் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

      • மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது.
      • சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமி நாராயணன், அப்துல் வஹாப் கலந்து கொண்டனர்.

      மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் கலாவதி தலைமையில் தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்தல், கொசு மருந்து அடித்தல், பிளீச்சிங் பவுடர் தெளித்தல், உள்ளிட்ட பணிகள் நடத்து வருகிறது. மாவட்ட பூச்சியியல் வல்லுனர் மதியழகன் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் முகாம் அமைக்கப்பட்டு காய்ச்சல், சளி, இருமல், ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர்கள் லட்சுமி நாராயணன், அப்துல் வஹாப் கலந்து கொண்டனர்.

      ×