என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    போரூர் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை
    X

    போரூர் அருகே வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் போலீஸ்காரர் மனைவி தற்கொலை

    • திருமணத்தின் போது நிவேதாவுக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.
    • தற்கொலைக்கு முன்பு நிவேதா அவரது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    போரூர்:

    சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன். இவரது மனைவி ராவணம்மா. வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் நிவேதா (வயது23).

    நிவேதாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்காரரான சங்கர் என்பவருடன் திருமணம் நடந்தது.

    இவர்களுக்கு நேகா என்கிற 3 வயது பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது நிவேதாவுக்கு 12 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கம் சீர்வரிசையாக கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் கூடுதலாக நகை மற்றும் பணம் கேட்டு நிவேதாவை அவரது கணவர் சங்கர் மற்றும் குடும்பத்தினர் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

    மேலும் விவாகரத்து பெற்று செல்லுமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி நிவேதா தனது தாய் ராவணம்மாவிடம் செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆந்திரா சென்ற ராவணம்மா கடந்த 28ந் தேதி நிவேதாவை காரம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.

    கடந்த சில நாட்களாகவே மிகுந்த மனவேதனையில் இருந்து வந்த நிவேதா நேற்று மாலை திடீரென வீட்டில் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சென்ற வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் நிவேதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் தற்கொலைக்கு முன்பு நிவேதா அவரது கைப்பட ஆங்கிலத்தில் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதில் "கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என்று எழுதப்பட்டு உள்ளது.

    இதையடுத்து சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். மேலும் நிவேதாவுக்கு திருமணம் முடிந்து 4 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×