என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீபாவளி பண்டங்களை தரமாக தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்- அதிகாரிகள் எச்சரிக்கை
- இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவில் உணவு பொருட்களை தரம் பிரித்து நல்ல முறையில் கையாள வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு பண்டிகைகால இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருவள்ளூர், மணவாளநகர், கடம்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வணிகர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் உணவு வணிகர்கள் அரசின் விதி முறைகளை முறையாக கடைப்பிடித்து நடக்க வேண்டும்.
இனிப்பு மற்றும் கார வகைகளை தயார் செய்யும் இடத்தை நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில், சுத்தமாக வைத்து பராமரிக்க வேண்டும். தரமான பொருட்கள் மற்றும் எண்ணையை கொண்டு பலகாரங்களை தயார் செய்ய வேண்டும்.
மேலும் ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மறுபடியும் பயன்படுத்தக் கூடாது. பொதுமக்களின் உடலுக்கு கேடு விளைவிக்கும் வண்ண நிறமிகளை சேர்க்கக்கூடாது. தயாரிக்கப்படும் உணவு பொருட்களை முறையாக மூடி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி ஆகியவற்றை கண்டிப்பாக ஒட்டி வைக்க வேண்டும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவில் உணவு பொருட்களை தரம் பிரித்து நல்ல முறையில் கையாள வேண்டும்.
மேலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து இனிப்பு மற்றும் காரவகை தயாரிக்கும் வணிகர்கள் கண்டிப்பாக கடை பிடிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.






