என் மலர்
உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே கழிவுநீர் வீடுகளை சூழ்ந்ததால் பொது மக்கள் சாலை மறியல்
- பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- தேங்கி இருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட மேப்பூர் ஊராட்சி, நேரு தெரு பகுதியில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக அந்த பகுதி முழுவதும் மழை நீர் தேங்கியது.
மழை ஓய்ந்த பிறகும் இந்த பகுதியில் மழை நீர் வடியவில்லை. தற்போது மழை நீரோடு கழிவுநீரும் அதிக அளவில் கலந்துள்ளது. இதனால் இந்த பகுதி முழுவதும் வீடுகளை சுற்றி கழிவுநீர் அதிக அளவில் தேங்கி மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகிகள் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அந்த பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு சமரசம் பேச வந்த தாசில்தாரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாரபரப்பு ஏற்பட்டது. தேங்கி இருக்கும் நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.






