என் மலர்
திருவள்ளூர்
- ஸ்ரீ ஆதிசங்கரருக்கு சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது.
- காஞ்சி சங்கர மடம் நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
ஊத்துக்கோட்டை:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி எஸ்.பி.கோவில் தெருவில் ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் உள்ளது. இங்கு நேற்று ஸ்ரீ ஆதிசங்கரர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பில் ஸ்ரீ ஆதிசங்கரருக்கு சிறப்பு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் இன்று காலை 7 மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா அலங்காரம்,மகா தீபாராதனை, தீர்த்தம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பின்னர், பத்து மணிக்கு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆரணி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடம் நிர்வாகி ஸ்ரீதர் தலைமையில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
- ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் ராபி பருவம் 2022-23-ல் பச்சைப்பயறு, சுமார் 10 ஆயிரம் ஹெக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு சாகுபடி செய்யப்பட்ட பச்சைப்பயறு அறுவடை தற்போது தொடங்கியுள்ளது.
இந்நிலையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ், பச்சைப் பயறு கொள்முதல் செய்யும் திட்டத்தை திருவள்ளுர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து 3 விவசாயிகளுக்கு நெல் விளைபொருளுக்காக ரூ.5.10 லட்சம் மதிப்பில் பொருளீட்டுக் கடன் பெற்றதற்கான ஆணைகள் மற்றும் காசோலைகளையும், 3 உழவர் உற்பத்தியாளர் குழு நிறுவனங்களுக்கு ஒருங்கிணைந்த ஒற்றை உரிமம் வழங்கப்படுவதற் கான அனுமதி ஆணை களையும், 2 விவசாயிகளுக்கு பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகளையும் அமைச்சர் வழங்கினார்.
இதுகுறித்து அமைச்சர் சா.மு.நாசர் பேசியதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை வேளாண்மை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் ஒரு ஹெக்டே ருக்கு 257 கிலோ வீதம் 675.65 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்யப் பட்டது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தர குறியீட்டின் படி கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் ஒன்றுக்கு ரூ.4.80 வீதம் உயர்த்தப்பட்டு ரூ77.55 என்ற விலைக்கு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு மூலம் விவசாயிகளிடம் இருந்து பச்சைப்பயறு கொள்முதல் செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே, திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு ஹெக்டேருக்கு 384 கிலோ வீதம் 1,200 மெட்ரிக் டன் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய ஆணை வழங்கப் பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வரும் மே 29-ந் தேதிக்குள் தங்களின் ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம், நிலச்சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்கள் ஆகியவற்றுடன், திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் ஊத்துக்கோட்டை ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பதிவு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், வேளாண்மை இணை இயக்குநர் சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர் சீனிராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது.
- அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான ரோஜா பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேரடியாக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பில் இருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
நகரி மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம். தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்களை பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கி உள்ளது.
அந்த உத்தரவு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும்.
தமிழ் வழிக்கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்தேன். அதை விரைவாக வழங்கி முதல்வர் சிறப்பாக செயல்பட்டார். தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன். இரண்டு பேரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் என்பதோடு ஒரே துறையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதைய நிலையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக உள்ளேன். தமிழகத்திற்கு விளையாட்டு தொடர்பாக எந்த கோரிக்கை வைத்தாலும் நான் உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரும்பாலான பக்தர்கள் பஸ், கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவது வழக்கம்.
- கோவில் நிர்வாகம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு கோவில் வளாகத்தில் இடம் ஒதுக்கி உள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லுார் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் இந்து அறநிலைதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை வழிப்பட்டு செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் பஸ், கார், வேன், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் வருவது வழக்கம்.
கோவில் நிர்வாகம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு கோவில் வளாகத்தில் இடம் ஒதுக்கி உள்ளது.
ஆனால் கடந்த சில மாதங்களாக கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சிலர் போலியாக டிக்கெட் கொடுத்து கட்டாய பண வசூலில் ஈடுபட்டு உள்ளனர். கார், வேன் போன்ற வாகனங்களுக்கு ரூ.50, பஸ் ரூ.100 என கட்டணம் வசூலிக்கின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் செயல் அலுவலர் சரவணன் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதில் கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங் களுக்கு தனிநபர் கட்டாய கட்டண வசூல் செய்கின்றனர்.
மேலும் கோவில் வளாகத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு டிக்கெட் கட்டணம் எதுவும் கிடையாது இலவசம் என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தோம். இந்த அறிவிப்பு பலகையையும் தனிநபர் சேதப்படுத்தியுள்ளார்.
எனவே பொதுமக்களிடம் கட்டாய வசூலில் ஈடுபடும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- அனைத்து தரப்பிலிருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
- சுங்கச்சாவடி அருகில் புதிதாக காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் (எ) ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் விரதம் இருந்து கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை 11 முறை சுற்றி 9 வாரங்கள் வழிபடுவதன் மூலம் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோரின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது ஐதீகம்.
