search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் தெற்கு ரோட்டரி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

    • காலம் நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து வாழ வேண்டும்.
    • முன்னாள் ஐ.ஜி., பாரி பேச்சு

    திருப்பூர், ஜூன்.26-

    திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம் சார்பில் 2023-24-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் நிதியுதவி வழங்கும் விழா திருப்பூர்- மங்கலம் ரோட்டில் உள்ள ரோட்டரி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் தலைவராக எஸ். இளங்கோவன், செயலாளராக ஆர். மோகன்ராஜ், பொருளாளராக ஆர். பினுமோன் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். கவுரவ விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுனர் இளங்குமரன், முன்னாள் மாவட்ட ஆளுனர் நாராயண சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், மண்டல ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி, உதவி ஆளுனர் மீனாட்சி ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக முன்னாள் ஐ.ஜி., பாரி பங்கேற்று பேசியதாவது:- புதிய நிர்வாகிகள் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்பது அவர்கள் பேசிய பேச்சிலிருந்து உணர முடிகிறது. நாம் தாய் மொழியின் பெருமையை உணர வேண்டும். மனிதராக பிறந்த நாம் பிறருக்கு கொடுப்பதால் உயர்ந்து நிற்கிறோம். தமிழ் வாழ வேண்டும் என்று ஔவையாருக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் தனது உயர்ந்த உள்ளத்தால் உயர்ந்து நிற்கிறார். இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் விட எளியவர்களுக்கு கொடுப்பது தான் உயர்வு என்கிறார் வள்ளுவர். இந்த நவீன உலகில் நமது வரலாற்றையும்-பண்பாட்டையும் நமது குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து வளர்க்க வேண்டும்.

    இளைஞர்கள் சுயமாக தொழில் தொடங்கி கடுமையாக உழைத்தால் நான்கு பேருக்கு உதவி செய்யும் நிலைக்கு வர முடியும். காலமும் நேரமும் முக்கியமானது. அதனை உணர்ந்து நாம் வாழ வேண்டும். நமது பெற்றோர்களை அனாதை இல்லத்துக்கு அனுப்பாமல் பார்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சி முடிவில் தனியார் பள்ளி ஆசிரியரின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம், தெற்கு ரோட்டரி பள்ளிக்கு நாப்கின் எரியூட்டும் எந்திரம் வாங்குவதற்கு ரூ. 20 ஆயிரம், ரோட்டரி சார்பில் கட்டப்பட உள்ள முதியோர் இல்லத்துக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்பட்டன. முதியோர் இல்லம் கட்ட 3 ஏக்கர் நிலம் வழங்கிய கனகராஜ் என்பவருக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், ரோட்டரி மாவட்ட முன்னாள் தலைவர் மணி, முன்னாள் செயலாளர் விவேகானந்தன், முன்னாள் பொருளாளர் செல்வன் உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×