என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • அரசு அலுவலகத்தை சட்டவிரோதமாக மர்ம நபர்கள் பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது.
    • அமராவதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி உள்ளது. இந்தப்பகுதியில் ஆண்டியகவுண்டனூர், உரல்பட்டி, கிழுவன்காட்டூர், குட்டிய கவுண்டனூர், பெரிசனம்பட்டி ஜக்கம்பாளையம்,அமராவதி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.நிர்வாக வசதிக்கு ஏதுவாக இரண்டு ஒன்றிய குழு உறுப்பினர்களும் உரல்பட்டி, அமராவதி பகுதியில் தலா ஒரு ஊராட்சிமன்ற அலுவலகமும் கட்டப்பட்டு உள்ளது.அங்கு சென்று பொதுமக்கள் நாள்தோறும் சேவைகளை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.

    இந்த சூழலில் அமராவதியில் கட்டப்பட்டு உள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் சட்ட விரோதமாக தங்கி உள்ளனர்.அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? எதற்காக அரசு அலுவலகத்தில் தங்கி உள்ளனர் என்பது தெரியவில்லை.இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏதுவாக ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி சார்பில் அமராவதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.அங்கு சென்று நாள்தோறும் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம்.இந்த சூழலில் அடையாளம் தெரியாத நபர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக தங்கி வருகின்றனர்.அவர்கள் எதற்காக அங்கு தங்கி உள்ளனர் என்பது குறித்து விவரம் தெரியவில்லை.

    இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டால் உரிய பதில் அளிக்கவில்லை.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் தற்போதைய சூழலில் அரசு அலுவலகத்தை சட்டவிரோதமாக மர்ம நபர்கள் பயன்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. இது குறித்து அமராவதி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சட்டவிரோதமாக தங்கி உள்ள நபர்கள் மீதும், அவர்களை அங்கே தங்க வைத்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    • சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் மையப் பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டது.
    • தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் என்பதால் அதிகளவு காற்று வீசி வருகிறது.

    உடுமலை:

    தடையில்லா போக்குவரத்திற்கு ஏதுவாக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் இந்த சாலைகள் விரைவான பயணத்திற்கு வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது. இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தை கூட குறைவான நேரத்தில் விரைவாக சென்றடைய முடிகிறது.

    அந்த வகையில் உடுமலையில்இருந்து பழனிக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் வெளி மாவட்டங்கள், சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சூழலில் உடுமலை நகராட்சியின் எல்லையில் உள்ள வெஞ்ச மடைக்கு அருகே இணைப்பு சாலை சந்திக்கும் வளைவு பகுதியில் விபத்துகள் ஏற்பட்டு வந்தது.

    அதைத் தொடர்ந்து அங்கு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அகலப்படுத்தப்பட்டு அதன் மையப் பகுதியில் கான்கிரீட் தடுப்புச் சுவர் வைக்கப்பட்டது.இதனால் விபத்துக்கள் குறைந்து பாதுகாப்பான பயணம் கிடைத்தது. ஆனால் தடுப்புச் சுவரின் இரண்டு புறங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதில்லை. இதனால் அங்கு மண்குவியல் குவியலாக தேங்கி மலை போல் குவிந்து உள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் என்பதால் அதிகளவு காற்று வீசி வருகிறது. அப்போது அங்கே தேங்கியுள்ள மண் காற்றோடு காற்றாக பறந்து சென்று வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.

    குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை மண் பதம் பார்த்து வருவதால் அந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை.இதனால் விபத்து நேரிடும் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து சாலையின் தடுப்பு சுவரை யொட்டிய இரண்டு பகுதியிலும் தேங்கி உள்ள மண் அகற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பும் வாகன ஓட்டியில் மத்தியில் எழுந்து உள்ளது.

    • வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

    உடுமலை:

    உடுமலையின் சுற்றுப்புற கிராமங்களில் கோவில் விழாக்களும், கும்பாபிஷேகமும் பரவலாக நடைபெற்று வருகிறது. இதற்காக கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதல் நிகழ்ச்சியாக திருமூர்த்திமலைக்கு தீர்த்தம் எடுக்க சொல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கோடை காலம் முடிவடைந்தும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.

    மாறாக வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து கடும் வறட்சி நிலவி வருகிறது.இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து குறைந்து விட்டது.இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள், பொதுமக்கள் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதி உள்ள சின்னாற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்கின்றனர்.

