என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • இரண்டு அடுக்கு ‘பார்க்கிங்’ வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
    • புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வெளியூர் செல்லும் பஸ்கள் கிளாம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளது. மாதவரத்தில் இருந்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இதைத்தொடர்ந்து கேரளா, கர்நாடகா, மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களை திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டு அங்கு புதிய பஸ்நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டு பஸ்நிலையம் கட்டும்பணி கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    கழிப்பறை வசதி மற்றும் பஸ் நிலைய பணியாளர்கள் ஓய்வறை, பஸ்களை நிறுத்தும் நடைமேடை உட்பட நவீன கூடுதல் வசதிகளுடன் ரூ.427 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது.


    புதிய பஸ்நிலையம் 2 மாடி கட்டிடத்தில் 70 புறநகர் பஸ்கள், 30 ஆம்னி பஸ்கள் 36 மாநகர பஸ்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மேலும் 48 புறநகர் பஸ்கள், 27 ஆம்னி பஸ்கள் என மொத்தம் 163 பஸ்களை நிறுத்தி வைக்க முடியும். பஸ் நிலையத்தின் கீழ்தளத்தில் 1,800 இருசக்கர வாகனங்கள், 235 நான்குசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், இரண்டு அடுக்கு 'பார்க்கிங்' வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன

    தினமும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் இரவு, பகலாக பணிகள் வேகம் எடுத்து சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது. இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறும்போது, திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு பஸ்நிலையம் திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மற்ற பஸ் நிலையத்தில் விடுபட்ட அனைத்து நவீன வசதிகளுடனும் இந்த பஸ்நிலைய பணிகள் நடந்து வருகிறது என்றார்.

    • ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. பின்னர் மழை இல்லாமல் வெயில் கொளுத்தியது. மேலும் கடந்த சில நாட்களாக அதிகாலையில் பனிப்பொழிவும் இருக்கிறது.

    மாறிவரும் பருவநிலை மாற்றம் காரணமாக மீஞ்சூர், பொன்னேரி, பழவேற்காடு பகுதியில் ஏராளமானோர் சளி, இருமல், தொண்டை வலியால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதிகமானோருக்கு இருமல் மற்றும் தொண்டை வலி, உடல் வலி அதிகம் உள்ளது. மேலும் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    சளி, இருமலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் 10 நாட்களுக்கு கடும் சிரமம் ஏற்படுவதால் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகிறார்கள். பெரும்பாலானோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். எனவே சளி, இருமல், தொண்டைவலி இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அசோகன் கூறியதாவது:-

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதியில் தற்போது ஏராளமானோருக்கு சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பருவநிலை மாற்றம் காரணமாக சளி இருமல் காணப்படுகிறது. காய்ச்சல் ஒரு நாளைக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் கடைகளில் மாத்திரை, டானிக் உட்கொள்வது தவறு. அது மேலும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீரை கொதிக்க வைத்து சூடாக பருக வேண்டும். வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் மழைநீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
    • மரக்கன்றுகளை நட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது.

    பொன்னேரி:

    பழவேற்காடு தாங்கல் பெரும்புலம் ஊராட்சியில் இயற்கை வளத்தினை பாதுகாக்கவும் காற்று மாசுபாட்டினை தடுக்கவும் மரக்கன்றுகள் நடப்பட்டன. பழவேற்காடு கொடிமரம் நெடுஞ்சாலையில் இருந்து தாங்கல் பெரும்புலம் ஊராட்சி முழுவதும் சாலையோரங்களில் தொடர்ச்சியாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. பின்னர் மரக்கன்றுகளை நட்ட 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கப்பட்டது. இதில் தாங்கல் பெரும்புலம் ஊராட்சி தலைவர் ஞானவேல், பசுமை நாராயணன், ஏகாச்சரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • படுகாயமடைந்து அலறிய அவரை பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
    • ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கும்மிடிப்பூண்டியில் அடுப்பில் இருந்து சாதத்தை வடிக்கும் போது வடிகஞ்சி உடலில் கொட்டியதில் வடமாநில சிறுமி பரிதாபமாக பலியானார்.

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சிப்காட் தொழிற்பேட்டையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிதாஸ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய 16 வயது மகள் நந்தினி கடந்த 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது, அடுப்பில் இருந்து சாதத்தை வடிக்கும்போது, எதிர்பாராதவிதமாக கொதிக்கும் வடிகஞ்சி அவர் மேல் கொட்டியது. இதில் படுகாயமடைந்து அலறிய அவரை பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஒரு வாரமாக சிகிச்சையில் இருந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

    • சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது.
    • எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

    திருவள்ளூர் மாவட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் படுகொலைகள், பலாத்காரங்கள், கொலை, கொள்ளை என்று சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து இன்று தமிழ்நாடே கேள்விக்குறியாக இருக்கிறது. அதில், மாற்றுக் கருத்தே இல்லை.

