என் மலர்
திருவள்ளூர்
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி புதிய தேரடி தெருவில் காய்கறிகடை நடத்தி வருபவர் தினகரன் நேற்று வியாபாரம் செய்து விட்டு கடையை மூடி சென்றார். இன்று காலை கடையில் உள்ளே இருந்து புகை வெளிவருவதாக அருகில் உள்ள ஏ.டி.எம் காவலாளி பார்த்து பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடையில் உள்ளே மின் இணைப்பு பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர், கடையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கறிகள் தீயில் கருகி உள்ளன இது குறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார்.
- உடல்நிலை பாதிக்கப்பட்ட நாகராஜை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
செங்குன்றம்:
கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் நாகராஜ் (32). பழைய வண்ணாரப்பேட்டை போலீசார் இவரை போக்சோ வழக்கில் கைது செய்து இருந்தனர். அவர் தண்டனை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
ஜெயிலில் இருந்த போது நாகராஜிக்கு உடலில் சொறி, சிரங்கு நோயால் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சிறையில் உள்ள ஆஸ்பத்திரியில் மாத்திரை மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நாகராஜ் திடீரென தன்னிடம் இருந்த மாத்திரை, மருந்தை அளவுக்கு அதிகமாக தின்றார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நாகராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும்.
- ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பழவேற்காடு ஏரியில் ஒரு தரப்பு மீனவர்கள் அங்குள்ள உப்பங்கழி ஏரியிலும், மற்றொரு தரப்பினர் கடலிலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
சுனாமிக்கு பின்னர் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நீரோட்டத்தின் மாற்றம் காரணமாக ஏரியும் கடலும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதியில் ஏற்பட்டு வரும் மணல் திட்டு குன்றுகளால் அவ்வழியாக படகுகள் கடலுக்குச் செல்லும் பொழுது தரை தட்டி பழுது ஏற்படுகிறது. இதனால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இதையடுத்து முகத்துவாரம் பகுதியில் மணல் அரிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கரையின் இருபுறமும் தூண்டில் வளைவுடன் கூடிய கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தரவேண்டும், கடலுக்கு எளிதாக செல்லவும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏற்ப மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என்றும் மீனவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று பழவேற்காட்டில் மீன்பிடி துறைமுகம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தமிழக அரசு கோரி இருந்தது. அதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் நிதி பங்களிப்போடு செயல்படுத்தப்பட உள்ள மீன்பிடி துறைமுகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக மத்திய கடல் வளம், கடல் சார் பொறியியல் நிறுவன இயக்குனர் வெங்கட் பிரசாத் தலைமையிலான, தமிழக மீன்வளத்துறை தலைமை பொறியாளர் ராஜ் உள்ளிட்டோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட திட்ட மதிப்பீட்டு குழுவினர் பழவேற்காடுக்கு ஆய்வு செய்யவந்தனர்.
அவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏரியில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் மீன்பிடி துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, மீன்பிடி துறைமுகத்தை அமைத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு கடல் மண்ணால் ஏரி அடைப்படும் என்றும் இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் கலெக்டர் தலைமையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் உங்களது கருத்தை பதிவு செய்யுங்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட மீனவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான இடங்களை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது கடலில் மீன்பிடித்து தொழில் செய்யும் ஒரு தரப்பு மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்பட மீன்பிடி துறைமுகம் அமைத்து தர வேண்டும் என மத்திய குழுவினரிடம் வலியுறுத்தினர்.
