என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
    • விபத்துக்கு காரணமான லாரியை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

    பெரியபாளையம்:

    சென்னை, மதுரவாயல் அருகே உள்ள நெற்குன்றம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ஆதிமூலம் (வயது54). இவர் மாநகரப் போக்குவரத்துக் கழக அம்பத்தூர் பணிமனையில் பிராட்வே முதல் திருநின்றவூர் வரையில் இயக்கப்படும் தடம் எண் 71 ஈ என்ற பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், இன்று மதியம் தனது தம்பி கார்த்திகேயன்(வயது50) என்பவரது மோட்டார் சைக்கிளில் அமர்ந்து கொண்டு செங்குன்றம் நோக்கி சென்றார். பூச்சிஅத்திப்பேடு-செங்குன்றம் நெடுஞ்சாலையில் வாணியன்சத்திரம் மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது சாலையில் கொட்டப்பட்டிருந்த கற்கள் மீது மோட்டார் சைக்கிள் சென்றபோது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

    அப்பொழுது இவர்களுக்கு பின்னால் வந்த லாரி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ஆதிமூலத்தின் தலையில் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே ஆதிமூலம் பலியானார். கார்த்திகேயன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த வெங்கல் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான ஆதிமூலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இந்த விபத்துக்கு காரணமான லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    • மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.
    • குண்டும் குழியுமான சாலையால் பெண் என்ஜீனியர் பலியாகி விட்டார்.

    பூந்தமல்லி:

    போரூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகள் ஷோபனா (வயது22). கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இன்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது.

    இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய ஷோபனாவின் மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

    அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லாரியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷோபனா பரிதாபமாக இறந்தார்.

    மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் பலியான அக்காளின் உடலை கண்டு கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

    விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பலியான ஷோபனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    மாணவர் ஹரீஸ் நீட் தேர்வுக்காக பள்ளியிலேயே நடக்கும் சிறப்பு வகுப்பில் படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு செல்ல தாமதமானதால் அவர் அக்காள் ஷோபனாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். குண்டும் குழியுமான சாலை ஷோபனாவின் உயிரை காவு வாங்கிவிட்டது.

    மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

    இந்த நிலையில் குண்டும் குழியுமான சாலையால் பெண் என்ஜீனியர் பலியாகி விட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களை மணல், ஜல்லிகள் கொட்டி சீரமைக்கப்பட்டது.

    • பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அதிக அளவு நீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • போலீசார் திரிசனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடி அடுத்த மோரை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் குமார். இவரது மகன் திரிசன்(13). இவர், வீராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை திரிசனம் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான சுனில்குமார் என்பவருடன் மோரை சுடுகாடு அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர்.

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அதிக அளவு நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் தண்ணீரின் வேகத்தில் திரிசன் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர் சுனில்குமார் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து திரிசனின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆவடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் நேற்று இரவு வரை தேடியும் திரிசனை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் தேடும்பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை மோரை வீராபுரம் முருகன் கோயில் அருகே கிருஷ்ணா கால்வாயில் மாணவன் திரிசனின் உடல் பிணமாக மிதந்தது. இதனை கண்டு பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. போலீசார் திரிசனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.
    • மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விவேகானந்தா முதல் குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

    சுரேஷ் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் சுரேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதை கண்ட சுரேஷின் மனைவி பவானி ஏன் வேலைக்கு செல்லாமல் உள்ளீர்கள் என்று கண்டித்தார்.

    இதனால் மனவேதனை அடைந்த சுரேஷ் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதுகுறித்து சுரேஷின் மனைவி பவானி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப் இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் போலீசார் திருவள்ளூர் பஸ் நிறுத்தத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே இருந்த பீடா கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பது தெரிந்தது.

    இதையடுத்து காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த சர்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர். கடையில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குட்கா, புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.

    • பொன்னேரியில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்குவேன் சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த தச்சூர் கூட்டுரோடு பகுதியில் இருந்து பொன்னேரியில் உள்ள கடைகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சரக்குவேன் சென்றது. மீஞ்சூரைச் சேர்ந்த டிரைவர் மணிவண்ணன் வேனை ஓட்டினார்.

    பொன்னேரி பஜாரில் அவர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். அப்போது வண்டியில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை செய்து வந்த தச்சூர் கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்த பூபதி (22) என்பவர் வேனை ஓட்டினார்.

    இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடீ எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் ஷேர் ஆட்டோ மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த கோடீஸ்வரன், லதா மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த பொன்னேரியைச் சேர்ந்த மாரியம்மாள், ஆமூரைச் சேர்ந்த கலில், ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் படுகாயம் அடைந்த கோடீஸ்வரன், லதா ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பூபதியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.
    • ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

    இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பூண்டி ஏரியில் இருந்து அதிகபட்சமாக 10 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டது. இதேபோல் புழல், செம்பரம்பாக்கம், ஏரிகளில் இருந்தும் குறைந்த அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது.