    பள்ளிகளில் பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் போன்று பல்வேறு விஷயங்கள் தமிழகத்தில் நடக்கிறது. இவை அனைத்தையும் கண்டிக்க வேண்டும். ஆனால், இதை தடுக்க வேண்டிய அரசு வெறும் வாய்வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

    எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடும் இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று மக்கள் கேட்கின்ற கேள்வியை நானும் கேட்கிறேன்.

    யார் வருவதற்காகவும் இன்னெரு கட்சி வேலை செய்ய வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அவரவர்களின் கட்சி பணிகளை அவரவர்களின் கட்சிகள் செய்துக் கொண்டிருக்கின்றனர். எங்கள் கட்சிகளின் பணிகளை நாங்கள் செய்துக் கொண்டிருக்கிறோம். அதுபோன்று, திமுக, அதிமுக மற்றும் தமிழகத்தில் உள்ள பிற கட்சிகளும் அவரவர்களின் பணிகளை செய்துக் கொண்டிருக்கின்றனர்.

    தேமுதிக- அதிமுக இடையே கூட்டணி தொடரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழை கொட்டி வருகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இந்த ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் படி கடந்த செப்டம்பர் 23-ந் தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் அவ்வப்போது பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதனால் தற்போது பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு மழை நீர் 260 கனஅடி, கிருஷ்ணா நீர் 200 கன அடி என மொத்தம் வினாடிக்கு 460 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் 465 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 350 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அதே போல் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 17 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. செப்டம்பர் 23-ந் தேதியிலிருந்து இன்று காலை வரை கிருஷ்ணா நீர் 1.237 டி.எம்.சி. வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றும் பரவலாக மழை கொட்டியது.

    • பாலகிருஷ்ணன் அதியமான் பேசும்போது, உயர் செயல்திறன் கணினிகளின் பங்கு அங்கு குறித்து விளக்கினார்.
    • நிகழ்ச்சியில் டாக்டர் எஸ். கோட்டீஸ்வரன், டாக்டர் வி. சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சென்னையை அடுத்த திருவேற்காடு எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி மற்றும் ஐஇஇஇ, இணைந்து நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள்" என்ற தலைப்பில் 2024 சர்வதேச மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. பொருளாளர் மற்றும் தாளாளர் எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். முதல்வர் எஸ். ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார்.

    எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொடக்க விழாவில் ஆவடி டிஆர்டிஓ இயக்குனரரும், விஞ்ஞானியுமான ஜே.ராஜேஷ் குமார் மற்றும் ஐஐடி மதராஸ் துறைத் தலைவர் டாக்டர் பலராமன் ரவீந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.


    இதனைத் தொடர்ந்து பேராசிரியர் டாக்டர் சத்யநாராயணன் சேஷாத்ரி ஆகியோரும் பயன்பாட்டு இயந்திரவியல் மற்றும் உயிரியல்துறை, எரிசக்தி கூட்டணி மற்றும் நிலைத்த வளர்ச்சி குறித்து உரையாற்றினர்.

    எஸ்.ஏ.கல்லூரியின் பொருளாளர் மற்றும் தாளாளர் எஸ். அமர்நாத் பேசும்போது, இந்திய உற்பத்தித் துறைகளில் நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (எஸ்டிஜி) தொடர்பான அரசு நடவடிக்கைகள் மற்றும் இந்திய எஸ்டிஜி அடைவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றி சிறப்புரையாற்றினார்.


    நிறைவு விழாவில், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி பேராசியர் எம் நளினி விழாவின் சிறப்பம்சங்களை சுருக்கமாகப் எடுத்துரைத்தார்.

    சிறப்பு விருந்தினரான இந்திய புவியியல் அமைச்சகத்தின் பாலகிருஷ்ணன் அதியமான் பேசும்போது, உயர் செயல்திறன் கணினிகளின் பங்கு அங்கு குறித்து விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய ஐஐடி மெட்ராஸ் மின்சார பொறியியல் துறைத் தலைவர் ஆர்.டேவிட், அனைவருக்கும் சமமான செலவில் தொழில்நுட்பமும் கல்வியும் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


    அதன்பின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு எஸ்.ஏ. கல்லூரி தாளாளர் எஸ்.அமர்நாத், மரியாதை செலுத்தினார்.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எஸ். கோட்டீஸ்வரன், டாக்டர் வி. சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமையல் கூடத்தில் புகைப்போக்கில் ஏற்பட்ட தீ சமையல் கூடம் முழுவதும் பரவி உள்ளது.
    • எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அடையாறு ஆனந்த பவனுக்கு சொந்தமான உணவு தயாரிப்பு கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சமையல் கூடத்தில் புகைப்போக்கில் ஏற்பட்ட தீ சமையல் கூடம் முழுவதும் பரவி உள்ளது.

    எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    அம்பத்தூர் சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சென்னை நகர் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
    • லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூரைஅடுத்த காட்டுப்பள்ளியில் நிலக்கரி கிடங்கு சாலை வடசென்னை அனல் மின்நிலைய குடியிருப்பு முதல் நிலக்கரி சேமிப்பு கிடங்கு வரை 4 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனை காமராஜர் துறைமுகம் பராமரித்து வருகிறது.

    இந்த சாலையை பயன்படுத்தி தினமும் 1000-க்கும் மேற்பட்ட லாரிகள் சேமிப்பு கிடங்கில் இருந்து நிலக்கரிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் சாம்பல் கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் 4 கிலோ மீட்டர் தூரம் சாலை மிகவும் பழுதடைந்து பல இடங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. இதனால் லாரிகள் செல்ல முடியாத அளவுக்கு சாலை காணப்படுகிறது. சேதம் அடைந்த சாலையில் லாரிகள் செல்லும் போது அதன் டயர்கள் அடிக்கடி கிழிந்து விடுவதால் லாரி டிரைவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதுகுறித்து லாரி டிரைவர்கள் கூறும்போது, நிலக்கரி கிடங்கு சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு லாரியாக சென்று வருவதால் குறித்த நேரத்தில் நிலக்கரியை ஏற்றி செல்ல முடிவதில்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கடந்த சில நாட்களில் சேதம் அடைந்த சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட லாரிகள் பழுதாகி உள்ளன. எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாகம் சாலையை சீரமைத்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • உயிரிழந்த டிரைவர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

    சென்னை அருகே கும்மிடிப்பூண்டியில் 3 லாரிகள் ஒன்றன் பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மற்றொரு லாரி டிரைவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    உயிரிழந்த டிரைவர் பூந்தமல்லி நசரத்பட்டியை சேர்ந்த நாகராஜ் என்பது தெரிய வந்துள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
    • கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை சாவடி தெருவை சேர்ந்தவர் சூரிய குமார். இவர், இத்தாலி நாட்டின் அருகே உள்ள லிதுவேனியா நாட்டில் உள்ள பல்கலைக் கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் படிக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்றார்.

    அப்போது அவருக்கு அதே பல்கலைக்கழகத்தில் வனவிலங்கு பாதுகாப்பு பட்டய படிப்பு படித்த அதே நாட்டைச் சேர்ந்த கமிலே டெக்னைன் கைடே என்ற மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    கமிலே டெக்னைன் கைடேக்கு வனவிலங்குகள் மீது பற்று அதிகம். அதே போல் சூரியகுமாருக்கும் வனவிலங்குகள் மீது ஆர்வம் அதிகம். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். நாளடைவில் இது காதலாக மாறியது.

    படிப்பு முடித்ததும் அதே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். இதனால் இருவரது காதலும் மேலும் இறுகியது.

    இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து கமிலே டெக்னைன் கைடே-சூரிய குமாரின் திருமணம் இன்று காலை ஊத்துக்கோட்டை செட்டி தெருவில் உள்ள பெரிய ஆண்டவர் கோவிலில் தமிழக பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. கமிலே டெக்னைன் கைடேயின் கழுத்தில் சூரியகுமார் தாலிகட்டியதும் உற்சாக குரல் எழுப்பினர்.

    இதில் கமிலே டெக்னைன் கைடேயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரிய உடையான பட்டுப் புடவை அணிந்து வந்து கலக்கினர்.

    • குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.
    • இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (9-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதையடுத்து அழிஞ்சிவாக்கம், ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர், ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலை, கணேஷ் நகர், சாய் கிருபா நகர், ஸ்ரீநகர், இருளிப்பட்டு, எம்.கே. கார்டன் விருந்தாவனம் நகர்,போக்காரிய சத்திரம், ஜெகநாதபுரம், ஆமூர், நெடுவரம்பாக்கம் மாலிவாக்கம், சத்திரம், குதிரை பள்ளம் கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை இருளிப்பட்டு மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×