    அதன் பின்பு குடங்களில் தீர்த்தம் எடுத்து வந்து கட்டளை மாரியம்மன் கோவிலில் வைத்து பூஜை செய்து பின்பு ஊர்வலமாக கிராமங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.ஆனால் கட்டளை மாரியம்மன் கோவிலுக்கு செல்வதற்கு ஞாயிறு,செவ்வாய், வியாழக்கிழமைகளில் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.இதனால் அனுமதிக்கப்பட்ட நாட்களில் மட்டுமே பக்தர்களால் தீர்த்தம் எடுக்க முடிகிறது. பயண நேரம், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அச்சத்துடனே சென்று வரவேண்டி உள்ளது.

    ஆனால் பஞ்சலிங்க அருவிக்கு செல்வதற்கு இதுபோன்று கட்டுப்பாடுகள் கிடையாது.எப்போது வேண்டுமானாலும் சென்று தீர்த்தம் எடுத்துக் கொண்டு வரலாம்.இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து அருவியில் நீர்வரத்து ஏற்பட்டால் விழாக்கள் மேலும் சிறப்பு அடையும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியாபாளையம் கிராமத்தில் 8 ஏக்கர் உள்ளது.
    • கோவில் சொத்தையும் பொதுமக்களை மிரட்டும் நபர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்து ராஜை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடம் ராக்கியாபாளையம் கிராமத்தில் 8 ஏக்கர் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

    இந்த இடத்தை வெளியூரை சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் அறிந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் சென்று கேட்டபோது அவர்கள் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.

    மேலும் இடத்தை அபகரிக்க துடிக்கும் நபர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை அதிகாரி முன்னிலையில் மிரட்டி வருகிறார்கள். எனவே கோவில் சொத்தையும் பொதுமக்களை மிரட்டும் நபர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • வேகத்தடை அமைக்க வேண்டும்
    • ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும்.

    திருப்பூர்:

    வீரபாண்டி அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் சார்பில் இன்று மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது; திருப்பூர் வீரபாண்டியில் தமிழ அரசால் கட்டப்பட்டு அண்மையில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறோம்.

    இங்கு கழிவு நீர் சுத்தகரிப்பு தொட்டி பாரமரிப்பு இல்லாத காரணத்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போதிய குடிநீர் கிடைக்கவில்லை. குடியிருப்பு பகுதி ரோட்டில் அடிக்கடி விபத்து நடப்பதால் வேகத்தடை அமைக்க வேண்டும்.

    குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றுசுவர் அமைக்க வேண்டும். அருகில் உள்ள 3 மதுக்கடைகளை அகற்ற வேண்டும். எங்கள் பகுதியில் ரேஷன் கடை திறக்க வேண்டும். இந்த பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஆரம்ப பள்ளி ஒன்றை துவக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கவனம் ஈர்த்தனர்.

    • காலம் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
    • முன்னாள் ஐ.ஜி., பாரி பேச்சு

    திருப்பூர், ஜூன்.26-

    திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 2023-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நிதியுதவி வழங்கும் விழா திருப்பூர்- மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக எஸ். இளங்கோவன், செயலாளராக ஆர். மோகன்ராஜ், பொருளாளராக ஆர். பினுமோன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். கவுரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் நாராயண சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, உதவி ஆளுனர் மீனாட்சி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., பாரி பங்கேற்று பேசியதாவது:- புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பது அவர்கள் பேசிய பேச்சிலிருந்து உணர முடிகிறது. நாம் தாய் மொழியின் பெருமையை உணர வேண்டும். மனிதராக பிறந்த நாம் பிறருக்கு கொடுப்பதால் உயர்ந்து நிற்கிறோம். தமிழ் வாழ வேண்டும் என்று ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் தனது உயர்ந்த உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட எளியவர்களுக்கு கொடுப்பது தான் உயர்வு என்கிறார் வள்ளுவர். இந்த நவீன உலகில் நமது வரலாற்றையும்-பண்பாட்டையும் நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

    இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் நான்கு பேருக்கு உதவி செய்யும் நிலைக்கு வர முடியும். காலமும் நேரமும் முக்கியமானது. அதனை உணர்ந்து நாம் வாழ வேண்டும். நமது பெற்றோர்களை அனாதை இல்லத்துக்கு அனுப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சி முடிவில் தனியார் பள்ளி ஆசிரியரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம், தெற்கு ரோட்டரி பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 20 ஆயிரம், ரோட்டரி சார்பில் கட்டப்பட உள்ள முதியோர் இல்லத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டன. முதியோர் இல்லம் கட்ட 3 ஏக்கர் நிலம் வழங்கிய கனகராஜ் என்பவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட முன்னாள் தலைவர் மணி, முன்னாள் செயலாளர் விவேகானந்தன், முன்னாள் பொருளாளர் செல்வன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதிய சாலை, ரூ.6.67 கோடி திட்டம், பயன்பாட்டிற்கு