இது குறித்து மத்திய குழு அதிகாரிகள் கூறும்போது, மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்காக முதற்கட்ட திட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுற்றுச் சூழலுக்கும் மீனவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இன்றி இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். அதன்பின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
- நெற்பயிர்கள் தண்டு, கணுப்பகுதி, கதிர், பூஞ்சைகளால் தாக்கப்பட்டு வெண்மை நிறத்தில் காணப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்
- விவசாயிகளிடம் பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
மீஞ்சூர் வட்டாரத்தில் அடங்கிய திருவெள்ளவாயல், கோளூர், பனப்பாக்கம், சோம்பட்டு, சிறுலப்பாக்கம், மெதுர், வேலூர், தட பெரும்பாக்கம், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களை சுற்றி 30 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. நெற்பயிர்கள் தண்டு, கணுப்பகுதி, கதிர், பூஞ்சைகளால் தாக்கப்பட்டு வெண்மை நிறத்தில் காணப்படுவதாக வேளாண்துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் விஜயசாந்தி, தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் கவிதா, மீஞ்சூர் வேளாண்மை உதவி இயக்குனர் டில்லி பாபு, ஆகியோர் அடங்கிய குழுவினர் மீஞ்சூர் பகுதியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளிடம் பயிர் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
- தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதிகள்படி லாப பங்கீடு செய்ய பேரவை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பகலவன், சங்கர், நடராஜன், லோகநாதன், ஈஸ்வரன், ரேணுகா, தமிழரசன், வங்கி ஊழியர் மகேஸ்வரி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பேரவை கூட்டம் தலைவர் வழக்கறிஞர் ஆர்.பரிமேலழகன் தலைமையில் வங்கியின் துணை தலைவர் பத்மஜா ஜனார்த்தனன் முன்னிலையில் நடந்தது. செயலாளர் யுவராஜ் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் சாந்தி, பொன்னுதுரை, பகலவன், சங்கர், நடராஜன், லோகநாதன், ஈஸ்வரன், ரேணுகா, தமிழரசன், வங்கி ஊழியர் மகேஸ்வரி நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 31.3.2021 முதல் 31.3.2022 -ம் ஆண்டு வரையிலான நிர்வாக அறிக்கையினை வாசித்து பேரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல், 2022-2023-ம் நிதி ஆண்டிற்கான செலவினங்களை அங்கீகரிப்பது, 2020-2021, 2021-2022 ஆகிய வருடங்களின் நிகர லாபத் தொகையினை தமிழ்நாடு கூட்டுறவு சட்ட விதிகள்படி லாப பங்கீடு செய்ய பேரவை அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இளம்பெண்ணின் தாய், கடத்தல் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
- போலீசார் இளம்பெண் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச்சு கொடுத்தனர்.
பூந்தமல்லி:
வியாசர்பாடியை சேர்ந்த 22 வயது இளம்பெண் நேற்று இரவு தனது தாயின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, என்னை மர்ம நபர்கள் கடத்தி வைத்து உள்ளனர். ரூ.50 ஆயிரம் பணத்தை நேரடியாக கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே விடுவிப்பார்கள். எனது செல்போனையும் பிடுங்கி வைத்து உள்ளனர் என்று தெரிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய், கடத்தல் குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் இளம்பெண் பேசிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேச்சு கொடுத்தனர். இதில் பேசியநபர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் கடத்தல் நபர்கள் பூந்தமல்லி அருகே இருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே மலையம்பாக்கம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலைஅருகே ஒரு இடத்தில் நின்ற இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரித்த போது, கோயம்பேட்டில் நின்ற போது ஆட்டோவில் வந்த ஒரு வாலிபரும், இரண்டு பெண்களும் சேர்ந்து தன்னை கடத்தி வந்ததாகவும் பின்னர் பணம் கேட்டு மிரட்டி விட்டு தன்னை இங்கு இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அவர் கூறிய இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவில் இளம்பெண் நிற்பது பதிவாகி இருந்தது.
அதில், இளம்பெண்ணுடன் இரண்டு தோழிகள், ஒரு ஆண் நபர் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி டீக்கடையில் அமர்ந்து ஜாலியாக டீ குடித்து விட்டு செல்வதும் பின்னர் அந்த இளம்பெண் தனது தோழியின் செல்போனை வாங்கிவிட்டு தனியாக சென்று பேசுவதும் பதிவாகி இருந்தது.
இதனை காட்டி இளம்பெண்ணிடம் போலீசார் விசாரித்தபோது அவர் கடத்தல் நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.
ஆண்நண்பரிடம் ஜாலியாக ஊர்சுற்றி செலவு செய்ய தாயிடம் பணம் பறிப்பதற்காக இதுபோன்று நாடகமாடியதாக இளம் பெண் போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து இளம் பெண், அவரது தோழிகள், ஆண் நண்பரையும் போலீசார் எச்சரித்தனர். மேலும் இளம்பெண்ணுக்கு அறிவுரை கூறி தாயுடன் அனுப்பி வைத்தனர்.
- இரு வீட்டாருடனும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை.
- திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக மணமகன் வீட்டார் உறுதி அளித்தனர்.
ஆரணி:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அத்திகுளம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் ஹேமகுமார் (வயது24) என்பவரும், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், சிறுபுழல்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த வினிதா(வயது21) என்ற இளம் பெண்ணும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு வீட்டாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதல் ஜோடி, ஐயர் கண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் இன்று முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், ஆரணி காவல் நிலையத்திற்கு வந்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதை தெரிவித்தனர். மேலும் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையிலான போலீசார் இரண்டு வீட்டாருடனும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடந்து மணமகன் ஹேமகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது மகனின் திருமணத்தை ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர் திருமண ஜோடியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இப்பிரச்சினையால் ஆரணி காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- ஆகாஷ் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
- ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். கைப்பந்து வீரர். இவர் நேபாள நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் உள்ள ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெறும் போட்டியில் கலந்து கொள்ள கடந்த 21-ந்தேதி சென்றிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாள நாட்டிற்கும் தமிழகத்திற்கும் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்றதும் ஓய்வு எடுக்க ஆகாஷ் தனது அறைக்கு சென்றார். அப்போது ஆகாஷ் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தார்.
