குண்டும், குழியுமான ரோட்டில் மோட்டார் சைக்கிளோடு விழுந்த பெண் என்ஜினீயர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி

மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.குண்டும் குழியுமான சாலையால் பெண் என்ஜீனியர் பலியாகி விட்டார்.
குண்டும், குழியுமான ரோட்டில் மோட்டார் சைக்கிளோடு விழுந்த பெண் என்ஜினீயர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
Published on

பூந்தமல்லி:

போரூர் லட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகள் ஷோபனா (வயது22). கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது தம்பி ஹரீஸ். முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று காலை 7.30 மணியளவில் ஷோபனா, தனது தம்பியை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் நொளம்பூர் அருகே மதுரவாயல் பைபாஸ் சாலை, சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக இருந்தது.

இந்த நிலையில் சாலையில் இருந்த பள்ளத்தில் ஏறி இறங்கிய போது நிலை தடுமாறிய ஷோபனாவின் மோட்டார் சைக்கிள் அருகில் சென்ற வேன் மீது உரசியது. இதில் அவர் தம்பியுடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளோடு சாலையில் விழுந்தார்.

அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த மணல் லாரியின் சக்கரத்தில் ஷோபனா சிக்கிக்கொண்டார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ஷோபனா பரிதாபமாக இறந்தார்.

மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்தபோது எதிர்ப்புறம் விழுந்ததால் ஷோபனாவின் தம்பி ஹரீஸ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர் பலியான அக்காளின் உடலை கண்டு கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது.

விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் பலியான ஷோபனாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக போரூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மாணவர் ஹரீஸ் நீட் தேர்வுக்காக பள்ளியிலேயே நடக்கும் சிறப்பு வகுப்பில் படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்கு செல்ல தாமதமானதால் அவர் அக்காள் ஷோபனாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். குண்டும் குழியுமான சாலை ஷோபனாவின் உயிரை காவு வாங்கிவிட்டது.

மதுரவாயல் சர்வீஸ் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இதனால் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் குண்டும் குழியுமான சாலையால் பெண் என்ஜீனியர் பலியாகி விட்டார். இதைத்தொடர்ந்து இன்று காலை அப்பகுதியில் உள்ள சாலையில் பள்ளங்களை மணல், ஜல்லிகள் கொட்டி சீரமைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com