என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருத்தணி அடுத்த அம்மையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம். (வயது36). இவர் பிள்ளைபாக்கம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.

    இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் பிள்ளைபாக்கத்தில் இருந்து அம்மையார்குப்பம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே சென்றது. இதனால் அருணாச்சலம் திடீர் பிரேக் போட்டார். இதில் நிலைதடுமாறிய அருணாச்சலம் மோட்டார் சைக்கிளோடு தவறி கீழே விழுந்தார்.

    பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலம் உயிர் இழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர் அடுத்த சீதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்யா (40). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 19 -ந் தேதி மோட்டார் சைக்கிளில் திருத்தணிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    திருவள்ளூரை அடுத்து கைவண்டூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோத கட்டுப்பாட்டை இழந்த சத்யா மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார்.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சத்யா சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்தார்.

    • மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • கன்னிகைப்பேர் கிராமத்தில் பதட்டம் நிலவுகிறது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் திராவிடபாலு ஆவார். திமுக ஒன்றிய கழகச் செயலாளராகவும், கன்னிகைப்பேர் ஊராட்சிமன்ற தலைவராகவும் பதவி வகித்து வந்தவர் ஆவார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    இந்நிலையில், திராவிடபாலுவின் தம்பி சத்தியவேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், திராவிடபாலு குடும்பத்தினருக்கும்,சத்தியவேலு குடும்பத்தினருக்கும் இடையே நிலம் பாகப்பிரிவினை செய்து கொள்ளுவது தொடர்பாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு இது சம்பந்தமாக இரண்டு குடும்பங்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில்,திராவிட பாலுவின் மனைவி செல்வி பாலு(வயது55),மகன் முருகன் (வயது42),மருமகள் ரம்யா(வயது32),முருகனின் மகன் கருணாநிதி(வயது15) ஆகியோருக்கும் சத்திய வேலுவின் மகன் பவுன்குமார் என்ற விஷால்(வயது22) என்பவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

    பின்னர், பிரச்சனை அடித்தடியாக மாறியது. அப்போது அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து விஷால் தனது பெரியம்மா செல்வி பாலு,பெரியப்பாவின் மகன் முருகன், மருமகள் ரம்யா,பேரன் கருணாநிதி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கினாராம். இதில், நான்கு பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி ரம்யா பரிதாபமாக பலியானார். மூன்று பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சனையால் கன்னிகைப்பேர் கிராமத்தில் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும்,பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும்,சொத்துப்பிரச்சினையால் இந்த கொலை சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    ஆரணி பஸ் நிறுத்தம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆதிலட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று பெருமாள் அலங்கார ஸ்தாபன திருமஞ்சனம் எனப்படும் மகா அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் அதன் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், ஆரணி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதன் பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
    • சிறுவாபுரி முருகன் கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திருவள்ளூர்:

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள்கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் இருந்த வீரராகவரை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் வழிபட்டனர். அதிகாலையிலயே திரளாள பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக இருந்தது.

    தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஜெயா நகரில் அமைந்துள்ள மகாவல்லப கணபதி ஆலயத்தில் புத்தாண்டையொட்டடி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், பூங்காநகரில் உள்ள யோக ஞான தட்சிணாமூர்த்தி, மற்றும் ஞான மங்கள சனீஸ்வர பகவானுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.

    சத்திய மூர்த்தி தெருவில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடந்தது. பொது மக்கள், இளைஞர்கள் நள்ளிரவில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    திருத்தணி முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய இன்றுஅதிகாலை முதலே குவிந்தனர். மலைக் கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து வழிபட்டு சென்றனர். காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மற்றும் சங்கர மடத்தில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

    அதிகாலை முதலே புத்தாடை அணிந்து குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

    உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் காலை முதலே கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருப்பதால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக தொடர்ந்து காணப்படுகிறது.

    இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவில், பெரிய பாளையம் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    • மர்ம கும்பல் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.
    • மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை ஊராட்சியில் துணைத்தலைவராக உள்ளவர் ஹரிகிருஷ்ணன். ஏற்கனவே இந்த ஊராட்சியில் தலைவராக இருந்த மனோகரன் என்பவர் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து தற்போது ஹரிகிருஷ்ணன் ஊராட்சி தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவர் அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுத்து செய்து வரும் பணியை பார்வையிட்டார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஹரிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கி தப்பி சென்று விட்டனர்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பிரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
    • போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆரம்பாக்கம்:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள தனியார் குடியிருப்பு வளாகத்தில் வீடு கட்டி வசித்து வருபவர் நாகராஜ் (வயது 28). ரெயில்வே ஊழியரான இவர் கடந்த 28-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யர்கண்டிகையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றிருந்தார்.

    நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்துபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பிரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, 2 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் ஆரம்பாக்கம் போலீசர் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
    • போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

    அம்பத்தூர்:

    செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்தவர் டெய்சி(42).

    இவர் அப்பகுதியில் உள்ள மகளிர் குழுக்களுக்கு கடன் வாங்கித் தருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கணவனை இழந்த டெய்சி அருகில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார்.

