என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட 8 ஆவணங்களை தரக்கோரி சிறப்பு வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    திருவள்ளூர்:

    எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்துக்கு சரக்கு வாகனங்கள் விரைவாக சென்று வருவதற்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ஆந்திர மாநிலம்-சித்தூர் முதல் திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் வரை 126 கி.மீ. தூரத்துக்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.

    மேலும் சென்னை, பெங்களூரு, கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த சாலை திட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட் டுள்ளது. இதில் ஆந்திராவில் 75 கி.மீ. தமிழகத்தில் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வட்டங்களில் 51 கி.மீட்டர் என மொத்தம் 126 கி.மீ. தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைய இருக்கிறது. இது ரூ.3 ஆயிரத்து 197 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

    இதற்காக ஆந்திராவில் 2,186 ஏக்கர் தமிழகத்தில் 889 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திராவில் 6 வழிச்சாலை திட்டத்திற்கான பணி நடைபெற்று வருகிறது. ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தொடர் எதிர்ப்பால் பணிகள் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர்.

    பொன்னேரி வட்டம் மற்றும் ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் 6 வழிச்சாலை திட்டத்திற்கு ஆரம்பம் முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

    இதற்கிடையே இந்த 6 வழிச்சாலை திட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் விவசாய நிலங்களை கூடுதலாக எடுக்க சிறப்பு நில எடுப்பு அதிகாரி தரப்பில் 28 கிராம விவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

    இதில் முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை வட்டத்துக்குட்பட்ட தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பனப்பாக்கம், மாம்பாக்கம், சென்னங் கரணை, புதுச்சேரி, நந்தி மங்கலம், ராமலிங்கபுரம், போந்தவாக்கம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் கருத்து கேட்பு கூட்டத்துக்கு அழைக்கப்பட் டிருந்தனர். இந்த கருத்து கேட்பு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர். மேலும் செய்து திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இருந்து பெரியக்குப்பம் பகுதியில் உள்ள நில எடுப்பு சிறப்பு வருவாய் அலுவலர் அலுவலகத்தை நோக்கி சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆய்வறிக்கை, நீர் நிலங்கள் பற்றி ஆய்வறிக்கை, விரிவான திட்ட அறிக்கை உள்ளிட்ட 8 ஆவணங்களை தரக்கோரி சிறப்பு வருவாய் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அப்போது நில எடுப்பு தாசில்தார்கள் திருமூர்த்தி காந்திமதி பாலாஜி ஹரி கிருஷ்ணன் மணிகண்டன் உடன் இருந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    • சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் லயன் டி.ரமேஷ் தலைமையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே காங்கிரசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வி. அருணாச்சலம் , ஆர்.சாந்தகுமார், விக்டரி.எம்.மோகன், சங்கீதாபாபு, புழல் குபேந்திரன், கோபி, அலிம்புகாரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற போராட்டத்தில் நிர்வாகிகள் என்.வெங்கடேசன், ஏ.பி.சங்கர், எம்.சந்திரசேகரன், ஏ.நித்யானந்தம், கே.வி.ராஜன், எஸ்.பாபு, மணிகண்டன், ஜெ.ஜோஷிபிரேம்ஆனந்த், ஆர்.மதுசூதனராவ், ஆர்.ராமலு, டி.சிவசங்கர், ஏ.அமீத்பாபு , ஜெ.வி.எஸ்.மணிகண்டன் , கே.ஆர்.அன்பழகன், பி.அபிஷேக், எஸ்.கிரிதர், மாத்தூர் ரங்கநாயகி, ஜி.அச்சுதன், டி.ஜெயக்குமார், ஏ.ஆசீர்வாதம், ஜெ.மாரி, எஸ்.பி.நந்தன், எஸ் .கே.நவாஸ், பி.தேவேந்திரன், பி.சிவக்குமார், ஆர்.கலையரசன், ஜி.வேல்முருகன், க.தீனாள், விக்ரம்,மதன், ஆர்.ஆர்.சி.ராஜீவ்காந்தி, எச்.இஃபால்பாஷா, எஸ்.கே.வரதராஜன், ரஜினி, ஐசக், உமர், பயாஸ், இளங்கோ, அன்புக்கரசன், பிராகாஷ், வைத்தீஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சாலைமறியல் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது.
    • பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    தென்இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழ்அடுக்குகளில் கிழக்குதிசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் அவ்வப்போது பலத்த மழை கொட்டுகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் கடந்ந சில நாட்களாக விட்டு விட்டு கோடை மழை கொட்டி வருகிறது. பொன்னேரி-மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை செய்த பின்னர் பச்சை பயிர் மற்றும் தர்பூசணி பயிரிடப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் பச்சை பயிர் சாகுபடி செய்திருந்த சுமார் 300 ஏக்கர் மழை நீர் தேங்கி வெளியேற முடியாமல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து அறிந்ததும், மீஞ்சூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் டில்லிகுமார், வேளாண்மை துணை அலுவலர் விநாயகம் மற்றும் அதிகாரிகள் சின்னக்காவனம், மெதூர், விடதண்டலம், பெரும்பேடு, ஆகிய கிராமங்களில் விளைநிலங்களில் தேங்கி உள்ள தண்ணீரை நேரில் சென்றுஆய்வு செய்தனர். மேலும் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

