என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சேதமடைந்தன.
    • க.செல்வராஜூக்கு பாராட்டுக்கள்.

    திருப்பூர்,ஜூன்.26-

    திருப்பூா் பனியன் பஜாரில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் 50 கடைகள் எரிந்து சேதமடைந்தன. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, திருப்பூா் பெரிய பள்ளிவாசலில் கடை உரிமையாளா்களுடன் இஸ்லாமிய இயக்க நிா்வாகிகள் சந்தித்து பேசினா்.

    இந்த சந்திப்புக்கு திருப்பூா் பெரிய பள்ளிவாசல் தலைவா் வி.கே.எம்.ஷாஜகான் தலைமை வகித்தாா். இந்த சந்திப்பில், பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உடனடியாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 25 லட்சம் வழங்கிய திருப்பூா் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினா் க.செல்வராஜூக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனா்.

    மேலும் பக்ரீத் பண்டிகையின்போது அனைத்து பள்ளி வாசல்களில் இருந்து நிதி வசூலித்து பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனா். தீ விபத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அதே இடத்தில் கடை நடத்த அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.

    இந்த சந்திப்பில் திருப்பூா் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பு நிா்வாகிகள் கலீல் ஹாஜியாா், முகமது யாசா், தஸ்தகீா், வட்டார ஜமாத்துல் உலாமா சபைத்தலைவா் மெளலவி நாசா் சிராஜி ஹஜரத், காதா் பேட்டை பள்ளிவாசல் தலைவா் காதா் ஹாஜியாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா
    • 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் நபா்களுக்கு கனரா வங்கி சாா்பில் செல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் தொடா்பாக இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

    இதுகுறித்து கனரா வங்கியின் வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் இயக்குநா் கே.பூபதி ராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    திருப்பூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ் மக்களுக்கு ெசல்போன் பழுதுபாா்த்தல் மற்றும் சரிசெய்தல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 30 நாள் முழு நேர பயிற்சி வகுப்பில் எழுதப்படிக்க தெரிந்த 18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம்.

    இந்தப் பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுவதுடன் தொழில் தொடங்க ஆலோசனைகளும் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், மாவட்ட தொழில் மையம் எதிரில், அனுப்பா்பாளையம் புதூா், திருப்பூா் -641652 என்ற முகவரிக்கு நேரில் வரவேண்டும். முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 99525-18441, 86105-33436, 94890-43923 என்ற செல்போன் எண்களை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாலையின் தரம்
    • நான்கு வழி சாலையாக

    பல்லடம்: தமிழக நெடுஞ்சாலை துறையின் திருப்பூர் கோட்டத்தின் மூலம் பராமரிக்கப்பட்டு வரும் மாநில நெடுஞ்சாலை பல்லடத்திலிருந்து தாராபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல்லடத்தில் இருந்து புத்தரச்சல் வரை 11.80 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இரு வழி சாலையை ரூ.115 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும்பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் தரம் மற்றும் பணிகள் குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது திருப்பூர் கோட்ட பொறியாளர் ரமேஷ் கண்ணா,பல்லடம் உதவி பொறியாளர் பாபு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • கறிக்கோழி தொழில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது

    பல்லடம்: 

    பல்லடம் வட்டாரத்தில் விவசாயத்திற்க்கு மாற்றுத் தொழிலாக வந்த கோழிப்பண்ணைத்தொழில் தற்பொழுது முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. கோழிப்பண்ணை த்தொழில் இரண்டு வகையானது. முட்டைக்காக வளர்க்கப்படும் முட்டைக்கோழி ஒரு வகை, மற்றொன்று கறிக்கோழி வகை.

    பல்லடம் பகுதியில் பண்ணையாளர்கள் அதிக அளவில் கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்தநிலையில் தீவனங்கள் விலை உயர்வு, வளர்ப்பு கூலி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாக கறிக்கோழி விலை சரிவை சந்தித்தது. தற்போது நிலைமை இயல்பு நிலையில் உள்ளதாகவும், கறிக்கோழி கொள்முதல் விலை சீராக உள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கறிக்கோழி பண்ணையாளர் ஒருவர் கூறியதாவது:-

    கடந்த மாதங்களில் கறிக்கோழி தொழில் சரிவை சந்தித்தது. இதனால் கறிக்கோழி தொழில் சார்ந்த உற்பத்தியாளர்கள் மற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது கறிக்கோழி உற்பத்தி குறைப்பு நடவடிக்கையால் கறிக்கோழி தொழில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கறிக்கோழி கொள்முதல் விலையும் சீராக உள்ளது. இவ்வாறு கூறினார். இன்றைய கறிக்கோழி கொள்முதல் விலை 128 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    • பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
    • மீன் பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்தது

    திருப்பூர்,:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 480 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இக்குளத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கில் பறவைகள் வந்து செல்கின்றன. நீர்வளத்துறையின் கீழ் பவானி வடிநில கோட்டத்தின் பராமரிப்பில் இக்குளம் இருந்த நிலையில் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பின் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

    திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு, குளத்தில் இருந்து மீன் பிடிக்க 5 ஆண்டு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஓராண்டு குத்தகை காலம் வருகிற 30ந் தேதியுடன் முடிகிறது.இக்குளத்தில் மீன் பிடிப்பதன் வாயிலாக, பறவைகளுக்கான இரை இல்லாமல் போய்விடும் என்பதால் மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். மீன் பிடி தொழில் என்ற பெயரில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாகவும் புகார் எழுந்தது.