    அதே ஓட்டலில் வேலை செய்த நபரின் மூலம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஓட்டல் ஊழியர் சுரேஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    அவரும் அந்த குழுவில் இணைந்ததால் டெய்சி அவருக்கு கடன் கொடுத்து உள்ளார். சில தவணைகளை கட்டிய அவர் மீதமுள்ள தவணையை செலுத்தாமல் இருந்துள்ளார்.

    இதனையடுத்து அவரிடம் தவணையை கட்டுமாறு பல முறை டெய்சி கூறியுள்ளார். இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு சுரேஷ் மொத்த தவணையையும் கட்டுவதாகவும் சோழவரம் பெரியார் நகரில் தான் தங்கியுள்ள அறைக்கு வந்து வாங்கி கொள்ளுமாறும் அழைத்துள்ளார்.

    இதனை நம்பி அங்கு வந்த டெய்சிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை அவரின் செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார்.

    பின்னர் அதனை காட்டி பலமுறை டெய்சியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் அடிக்கடி பணம் கேட்டும் மிரட்டியுள்ளார்.

    இதற்கு டெய்சி மறுக்கவே அந்த வீடியோவை டெய்சியின் மகனுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து டெய்சி கடந்த 5-ந்தேதி அம்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி லட்சுமி, தலைமறைவான சுரேசை தேடிவந்தார். நேற்று காலை செல்போன் டவர் மூலம் அவர் ரெட்டேரி பகுதியில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ராதா உள்பட 5 போலீசார் அடங்கிய குழு அங்குள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருந்த சுரேசை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர் பணத் தேவைக்காக இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.

    மேலும் அவர் வீடியோ எடுத்த செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திருமணத்தின் போது நிவேதாவுக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    • தற்கொலைக்கு முன்பு நிவேதா அவரது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    போரூர்:

    சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மனைவி ராவணம்மா. வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் நிவேதா (வயது23).

    நிவேதாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்காரரான சங்கர் என்பவருடன் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு நேகா என்கிற 3 வயது பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது நிவேதாவுக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கூடுதலாக நகை மற்றும் பணம் கேட்டு நிவேதாவை அவரது கணவர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    மேலும் விவாகரத்து பெற்று செல்லுமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி நிவேதா தனது தாய் ராவணம்மாவிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆந்திரா சென்ற ராவணம்மா கடந்த 28ந் தேதி நிவேதாவை காரம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    கடந்த சில நாட்களாகவே மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த நிவேதா நேற்று மாலை திடீரென வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் நிவேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தற்கொலைக்கு முன்பு நிவேதா அவரது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதில் "கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டு உள்ளது.

    இதையடுத்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். மேலும் நிவேதாவுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    • மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் திடீரென பீர் பாட்டிலை எடுத்து தீனதயாளன் தலையில் ஓங்கி அடித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் அடுத்த நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் தீனதயாளன் (வயது42). இவர் பன்னீர் நகரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நேற்று இரவு மது அருந்தினார். அப்போது அங்கிருந்த வாலிபர்களுக்கும் தீனதயாளனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மதுபோதையில் இருந்த அந்த வாலிபர்கள் திடீரென பீர் பாட்டிலை எடுத்து தீனதயாளன் தலையில் ஓங்கி அடித்தனர்.

    இதில் மண்டை உடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து நொளம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • ஜமுனாக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

    திருவள்ளூர்:

    சென்னை ஆவடி நந்தனம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ஜமுனா (48). திருவள்ளூர் பூங்கா நகரில் ஜமுனாவின் உறவினர் இறந்தார். இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜமுனா தனது மகன் பிரசாந்த் (25) துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    நிகழ்ச்சி கலந்து கொண்டு மீண்டும் ஆவடி நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ராமாபுரம் அருகே சாலையில் இருந்து வேகத்தடையின் மீது மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கும் போது பின்னால் அமர்ந்திருந்த ஜமுனா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் ஜமுனாக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதைக்கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் இல்லாமல் ஜமுனா பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

    • திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு இருந்து வந்தது.
    • திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு இருந்து வந்தது. இன்று காலை முதல் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    இதில் திருவள்ளூர், கனகம்மாசத்திரம், பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி என மாவட்டத்தின் உள்ள பல்வேறு பகுதிகளில் கடும் பனிப் பொழிவு காணப்பட்டது.

    மேலும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டப்படி சென்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்டவாள பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரெயில்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.

    இதனால் திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன. மேலும் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • தேங்கி இருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட மேப்பூர் ஊராட்சி, நேரு தெரு பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியது.

    மழை ஓய்ந்த பிறகும் இந்த பகுதியில் மழை நீர் வடியவில்லை. தற்போது மழை நீரோடு கழிவுநீரும் அதிக அளவில் கலந்துள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் வீடுகளை சுற்றி கழிவுநீர் அதிக அளவில் தேங்கி மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.

    இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகிகள் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு சமரசம் பேச வந்த தாசில்தாரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரபரப்பு ஏற்பட்டது. தேங்கி இருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    ×