என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • ஆகாஷ் திருமணம் கிராமத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டார்.
    • போலீசார் ஆகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி அடுத்த காவல்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (28). இவர் மீது 10க்கும் மேற்பட்ட கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகள் உள்ளது.

    இந்நிலையில் ஆகாஷ் திருமணம் கிராமத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் ஆகாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர்.
    • குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் கிராமத்தில் முருகன் கோவிலில் நேற்று முன்தினம் நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதற்கு ஆவடி பாலவேடு கிராமம், கர்ணன் தெருவை சேர்ந்த தினேஷ்பாபு (வயது36) என்பவர் பந்தல் மற்றும் சவுண்ட் சர்வீஸ் அமைத்திருந்தார்.

    இந்நிலையில் அவர் நிகிழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று விடியற்காலை அனைத்தையும் அவிழ்த்து வேனில் ஏற்றிக்கொண்டு தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார்.

    குருவாயல்-காரணி கூட்ரோடு சாலையில் குருவாயில் அரசு ஆஸ்பத்திரி அருகே சென்றபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு வாலிபர்கள் வேனை திடீரென வழிமறித்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் தினேஷ்பாபுவை சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரொக்க பணத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி சென்றனர்.

    இந்தச்சம்பவம் குறித்து தினேஷ்பாபு வெங்கல் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில், செங்குன்றம் காந்தி நகரைச் சேர்ந்த கிஷோர்(வயது 18), செங்குன்றம், நாரவாரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நவீன்பாலாஜி (வயது18), பழைய மகாபலிபுரம், நாவலூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது26), பூரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் (வயது18) ஆகிய நான்கு பேரையும் போலீசார் பிடித்து வந்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர். அப்போது அந்த நான்கு வாலிபர்களும் வேனை வழிமறித்து செல்போன் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    குற்றவாளிகளான நான்கு வாலிபர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் 4 பேரையும் போலீசார் நேற்று மாலை புழல் சிறையில் அடைத்தனர்.

    • திருத்தணி முருகன் கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும், அண்டை மாநிலங்களிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையடுத்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், மற்றும் திருத்தணி முருகன் கோவில் உடன் இணைந்த உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தும் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் விஜயா முன்னிலையில் கோவில் பணியாளர்களை கொண்டு எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் 27 நாட்களில் ரூ.89 லட்சத்து 3 ஆயிரத்து 193 வருவாயாக கிடைத்தது. மேலும் தங்கம் 665 கிராம், வெள்ளி 5 ஆயிரத்து 557 கிராம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பருவமழை முன்எச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அனைத்து துறை அதிகாரிகளுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    பொன்னேரி:

    பருவமழை முன்எச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி, சோழவரம், மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் அடங்கிய அனைத்து துறை அதிகாரிகளுடன் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இதில் வட்டாட்சியர்கள் செல்வகுமார், கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ரவி, குலசேகரன், வாசுதேவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், தீயணைப்பு துறை அலுவலர் சம்பத், வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி பாபு, கால்நடைத்துறை உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களுக்கும் சிவ பெருமான் உணவு அளித்து காப்பதற்கு அடையாளமாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் அகத்தீஸ்வரர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடை பெறாமல் இருந்தது. எனவே அன்னாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி நேற்று சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவர் காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இரவு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் உள் ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    20 ஆண்டுக்கு பிறகு அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இன்று பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது.
    • பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    முருகன்கோவில்களில் ஆறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக திருத்தணி சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று (8- ந்தேதி) பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி 5.12 மணி வரை இருக்கும். பின்னா் பகுதி அளவு சந்திர கிரகணம் 6.19 மணியளவில் முடிவடைகிறது.

    சந்திர கிரகணத்தையொட்டி பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

    ஆனால், திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் சந்திர கிரகணத்தின் போதும், கோவில் நடை திறந்து பக்தா்கள் தொடா்ந்து தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    திருத்தணி முருகன் கோவிலில் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.

    கிரகணத்தை யொட்டி, பரிகார பூஜைகள் முன் கூட்டியே நடத்தப்படுவதால் சூரிய, சந்திர கிரகணத்தின் போது, நடை அடைக்கப்படுவதில்லை என்று கோவில் நிா்வாகத்தினர் தெரிவித்தனர்.