    இந்நிலையில் குளத்தில் வணிக ரீதியாக மீன் பிடிக்கும் ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என திருப்பூர் வனக்கோட்ட ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர், கீழ் பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளருக்கு பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் மீன் பிடிப்பதற்கான குத்தகை நீட்டிப்பை ரத்து செய்து திருப்பூர் வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மீன் பிடி குத்தகை உரிமம் தொடர்பாக எவ்வித விண்ணப்பமும் பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்த ப்பட்டுள்ளது. 

    • கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.
    • செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும்

    திருப்பூர்:

    சர்வதேச ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி கண்காட்சி ஐக்கிய அரபு நாடுகளின் துபாய் நகரில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் நடக்கிறது. வருகிற நவம்பர் 27-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஐக்கிய அரபு நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்த இந்த கண்காட்சி உதவுமென ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது. கண்காட்சியில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று பயனடைய ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    ஐக்கிய அரசு நாடுகளுடன் இந்தியா வர்த்தக உறவை வளர்க்க வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் ஆண்டுகளில் கூடுதல் வர்த்தகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ல் ஐக்கிய அரபு நாடுகளின் மொத்த ஆயத்த ஆடை இறக்குமதி 36 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது.கடந்த 2020ம் ஆண்டு 28 ஆயிரத்து 848 கோடி ரூபாய்க்கும், 2021ல் 50 ஆயிரத்து 405 கோடி ரூபாய்க்கும், பல்வேறு நாடுகளில் இருந்து அங்கு ஆடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் இருந்து 2019ல் 15 ஆயிரத்து 252 கோடி ரூபாய்க்கும், 2020ல் 12 ஆயிரத்து 423 கோடி ரூபாய்க்கும், 2021ல் 15 ஆயிரத்து 727 கோடி ரூபாய்க்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது.கடைசியாக 2021ல் ஐக்கிய அரபு நாடுகள் இறக்குமதி 80 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவின் பங்களிப்பு அதிக அளவு உயரவில்லை. செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தினால், இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும் என்று ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர்களும், தொழில் முனைவோர்களும் துபாயில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்று வாய்ப்புகளை குவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

    • 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
    • இதுவரை 2 கட்டமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு அறங்காவலர் குழு நியமனம் நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்ட அறங்காவலர் குழு அதற்காக விண்ணப்பம் பெற்று வருகிறது. இதுவரை 2 கட்டமாக விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் 60 கோவில்களுக்கு தனிநபர் அறங்காவலர் மற்றும் சில கோவில்களுக்கு 3நபர் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட கோவில்களுக்கு மூன்றாம் கட்டமாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்கள், கோவில் அலுவலகங்களில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து 30ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

    அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், முதல் கட்டமாக 200 கோவில்கள்,2ம் கட்டமாக, 500 கோவில்கள் என கோவில்களுக்கு விண்ணப்பம் பெறப்பட்டது. பரிசீலனை செய்து நியமனமும் நடந்து வருகிறது.விடுபட்ட 568 கோவில்களுக்கு, அறங்காவலர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியானவர்கள் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

    • முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.
    • 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

     தாராபுரம்:

    மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மூலனூர் மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.15.11 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

    மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்து, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் வண்ணாபட்டி முதல் சம்மங்கரை வரை சாலை அமைக்கும் பணி மற்றும் வேளாம்பூண்டி ஊராட்சி, அரிக்காரன்வலசில் ரூ.24.50 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, எரிசனம்பாளையம் பகுதியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.7 கோடி மதிப்பீட்டில் எரிசினம்பாளையம் முதல் மேட்டூர் வரை சாலை அமைக்கும் பணி மற்றும் ரூ.76.34 லட்சம் மதிப்பீட்டில் தட்டாரவலசு முதல் நாரணாவலசு வரை சாலை அமைக்கும் பணி உள்பட மொத்தம் ரூ.6.90 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தனர்.

    மேலும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சி தொப்பம்பட்டியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.8.21 கோடி மதிப்பீட்டில் 12 சாலை பணிகளை தொடங்கி வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சியின் திட்ட இயக்குநர் லட்சுமணன், திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) ஜெகதீஸ்குமார், திருப்பூர்மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மூலனூர் பேரூராட்சித்தலைவர் தண்டபாணி, மூலனூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் சுமதி கார்த்திகுமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலமணி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • 3 மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
    • கண்வலி விதையின் விலையைக் குறைத்து விடுகின்றனர்.