    • நகைக்கடை வியாபாரி கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார், கிளிடாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    பெரியபாளையம்:

    ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமேஸ்வர்லால். இவர் நெற்குன்றத்தில் தங்கநகை செய்து விற்கும் தொழிலும் அடகுகடையும் நடத்தி வருகிறார். இவர் வியாபாரிகளிடம் மொத்தமாக ஆர்டர் பெற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு ஊழியர்கள் மூலம் நகைகளை சப்ளை செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கடை ஊழியர் சோகன், காலுராம் ஆகியோர் 1½ கிலோ தங்கநகை மற்றும் வசூலான ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்துடன் மோட்டார் சைக்கிளில் செங்குன்றம் நோக்கி வந்தனர்.

    வெங்கல் அருகே மாகரல்-காரணி கிராமத்துக்கு இடையே வந்த போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீரென நகைக்கடை ஊழியர்கள் சோகன், காலுராமை வழிமறித்து 1½ கிலோ தங்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் இருந்த பையை பறித்தனர்.

    இதனை தடுக்க முயன்ற சோகனை அரிவாளால் வெட்டி விட்டு கொள்ளையர் நகை-பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து ராமேஸ்வர்லால் வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இந்த கொள்ளை தொடர்பாக நகைக்கடை வியாபாரி கமல்கிஷோர், தமிழ்மணி, பாலாஜி, சுகுமார், கிளிடாஸ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை-பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையில் ஈடுபட்டது எப்படி? என்பது குறித்து கைதான 5 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • கள்ளச்சாராயம் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • வீட்டில் சோதனை செய்தபோது வீட்டின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் வசிக்கும் சிலர் ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்து வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தேவிகா தலைமையிலான போலீசார் நெமிலி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நெமிலி இருளர் காலனி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மனைவி கன்னியம்மாள் (வயது 60) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது வீட்டின் பின்புறத்தில் பிளாஸ்டிக் பையில் 10 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கன்னியம்மாளை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் இருந்த கல்பனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி அடுத்த விட தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்பனா (வயது44).கடந்த சில மாதங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த கல்பனா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நிழற்குடையால் கடை மறைக்கப்படுவதாகவும் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறினர்
    • பாதிப்பு இல்லாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தச்சூர் கூட்டு ரோடு சந்திப்பு சாலையில் இருந்து தினம்தோறும் ஆந்திரா கும்மிடிப்பூண்டி பொன்னேரி செங்குன்றம், பெரியபாளையம், ஆரணி, சிறுவாபுரி, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு தச்சூர் பகுதியில் இருந்து வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர்.

    பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள் மழை வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்த நிலையில், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் நிழற்குடை அமைப்பதற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். அப்போது தச்சூர் பொன்னேரி நெடுஞ்சாலை அருகில் நிழற்குடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர்.

    இதற்கு அப்பகுதி வியாபாரிகள், கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிழற்குடையால் கடை மறைக்கப்படுவதாகவும் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறிய கடை உரிமையாளர்கள், அந்த இடத்தை அளவிடு செய்த ஊழியர்களிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். வியாபாரிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பொதுமக்களின் நலன் கருதி நிழற்குடை அமைக்கப்படும் என தெரிவித்தார். அப்போது பஞ்செட்டி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மொத்தம் 1159 கிராமங்களில், கிராமசபை கூட்டம் அந்தந்த தலைவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடந்தது. இதில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    வில்லிவாக்கம் ஒன்றியம் பாண்டீஸ்வரன் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டார். அவர் பொது மக்களிடம் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 274 கிராம ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் 359 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    • காரை சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் 10 துண்டுகள் இருந்தது தெரிய வந்தது.
    • செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொதட்டூர்பேட்டை:

    ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர் பேட்டை வழியாக சொகுசு கார் ஒன்றில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஆந்திராவில் இருந்து வரும் அனைத்து கார்களையும் சோதனையிட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் ஒரு கார் திசையை மாற்றி வேகமாக சென்றது. உடனே போலீசார் அந்த காரை விரட்டி சென்றனர். போலீசார் விரட்டி வருவதை கண்டதும் அந்த காரை ஓட்டி வந்த மர்ம நபர்கள் காரை மலையடிவாரத்தில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

    போலீசார் அந்த காரை சோதனை செய்தபோது, அதில் விலை உயர்ந்த செம்மரக்கட்டைகள் 10 துண்டுகள் இருந்தது தெரிய வந்தது. மர்மநபர்கள் அவற்றை ஆந்திராவில் இருந்து கடத்தி வந்ததும் தெரிந்தது.

    கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் பள்ளிப்பட்டு வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருடன் செம்மர கட்டைகளை பறிமுதல் செய்தனர். இந்த செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக தங்கத்தேர், வெள்ளித்தேர் இருந்தன.
    • கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன.

    திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமாக தங்கத்தேர், வெள்ளித்தேர் இருந்தன. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வெள்ளித்தேர், தங்கத்தேர் பழுதடைந்தன. இந்து அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்பேரில் கடந்த ஆண்டு இறுதியில் தங்கத்தேர் சீரமைக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

    இதேபோல் வெள்ளித்தேர் செய்வதற்கு ஏதுவாக, மரத்தேர் செய்து தருவதாக பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கோவில் நிர்வாகத்திடம் கடந்தாண்டு கோரிக்கை வைத்தார். கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியதை அடுத்து ரூ.32 லட்சத்தில் மரத்தேர் செய்யும் பணிகள் மலைக்கோவில் வளாகத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

    மரத்தேர் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கடந்த மாதம் 25-ந்தேதி நன்கொடை வழங்கிய தொழிலதிபர் கோவில் துணை ஆணையர் விஜயாவிடம் மரத்தேரினை ஒப்படைத்தார்.

    இந்து அறநிலையத்துறை ஆணையரிடம் மரத்தேரில் வெள்ளி தகடுகள் பதிக்க அனுமதி வழங்குமாறு முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்து அறநிலைத்துறை ஆணையர் அனுமதி வழங்கியதையடுத்து நேற்று திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் மரத்தேரில் 539 கிலோ எடையுள்ள வெள்ளி தகடுகள் பதிக்கும் பணி முருகன் கோவில் துணை ஆணையர் விஜயா, வேலூர் துணை ஆணையர் நகை சரிபார்ப்பு அலுவலர் ரமணி, கோவில் கண்காணிப்பாளர் சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் வெள்ளி தகடுகளின் எடை சரிபார்க்கப்பட்டு பணி தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த வெள்ளி தகடுகள் ரூ.4 கோடி மதிப்புடையது. 3 மாதங்களுக்குள் வெள்ளி தகடுகள் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்டு வெள்ளி தேர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என கோவில் துணை ஆணையர் விஜயா தெரிவித்தார்.

    • உயிருக்கு போராடிய ஊழியர் விஜயகுமாரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • விஜயகுமாரின் தந்தை முத்து, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே உள்ள வதட்டூர் கண்டிகை கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் விஜயகுமார்(வயது24). இவர் கீழானூர் கிராமத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கீழானூர் மின்வாரிய அலுவலகம் எதிரே இருந்த மின் கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்கம்பம் சரிந்தது.

    இதில், படுகாயம் அடைந்த விஜயகுமார் உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தினர். பின்னர், அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து விஜயகுமாரின் தந்தை முத்து, வெங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆரணி பேரூராட்சியில் 80 சதவிகித சொத்துவரி மட்டுமே வசூல் ஆகி உள்ளது.
    • நாகலட்சுமி என்பவர் பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்தாராம்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 100 சதவீத சொத்து வரியை வசூலிக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில்,ஆரணி பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் தலைமையில் பணியாளர்கள் பல்வேறு பிரிவுகளாக வீடு,வீடாக சென்று சொத்து வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் 80 சதவிகித சொத்துவரி மட்டுமே ஆரணி பேரூராட்சியில் வசூல் ஆகி உள்ளது. மீதம் உள்ள 20 சதவிகித சொத்து வரியை வசூலிக்க பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டு உரிமையாளரிடமும் பலமுறை சென்று கேட்டு வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை ஆரணி அத்திக்குளம் பகுதியில் வசித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாகலட்சுமி(வயது37) என்பவர் வீட்டில் ரூ.500 சொத்து வரியை செலுத்துமாறு பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கேட்டார்களாம். அந்தப் பணியாளர்களிடம் நாகலட்சுமி பேரூராட்சி சார்பாக என்ன வசதியை இப்பகுதிக்கு செய்து விட்டீர்கள்! என்று தகாத வார்த்தைகளால் திட்டினாராம். மேலும், பேரூராட்சி பணியாளர்களை அரசு பணி செய்யவிடாமல் மிரட்டல் விடுத்தாராம். இந்தச் சம்பவம் குறித்து ஆரணி காவல் நிலையத்தில் நாகலட்சுமி மீது பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இப்பிரச்சனை இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×