என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
- பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- விவசாயிகளான தாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பொன்னேரி:
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார விவசாயிகள் கலந்துகொண்டனர்.ஆனால் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் முடிவெடுக்கும் நிலையில் உள்ள பதில் கூறக்கூடிய நிலையில் உள்ள அலுவலர்கள் கூட்டங்களை புறக்கணித்து வருகின்றனர்.
அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என கூறி விவசாயிகள் கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்பு செய்து கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளான தாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் வேளாண்மை துறை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அதிகாரிகள் இதில் கலந்து கொள்ளாததால் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தொடர்ந்து வருவதாகவும், இந்தக் கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதுவரை தாங்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல் அளித்து இந்த கூட்டத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரிலும், பொன்னேரியின் புதிய சாராட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்திற்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு நடைபெற்ற கூட்டத்தில் சார் ஆட்சியர் நம்பிக்கையளிக்கும் விதத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு உடனடியாக விசாரணைகள் மேற்கொண்டார். சில பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.






