என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • புறநகரில் பல்வேறு காரணங்களுக்காக 16 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 179 கடைகளுக்கு அனுமதி வழங்கி கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார்.
    • தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர்.

    திருப்பூர்: 

    தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க மாநகரம், புறநகரில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர். அதில் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்டு 129 பேர், மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் 195 பேர் என மாவட்டத்தில் 324 பேர் தற்காலிக பட்டாசு கடைகளுக்கு விண்ணப்பித்தனர்.

    கடைகள் அமைய உள்ள பகுதி பாதுகாப்பானதா, உரிய சான்றுகள் இணைக்கப்பட்டுள்ளதா மற்றும் கள ஆய்வு பணியை கடந்த ஒரு வாரமாக போலீசார் மேற்கொண்டு வந்தனர். அதன்பின் மாநகரில் 129 கடைகளுக்கு போலீஸ் கமிஷனர் அனுமதி அளித்துள்ளார். புறநகரில் பல்வேறு காரணங்களுக்காக 16 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 179 கடைகளுக்கு அனுமதி வழங்கி கலெக்டருக்கு எஸ்.பி., பரிந்துரை செய்துள்ளார். இவ்வாறு மாவட்டம் முழுவதும் 308 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு வாரத்துக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள் 8 மூட்டைகள் (338 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.92-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50-க்கும், சராசரியாக ரூ.90- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார். 

    • காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .
    • காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    முத்தூர்:

    காங்கயம் வாரச்சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது .வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள்,வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று 500-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெறும். வார சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள்,மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.

    இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள் ,தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.

    நேற்று கூடிய வார சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.120-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.90-க்கும், தக்காளி கிலோ ரூ.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.40 அதிகரித்து காணப்பட்டது. பெரிய வெங்காயத்தின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் ரூ.30 குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக வெங்காயத்தின் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டது.

    • திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.
    • .மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர். தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் நல்ல தங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர் பலி ஏற்படும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விவசாயிகள், சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது.
    • 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சுப்ரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா வருகிற 14-ந்தேதி தொடங்கி, நவம்பர் 21-ந்தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி முதல் காலை மணி 10.30 மற்றும் மாலை 4 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருஉலா காட்சியும் நடைபெற உள்ளது.

    கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா 18-ந்தேதி மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. மறுநாள் காலையில் அபிஷேக ஆராதனையும், மாலை 6 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. 21-ந் தேதி சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் அன்னக்கொடி (பொறுப்பு), கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.
    • தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது.

    முத்தூர்: 

    திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்த்து வருமானம் ஈட்டி வருகிறார்கள்.மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குவதால் உயிரிழப்பும் நேரிடும். கோமாரி நோய் குளிர், பனிக்காலங்களில் மற்றும் நோய் பாதித்த பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், தடுப்பூசி போடாமல், சுகாதாரமாக கால்நடை வளர்க்காதது, நோய் பாதித்த பின்பு பிரித்து பராமரிக்காமல் இருத்தல் ஆகியவற்றால் இந்த நோய் பாதிப்பு ஏற்படும்.

    இந்த நோய்களுக்கான அறிகுறிகளானது கால்நடைகளுக்கு காய்ச்சல் வரும், மந்த நிலையில் தீவனம் உண்ணாமல், அசை போடாமல், தண்ணீர் தாகம் இருக்கும். பால் உற்பத்தி குறைந்தும், வாயில் நுரை கலந்த உமிழ்நீர் வரும். சினை மாடுகளில் கருச்சிதைவு, நாக்கு, கால் குளம்பு ஆகிய பகுதிகளில் கொப்பளங்கள், புண்ணாக மாறும். குறிப்பாக இந்நோய் மழை காலங்களில் கால்நடைகளை தாக்கும். இதனால் மழை காலம் தொடங்கும் முன்பே கால்நடைதுறை மூலம், முகாம் அமைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவார்கள். இதனால் கால்நடைகளுக்கு நோய் வருவதை முன்கூட்டியே தடுக்க முடியும்.

    இதையடுத்து தமிழக அரசு நேற்று முதல் கால்நடைகளுக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக கோமாரி தடுப்பு ஊசி செலுத்த முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து காங்கயம் அரசு கால்நடைதுறை மருத்துவ மனையை செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். கால்நடைதுறை மண்டல இணை இயக்குனர் திருக்குமரன் அறிவுரைப்படி நேற்று காங்கயம் ஒன்றியத்தில் 7 இடங்களில் முகாம் அமைத்து மாடு, எருமை உள்ளிட்ட 1050-கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அந்தப் பகுதி கால்நடை மருத்துவர்கள் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    • மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 8-ந்தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகா்வோா்கள் கலந்துகொண்டு மின் பயன்பாட்டில் உள்ள குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம்:

    தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் வ.பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:- தாராபுரம் கோட்டத்தில் நவம்பா் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 8-ந்தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில், மின் நுகா்வோா்கள் கலந்துகொண்டு மின் பயன்பாட்டில் உள்ள குறைகளைத் தெரிவித்து தீா்வு பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
    • பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

     அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்துக்கு 1,035 மூட்டைகள் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.

    இதில், குவிண்டால் ஒன்றுக்கு முதல் தர நிலக்கடலை ரூ.8,000 முதல் ரூ 8,340 வரை, இரண்டாம் தரம் ரூ.7,450 முதல் ரூ.8,000 வரை, மூன்றாம் தரம் ரூ.6,500 முதல் ரூ.7,450 வரை, பச்சை நிலக்கடலை ரூ.4,500 முதல் ரூ.5,500 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.22.51 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது.

    தீபாவளியையொட்டி நவம்பா் 13 ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நவம்பா் 14 ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நிலக்கடலை ஏலம் நடைபெறும் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
    • விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    திருப்பூா்:

    திருப்பூரை அடுத்த பல்லடத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து விரைவு மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

    திருப்பூா் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம்புதூரை சோ்ந்தவா் ஆா்.குமாா் (வயது 66), இவா் கடந்த 2021 ம் ஆண்டு, ஜூன் மாதம் வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து சிறுமியின் பெற்றோா் பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்திய காவல் துறையினா் குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த வழக்கின் மீதான விசாரணை திருப்பூா் விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில் குற்றம் சாட்டப்பட்ட குமாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் அபராதத்தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜமீலா பானு ஆஜரானாா்.

    • சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
    • பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    அவிநாசி:

    அவிநாசியை அடுத்த சேவூா் பகுதியில் வசித்து வருபவா் விருதுநகரை சோ்ந்த ஞானராஜ் (வயது 55), பாத்திர வியாபாரி. இவா், சேவூரை அடுத்த தண்டுக்காரம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.அப்போது, அவ்வழியாக வந்த வேன் ஞானராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்து சேவூா் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

    • விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.
    • இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து மாவட்டங்களில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும் உரிமையாளர் கட்டணம் ரூ.2லட்சம் முற்றிலுமாக விலக்கும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும் பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    மேலும் மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்:501 (ம) 503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர் -641604 என்ற முகவரியையும், 94450 29552, 0421 -297112 என்ற செல்போன், தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 261 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் சார்பில் சிறப்பு விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், பொதுமேலாளர்(ஆவின்) சுஜாதா, மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) திருக்குமரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் புஷ்பாதேவி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குமாரராஜா, துணைப்பதிவாளர் (பால்வளம்) கணேஷ், மேலாளர் (விற்பனைப்பிரிவு) சரண்யா, உதவி பொது மேலாளர் மற்றும் ஒன்றிய அலுவலர் ரமேஷ், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×