என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • வடகிழக்கு பருவமழைகளின் போதே நீர் வரத்து கிடைக்கிறது.
    • காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலானது.

    மடத்துக்குளம் : 

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முக்கியமாக பருவமழை அவசியமானதாக உள்ளது.உடுமலை பகுதியிலுள்ள அணைகள், குளங்கள் உட்பட நீராதாரங்களுக்கு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளின் போதே நீர் வரத்து கிடைக்கிறது.

    கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததுடன் பாசனத்துக்கும் போதுமான தண்ணீர், திருமூர்த்தி, அமராவதி அணைகளில் இருந்து வழங்கப்பட்டது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் பரவலாக அதிகரித்து காய்கறி சாகுபடி பரப்பு கூடுதலானது.

    இந்நிலையில் இம்மாத துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் சில நாட்கள் மட்டும் மழை பெய்தது.சமவெளி பகுதியில் மழைப்பொழிவு இல்லை.இதனால் பாசன விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பருவமழை தாமதித்தாலும் ஜூன் மாதத்தில் நிலவும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை மாறி கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வறண்ட காற்றும், அதிவேகமாக வீசி வருகிறது.கிராம குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயமும், கால்நடைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து விளைநிலங்களில் கோடை உழவு செய்து சாகுபடிக்கு தயார் செய்தோம். ஆனால் மழை தாமதித்து வருகிறது. தற்போது வீசி வரும் வறட்சியான காற்றால் விளைநிலங்களில் ஈரப்பதம் வேகமாக வற்றி விடுகிறது.தென்னை சாகுபடியில் பாசன மேலாண்மையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்கறி சாகுபடியிலும் பல்வேறு நோய்த்தாக்குதல் பரவி வருகிறது. விரைவில் பருவமழை துவங்கி தீவிரமடையும் என எதிர்பார்த்துள்ளோம்.

    இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.  

    • சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.
    • கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது

    திருப்பூர் : 

    கோவை வேளாண் பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்து வருவதாக துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்தார்.

    வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளில் 2,555 இடங்களும் 28 இணைப்பு கல்லூரிகளில் 2,806 இடங்கள் உட்பட மொத்தம் 5,361 இடங்கள் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளன. சிறப்பு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு கடந்த 19-ந் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. ராணுவ வீரர்களுக்கான சிறப்பு பிரிவில் 20 பேர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம், விளையாட்டு பிரிவில் 20 இடங்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் 403 பேர் இக்கலந்தாய்வு வாயிலாக சேர்க்கப்படுவார்கள்.

    இதுகுறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 19ந் தேதி முதல் நடந்து வருகிறது. பொது கலந்தாய்வு வரும் வாரம் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் கலந்தாய்வு குறைந்த மாணவர்கள் என்பதால் ஆப்லைன் முறையில் நடத்தவுள்ளோம் என்றார்.

    • பள்ளி குழந்தைகளின் வசதிக்காக காங்கயத்தில் இருந்து முத்தூர் வழியாக ஊடையத்திற்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் முதியவர்கள் பயனடைவார்கள்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் வசதிக்காக காங்கயத்தில் இருந்து முத்தூர் வழியாக ஊடையத்திற்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் முத்தூர் பஸ் நிலையத்திலிருந்து விவேகானந்தா பள்ளி வழியாக தண்ணீர் பந்தல், சின்ன முத்தூர், அரசு மருத்துவமனை வழியாகச் சென்று சுமைதாங்கி வழியாக ஊடையம் சென்றால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் முதியவர்கள் பயனடைவார்கள்.எனவே சின்னமுத்தூர் வழியாக பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.

    பல்லடம்:

    திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட ம.தி.மு.க சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவியை நீக்க கோரி பல்லடம் அருகே உள்ள பொங்கலூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ். எஸ். சண்முகசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்துசாமி, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி. கே. மணி சிறப்புரையாற்றினார். கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தி.மு.க.திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் எஸ். குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கான்கிரீட் கலவை சிந்திய லாரி நிறுவனத்திற்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு நால்ரோடு பகுதியில் கான்கிரீட் கலவை கொண்டு சென்ற லாரியிலிருந்து ஏராளமான கான்கிரீட் கலவைகள் சாலையில் கொட்டியது. இதனை தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விதிமுறைகளை மீறி சாலையில் கான்கிரீட் கலவை சிந்திய லாரி நிறுவனத்திற்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேற்கொண்டு இதுபோன்று நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    • தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது
    • வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குடிமங்கலம் : 

    குடிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் காய்கறி பயிர்கள் சாகுபடியும் செய்யப்படுகிறது. கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் சாகுபடி படிப்படியாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு கூலியாட்கள் பற்றாக்குறை, போதிய விலை இல்லாமை, வருமானம் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. ஆனாலும் தண்ணீர் பற்றாக்குறை முக்கிய காரணமாக உள்ள நிலையில் தற்போது சொட்டு நீர் பாசனத்தில் வாழை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வாழை சாகுபடியை பொறுத்தவரை நடவு முதல் அறுவடை வரை ஓராண்டு காலத்தில் பருவ மழை, காற்று, கோடை என எல்லா பருவங்களையும் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. பருவ மழை போதுமான அளவில் பெய்யாத ஆண்டுகளில் கடும் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. அது போன்ற சூழலிலும் வறட்சியால் பயிர் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் பலத்த காற்று வீசும் போது வாழை மரங்கள் தான் முதலில் பாதிக்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாவதுடன் கடும் பொருளாதார இழப்பை சந்திக்கும் நிலை உள்ளது. இதனால் தான் பல விவசாயிகள் வாழை சாகுபடியை கைவிட்டு காய்கறி உள்ளிட்ட மாற்றுப்பயிர்களுக்கு மாறிவிட்டனர்.