இதனை அறிந்த இயக்குனர் ஆர்கே செல்வமணியின் தங்கை மகள் சாருலதா அருண்குமார் தம்பதி குழந்தை பாக்கியம் வேண்டி கோவிலில் பிரார்த்தனை செய்திருந்தார்.
தற்போது சாருலதா 7 மாத நிறைமாத கர்ப்பிணி என்பதால் இந்த பிரார்த்தனையை நிறைவேற்ற அருள்மிகு பூங்காவனத்தம்மன் கோவிலில் சீமந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, ஆந்திர மாநில சுற்றுலா, கலாசாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சரும் நடிகையுமான ஆர்.கே.ரோஜா வருகை தந்தார்.
திருக்கோயில் நிர்வாகிகள் முனிரத்தினம் ஜீவா மற்றும் ஊழியர்கள் அமைச்சரை வரவேற்றனர். பின்னர் சிறப்பு தரிசனம் செய்தை தொடர்ந்து அவரது உறவினரின் சீமந்த நிகழ்வில் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆந்திராவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையில் நேர்முக உதவி கிடைத்துள்ளது. இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இதை சகித்துக் கொள்ள முடியாத சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி வருகிறார். புத்தூர் அருகே வடமாலைபேட்டை சுங்கச்சாவடியில் நடைபெற்ற சம்பவம் வேதனையளிக்கிறது. அந்த சம்பவத்தில் இருதரப்பினரிடையே தவறு உள்ளது. அதை சரி செய்து சமுகமாக பேசி முடிக்கப்பட்டது.
மேலும், அடிக்கடி நடைபெறும் சம்பவங்களை தடுக்கும் வகையில் சுங்கச்சாவடி அருகில் புதிதாக காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகரி மற்றும் தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெசவாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடைகள் தயார் செய்ய அனுமதிக்கப்படுகிறது.
மேலும் ஜவுளி பூங்கா அமைக்கவும் தொடர்ந்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வலியுறுத்தி வருகிறோம். தற்போது உயர்ந்துள்ள மின்சார கட்டணம் நெசவாளர்கள் பாதிக்காத வகையில் ஆந்திர மாநில அரசு சிறப்பு உத்தரவு வழங்கியுள்ளது.
அந்த உத்தரவு ஏப்ரல் இறுதி வாரத்தில் அமலுக்கு வரும். அப்போது நெசவாளர்கள் மீதான மின்சார கட்டணம் அதிகமின்றி இருக்கும். தமிழ் வழிக்கல்வியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்க கோரிக்கை வைத்தேன். அதை விரைவாக வழங்கி முதல்வர் சிறப்பாக செயல்பட்டார்.
தமிழக அரசியலில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். அதேபோல் நானும் அமைச்சராக உள்ளேன். இரண்டு பேரும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர்கள் என்பதோடு ஒரே துறையில் பயணிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தற்போதைய நிலையில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இயக்குநராக உள்ளேன். தமிழகத்திற்கு விளையாட்டு சம்பந்தமாக எந்தவித கோரிக்கை வைத்தாலும் நான் உறுதுணையாக இருந்து செய்து கொடுக்க தயாராகவே உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
- வரும் நாட்களிலும் இதேபோல் மழை பெய்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று எதிர்பார்ப்புடன் பொது மக்கள் தெரிவித்தனர்.
திருவள்ளூர்:
தென்இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குதிசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்து உள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டியது. திருவள்ளூரில் மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 8 மணிவரை விட்டு விட்டு சாரலாக நீடித்தது.
ஏற்கனவே கடும் வெப்பத்தால் தவித்து வந்த மக்களுக்கு இந்த கோடை மழை சற்று நிம்மதியை தந்து உள்ளது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வரும் நாட்களிலும் இதேபோல் மழை பெய்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம் என்று எதிர்பார்ப்புடன் பொது மக்கள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக ஊத்துக்கோட்டையில் 5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருத்தணியில் 3 செ.மீட்டர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு செங்குன்றம், சோழவரத்தில் தலா ஒரு செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
- கணவன்-மனைவி இருவரும் சோழவரத்தை அடுத்த ஆத்தூர் பகுதியில் கொல்கத்தா நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நடைபயிற்சி சென்றனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீர ஜெயப்பிரகாசையும், அவரது மனைவி அமுதினியையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.