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திக்குப்பட்ட பகுதிகளில் கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், ரூ.6.67 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த ஒரு திட்டமானாலும் உடனடியாக மக்களுக்கு கொண்டு போய்ச் சேர்ப்பதில் முழு கவனம் எடுத்து அரசு செயல்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம்,மடவிளாகம் பகுதியில் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தம்மரெட்டிபாளையம் ஊராட்சியில் ரூ.90.84 லட்சத்தில் ரங்காம்பாளையம் முதல் நாமக்காரன்பாளையம் வரையிலும், சிவன்மலை ஊராட்சியில் ரூ.1.06 கோடியில் அரசம்பாளையம் முதல் சிவகிரிகோவில்பாளையம் வரையிலும், ரூ.40.97 லட்சத்தில் சிவன்மலை- வேலாயுதம்பாளையம் சாலை முதல் கோவில் பாளையம் சாலை வரையிலும், பாப்பினி ஊராட்சியில் ரூ.57.47 லட்சத்தில் ஈரோடு-தாராபுரம் சாலை முதல் மடவிளாகம் வழியாக நாட்டார்பாளையம் கரியகாட்டுவலசு வரையிலும், வீரணம்பாளையம் ஊராட்சியில் ரூ.88.25 லட்சத்தில் ஈரோடு-தாராபுரம் சாலை முதல் படியாண்டிபாளையம் வழியாகசத்திரவலசு படியாண்டிபாளையம் ஆதி திராவிடர் காலனி வரையிலும்உள்ளிட்ட காங்கயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.6.67 கோடியில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன், தாராபுரம் ஆர்.டி.ஓ. செந்தில்அரசு, திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி வரதராஜ், காங்கயம் தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.சிவானந்தம், வடக்கு ஒன்றிய செயலாளர் சி.கருணைபிரகாஷ், காங்கயம் நகர செயலாளர் வசந்தம் நா.சோமலையப்பன், காங்கயம் தாசில்தார் புவனேஸ்வரி, காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர்
    • திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பகுதியில் பின்னலாடை தொழில்கள் மற்றும் அதனை சார்ந்த தொழில்களான டையிங், நிட்டிங், காம்பேக்டிங், வாசிங், விசைத்தறி உள்ளிட்ட தொழில்களும் மற்றும் உடுமலை பகுதியில் விவசாயம், காங்கயம் பகுதியில் தேங்காய் களம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த தொழில்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களான அசாம், ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    தினசரி வடமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வரும் ரெயில்களில் சுமார் 400 பேர் புதியதாக திருப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். இடைத்தரகர்கள் மூலம் ரெயில் நிலையத்திலேயே அவர்களுக்கான பணி இடத்தை தேர்வு செய்து பிரித்து அனுப்புகிறார்கள். மேலும் ரெயில் நிலையங்களில் தினசரி இறங்கும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் மெட்டல் டிடெக்டர் உதவியோடு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

    இந்நிலையில் திருப்பூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு ஆகிய சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவிநாசி பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்களில் குடும்பத்தோடு வருபவர்களை குறி வைத்து துப்பாக்கிகளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்கும் செயலில் ஈடுபட்டனர். அவர்கள் யார்? என போலீசார் தேடியபோது அந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேருமே வட மாநிலத்தவர்கள் என தெரியவந்தது.

    மேலும் திருப்பூரில் மோசடி சம்பவங்களை பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே அரங்கேற்றம் செய்கின்றனர். இப்படி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பின் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விடுகின்றனர்.வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் அவர்களிடம் முறையான ஆவணங்களை பெறுவதில்லை. இதனால் குற்றங்கள் நடைபெற்ற பின் வடமாநில தொழிலாளர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் திருப்பூரில் தங்கியுள்ள வடமாநிலத்தவர்களிடம் முறையான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அடையாள அட்டை வழங்க வேண்டுமென பொது மக்கள்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் திருப்பூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களுக்கு முறையான அடையாள அட்டை வழங்க வேண்டுமென தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சட்டபணிகள் ஆணைக்குழு, திருப்பூர் மாவட்ட போலீஸ், தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பு முகாம் ஜெய்வா பாய், நஞ்சப்பா., கே.எஸ். சி., பழனியம்மாள் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏதேனும் ஒரு பிரச்சனை என்றாலும் வடமாநிலத்தவர்களின் பாதுகாப்பிலும் அடையாள அட்டை வழங்குவது அவசியமாகும். தற்போது நீதித்துறையின் முன் முயற்சியில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தகவல் சேகரிப்பது பாராட்டுக்கு உரியது என்றனர்.

    • வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
    • 4 பள்ளிகள்

      திருப்பூர்:

    தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதலின்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, கல்வித்துறை ஆகியவை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான தகவல் சேகரிப்பு மற்றும் பதிவு முகாம் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி, நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி, பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மாநகராட்சி பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் நடைபெற்றது.

    முகாமிற்கு திருப்பூர் முதன்ைம மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் தலைமை தாங்கி ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் முகாமை தொடங்கி வைத்தார். முகாமை மோட்டாா் வாகன இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, கூடுதல் மகிளா நீதித்துறை நடுவர் கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் பழனிக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    முகாமில் பல்வேறு கல்லூரிகளை சோ்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் தன்னார்வலர்களாக கலந்துகொண்டு வடமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்களை சேகரித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் தொழில்துறை பாதுகாப்பு இயக்க இணை இயக்குனர் புகழேந்தி, துணை இயக்குனர்கள் ஜெயமுருகன், சந்தோஷ், உதவி இயக்குனர் சேதுபதி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையா் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டைக்கு பதிவு செய்ய ஆவணங்களை அளித்தனர்.

    • முப்பெரும் விழா
    • ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள்

    பல்லடம்: 

    பல்லடம் ஈகை அறக்கட்டளையின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. ஈகை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தங்கலட்சுமி நடராஜன், வாழும் கலை ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணன் வரவேற்றார்.

    இந்த நிகழ்ச்சியில் குறைந்த கட்டணத்தில் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவையை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜா தொடங்கி வைத்தார். பல்லடம் வடுகபாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான 'ஸ்மார்ட் கிளாஸ்" சாதனங்கள் வழங்கப்பட்டது. பொங்கலூர் பிரபஞ்ச அமைதி ஆதரவற்றோர் ஆசிரமத்திற்கு 2 லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ ,மெத்தை ,மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. மேலும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்களான பிஸ்கட், ரொட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஈகை அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரேஷன் அாிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • நடைமேடை எண் 1-ல் மூட்டைகளுடன் 2 பெண்கள் சந்தேகப்படும்படி இருந்தனர்

    திருப்பூர்:

    குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் திருப்பூர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாா் மாவட்ட எல்லைக்குட்பட்ட பஸ் மற்றும் ரெயில் நிலைய பகுதிகளில் ரேஷன் அாிசி கடத்தப்படுவது சம்பந்தமாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் நடைேமடை எண் 1-ல் மூட்டைகளுடன் 2 பெண்கள் சந்தேகப்படும்படி இருந்தனர். அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 400 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை செய்தபோது அவர்கள் கோவை சித்தாபுதூரைச் சேர்ந்த அமுதா மற்றும் கோவை சிங்கநல்லூரை சேர்ந்த ராபியா என்பது தொியவந்தது.

    இருவரும் திருப்பூர் ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு ரெயில் மூலம் கொண்டுசென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ்-ரிதம் நிட் இந்தியா அணியும்,
    • இரண்டாவதாக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சி.ஆா்.காா்மெண்ட் ஈகிள்ஸ்-எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணிகளும்

    திருப்பூர்:

    திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களுக்கான என்.பி.எல். (நிஃப்ட்-டீ பிரிமியா் லீக்) கிரிக்கெட் போட்டிகள் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் கடந்த ஏப்ரல் 9 -ந் தேதி தொடங்கி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இதில், லீக் போட்டிகள் முடிவடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இதில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ், ரிதம் நிட் இந்தியா அணிகள் ஏற்கெனவே வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்த நிலையில் மற்ற இரண்டு அணிகளை தோ்வு செய்வதற்கான காலிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், சி.ஆா்.காா்மெண்ட்ஸ் ஈகிள்ஸ்-குவாண்டம் நிட்ஸ் -3 (கே.பி.ஆா்.) அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த சி.ஆா்.காா்மெண்ட்ஸ் ஈகிள்ஸ் அணி 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இரண்டாவது ஆடிய குவாண்டம் நிட்ஸ் -3 (கே.பி.ஆா்.) அணி 15.2 ஓவா்களில் 73 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சி.ஆா்.காா்மெண்ட் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

    இரண்டாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் - சி.ஆா்.காா்மெண்ட் டைகா்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய சி.ஆா்.காா்மெண்ட்ஸ் டைகா்ஸ் அணி 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இதையடுத்து, ஜூலை 2 -ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஈஸ்ட்மேன் எக்ஸ்போா்ட்ஸ்-ரிதம் நிட் இந்தியா அணியும், இரண்டாவதாக நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் சி.ஆா்.காா்மெண்ட் ஈகிள்ஸ்-எஸ்.என்.எக்ஸ்போா்ட்ஸ் அணிகளும் மோதுகின்றன.

    ×