என் மலர்
உள்ளூர் செய்திகள்

வினோத் குமாரை கிணற்றில் இருந்து மீட்கும் தீயணைப்பு துறையினர்.
திருவள்ளூர் அருகே 80 அடி ஆழ கிணற்றில் விழுந்த வாலிபர் மீட்பு
- திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்.
- கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த தொழிலாளி வினோத்குமாரை கயிறு மற்றும் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர், கபிலர் நகர் செங்கல்வராயன் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (32). கூலித்தொழிலாளி.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகே இருந்த கிணற்றின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அந்த கிணற்றில் சுமார் 20 அடிக்கும் மேலாக தண்ணீர் இருந்தது. அதில் வினோத்குமார் தத்தளித்தபடி நீந்தி அலறினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில், நிலைய அலுவலர் இளங்கோவன், சிறப்பு நிலை அலுவலர்கள் ஞானவேல், ஜெயக்குமார், பரத் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள் கிணற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த தொழிலாளி வினோத்குமாரை கயிறு மற்றும் ஏணி மூலம் பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி அவரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