    மூலனூர் :

    திருப்பூர், கரூர், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த கண்வலி மூலிகை பயிர் செய்யும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் மூலனூர் அருகே உள்ள புதுக்கோட்டையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மூலனூர் சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்பட்ட கண் வலி பயிர் தற்போது கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. இப்பயிரிலிருந்து கிடைக்கும் விதைகள் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு கண்வலி கிழங்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இடைத்தரகர்கள் கூட்டணி அமைத்து கண்வலி விதையின் விலையைக் குறைத்து விடுகின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் கண்வலி விதை கிலோ ரூ.3ஆயிரத்துக்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க ேவண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் தலைவர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    உலகிலேயே கண் வலி விதை உற்பத்தி செய்யப்படும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் மூலனூர், கள்ளிமந்தயம், அரவக்குறிச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. மிக சிறந்த மருத்துவ தாவரம் இது. பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கண்வலி விதையை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.கிலோரூ.3ஆயிரத்து800-க்கு விற்பனை செய்யப்பட்ட கண்வலி விதைகள் தற்போது ரூ.1500-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் நஷ்டம் அடைந்து கவலையில் உள்ளனர்.

    தமிழ்நாட்டிலேயே வெளிநாட்டிற்கு மூலிகைப் பொருட்களை அனுப்புவதற்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மூலிகை நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட தாவரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அந்த நிறுவனம் கண் வலி விதைகளை ரூ.3ஆயிரத்திற்கு விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும். அதன் மூலம் மருந்துகள் தயாரித்து ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் விவசாயிகள் நஷ்டத்தில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியும். எனவே அரசாங்கம் விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தாசில்தார்,ஆர்.டி.ஓ. மற்றும் கலெக்டருக்கு மனு கொடுத்தும் தீர்வு காணப்படவில்லை. எனவே மிகப்பெரிய போராட்டங்களை நடத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நகைகளை திருடிய மர்மநபர்கள் நைசாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
    • தெற்கு போலீஸ் நிலையத்தில் ஜீவிதா புகார் அளித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் பவானிநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜீவிதா. இருவரும் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, நேற்று இரவு திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து கோவில் வழிக்கு செல்லும் டவுன் பஸ்சில் ஏறினர்.

    அப்போது பஸ்சில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் தாராபுரம் ரோடு அருகே வந்த போது ஜீவிதா தனது கையில் இருந்த பேக்கில் பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பேக்கின் ஜிப் திறந்து இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் பேக்கின் உள்ளே பார்த்த போது அதில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகை காணாமல் போயிருந்தது. ஜீவிதா உடனே சத்தம் போடவும் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. ஆனால் நகைகளை திருடிய மர்மநபர்கள் நைசாக அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் ஜீவிதா புகார் அளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடப்பட்ட நகையின் மதிப்பு ரூ. 9 லட்சம் இருக்கும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.

    இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது.
    • இதில் தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

    புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. பாரதிதாசனின் இரணியன் அல்லது இணைய வீரன் என்ற நாடகம் நடந்தது. தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவர்களை பறையாட்டம், தேவராட்டத்துடன் கலைஞர்கள் வரவேற்றனர். நாடக கலைஞர்களை நடிகர் நாசர் பாராட்டி பரிசு அளித்து பேசியதாவது, சிறப்பு திரைப்படம், சிறப்பு சீரியல், ஓ.டி.டி. என அனைத்தையும் விட்டு விட்டு நாடகம் பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சென்ற நூற்றாண்டு வரை நேரடியாக கதை சொல்லும் வழக்கம் இருந்தது.



    நேரடியாக கதையை சொல்லும் போது நமது மூளைக்கு சென்றடையும் கருத்து யார் நல்லவன்.? யார் கெட்டவன்.? என்று தெரிந்துவிடும். பெற்றோர்கள் இதுபோன்ற நவீன நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நவீன நாடகம் பற்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து நாகரீகங்களிலும் மனிதனின் வெளிப்பாடாக நாடகம் இருக்கிறது. நவீன நாடகங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். இங்கு ஒரு நாடகம் நடந்தாலும் 200 பேர் பார்க்கிறீர்கள்.

    200 நாடகமாக மனதிற்குள் போகிறது. காரணம் இந்த நாடகத்தை அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். புதிய சிந்தனைகள் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கலைகள் உருவாகி அடுத்த சந்ததிக்கு செல்கிறது. இந்த நவீன உலகத்திற்கு அடுத்த சந்ததியினருக்கு விட்டு செல்லக் கூடியது நவீன நாடகம். இதனால் குழந்தைகளை நாடகத்தில் ஈடுபடுத்துங்கள். புதுவையில் சிறந்த நாடக பள்ளி இயங்குகிறது. இவ்வாறு நாசர் பேசினார். 

    • சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.
    • புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஒருவர் ஊத்துக்குளி அருகே 2¾ ஏக்கர் நிலத்தை சென்னை மீனம்பாக்கம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 71) என்பவரிடம் கடந்த ஆண்டு ரூ.2½ கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார். அதன்பிறகு நில ஆவணங்களை பார்த்தபோது அவை வேறு நபர் பெயரில் இருப்பதும், சண்முகசுந்தரம் உள்ளிட்ட 6 பேர் போலியாக ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சென்னை மாதம்பாக்கத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (39), ரங்கராஜ் (41) ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×