பொன்னேரி:
சோழவரத்தை அடுத்த ஜனப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவரது மனைவி அமுதினி.டாக்டர்களான இருவரும் அப்பகுதியில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் சோழவரத்தை அடுத்த ஆத்தூர் பகுதியில் கொல்கத்தா நெடுஞ்சாலையோரம் காரை நிறுத்தி விட்டு நடைபயிற்சி சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் திடீர ஜெயப்பிரகாசையும், அவரது மனைவி அமுதினியையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர்கள் கீழே விழுந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்றனர். உடனே மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
தாக்குதலில் பலத்த காயம் அடைந்த தம்பதியினர் இருவருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலத்தகராறில் இந்த கொலை முயற்சி நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ரோகித் யாதவ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- போலீசார் விரைந்து வந்து ரோகித் யாதவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருவள்ளூர்:
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். லாரி டிரைவர். இவர் கிளீனரான அதே பகுதியை சேர்ந்த ரோகித யாதவ் என்பவருடன் மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு லாரியை ஓட்டி வந்தார்.
தொழிற்சாலைக்கு உள்ளே லாரியை நிறுத்த அனுமதி வழங்காததால் தொழிற்சாலை அருகே வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்தனர். அப்போது கிளீனர் ரோகித் யாதவ் லாரியின் கீழ் படுத்து தூங்கினார்.
நேற்று இரவு 8 மணிக்கு தொழிற்சாலை உள்ளே செல்ல லாரிக்கு அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதையடுத்து டிரைவர் ராஜ்குமார் லாரியின் கீர் கிளீனர் ரோகித்யாதவ் தூங்கு வதை கவனிக்காமல் லாரியை இயக்கினார். இதில் ரோகித் யாதவ் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து ரோகித் யாதவ்வின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சம்பவ இடத்திற்கு 7க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 7க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்துள்ளன. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் இல்லை.
தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா விளையாடிக் கொண்டிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் ஊராட்சியில் ரூபி பிரிக்ஸ் சேம்பர் என்ற தனியார் செங்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.
இதில், ஒடிசா மாநிலம்,பலாங்கீர் மாவட்டம்,மால்பார கிராமத்தைச் சேர்ந்த தாராசந்த் பாண்டே என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கடந்த இரண்டு மாதங்களாக இங்கே வந்து தங்கி இருந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில்,நேற்று மாலை இங்குள்ள தண்ணீர் தொட்டியில் தாராசந்த் பாண்டேவின் மகள் பத்மினி பெஹாரா(வயது 4) விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக அவள் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து மூழ்கினாள். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் சோபாகினி பெஹாரா பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.எனவே,போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
- தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
மீனராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீயோகா ஞான தட்சண மூர்த்தி கோவிலில் சிற்ப்பு வழிபாடு நடைபெற்றது.
கோவிலில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக இரவு 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காளி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தட்சணாமூர்த்தி மூலமந்திரம் ஹோமம் ஸ்ரீயோகஞான தட்சணாமூர்த்தி அஸ்த்ர ஹோமம் நடந்தது.
தொடர்ந்து 9 மணிக்கு தட்சணாமூர்த்திக்கு 108 லிட்டர் பால்குட அபிஷேகம் நடைபெற்றது. சரியாக இரவு 11.24 மணிக்கு குருப்பெயர்ச்சி அடையும் நேரத்தில் குருபகவான் சிலைக்கு மகா தீபாராதனை நடந்தது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள் கோவிலில் நடைபெற்ற பரிகார மகா யாகத்தில் பங்கேற்றனர். குருபெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர்.
திருவொற்றியூர்:
பழைய வண்ணாரப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பு குமார்.
ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. நேற்று முன்தினம் குமார் காலையில் வீட்டில் இருந்து ஆரணி கங்கன் தெரு வழியாக நடந்து சென்றார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழைய வண்ணாரப்பேட்டை வள்ளுவன் தெருவை சேர்ந்த ஆகாஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த ஆகாஷின் தந்தை கொலைக்கு பழிக்குப் பழியாக 10 ஆண்டு காத்திருந்து குமார் தீர்த்து கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ரவுடி குமாரின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் திருவொற்றியூரை சேர்ந்த ராஜசேகர் (வயது42) என்பவர் பங்கேற்றார். பின்னர் அவரும் கொலையுண்ட ரவுடி குமாரின் உறவினரான கமலக்கண்ணனும் அருகில் உள்ள பழைய கட்டிடத்தின் மாடியில் சென்று மதுகுடித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் சரமாரியாக ராஜசேகரை தாக்கினார். மேலும் அருகில் கிடந்த கல்லை ராஜசேகரின் தலையில் தூக்கி போட்டு விட்டு சென்று விட்டார்.
இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ராஜசேகரின் தலையில் இருந்து ரத்தம் வெளியேறி மயங்கினார். இதனை அங்கிருந்த யாரும் கவனிக்க வில்லை. நேற்று காலை அக்கம்பக்கத்தினர் அப்பகுதிக்கு சென்ற போது ரத்த வெள்ளத்தில் ராஜசேகர் உயிருக்கு போராடிய படி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ராஜசேகர் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த கொலை குறித்து குறித்து கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யுவராஜ் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
ரவுடியின் இறுதி சடங்கில் பங்கேற்க வந்த தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