    இன்று காலை நிலவரப்படி குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் மொத்தம் 10 ஆயிரத்து 793 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 சதவீதம் ஆகும்.

    இதற்கிடையே ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.

    ஏற்கனவே பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் 550 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.68 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    ஏரிக்கு 246 கனஅடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 130 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 19.69 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவான 3,300 மி.கனஅடியில் 2,950 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்காக 187 கனஅடி நீர் வெளியேற்றப் படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3,231 மி.கனஅடி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 800 கனஅடி தண்ணீர் வருகிறது. 803 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1,081 மி.கனஅடியில் 837 மி.கன அடி தண்ணீரும். கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளவான 500 மி.கன அடியில் 486 மி.கன அடி தண்ணீரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • நெடுவரம்பாக்கம் ஊராட்சி காலனியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் முழு உருவச்சிலை உள்ளது.
    • அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம் ஊராட்சி காலனியில் சுமார் 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கரின் முழுஉருவச்சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் இரும்பு கூண்டின் பூட்டை உடைத்தனர். மேலும் அம்பேத்கர் சிலையின் கை, முகத்தை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பி சென்று விட்டனர். இன்று காலை அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பேத்கார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அசம்பாவிதத்தை தடுக்க அப்பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முன்பும் கடந்த ஆண்டு இதே சிலை சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • திருவள்ளூரை அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் உள்ளது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த பிரயாங்குப்பம் கிராமத்தில் தனியார் முதியோர் இல்லம் உள்ளது. இங்கு உதயநாத் பரிடா (29) என்பவர் தங்கி வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விளக்குகள் எரியாததால் உதயநாத் பரிடா சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி பலியானார்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எண்ணூர் அன்னை சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் தினேஷ்.
    • எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், மணி, மதன், கருப்பு மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்

    திருவொற்றியூர்:

    எண்ணூர் அன்னை சத்தியவாணி முத்து நகரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 25) ரவுடி. இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ராஜேசின் நண்பர்கள், தினேசை மடக்கி பிடித்து அரிவாளை பறித்தனர். மேலும் அதே அரிவாளால் தினேசை சரமாரியாக வெட்டினர்.

    இதில் தினேஷ் படுகாயம் அடைந்தார். அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ், மணி, மதன், கருப்பு மணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • சத்திய வேலுவின் மகன் பவுன்குமார் என்கிற விஷால் இரும்பு கம்பியால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார்.
    • சொத்து தகராறில் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் செல்வி. இவரது மகன் முருகன். அவரது மனைவி ரம்யா (வயது32).

    செல்வியின் கணவர் திராவிடபாலு ஏற்கனவே இறந்து போனார்.திமு.க.வில் ஒன்றிய செயலாளராகவும், கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவராகவும் இருந்த அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார்.

    திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு அதே பகுதியில வசித்து வருகிறார்கள். இவர் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக தற்போது உள்ளார்.

    இந்தநிலையில் திராவிட பாலுவின் குடும்பத்தினருக்கும், சத்தியவேலுவின் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதனால் இருகுடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று இரவும் நிலம் தொடர்பாக அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கல்லாலும், கட்டையாலும் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த சத்திய வேலுவின் மகன் பவுன்குமார் என்கிற விஷால் இரும்பு கம்பியால் ரம்யாவை சரமாரியாக தாக்கினார். இதனை தடுக்க முயன்ற அவரது கணவர் முருகன், மகன் கருணாநிதி மற்றும் செல்வி, ஆகியோரையும் தாக்கி விட்டு விஷால் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இந்த தாக்குதலில் ரம்யா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். மேலும் தலையில் பலத்த காயம் அடைந்த ரம்யா உயிருக்கு போராடினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காயம்அடைந்த 4 பேரையும மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா பரிதாபமாக இறந்தார்.

    படுகாயம்அடைந்த செல்வி, முருகன், கருணாநிதி ஆகிய 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்ததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் பெரியபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே தப்பி ஓடிய விஷாலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது .கைதான விஷால் என்ஜினீயரிங் முடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சொத்து தகராறில் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரைச் சேர்ந்த சீயஞ்சேரி பகுதியைச்சேர்ந்தவர் விஜய் (18). ஆட்டோ டிரைவர். இவருக்கும் காக்களூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான 26 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

    இந்த நிலையில் இளம்பெண்ணை விஜய் தனது ஆட்டோவில் அழைத்து வந்தார். பின்னர் அவர்கள் தனிமையில் இருந்தனர்.

    அப்போது அங்கு விஜய்யின் நண்பர்களான சாம்ராஜ், சதீஷ் ஆகியோரும் அங்கு வந்து தங்களது ஆசைக்கு இணங்கும்படி இளம்பெண்ணை வற்புறுத்தினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோர் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    பின்னர் இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    தனக்கு நேர்ந்த கொடுமையால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் புள்ளரம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் விஜய் மற்றும் அவரது நண்பர்கள் சாம்ராஜ், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    திருவள்ளூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×