    தற்போது நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடன் வாழை சாகுபடியில் ஈடுபடும் போது இழப்பை தவிர்க்க முடியும். அந்த வகையில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் வாழை சாகுபடி மேற்கொள்ளும் போது கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. அதுபோல காற்றிலிருந்து வாழை மரங்களை பாதுகாக்க புதிய யுத்திகளை பயன்படுத்துகிறோம். அதன்படி ஒவ்வொரு மரத்துக்கும் ஊன்று கோல்கள் கொடுத்து பாதுகாப்பதற்கு பதிலாக குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ஊன்றுகோல்கள் அமைத்து மற்ற வாழைகள் எல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் மூலம் எதிரெதிரான திசைகளில் ஒன்றுடன் ஒன்று இணைத்து கட்டி விடுகிறோம். இவ்வாறு கட்டுவதால் எந்தத்திசையிலிருந்து காற்று பலமாக வீசினாலும் வாழைகளுக்கு ஏதும் ஏற்படுவதில்லை. செலவும் குறைகிறது. இதன் காரணமாக வாழை சாகுபடி லாபகரமானதாக உள்ளது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • பாரப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் உட்பட 8பேரை போலீசார் கைது செய்தனர்.
    • சிவப்பிரகாஷ் (28) திருப்பூர் ஜே.எம்-4 கோர்ட்டில் சரணடைந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு ஜெய்நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30).இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. சந்திராபுரம் மதுக்கடையில் போதையால் எழுந்த பிரச்னையால் தினேஷ்குமாரை, கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்துசென்று 10 பேர் கொண்ட கும்பல் குத்திக்கொன்றது.

    இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்த பாரப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் உட்பட 8பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய திருப்பூர் டூம்லைட் மைதானத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ் (28) என்பவர், திருப்பூர் ஜே.எம்-4 கோர்ட்டில் சரணடைந்தார். இது குறித்து நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
    • தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

    திருப்பூர் : 

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 448 மனுக்களை பெற்றுக்கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கலெக்டர் தலைமையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை நான் முழுமையாக அறிவேன். தான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாக்காமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.போதைப்பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் எனஅனைத்துத்துறை அலுவலர்களும் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் ,மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, உதவி ஆணையர் (கலால்) ராம்குமார், துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ. 2 லட்சம் பணத்தை வைத்து விட்டு, வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.
    • பணத்தை திருடியது கோவை சின்னகாலப்பட்டியைச் சேர்ந்த பாபு (35) என தெரியவந்தது.

    அவினாசி:

    அவினாசி காசிகவுண்டன்புதூரை சேர்ந்த சுரேஷ் (வயது 34) என்பவர் தனது மோட்டார் சைக்கிள் சீட்டுக்கு அடியில் ரூ. 2 லட்சம் பணத்தை வைத்து விட்டு , வீட்டிற்கு வெளியே வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார்.

    பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்தை திருடியது கோவை சின்னகாலப்பட்டியைச் சேர்ந்த பாபு (35) என தெரியவந்தது.அவரை போலீசார் கைது செய்தனர்.

    • வன உரிமைச் சட்டம் 2006 ஐ தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ் ஆர் மதுசூதனன் சிறப்புரை ஆற்றினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன உரிமைச் சட்டம் 2006 ஐ தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலுவையில் உள்ள மனுக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவர் எஸ் ஆர் மதுசூதனன் சிறப்புரை ஆற்றினார். மலைவாழ் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.  

    • தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்யப்பட்டன.
    • பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

    அவிநாசி:

    அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலா் பாஸ்கா், ஆட்டையாம்பாளையம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது பள்ளி குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வழியாக வந்த தெக்கலூா் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி வாகனத்தை ஆய்வு செய்தாா்.

    அப்போது, பள்ளி வாகனம் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், வாகனத்தில் கேமரா பொருத்தப்படாமலும், பள்ளி வாகனத்தில் இருக்க வேண்டிய பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து, அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. 

    • பல்லடம் ஒன்றிய பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது.
    • விழாவை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பல்லடம்:

    இந்து முன்னணி சார்பில் வீரசிவாஜி மன்னராக முடி சூட்டிய நாளை இந்து சாம்ராஜ்ய விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். இதன்படி வீரசிவாஜி மன்னராக முடி சூட்டிய நாளை முன்னிட்டு பல்லடம் ஒன்றிய பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்று விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டச் செயலாளர் சர்வேஸ்வரன் கொடியேற்றி வைத்தார்.

    இதே போல பல்லடம் நகரப் பகுதிகளில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் லோகநாதன் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான இந்து முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பல்லடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×