இதனை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆகாஷ் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்தில் இருந்து ஆகாஷ் உடலை கொண்டு வர தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர் கைவண்டுர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு ஆகாசின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆகாசின் உடல் வைக்கப்பட்டது. அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆகாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் கைவண்டுர் பகுதியில் ஆகாசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா அம்பத்தூர் வட கிழக்கு மண்டல் தலைவராக சற்குரு பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
- சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் மு.மனோகரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அம்பத்தூர்:
சென்னை மேற்கு மாவட்ட பா.ஜனதா அம்பத்தூர் வட கிழக்கு மண்டல் தலைவராக சற்குரு பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் ஜி.பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர்கள் தியாக ராஜன், சுப்பிரமணிய ரெட்டியார், சுஜாதா ஜீவன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் மு.மனோகரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அம்பத்தூர் வடகிழக்கு மண்டல் தலைவராக நியமனம் செய்யப்பட்ட சற்குரு பி.செந்தில குமார், மாநிலத் தலைவர், மாநிலத் துணைத்தலைவர், மாவட்ட தலைவர், மாவட்ட பொது செயலாளர்கள் ஆகியோரை சந்தித்து நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றார்.
- பூந்தமல்லி வட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு தாசில்தார் செல்வம் தலைமையில் இலவச வேட்டி, சேலைகள் அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது.
- சில ரேசன் கடைகளுக்கு மட்டும் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை குப்பை ஏற்றி செல்லும் டிராக்டர் குப்பை வண்டியில் அனுப்பப்பட்டது.
பூந்தமல்லி:
பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் 15-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை பரிசாக வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி, சேலைகள் அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் இருந்து ரேசன்கடைகளுக்கு அனுப்பும் பணிநடக்கிறது.
இந்த நிலையில் பூந்தமல்லி வட்டத்தில் உள்ள ரேசன் கடைகளுக்கு தாசில்தார் செல்வம் தலைமையில் இலவச வேட்டி, சேலைகள் அனுப்பும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் சில ரேசன் கடைகளுக்கு மட்டும் பொங்கல் இலவச வேட்டி, சேலைகளை குப்பை ஏற்றி செல்லும் டிராக்டர் குப்பை வண்டியில் அனுப்பப்பட்டது. இது பொதுமக்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து தாசில்தார் செல்வத்திடம் கேட்டபோது, ரேசன் கடைகளுக்கு இலவச இலவச வேட்டி சேலைகள் அனுப்பும் பணி நடந்து வருகிறது. வண்டியில் சென்றது பொங்கல் பரிசு கிடையாது.
வேட்டி, சேலைதான். ஆனால் அதனை கொண்டு செல்ல பயன்படுத்தியது குப்பை வண்டியா? என்பது எனக்கு தெரியாது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என்றார்.
- நசரத்பேட்டை சிக்னல் அருகே மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டு இருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சிலை பீடத்துடன் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நேருசிலை அமைக்கப்பட்டு இருந்த பீடம் மீது வேகமாக மோதியது. இதில் பீடம் மற்றும் நேரு சிலை உடைந்து சேதம் அடைந்தது. இதனை கண்டித்து காங்கிரஸ்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கார் டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை காயம் அடைந்தார். நேரு சிலை சேதம் அடைந்தது தொடர்பாக நசரத்பேட்டை வட்டார காங்கிரஸ்தலைவர் வெங்கடேசன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
- திருத்தணி அருகே உள்ள எல்லம் பள்ளியில் கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.
- கல்குவாரி இயங்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள எல்லம் பள்ளியில் கல்கு வாரி செயல்பட்டு வருகிறது.
இங்கு அதிக சத்தத்துடன் கற்களை உடைக்க வெடி வைப்பதாகவும், அரசு அனுமதித்ததை விட கூடுதலாக கற்கள் தோண்டி எடுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
மேலும் கல்குவாரிக்கு செல்லும் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், வெடி வைத்து தகர்க்கும் கற்கள் அருகில் உள்ள விளை நிலங்களில் விழுவதாகவும், விவசாய கிணற்றில் மண் சரிவு ஏற்படுவதாகவும் தெரிவித்து வந்தனர்.
இதனால் அப்பகுதியில் கல்குவாரி இயங்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இந்த நிலையில் கல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்குவாரிக்கு சென்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் லாரிகளை சிறைபிடித்து அங்கிருந்தவர்களிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