    திருவள்ளூரில் உள்ள வைத்திய ‌‌வீரராகவ பெருமாள் கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். பிற்பகல் 12 மணி முதல் கோவில் நடை அடைக்கப்படுகிறது.

    பின்னர் மீண்டும் நாளை (9-ந்தேதி) காலை முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.
    • எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    திருவள்ளூர்:

    பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகளின் நிதிஉதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை எந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக் கொள்ளலாம்.

    இதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதன்முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், திருவள்ளூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    இந்த எந்திரங்களை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார், சு.சபரிநாதன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கூறும்போது, "ரூ.1, 2, 5 புதிய நாணயம் மற்றும் 10 ரூபாய் நோட்டை எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பைகளை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

    • விடையூர் கிராம சாலை மடத்துக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வாகன சோதனை செய்தனர்.
    • நத்தம் பேடு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரனை கைது செய்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் துறை இயக்குனர் அபாஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்ட் கீதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், திருவள்ளூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராம சாலை மடத்துக்குப்பம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஆந்திராவுக்கு கொண்டு செல்ல ரேஷன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. மொத்தம் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வேன் டிரைவர் திருநின்றவூர் அடுத்த நத்தம் பேடு பகுதியை சேர்ந்த டிரைவர் சந்திரனை கைது செய்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    • காலை, மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி.
    • கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி இலக்குகளை அடைய மாணவர்களுக்கு அறிவுரை.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ஃப்ரஷர்ஸ் டே வெகுவிமர்சையாக நடைபெற்றது.

    காலை மற்றும் மதியம் என இரு பகுதிகளாக நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினர்களாக ஜோஹோ ஸ்கூல் ஆஃப் லேர்ணிங் தலைவர் ராஜேந்திரன் தண்டபாணி, வழக்கறிஞர் அருள்மணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரை நிகழ்த்தினர். 


    கல்லூரியின் இயக்குனர் எம்.வி.எம் சசிகுமார், கல்லூரியின் முதல்வர் முனைவர் என்.பாலாஜி சிறப்பு விருந்தினர்களை கௌரவித்தனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம், இயக்குனர் எம்.வி.எம். சசிகுமார் , ஆலோசகர்கள் பேராசிரியர். கே.ரசாக் மற்றும் வாசு உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றனர்.

    மாணாக்கர்கள் தவறான பாதையில் சென்றுவிடாமல் மிகுந்த ஒழுக்கத்துடன் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தி தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் எஸ். சௌந்தரராஜன் நன்றி தெரிவித்தார். 

    • கோயம்புத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு லாரியில் இரும்பு தளவாட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.
    • லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்கள் திருடப்பட்டது.

    திருத்தணி:

    ஆர்.கே. பேட்டை அடுத்த மோகினிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். லாரி டிரைவர். இவர் கோயம்புத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு தளவாட பொருட்களை ஏற்றி சென்றார்.

    அப்போது நண்பரான பந்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவருடன் சேர்ந்து லாரியில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி விற்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2பேரையும் கைது செய்தனர்.

    • சோழவரம் ஒன்றியம் தச்சூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது.
    • 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஆலோசனை கூட்டம் சோழவரம் ஒன்றியம் தச்சூரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    தி.மு.க. இளைஞரணி அமைப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

    • பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது.
    • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கத்தில் லட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இரவு வழக்கம் போல் பூஜையை முடித்து விட்டு சென்றனர்.

    காலையில் பக்தர்கள் வந்த போது கோவிலில் இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது அதில் மூகமூடி அணிந்த மர்மநபர் சுத்தியலால் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கோணி பையில் அள்ளி செல்வது பதிவாகி இருந்தது. கோவில் உண்டியலில் ஒரு வருடமாக பணம் எடுக்காததால் அதில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருந்து இருக்கலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமிரா காட்சியை வைத்து கொள்ளையனை தேடிவருகிறார்கள்.

    பொன்னேரி, மீஞ்சூர், பகுதிகளில் அடிக்கடி திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×